Pages

Sunday 25 January 2015

'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை

'கீஷ்டு' தேடிய முருகன்
 (தமிழ் நகைச்சுவையுடன் உணர்ச்சிக் கருத்துள்ள சிறுகதை)

(முதன் முதலாக சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை)

"கீஷ்டு, கோனோ எல்லே பொக்கட்! (கிருஷ்ணா, ஏது இந்த பக்கம் !)" என்று சௌராஷ்டிரா மொழியில் தொடர்ந்து நலம் விசாரித்தார் அவனின் மாமா நன்னுசாம் என்கிற நன்னு சாமி. 

"கொன்னி நீ மமா , மோரே ஃ பிரண்டு முருகன் சாத்தோ குச்சி ஜிலே சேத்தே (ஒண்ணுமில்லை மாமா . என்னோட சிநேகிதன் முருகனைப் பார்க்க போயிட்டே இருக்கேன்)"  

"கேர் கோட் சேத்தே மெனி கலாய்யா? அட்ரஸ் னீனா ஜியதி தெக்கி தெரத்தொ ஜுக்கு கெஷ்டம்? மொகொ காம் சேத்தே, மீ அவுஸ் !(வீடு எங்கே இருக்குன்னு தெரியுமா ? விலாசம் இல்லாவிட்டால் கண்டுபிடிப்பது ரொம்ப சிரமம். எனக்கு வேலையிருக்கு, நான் வருகிறேன் !) " என்று அவனிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

"முருகா! என் நண்பா முருகா! நீ எங்கேடா இருக்கே ! உன்னைத் தேடிக் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே அந்த பழனி மலை முருகனே நேரில் வந்திடுவார் போலிருக்கு" என்று மனதில் சலித்தவாறு அலைந்தார் கீஷ்டு. தெருப் பெயர் ஞாபகம் வைத்துக் கொண்டவர், வீட்டின் கதவு எண்னை மறந்திருந்தார். முருகனின் கைபேசி எண்னோ மாறியிருந்தது. ஒரு வழியாக முருகன்  வசிக்கும்  'விவேகானந்தர் தெரு' வைக் கண்டுபிடித்தார் கீஷ்டு.

அந்த ஊரில் இந்தத் தெரு தான் பெரிய , நீளமாக , மக்கள் நெருக்கம் அதிகமுடையதாக இருக்கும் போலிருக்கு. அவருக்கு அது 'சாலை' போலத் தெரிந்தது. 


அந்த தெருவில் நுழைந்த பிறகு அவருக்கு அடுத்த பிரச்சனை காத்திருந்தது ! 'யாரிடத்தில் கேட்டால் முருகன் வீட்டைக் காட்டுவார்கள்' என்று சரியான ஆளைத் தேடினார். ஒரு வீட்டின் முன்னால் சற்று வயதானவர் மும்முரமாக செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தார். 'அவர் படிக்கும் தோரணையைப்  பார்த்தால் இந்தத் தெருவை பத்தி அக்குவேறு ஆணிவேராய்த் தெரியும் போலிருக்கு'  என்று அவரை நெருங்கி "சார்' என்று மெல்லக் கூப்பிட்டார். அந்த குரலுக்கு அவர் திரும்புவதாகத் தெரியவில்லை. மீண்டும் "சா...ர்ர்" என்று கத்தினார். அவனின் அழுத்தமான  குரல் வீட்டிலிருந்தவர்களுக்குக் கேட்டது.  ஆனால் செய்தித்தாளில் மூழ்கியிருந்த அந்த வயதானவருக்கு அப்போதும் கேட்காததால் குரல் கொடுத்தவரை  ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. 

அதேசமயத்தில் வீட்டிற்குள்ளிருந்து "என்னாங்க, யாரோ பிச்சைக்காரன் கூப்பிடுறாப்பிலே தெரியுது. அவன் கத்துறதைப் பார்த்தா சாப்பிட்டு நாலுநாள் இருக்கும் போல இருக்கு. பாவங்க. இந்தாங்க இந்த நாலு இட்லியை அவனுக்கு கொடுத்துட்டு வாங்க" என்று தன் அருமை கணவரிடத்தில் நீட்டினாள் அந்த வீட்டு மகா லக்ஷிமி.

"உன்னோட இரக்ககுணத்திற்கு அளவே இல்லேடி. அவன் கத்துறதைப் பார்த்தா இப்பத் தான் மீன் பொரியலும், கோழி பிரியாணியும் சாப்பிட்டு வந்தாற்ப்போல தெரியுது. கொஞ்சம் பொறுடி. யாரு? என்னான்னு விசாரித்து வர்றேன்! "  என்று வாசலுக்கு போனார். அவர் நினைத்தது போலவே வெகு நேர்த்தியான  உடையணிந்து நின்று  கொண்டிருந்த கீஷ்டுவைப் பார்த்து, " என்னாப்பா , யாரு வேண்டும்?" என்று கேட்டார் அந்த வீட்டுக்காரர். 

"சார். உங்களுக்கு தொந்தரவு கொடுத்ததுக்கு மன்னிக்கணும்" என்றபடி அவர் பக்கத்தில் இருந்த வயதானவரைக் காட்டி "நான் இவரைத் தான் கூப்பிட்டேன். இவருக்கு காது கேட்காதா?" 

"என்ன இவருக்கு காது ... கேட்காதா! யாரு சொன்னது? நாலு தெருவிலே அப்பாலே யாராவது பேசினாக் கூட துல்லியமாக் கேட்கும் அவரது காது . ஆனா பாருங்க, நியுஸ் பேப்பரை படிக்க ஆரம்பிச்சுட்டா என்ன கத்தினாலும் காதிலே கொஞ்சம் கூட வாங்கமாட்டார். சில சமயம் அப்படியே தூங்கிடுவாரு. எழுப்பினா கூட எழுந்திருக்க மாட்டாரு. ஆனா அவரு கையிலே வச்சிருக்கிற பேப்பரை பிடுங்கினா அவருக்கு வருமே கோபம்! அதை யாராலும் அடக்க முடியாது. அதனாலே அவரை நாம யாரும் தொந்தரவு செய்றது கிடையாது. அவரோட காதிற்கும் நியுஸ் பேப்பருக்கும் ஏதோ கனெக்சன் இருக்கு போலத் தெரியுது. சரி நீங்க வந்த விஷயத்துக்கு வாங்க. உங்களுக்கு என்ன வேணும்?" என்று கீஷ்டு வினிடத்தில் பேசியபடி தன் மனைவிக்கு " கத்தினது பிச்சைக்காரனில்லேடி . இட்லி எல்லாம் எடுத்துட்டு வேணாம்" என்ற செய்தியை கத்தித் தெரிவித்தார் அவருடைய மனைவியினிடத்தில்.  


"சார். என் பேரு கீஷ்டு - பூஷ்டு'

" என்னா கீஷ்டு - பூஸ்டா? கிருஷ்ண மூர்த்தியை 'கீஷ்டு' ன்னு சுருக்கமா சௌராஷ்டிரா மக்கள் சொல்வாங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா அதென்ன 'பூஷ்டு?"

"அது காலேஜ் பசங்க வச்ச பேருங்க. என்கிட்டே அரைமணி நேரம் பேசினா 'மக்கு' பையனும் கூட தன்னம்பிக்கை வந்து நல்லா படிக்க ஆரம்பிச்சுடுவான். அப்படி அவர்களோட வாழ்கையை 'பூஷ்டப்' பன்றதாலே என் பேரு பக்கத்திலே 'பூஷ்டு'   பெயரும் ஒட்டிக்கிருச்சி. எதுகை , மோனையா இருக்கிறதனாலே கேட்கிறதுக்கு நல்ல இருக்கு. அதில்லாம குழந்தைங்களும் என்னை 'பூஸ்ட்' மாமான்னு கூப்பிடுவாங்க. சார் , நான் வந்த வேலை மறந்திட்டு என்னைப்பத்தியே பேசிட்டு இருக்கேன். நான் என்னோட நண்பர் முருகனைத் தேடிட்டு வந்திருக்கிறேன். இந்தத் தெரு  தான்னு நல்லாத் தெரியும். ஆனா அவரோட வீடு எங்கேயிருக்குன்னு தெரியல்லே. கொஞ்சம் சொல்ல முடியுமான்னு" என்று சற்று பணிவாகக் கேட்டார் கீஷ்டு.

"என்னா முருகனா?"
"ஏன் சார். இப்படி பதறுகிறீங்க. என்னமோ நான் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலே  சிக்கின அந்த முருனைப் பத்தி கேட்டாப்போல பயப்படுறீங்க"  

" அதில்லீங்க ! இந்த தெருவிலே குறைந்தது பத்து பேரு முருகன்னு பேருடையவங்க இருக்காங்க. என்ன தான் வீட்டு விலாசம் இருந்தாலும் தினமும் இந்த தபால்காரங்க ஒரு தடவை கூட முருகன் பேருக்கு வந்த கடிதங்களை சரியான முருகனுக்குக் கொடுத்ததில்லை. அவ்வளவு ஏங்க ? நம்ம தெருவிலே அப்பப்போ சங்க கூட்டம் நடக்கும். அப்போ எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுப்போம். ஆனா முருகனுக்கு கொடுக்கிறப்போ நமக்கே அவர் பேரு க. முருகனா ? கி. முருகனா ? கு. முருகனா?ன்னு குழம்பிடுவோம். மத்த எல்லோரையும் எளிதாக அழைச்சிடுவோம். ஆனா இந்த முருகனுக்கு மட்டும் ஒரு நாள் ஆயிடும். அதனாலே நாம எந்த முருகனை அழைகிறோமோ அவரைக கேட்டு பேரை எழுதலாமென்றால் 'ம்..என்னைக் கூப்பிடுறாப்பிலே ஐடியா இல்லை. சும்மா பேருக்கு அழைப்பிதழ் கொடுக்குறீங்கன்னு' ரொம்பவே வருத்தப்படுவாங்க. நிலைமை இப்படி இருக்கும்போது நீங்க என்னடான்னா அசால்டா முருகன் வீடு எதுன்னு கேட்குறீங்க ! அவ்வளவு ஏன் எம் பேறு கூட முருகன் !. நான் ச. முருகன்."

"அடேயப்பா, முருகன்னு பேர்லே இடியாப்பத்தை விட அவ்வளவு சிக்கல் இருக்குதா. ஆனா நான் தேடி வந்த முருகன் நீங்க இல்லைங்க"

" அது சரி, நீங்க தேடி வந்த முருகன் எப்படியிருப்பார்?"

"என் நண்பன் முருகன் என்னைவிட உயரமா, சிவப்பா இருப்பான் !"

"அப்படீன்னா பத்து முருகனிலே நான் ஒருவன் போக அந்த அஞ்சு முருகனுமில்லை. அந்த அஞ்சு முருகனும் குட்டையாய் கருப்பா இருப்பாங்க. மிச்சம் நாலு முருகன்லே தான் உங்க நண்பன் முருகன் இருகிறாங்க. மேற்கொண்டு அடையாளம் சொல்லுங்க"

ஏது ஏது இவரு கேட்கிறதைப் பார்த்தா எந்த இடத்திலே முருகனுக்கு மச்சம் இருக்குன்னு கூட கேட்பாரு போலிருக்கு! சற்று சுதாரித்துக்கொண்டு "அவரு எப்போதும் குங்கும பொட்டு வச்சிருப்பார்" 

"அப்படியா அப்போ ரெண்டு முருகனுமில்லை. ஏன்னா அவங்க எப்போதும் விபூதி தான் பூசிக்குவாங்க. அப்போ மீதம் இருக்கிற ரெண்டு முருன்களிலே தான் நீங்க தேடி வந்த முருகன் இருக்கணும். மேலே அடையாளம் சொல்லுங்க" என்று தலை சொரிந்தவாறு கேட்டார்.

"அவரு உமா மகேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிச்சவருங்க"

"அட 'உமா காலேஜ்'ன்னு சொல்லுங்க. அப்போ அந்த முருகன் தான் இருக்கணும். என்னாங்க ? அவரோட குணம் எப்படி?"

"ரொம்ப தங்கமான பையன். எந்தவித வம்பு திம்புக்கும் போகமாட்டான். தான் உண்டு தன் வேலையுண்டு ன்னு இருப்பான். முக்கியமா பொண்ணுங்ககளைக் கண்டாப் பிடிக்காது"

"அட அப்படிப்பட்ட பையனா இந்த மாதிரி காரியத்தைப் பண்ணியிருக்கான். இந்த காலத்திலே யாரையும் நம்பக்கூடாதுன்னு சரியா இருக்கு" என்று புதிர் போட்டார்.

"அப்படி என்ன அவன் தப்பு செஞ்சான் ?"

"சொன்னாப் புரியாது. நீங்களே  அங்கே போய் என்ன விவரம்ன்னு கேட்டு தெரிஞ்சுக்கோங்க.  அதோ அந்த பச்சை வீடு தான் அவங்களோட வீடு. ஒரு முக்கியமான  எச்சரிக்கை ! அவங்க வீடு முன்னாடி நாய் ஒன்னு இருக்கும். வெளியாட்களைப் பார்த்தா குறைச்சே கொன்னுடும். ஏதாவது 'லஞ்சம்' கொடுத்தாத் தான் சும்மா இருக்கும்"

"என்ன சார் ! அரசியல்வாதிங்க தான் லஞ்சம் வாங்குவாங்கன்னு கேள்வி பட்டிருக்கிறேன். இந்த நாயுமா? போன ஜென்மத்திலே பெரிய அரசியல்வாதியாய் இருந்திருக்கும் போலிருக்கு. சரிங்க, அதுக்கு என்ன லஞ்சமாத் தரணும்"

"ரொம்ப இல்லை. பிஸ்கட்  தான். அந்த முக்கு கடையிலே கேளுங்க தருவார்" என்று அந்த வீட்டுக்காரர் ஒருவாறு முருகனின் வீட்டை அடையாளம் காண்பித்தார் கீஷ்டுக்கு.

இதுநாள் அவருக்கு தன் வாழ்நாளில் இப்படிப்பட்ட அனுபவம் பெற்றதில்லை. விறுவிறுவென்று அந்த முக்கு கடையை அடைந்து "ஐயா, விலை குறைந்த ஒரு பிஸ்கட் பாக்கெட் கொடுங்க " என்று கேட்டார்.


"யாருக்கு? உங்களுக்கா ?"

"இல்லைங்க. அந்த முருகன் வீட்டு நாய்க்கு!"

"அதுக்கு இந்த பிஸ்கட் கொடுத்தீங்கன்னா உங்களை கடிச்சு கொதறி குடலை எடுத்திடும். அது பிரியமா சாப்பிடுறது இந்த விலையுயர்ந்த பிஸ்கட் தான் "

"அது வேறையா? இதுநாள் வரை வீட்டிலே உள்ளவர்களுக்குத் தான் ஏதாவது கொண்டு போறது பழக்கம். ஆனா முதல் முதல்லா ஒரு நாய்க்கு பிஸ்கட் கொண்டுபோறது இப்போ தான். சரி சரி அதிலே ஒரு பிஸ்கட் பாகெட் கொடுங்க"

"என்னா ஒண்ணா ? மூணு கொடுத்தா தான் அந்த நாய் .." என்று சொல்லி முடிப்பதற்குள் 

"சரி சரி மூணு கொடப்பா" என்று அதை  வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுக்கும்போது தான் அந்த கடையில் ஒரு போட்டோ அலங்கரித்துத் தொங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தார். 

"எது என்னாங்க. நாய் போட்டோ. உங்களுக்கு நாய்ன்னா ரொம்ப உயிரா?"

"இதுவா? இது அந்த முருகன் வீட்டு நாய்ங்க. அந்த நாய் வந்த பிறகு தாங்க என்னோட கடையிலே நல்ல வியாபாரம். 'நாய் பிஸ்கட்' கடைன்னா எல்லாருக்கும் தெரியும். பொதுவா வீட்டைத் தேடிட்டு வருகிறவர்கள் யாரும் பிஸ்கட் எடுத்திட்டு வரமாட்டாங்க. வந்தாலும் அவங்க கொண்டு வர்ற பிஸ்கட் அந்த நாய் சாப்பிடாது. அது சாப்பிடக்கூடிய பிஸ்கட் நம்ம கடையிலே தான் கிடைக்கும்" என்று பெருமையாகச் சொன்னார் அந்தக் கடைக்காரர்.


இது ஒரு நல்ல வியாபாரம் போல இருக்கே ? . ஆளுக்காள் இந்த மாதிரி ஒரு நாயைக் கட்டி வச்சாப் போதும் போல இருக்கு. நல்லா பணம் சம்பாதிக்கலாம் போலிருக்கு. நல்லவேளை இந்த மாதிரி ஐடியா யாருக்கும் தோணலே" என்று கோவிலுக்கு செல்லும்போது சாமிக்கு அர்ச்சனை தட்டு கையில் எடுத்துச் செல்வதைப் போல அந்த மூன்று பிஸ்கட் பாக்கெட்டுகளை கையில் எடுத்துக்கொண்டு முருகன் வீட்டை அடைந்தார் கீஷ்டு.

அழைப்பு மணி எங்கிருக்கிறது என்று தேடி கண்டுபிடிக்கிறதுக்கு சோம்பேறித்தனப்பட்டு  " முருகா! முருகா என்று சற்று உரக்கக் கூவினார். 

வெளியாளின் குரலை கேட்ட நாய் "லொள் ..லொள்" என்று பதில் கொடுத்து. அது 'என்னை முதலில் கவனி. பிறகு உன்னோட வேலையை கவனி' என்று சொல்வது போல அவனுக்குத் தெரிவித்தது.

கொஞ்சமும் தாமதிக்காமல் கையில் இருக்கும் மூன்று பிஸ்கட் பாக்கெட்டுகளை அதன் முன் வைத்தான். பிஸ்கட்களை பார்த்த அந்த நாய் குறைப்பதை நிறுத்திவிட்டு வாலையாட்டியது. அந்த நாயின் செயலைப் பார்த்த 'கீஷ்டு'வின் முகத்தில் புன்னகை பூத்தது.

வீட்டினுள் நுழைந்ததும் ஏதோ ஒரு கோவிலுக்குள் நுழைந்ததைப் போல உணர்ந்தான். பரவசத்துடன் நின்ற கீஷ்டுவைப் பார்த்து , நீங்க யாருங்க? உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று ஒரு குரல் கீஷ்டுவை நெருங்கியது. 

சட்டென்று அவரைப் பார்த்தவுடன் வார்த்தை வராமல் "நான்...நான்.. முருகனோட ஃ பிரண்டு கீஷ்டு-பூஷ்டுங்க"

பேரைக் கேட்டவுடன் "என்ன கீஷ்டு-பூஷ்டு வா? பேரே ரொம்ப காமடியா இருக்கு. நான் தான் முருகனோட அத்தை ! கொஞ்சம் உட்காருங்க , இதோ வந்துடுறேன் " என்று அவர் மீண்டும் " என்னாங்க, என்னாங்க! நம்ம மாப்பிள்ளையைத் தேடி அவரோட நண்பர் ஒருத்தர் வந்திருக்கிறார்"  என்று குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

அதற்கிடையில் கீஷ்டுவுக்கு தான் முருகனுடன் கல்லூரியில் படித்த போது அவனோடு பகிர்ந்து கொண்ட விசயங்கள் மலரும் நினைவுகளாய் அவன் கண்முன்னே வந்தது.

"முருகா, நீ காலேஜ் முடிச்ச பிறகு என்ன பண்ணப் போறே. மேற்கொண்டு ஏதாவது படிக்கப் போறியா?"

"கீஷ்டு, மேலே படிக்கப்போறதா இல்லை. என் அப்பாவோட வியாபாரத்தை பார்த்துட்டு இந்த ஊரிலே செட்டில் ஆகப்  போறேன்"

"அதுவும் சரி தான். படிச்சு மாச சம்பளம் பார்க்கிறதை விட சொந்தமா வியாபாரம் செய்தா நல்லாத் தான் இருக்கும். நானும் இந்த காலத்திற்குத் தகுந்தாற்ப்போல ஒரு வியாபாரம் மதுரையிலே ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கிறேன். அது போகட்டும். உன்னோட கல்யாணம் ... லவ்வா அல்லது அப்பா அம்மா பார்த்து முடிக்கிறதா?"

"என்ன லவ்வா ? அதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம்.  நம்மோட இந்த  வயசுலே வர்றதெல்லாம் வெறும் இனக்கவர்ச்சி. அது வாழ்க்கைக்கு ஒத்துவராது"

"ம்..ஏற்கனவே நீ சுத்த சைவம். அதுவே நீ பாதி சாமியார் போல. இப்போ பொண்ணுங்களை பார்க்காத முழுச்சாமியாராகவே  மாறிட்டே. உனக்கேத்த பொண்ணு கிடைக்கிறது ரொம்பவே கடினமப்பா"

" ஏன் எனக்குன்னு ஒரு பொண்ணு இனிமேலா பொறக்கப் போகுது. என்னோட கொள்கை. பெரியவங்க பார்த்து கல்யாணம் முடித்து என் மனைவியை காலம் முழுக்க லவ் பண்ணனும்" என்று பழைய நினைவுகளை அசைபோடுவதை கலைக்கும் வண்ணம் 

"வாங்க ... வாங்க ...நான் தான் முருகனோட மாமா !"

'என்னடா இது. அவங்க என்னாடான்னா அத்தைன்னு சொன்னாங்க. இவரு என்னாடான்னா மாமான்னு சொல்றாரு. இன்னும் முருகனைக் காணாம்' மனதிற்குள் யோசிக்களானார்.
"என்ன தம்பி யோசிக்கிறீங்க. மாப்பிள்ளே  வெளியே போயிருக்கிறாரு. கொஞ்ச நேரத்திலே வந்துடுவார். நீங்க இருந்து மட்டன் பிரியாணி, கோழி குருமா சாப்பிட்டுத் தான் போகணும். உங்களைப் போல ஃ பிரண்ட்ஸ் களை நல்லா கவனிக்கணும்ன்னு அவர் கறாரா சொல்லிட்டுப் போயிருக்கிறார் !"

'என்ன .. மாப்பிள்ளையா? மட்டனா .. கோழியா' அதைக் கேட்ட கீஷ்டுவுக்கு தலை கிறு கிறுவென்று சுற்றியது. தான் பார்ப்பது , கேட்பது எல்லாமே கனவா? அல்லது நிசமா?" ன்னு குழம்பினான். அவன் குழம்பி தெளிவதற்குள் 
"ரேவதி .. அம்மா ரேவதி.. மாப்பிள்ளையோட ஃ பிரண்டு வந்திருக்கிறார்" என்று செல்லமாய் ஒரு குரல் கொடுத்தார்.

"இந்தா வந்துட்டேம்பா" என்று துள்ளி கொண்டே கையில் ஒரு டம்ளர் குளிர்ந்த மோருடன் அவர் முன்னே நீட்டினாள்.

"இவங்க தான் முருகனோட மனைவி. பேரு ரேவதி!" என்று அறிமுகப்படுத்திய போது கையில் இருந்த குளிர்ந்த மோர். அனலாய்க் கொதித்தது. முகம் சிவந்தது. மனம் கடுகடுத்தது. 'பாவிப்பயலே, எனக்கே சொல்லாம திடுதிப்புன்னு கல்யாணம் பண்ணிகிட்டேயடா பாவி. சிய் ... நீ எல்லாம் ஒரு நண்பனா? ஒண்ணா நம்பர் அயோக்கியன். அதுவும் நான் எவ்வளோ தடவை கெஞ்சியும் ஒரு முட்டை கூட சாப்பிடாதவன், இப்போ என்னாடான்னா மட்டன், கோழி..' என்று மனதிற்கும் பொருமித் தள்ளினான். 

"தம்பி ! நான் சொல்றது உங்களைப் போன்ற நண்பர்களுக்கு ரொம்ப அதிர்ச்சியாகவும், சங்கடமாகவும் இருக்கும். என்ன தம்பி பண்றது. கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ளே எல்லாமே முடிஞ்சிடுச்சி. இப்போ உங்க கண்ணு முன்னாலே  நாங்க மூணு பேரும் உயிரோட நடமாடுறதுக்குக்  உங்களோட நண்பர் தான் காரணம். அவரு எங்களோட உயிரை மட்டும் காப்பாத்தவில்லை. எங்களோட மானம், மரியாதை, கெளரவம் எல்லாமே காப்பாத்தியிருக்கிறார்"

அவ்வாறு அவர் சொல்லும்போது கீஷ்டுவின் முகத்தில் இருந்த கடுகடுப்பு சற்று குறைந்து ஆச்சரியமாய் அவர் முகத்தையே பார்த்தான்.


"தம்பி. உங்களுக்கு மொட்டையாய் சொன்னாப் புரியாது. நடந்ததை தெளிவாகச் சொன்னால் உங்களுக்குப் புரியும். போன மாசம் எங்க பொண்ணு ரேவதிக்கு கோவில்லே கல்யாணம் வச்சிருந்தோம். கேட்டபடி வரதட்சணை, நகை , நட்டு எல்லாமே செஞ்சோம். ஆனா கல்யாண நாளன்று மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இன்னும் கொஞ்சம் வேண்டும்ன்னு ஒத்த கால்லே நின்னாங்க. அன்னைக்கே செஞ்சா தான் கல்யாணம். இல்லாட்டி கிடையவே கிடையாதுன்னு அடம்பிடிச்சாங்க. அவங்க கேட்கிறதை உடனே போடுறதுக்கு என்கிட்டே அவ்வளவு பணமில்லே. வேறுவழி தெரியாம.... வேறுவழி தெரியாம ..." வார்த்தைகளை முடிக்க முடியாமல் மனதில் இருந்த கணம் வெளியில் கொட்டினார். அவர் கண்களில் கண்ணீர் துளி லேசாக எட்டிப் பார்த்தது. 

சற்று இடைவெளி விட்டு 

"வேறு வழியில்லாம நாங்க மூணு பேரும் தற்கொலைக்கு துணிஞ்சிட்டோம். மானம், மரியாதை இழந்து ஒரு பிணமாய் நடமாட பிடிக்காமல் அந்த முடிவுக்கு வந்தோம். அப்போ தான் யதார்த்தமாய் என்னோட மாப்பிள்ளை அங்கு வந்தார். இப்போத் தான் அவர் எங்களுக்கு மாப்பிள்ளை! இதுக்கு முன்னாடி அவங்க குடும்பம் எங்களுக்கு ஜென்ம விரோதி. அவங்ககிட்டே யாரும் பேச்சு வைச்சிருக்கக் கூடாதுன்னு கடுமையான பிடிவாதம். யார் சமரசம் செய்தாலும் அவங்களோட உறவே  கூடாது என்கிற வைராக்கியம். அந்த ஆபத்தான முடிவு எடுத்ததை முகத்திலே காட்டாம அவரைப் பார்த்தும் பார்க்காதது போல உடனே தற்கொலைக்குத் தயாராகி தற்கொலையும் செய்துகிட்டோம்"

"என்ன... தற்கொலையா ? பின்னே எப்படி....?"

"நாங்க மயங்கி விழுந்தது தான் தெரியும். அதன் பிறகு என்ன நடந்ததுன்னு எங்களுக்குத் தெரியாது. நாங்க மூணு பேரும் ஒரு ஆஸ்பத்திரியிலே இருக்கிறதை தான் உணர முடிந்தது. அப்போ அந்த டாக்டர் பேசின பேச்சு இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு. 'நல்லவேளை இந்த தம்பி மட்டும் உடனே இவங்களை கொண்டுட்டு வரலேன்னா நீங்க உயிரோடவே பார்த்திருக்க முடியாது' என்று சொல்வதை என் காதில் விழுந்தது. அப்போது அங்கே நான் கண்ட காட்சி என்னை தூக்கிவாரிப் போட்டது. எங்களைச் சுற்றிலும் எங்களோட விரோதிங்க கூட்டம். தான் ஆடாவிட்டாலும் சதையாடும், இரத்த பாசம் என்றெல்லாம் கேள்விதான் பட்டிருக்கிறேன், படத்திலே கூட பார்த்திருக்கிறேன். ஆனா உண்மையில் அது என்னான்னு அப்போது தான் தெரிந்தது. அந்த சம்பவம் தான் எங்களோட விரோதி எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வச்சிருச்சி. அமாம். முருகன் - ரேவதி கல்யாணத்தினாலே விரோதிகளாயிருந்த  குடும்பங்கள் ஒண்ணு சேர்ந்திடுச்சி. எல்லாம் உங்கள் நண்பரோட பெரிய மனசும், விசால குணமும் தான் காரணம். உறவுகள் விரிசலடைவது எல்லாமே வெறும் வெளித்தோற்றம் தான். ஆனா உறவுகளோட மனங்கள் எப்போதும் விரிசலடைவது கிடையாது. நேரம் , காலம் வந்திடுச்சின்னா நடக்காத நிகழ்ச்சியும் ரொம்ப எளிதா நடக்குன்னு அப்போது தான் நான் உணர்ந்தேன்" என்று அவர் பேசி முடிக்க 

"இந்தாங்க எங்களோட கல்யாண ஆல்பம். திடீரென்று எங்களோட கல்யாணம் நடந்தாலே யாருக்கும் கூப்பிடல்லே. அதனாலே கூடிய விரைவிலே ஒரு நல்லநாள் பார்த்து எல்லோரையும் அழைத்து விருந்து வைக்கவேண்டும்ன்னு அவர் சொல்லியிருக்கிறார். உங்களைப் போல நண்பர்கள் தான் முன்னாடி இருந்து எல்லோரையும் கவனிக்கனும்" என்று அவரிடம் ஆல்பத்தைக் கொடுத்தாள் ரேவதி.

கீஷ்டு அதை வாங்கிக் கொண்டு ஆவலுடன் அதை பிரித்தார். சிரித்த படி 'போஸ்' கொடுத்திருந்த அந்த முருகனைப் பார்த்தவுடன் மிகப் பெரிய அதிர்ச்சியடைந்தானர். ஆம். அதிலிருந்த முருகன் தன் நண்பன் இல்லை. ஆஹா ! பெயர் ஒற்றுமையில் எங்கேயோ, எப்படியோ ஒரு தவறு நடந்ததை உணர்ந்து அந்த இடத்தை விட்டு உடனே காலி செய்திட வேண்டுமென்று அவசரப்பட்டான். எப்படி, என்ன சொல்லி தப்பிப்பது என்று எண்ணிய போது உடனே கைபேசியை எடுத்தான்.

"ஹாய் . மீ கீஷ்டூ. காயோ அவ்சர்கன் ஒன்டே காம் சேத்தேயா. ஏலா அத்தோ மீ நிகிலி அவ்டுஷ். (ஆமாம். நான் தான் கீஷ்டு. என்ன அவசரமா ஒரு வேலை இருக்கா. இந்தா இப்பவே புறப்பட்டு வந்துடுறேன்). 

"என்னப்பா யாரு?" என்று முருகனின் மாமா கேட்க 

"ஏதோ அவசரமான ஒரு வேலையிருக்காம். உடனே புறப்பட்டு வரச்சொல்றாங்க. அப்போ நான் இன்னொரு நாளைக்கு சாவகாசமா வர்றேன் " என்று போலியாக சிரிப்பை வரவழைத்து விடை பெற்றார் கீஷ்டு.

"சரிங்க. இந்த விசயத்தை உங்க நண்பர்கள்கிட்டே சொல்லிடுங்க. கூடிய விரைவில் எல்லோரையும் விருந்துக்கு அழைக்கிறோம். கட்டாயம் வரணும்" என்று ரேவதி சொல்ல 
"கட்டாயம் வருகிறேன்" என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து வாசலுக்கு வந்தார். அவரைப் பார்த்த நாய் மீண்டும் மறக்காமல் வாலையாட்டியது. அப்போது  இந்த நாய்க்கு தான் கொடுத்த பிஸ்கட் , லஞ்சமாக இல்லை வெறும் பசிக்காக கொடுத்தது என்று தெரிந்தது. ஏனென்றால் இதற்கு நன்றி காட்டவும்  தெரிகிறது. அதனைக் கடந்து தெருவில் நடந்த போது தவறாக வேறு ஒரு முருகன் வீட்டில் நுழைந்ததும் அங்கு தனக்கு ஏற்பட்ட புதிய அனுபவமும் அவருக்கு ஏதோ ஒரு பாடம் சொல்லிக் கொடுத்ததை உணர்ந்தார். மனிதனின் மனம் எல்லோரையும் அன்பாகவே பார்க்கிறது. ஆனால் மனிதன் தான் அதை பலவித கோணங்களில் பிரித்துப் பார்க்கிறான். மனத்திற்கு மனிதனுக்கும் உள்ள இடைவெளியைப் போக்கிட  காலத்தால் மட்டுமே முடியும்' என்கிற நல்ல சிந்தனையோடு அந்த முருகனை நினைத்து பெருமைபட்டான்.      
    
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% 

1 comment:

  1. #மனத்திற்கு மனிதனுக்கும் உள்ள இடைவெளியைப் போக்கிட காலத்தால் மட்டுமே முடியும்'#
    (ஜுகு செர்க்க சங்கிராஸ்,சொன்தொஸ் :)
    மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் சந்தோசம் :)

    ReplyDelete