குழந்தைகள் தினம் -
வருங்காலம் உங்கள் கையில்…
14.11.16 சிறப்புக்
கட்டுரை
'கல்வித் தொண்டே கடவுள் தொண்டு' என்பது முடியரசனின்
கூற்று.
அன்னசத்திரம்
ஆயிரம் வைத்தல்
ஆலயம்
பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும்
புண்ணியம் கோடி
ஆங்கோர்
ஏழைக்கு எழுத்தருவித்தல்
என்றார்
பாரதியார். அத்தகைய சிறப்பான கல்வியை
சீரோடும், சிறப்போடும் கொடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஆசிரியப்
பெரு உள்ளங்களுக்கும்…
'கல்லாமல் இருப்பதைவிட பிறவாமல் இருப்பது மேல்' என்று
சொன்ன பிளாட்டோவின் உரைத்த படியும், 'கேடில் விழுச்செல்வமாம்
கல்வி' என்று திருவள்ளுவரின் கூற்றும் , 'இளமையில் கல்' என்று இயம்பிய ஒளவையாரின் அமுதவரியினை
உண்மையாக்கும் வண்ணம் கல்வி பெறுவதே கடமையாய் வந்திருக்கும் மாணவ, மாணவியர் செல்வங்களுக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த
காலம் கையைவிட்டு நழுவிச் சென்ற காலம். அதைப் பற்றி அதிகம்
கவலை கொள்ளாமல் நிகழ்காலத்தை கையில் விடாமல் பிடித்து கொண்டுவிட்டால் கட்டாயம் வருங்காலம்
உங்கள் கையில்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
(கூட்டத்தைப் பார்த்து) நீங்கள் 'மேஜிக் ஸ்டோன்' அதாவது மந்திரக்கல் பற்றி
கேள்விபட்டு இருக்கின்றீர்களா? ஒரு பள்ளியில் இதே போல் ஒரு
விழா நடக்கிறது. அந்த விழாவில், சிறந்த
மேதையும், தொழிலதிபருமான சிறப்பு விருந்தினர் ஒருவர் உரை
நிகழ்தினார். அந்த உரையில் அவர் " நான் மிகவும் சுமாராகப் படிக்கும் மாணவன். ஆனால் நன்றாகப்
படித்து முன்னுக்கு வரவேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஒரு
நாள் எனது ஆசிரியர் என்னை அழைத்து " நீ முதல் மதிப்பெண்
வாங்கி நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாயா?" என்று கேட்டார். அதற்கு 'ஆமாம்'
என்று தலையாட்டினேன். "முதலில் உனது
குறும்புத்தனத்தை குறைத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் என்னைப் போல் பல சுமாராகப் படிக்கும் மாணவ மாணவியர்களை, இந்த அளவுக்கு உயர்த்திய எனது மூத்த ஆசிரியரைப் பார். அவர் ஒரு ‘மந்திரக்கல்’ தருவார்.
அதன் பிறகு அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி நட" என்று என்னை அந்த ஆசிரியரிடம் அனுப்பினார். 'அவர்
என்னைப் பார்த்தவுடன் "வாப்பா வா, இங்கே உட்கார், எதற்காக என்னைப் பாரக்க வந்தாய்?
என்று கேட்டார். நான் விவரத்தைச் சொன்னேன். அப்படியா? அப்படியென்றால் நான் சொல்லும்படி நடந்து கொண்டால்தான் நீ நினைத்தது நடக்கும்.
சம்மதமா?" என்று கேட்டார். பள்ளி மெச்சும் பிள்ளையாக பெயர் எடுக்க வேண்டும் என்கிற ஆசையில் 'சம்மதம்' என்றேன். அவர்
பூஜையறைக்குள் சென்று ஏதோ ஒரு பொட்டலம் எடுத்து வந்தார். வாயில்
ஏதோ ஒரு மந்திரத்தைச் சொல்லி "இதனுள் ஒரு மந்திரக்கல் இருக்கின்றது.
ஒவ்வொரு முறை படித்த பிறகு அதை எழுதிப் பார்க்க வேண்டும். அது மறக்காமல் இருக்க இந்த பொட்டலத்தைத் தொடவேண்டும். அப்படித் தொடும்போது அதனுள் இருக்கும் மந்திர சக்தி நீ படித்ததை மறக்காமல்
செய்துவிடும்" என்று சொல்லி அந்த மந்திரக்கல்லை'
என் கையில் கொடுத்தார். அந்தக் கல் என் கைக்கு
வந்தவுடன் எனக்குள் ஏதோ ஒரு சக்தி புகுந்தது போல் உணர்ந்தேன். அதை பத்திரமாக வைத்துக் கொண்டு அவர் சொல்லியபடி செய்தேன். என்ன ஆச்சரியம். நான் எழுதிய தேர்வுகளில் அனைத்துப்
பாடத்திலும் நான்தான் முதல் மதிப்பெண் பெற்றேன். அந்த ஊக்கம்
‘இனி வரும் காலம் என் கையில் இருக்கின்றது’ என்கிற நம்பிக்கை
பிறந்தது. அப்போது என்னைப்போல் சுமாராகப் படிக்கும்
மாணவர்கள் சிலர் நான் பெற்ற முதல்பெண் இரகசியத்தை கேட்டனர். நானும்
அந்த மந்திரகல்லைப் பற்றிச் சொன்னேன். என்ன அதிசயம். அவர்களும் நல்ல மதிப்பெண் பெற்று இன்று பெரிய பெரிய பதவியில் இருக்கின்றனர்.
எனது தன்னம்பிக்கையும், மந்திரக்கல்லின் மேல் இருத்த
நம்பிக்கை தான் என் வருங்காலம் என் கையில் கிடைக்கப் பெற்றேன்" என்று முடித்தார்.
அந்த
தன்னம்பிக்கையும், நம்பிக்கையும் உங்களுக்கு
கொடுப்பதோடு, ஏறுவதற்கு ஏணியாகவும், அக்கரையைக்
கடப்பதற்கு தோனியாகவும், பறப்பதற்குச் சிறகாகவும், நல்ல சிலைகளைச் செதுக்கும் உளியாகவும் உங்களை மாற்றவேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்குத்
தான் இந்நாள் விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஒருசமயம்
நான் என் உறவினர் வீட்டிற்குச் சென்றேன். நான் எப்போது
சென்றாலும் ஏதாவது ஒரு வால்தனம் செய்து திட்டு வாங்குவான். அதே
எண்ணத்தோடு 'இன்று என்ன சுட்டித்தனம் செய்து திட்டு வாங்கப்
போறானோ' என்கிற நினைப்பில் உள்ளே நுழைந்தேன். அங்கே நான் பார்த்தது அதிசயம், ஆனால் உண்மை. இந்த தடவை அவன் எந்த சுட்டித்தனமும் செய்யவில்லை. மாறாக
அவன் எழுதிய பாடங்களையும், ஓவியங்களையும், அவன் செய்த புராஜெட் ஐ காண்பித்தபோது நான் மகிழ்ச்சியில் மிதந்தேன்.
எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது? என்ற விவரம் அவன்
அம்மாவிடம் கேட்டேன். அந்த நிகழ்ச்சியை விரிவாகச் சொன்னார்.
இரண்டு
மாதத்திற்கு முன்பு அவனோட பள்ளிகூடத்தில் இன்பச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தாங்க.
நான் முதல்லே அனுப்புவதா இல்லை. ஏன்னா ஏதாவது
குறும்புத்தனம் செய்திடுவான் என்கிற பயம். ஆனா அவன்
"நான் எந்த ஒரு சுட்டித்தனம் செய்யாமல் சமத்தாக சென்று வருகிறேன்"
என்று உறுதி சொன்ன பிறகே அவனை அனுப்பினேன். சொன்னது
போல சமத்தா வந்தான். ஆனா அவனுக்குள் ஒரு மாற்றத்தைக் கவனித்தேன்.
சீக்கீரம் எந்திரி, குளி, படி, கை கழுவு, சாப்பிட வா,
வீட்டுப்பாடம் செய் என்று ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்போது தான் எல்லா வேலையும் செய்வான். ஆனா
டூர் போய் வந்த பிறகு, இப்ப என்னான்னா எல்லா வேலையும்
சொல்லாம டக்கு டக்குன்னு செய்றான். அவனே படிக்கிறான்,
புராஜெட் வொர்க் பண்றான்.
அப்படியா, அப்படி அந்த டூர்லே என்ன தான் நடந்தது.
அதுவா, சில இடங்கள் சற்றிப் பார்த்த பிறகு ஒரு தொழிற்சாலைக்கு அழைத்துச்
சென்றார்களாம். அங்கே பல தரப்பட்ட தொழிலாளர்களை
பார்த்திருக்கான். மூட்டை தூக்குபவர், காப்பி
கொடுப்பவர், காவல் காப்பவர், ஆபிஸ்
வேலை செய்பவர், தரையை சத்தம் செய்கிறவர், ஏசி யில் மும்முரமாய் வேலை பார்பவர் என்று பலரைப் பார்த்தவன் மேலாளரின் நடை,
பேச்சு, வேலை அவனுக்கு ரொம்பவே இம்ப்ரஸ் ஆனது
போல் உணர்ந்துள்ளான். நேராக அவரிடத்திலே, சார், சிலர் மூட்டை போன்றவற்றைத் தூக்கி கஷ்டப்பட்டு
வேலை செய்யுராங்க, ஆனா நீங்க ஏசியிலே ஜாலியா உட்காந்திருக்கீங்க.
நீங்க அந்த மாதிரி வேலையெல்லாம் செய்யுறதில்லே, ஏன்? என்று கேட்டிருக்கான். அதற்கு
அவர்..
"அதுவா தம்பி, அந்த மாதிரி மூட்டை தூக்கிற வேலை
செய்யுறவங்க சரியாகப் படிக்காதவங்க. அதனாலே அந்த மாதிரி வேலை
தான் கிடைக்கும்.
அப்போ
உங்க மாதிரி ஆகனும்னா,"
"என்னை மாதிரி ஆகனும்னா, அன்றைக்கு அன்று நல்லா படிக்கனும்,
உன் வேலையை நீயே உடனுக்குடன் செய்யனும். வால்தனம்
செய்யக் கூடாது. எல்லாரிடத்தில் பணிவா நடக்கனும். அப்படி நடந்தா வருங்காலம் உன் கையில் தான். உன்னோட கனவும்
பலிக்கும்" என்று சில அறிவுரை சொல்லியிருக்கிறார்.
அதற்கு இவன்
"நானும் நல்லா படிச்சு உங்களைப் போல உயர்ந்த பதவியிலே அமருவேன்"
என்று சொல்லிட்டு வந்திருக்கான். அந்த
தாக்கம்தான் அவனை இந்த அளவுக்கு மாற்றியிருக்கு" என்று
சொல்லிய போது எனக்கு ஒரு உண்மை தெரிந்தது. நம்பள்ளியில் படிக்கும்
மாணவ மாணவியர்கள் நன்றாக படித்து மூட்டைத் தூக்கும் வேலைக்குச் செல்லாமல் நல்ல
பெரிய பதவியை அடைவார்கள். ஏனென்றால் அவர்கள் நன்றாகப் படிப்பதால்
அவர்களின் வருங்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கை நம் ஆசிரியர் ஒவ்வொருவரிடத்திலும்
உண்டு.
நடப்பவர்களுக்கு
வழிகாட்டியாக, பறப்பவர்களுக்கு திசைகாட்டியாக நாம் இருக்க
வேண்டும் என்பதையே இந்த நாள் அறிவுறுத்துகிறது என்றே நினைக்கிறேன்.
இந்த
சமயத்திலே இன்னொரு சம்பவமும் சொல்லியே ஆக வேண்டும். மூனு மாசத்துக்கு முன்னாடி எனக்கு மிகப் பழைய நண்பியிடத்திலிருந்து ஒரு
கால் வந்தது. அவள் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.
அட்ரஸ் கொடுத்தேன். அவள் தன்னுடன் எட்டாவது படிக்கும்
மகனோடு வந்திருந்தாள். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
அவன் அம்மாவிடத்தில் ஏதோ ஒன்று கேட்பது போல் இருந்தது.
"உன் மகன் என்ன கேட்கிறான். சும்மா
சொல்லு" என்றேன்.
"ஒன்றுமில்லை. நியூஸ் பேப்பர் வேண்டும்" என்று கேட்கிறான். அது கேட்டவுடன் எனக்கு ஆச்சரியம்.
அன்றைய பேப்பரை அவனிடத்தில் கொடுத்துவிட்டு, இதில்
என்ன பாக்கப்போறான்" என்று கேட்டேன்.
அவனுடைய
கிளாஸ் டீச்சர் ஒரு தடவை எல்லோரிடத்தில் "நீங்கள்
வருங்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள்" என்று
கேட்டிருக்கிறார். நான் அப்துல்கலாம் போல விஞ்ஞானி ஆகவேண்டும்"
என்று இவன் சொல்லியிருக்கிறான்.
இந்த மாதிரி ஒவ்வொருவரும் சொன்னார்களாம். ஒவ்வொருவரும்
என்னவாக விரும்புகிறீர்களோ அதைப் பற்றிய கல்வித் தகவல்கள், வேலை
கிடைக்கும் இடங்கள், தகுதிகள், அனுபவம்,
சம்பளம் என்று பலவற்றைச் சேகரித்து அவன் வகுப்பில் ஒட்டிவைக்க
வேண்டும், பிறகு அதை நோட்டில் ஒட்டி ஆல்பமாக செய்து, அந்த நோட்டிற்கு வருங்காலத்தில் நான் ஒரு விஞ்ஞானியாக ஆவேன் என்று எழுதிக்
கொண்டுவருமாறு சொல்லியுள்ளார். இது வரையில் இருபது தகவல்கள்
சேகரித்துள்ளான். இன்னும் ஐந்து சேர்க்க வேண்டும்" என்று சொல்லியபோது அவன் இப்போதே அப்துல்கலாமாக மாறிவிட்டான் என்று எண்ணிக்
கொண்டேன்.
ஆகவே, மாணவமணிகளே! வாழ்க்கையில் குறிக்கோள் இல்லாமல்,
எவ்வித இலட்சியம் இல்லாமல் காற்றடிக்கும் திசையில் பட்டம் பறப்பது
போல பறக்காமல், குறி பார்த்து எய்தப்பட்ட அம்பு போல திசை
மாறாது, நேராக சென்றால் கட்டாயம் உங்களின் வருங்காலக் கனவு நினைவாகும்
என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன். நன்றி, வணக்கம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
No comments:
Post a Comment