Pages

Monday, 3 October 2016

அவளோட ‘தில்’லான பதில்

அவளோடதில்லான பதில்
சிறுகதை
மதுரை கங்காதரன்
                                                                         
பட்டப் படிப்பு படித்து முடித்த லீலாவிற்கு வரன் பார்க்கும் நேரம் வந்தது. அவளின் அப்பா சிவராமன் அந்தக் கால மனிதராக இருந்தாலும் இந்தக் காலத்து பெண்களின் மனோநிலையைப் பற்றி நன்கு அறிந்தவர். அவர்களுக்கு எப்படிப்பட்ட பையன்களைப் பிடிக்கும் என்பதையும் ஓரளவிற்கு ஊகிப்பவர்.

என்ன தான் லீலாவிற்கு புதுமைப் பெண்ணிற்கு உன்டான சுதந்திரங்கள் கொடுத்தாலும், அவள் ஒரு குறிப்பிட்ட எல்லையை மீறி எந்த ஒரு செயலையும் செய்யாததற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவளுடைய அம்மாவும் சரி, அப்பாவும் சரி அன்றாடம் ஊடகங்களில் வெளியாகும் பல  ஏமாறுகிற, ஏமாற்றும் சம்பவங்களை பகிர்ந்து கொள்வதோடு அதனால் ஏற்படும் வருங்கால விளைவுகளையும் எடுத்துச்சொல்லி எச்சரிக்கை செய்யத் தவறுதில்லை. அதனால் அவள் மனம் ஓரளவு பக்குவப்பட்ட நிலையில் இருந்ததென்னவோ உண்மையே.  

"ஏங்க, பொண்ணுகிட்டே ஒரு வார்த்தை கேட்டுக்குங்க. அவளோட மனசில என்ன இருக்குதுன்னு நாம கட்டாயமா தெரிஞ்சுக்கனுங்க. தினந்தினம் பேப்பர்லே, டி.வியிலே என்னென்னமோ செய்திங்க வருது. போதா குறைக்கு ஃபேஸ் புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர்லே காதல் கீதல்னு இளசுங்க பேசுறது அப்பப்போ என் காதுக்கு எட்டுது" என்று அர்த்தமுள்ள யதார்தத்தை பிரதிபலித்தாள் சிவராமனின் மனைவி கௌசல்யா.

"கௌசி, நீ சொல்றதுலேயும் உண்மை இருக்கு. அதனாலே இதைப் பத்தி நம்ம பொண்ணுகிட்டே வெளிப்படையாய்ப் பேசுவோம். நம்ம சந்தேகத்தையும் தீர்த்துக்குவோம்" என்று பேசிக் கொண்டிருக்கும் போதே லீலா அங்கு ஒய்யாரமாய் பிரசன்னம் ஆனாள்.

கல்யாணம்என்கிற பேச்சை எடுத்த உடனே எப்படித் தான் பெண்களுக்கு ஒருவித பொறுப்பும், அதை ஏற்றுக் கொள்ளும் மனதிடமும் வருகின்றது என்பது இன்றும் ஒரு புரியாதப் புதிராகவே இருக்கின்றது.  

"நீங்க ரெண்டு பேரும் ஏதோ வலுவான சிந்தனையிலே இருக்கிறதா தோணுது. அது என்னான்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"
"ஆமாம்மா லீலா. எல்லாம் உன்னோட கல்யாணத்தைப் பத்தின சிந்தனை தான்"
"அதுக்கென்னப்பா இப்ப அவசரம்?"
"அதில்லேம்மா, கல்யாணம் என்கிறது உன்னோட வாழ்க்கைச் சமாச்சாரம். அதை காலா காலத்திலே நல்லபடியா முடிக்க வேண்டியது எங்களோட கடமை. அதுவும் உனக்கு பிடிச்ச பையனா தேடித் தரணும். அது தான் எங்களோட ஆசை. அதனாலே தான் ...." என்று இழுத்தார்.

"என்னப்பா இழுக்கிறீங்க. முழுசா முடிங்க"

"அதில்லேமா, உன்னோட மனசிலே யாரைவது...?" என்று ஒருவித சந்தேகப் பார்வையோடு லீலாவைப் பார்த்தார்.
"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. எதலாலேன்னா, நீங்க என்கிட்டே எப்போவோ சொன்னது இன்னும் மனசிலே வச்சிருக்கேன்பா" என்றாள்.

'நீயா ஒரு வரனைத் தேடிகிட்டா அது உனக்கு முதலும் கடைசியுமா கிடைக்கிற வாய்ப்பாகத் தான் இருக்கும். அந்த மாதிரி சமயத்திலே ஏற்படுற நட்பு, வயசுக் கோளாறு காரணமா  இனக்கவர்ச்சியாலே வர்ற நீர்குமிழிக் காதலாக இருக்கலாம். அந்த காதல் மயக்கத்தினாலே உனக்கு அவனிடத்திலே உள்ள நல்லது கெட்டது பத்தி ஆராய தோணாது. எப்போதும் ஒரே நினைப்பிலே, ஒரே கோணத்திலே பார்த்துப் பேசி கண்மூடித்தனமாக பிடிச்சு ஏத்துக்கிற மனோபாவம் தான் நிறைஞ்சிருக்கும். யார் என்ன சொன்னாலும் காதில் ஏறாது. ஆனா அதே சமயம் அந்த பொறுப்பு எங்ககிட்டே வர்றப்போ, நாங்க கொஞ்சம்  அதிக கவனமா இருக்க வேண்டியிருக்கு. பையனைப் பத்தி ஒண்ணுக்கு நாலு பேர்கிட்டே விசாரிக்க வேண்டியிருக்கு.  
பல நல்ல வரன்களிலே உனக்கும், எங்களுக்கும் பிடிச்ச ஒரு வரனை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்குது' என்று அவர் சொல்லியதை  மீண்டும் நினைவுபடுத்தினாள்.

"இதை உன் வாயாலே கேட்கிறப்போ எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குது" என்று சொல்லும்போது அவர்கள் முகத்தில் பிரகாசமும், உடலில் பூரிப்பும் தெரிந்தது

இப்படி வார்த்தையால் பச்சை கொடி காட்டி, தலையை அசைத்து சம்மதம்  தெரிவித்ததோடு தன் மனதில் இருப்பதை தெளிவாகச் சொன்னாள். பிறகென்ன? மேற்கொண்டு நடக்க வேண்டியனவற்றை செய்து முடிக்க துரிதமாக செயல்பட்டார் சிவராமன்.

சமயோசிதமாக ஆரம்பத்திலிருந்தே வரனைத் தேட இரு வழிகளில் நாடினார். அதில் ஒன்று அவர் நண்பர் கல்யாணத் தரகர் கந்தசாமி மூலமாகவும், மற்றொன்று கல்யாண சேவை செய்யும் இணையதளத்தின் மூலமாகவும் முயற்சி செய்தார்சில மாதத்திற்குப் பிறகு , தன் நண்பர் தரகர் மூலமாக பார்த்த ஒரு வரனும்இணையதளம் மூலமாக கிடைத்த ஒரு வரனும் அவர்கள் விரும்பியவாறு அமைந்திருந்தது. அவற்றில் எந்த வரனுக்கு லீலாவை கொடுப்பது? என்று  முடிவு செய்ய வேண்டிய கட்டம் வந்தது.

கந்தசாமி இப்போது கல்யாணத் தரகராக இல்லாமல் சிவராமனின் நண்பன் என்கிற உரிமையில் அந்த இரு வரன்களைப் பற்றிய அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார். அதற்காக சிவராமன் வீட்டிற்குச் சென்றார்
"சிவராமா, என்ன முடிவு செஞ்சுருக்கே" என்கிற குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார்.
"அடேடே வாப்பா கந்தசாமி. அதைப் பத்தி தான் பேசிட்டு இருக்கிறோம். ரெண்டு இடமும் நல்ல இடம்"
"அப்பறமென்ன, ஏதாவது ஒண்ணை முடிச்சிட வேண்டியது தானே"
"அது தானே பிரச்சனை. எந்த வரன் நம்ம லீலாவிற்குப் பொருத்தமா இருக்கும்னு நாங்க யோசிட்டு இருக்கிறோம்?"
"இதுலே என்னப்பா யோசிக்க வேண்டியிருக்கு. எம்மூலமா வந்த வரனைக் காட்டிலும் இணையதளத்தின் மூலமா வந்த வரன் தான் நம்ம லீலாவிற்குப் பிடித்தமானதா இருக்கும்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?"
"நாங்களும் அப்படித் தான் நினைக்கிறோம். உன் மூலமா பார்த்த வரன் கொஞ்சம் பழமைவாதியா இருக்கிறான். ஆனா இணையதளம் மூலமா வந்த வரன் ரொம்ப மாடர்னா தெரியுறான். இந்த காலத்துப் பெண்களுக்கு இப்படி இருந்தாத் தானே பிடிக்குது"

"நீங்க ரொம்ப சரியாக் கணிச்சிருக்கீங்க" என்றார் கந்தசாமி.
அவர்கள் பேசுவதை இடை மறித்த கௌசல்யா, "சும்மா நீங்க ரெண்டு பேரும் பேசிட்டே இருந்தா எந்த ஒரு பிரயோசனமும் இல்லை. நம்ம பொண்ணோட அபிப்பிராயத்தைக் கேளுங்க" என்று முடிப்பதற்குள் லீலா அந்த இடத்திற்கு ஏதோ ஒரு வேலையாக வந்தாள். இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று கல்யாண வரன் பேச்சைத் தொடங்க நினைத்தார் கந்தசாமி.
அவரைப் பார்த்தவுடன் "மாமா, எப்படி இருக்கீங்க? வீட்டிலே எல்லோரும் சௌக்கியமா?" என்று நலம் விசாரித்தாள் லீலா.
"எல்லாரும் சௌக்கியம் தான். ஆனா நீ தான் இன்னும் முடிவு சொல்லாமே இருக்கிறே. எனக்காக இதைக் கேட்கலே. பையன் வீட்டுக்காரங்க கேட்கிறாங்க. நான் பார்த்த வரன் பிடிக்கலேன்னு சொல்லிட்டா அவங்க வேறு இடம் பார்க்க ஆரம்பிப்பாங்க இல்லே?" என்று புதிராகப் பேசினார்.
"நீங்க எல்லாரும் மொட்டையா 'யாரைப் பிடிச்சிருக்கு'ன்னு கேட்டா என்னாலே எப்படி பதில் சொல்ல முடியும் மாமா?"
"லீலா, எங்களுக்கு இந்த காலத்துப் பொன்னுங்க எப்படிப்பட்ட பையனை விரும்புவாங்கன்னு தெரியாதா என்ன? உனக்கேத்த வரன் அந்த மார்டன் மகேந்திரன் தான். இருந்தாலும் அந்த ரெண்டு வரங்களோட வீட்டிற்கு நாங்கள் போன போது, அங்கே நாங்கள் கவனித்தவைகள், அவர்கள் நம்மிடம் நடந்து கொண்ட விதம் பத்தி  விலாவாரியாகச் சொல்றோம். பிறகு நாங்க எடுத்த முடிவு சரி தான்னு நீயே சொல்லுவே"

"நீங்க அந்த ரெண்டு வீட்டிலே நடந்த விவரத்தைச் சொல்லுங்க, பிறகு என்னோட விருப்பத்தைச சொல்றேன்" என்றாள் லீலா.
கந்தசாமி முந்திக் கொண்டு "என் மூலமா வந்த வரனோட வீட்டைப் பத்தி முதல்லே சொல்றேன். பையன் பேரு சுப்பிரமணியன். டிகிரி படிச்சிருக்கான். இருபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறான். அந்த வீட்டிலே அவரோட அம்மா, அப்பா, பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் ஒரு தங்கையும் இருக்கிறாங்க" என்றார் கந்தசாமி.
"வீட்டைப் பத்தி நான் சொல்றேன்" என்று ஆரம்பித்தாள் லீலாவின் அம்மா.     
"அந்த காலத்து வீடு. பூர்வீகமா வாழ்த்து வர்ற சொந்த வீடாம். அதனாலே அங்குள்ளவங்களுக்கு அவங்களை நல்லாத் தெரியுது. நாங்க வீட்டுக்குள்ளே நுழைஞ்சப்பவே எங்களுக்கு இது பழைய வீடுன்னு நல்லா தெரிஞ்சது. எங்களை அவங்க எல்லாரும் 'வாங்க, வாங்கன்னுநல்லா சிரிச்ச முகத்தோட வரவேத்தாங்க. பழைய காலத்து மேசை, நாற்காலிங்க தான் இருக்குது.  ஃபேன் கூட பழசு தான். அந்த காலத்து பெரிய கலர் டி.வி. எங்களை சமுக்காளம் போட்டு தான் உட்கார வைச்சாங்க"
"மத்ததை நான் சொல்றேன்" என்றார் சிவராமன்.
"உட்கார வைச்சாங்களா! கொஞ்ச நேர்த்திலே சமையலறையிலிருந்து சுடச்சுட சொந்தமா வீட்டிலிருந்து தயாரான கேசரி, வடையோட சட்னியும் பரிமாறினாங்க. ஆனா சும்மா சொல்லக் கூடாது. எல்லாம் நல்ல ருசியா இருந்திச்சு. அப்புறம் பொதுவான விசயத்தைப் பத்தி பேசினோம். எல்லாரும் கலகலப்பாக பேசினாங்க. அதையெல்லாம் பார்க்கிறபோது எனக்கு நடிகர் திலகம் சிவாஜி படத்திலே பாசம் காட்டுற காட்சிங்க தான்  ஞாபகத்து வந்தது. அதுக்கப்புறம் அங்கே நின்ன பழைய வண்டியைப் பார்த்து 'யாரோடது'ன்னு கேட்டேன். அது அந்த பையனோட வண்டின்னு சொன்னாங்க. பையன் வேலை செய்யுற இடம் பக்கத்திலே தான் இருக்காம். அதனாலே பையன் சைக்கிளில் தான் வேலைக்குப் போயிட்டு வருவானாம். தூரமா போறதுக்கும், அவசரத் தேவைக்கும் தான் வண்டியை எடுப்பானாம்? சும்மா சொல்லக் கூடாது. வீடும் அங்கிருகிற ஒவ்வொரு சாமான்களும் படு சுத்தமாக இருந்தது. நாங்க எல்லா விவரத்தையும் ஒண்ணு விடாம கேட்டோம். எல்லாத்துக்கும் நல்லாவே வெளிப்படையாப் பதில் சொன்னாங்க. அதைவிட கடைசியா நான் ஒரு கேள்வி கேட்டதுக்கு அவங்க பதில் சொன்ன விதம் தான் எங்களை அசர வைச்சுடுச்சி. அதாவது 'எல்லாரும் பொன்னைப் பார்க்கத் தான் பையங்க போவாங்க. ஆனா நீங்க பையனை முதல்லே பார்க்க வாங்க. பிறகு பொன்னைப் பார்க்க நாங்க வர்றோம்'னு சொன்னீங்களே, அதனோட உள் அர்த்தம் என்னான்னு  கேட்டோம்.

"ஓ அதுவா, ஒரு பொன்னுக்கு புகுந்த வீடு தான் முக்கியம். அது எப்படி இருக்குதுன்னு நீங்க மொதல்லே பார்க்கனும். முக்கியமா பொன்னைப் பெத்த அப்பா, அம்மா தெரிஞ்சுக்கனும். அவங்க தான் இங்குள்ள பழக்கம், வசதியைப் பத்தி பொன்னுகிட்டே சொல்லனும். அதெல்லாம் பொன்னுக்குப் படிச்சிருந்தா பிறகு நாங்க பொன்னைப் பாரக்க வருகிறோம். அதில்லாமே நாங்க பொன்னு பார்க்க வந்திட்டு, அவங்களை எங்களுக்குப் பிடிக்காமே போனா அது உங்களுக்கும், பொன்னுக்கும் தர்மசங்கடமாக இருக்கும். அத தவிர்க்கிறதுக்குத் தான் இந்த ஏற்பாடு" என்றார் பையனின் அப்பா.
அவர்கள் சொல்லச் சொல்ல எல்லாவற்றையும் லீலா கூர்மையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
"அந்த பையனை விட்டுத் தள்ளும்மா. இந்த மார்டன் மகேந்திரனைப் பத்திச் சொல்றோம். உனக்கு டக்குன்னு பிடிச்சுடும். நல்லா கேட்டுக்கோ என்று அதிக ஆர்வத்துடன் சொன்னார் லீலாவின் அப்பா.
"இந்த பையனும் டிகிரி படிச்சிருக்கான். இருப்பத்தைந்தாயிரம் சம்பளம் வாங்குறான். புத்தம் புது வீடு. அதனாலே சுத்தி இருப்பவர்களுக்கு அவங்களைப் பத்தி ஒண்ணும் தெரியல்லே. வீடு பூராவும் மொசைக். ஏசியும் இருக்கு. புது மாடல்லே சமையலறை . உட்கார்றதுக்கு சோபா, சாப்பிடுறதுக்கு டைனிங் டேபிள், குசன் நாற்காலின்னு தடபுடலா இருக்கு. புது மாடல் வண்டி. பையன் பக்கத்து தெருவுக்குப் போனாலும் வண்டியிலே தான் போவானாம். புதுசா எதைப் பார்தாலும் உடனே வாங்கிடுவானாம். எங்களுக்கு வைச்ச சுவீட்டும், காரமும் பிரபல கடையில் வாங்கியதாம்" என்று பெருமையுடன் அடுக்கிக் கொண்டே போனார்.
"இப்போ சொல்லும்மா, உனக்கு அந்த ரெண்டாவது பையனைத் தானே புடிச்சிருக்கு" என்று சொல்லிவிட்டு லீலாவின் முகத்தைப் பார்த்தார்.
லீலாவும் உடனே பதில் சொல்லாமல் மௌனமாக சற்று யோசித்தாள்.
மௌனத்தை கலைத்து "அப்பா, எனக்கு முதல் பையனைத் தான் பிடிச்சிருக்கு" என்று பதில் சொல்ல அனைவரும் அதிர்ச்சியில் சிலையானார்கள்.
"என்னம்மா சொல்றே? நல்லா சுயநினைவோட பேசுகிறாயா?"
"ஆமாப்பா, சுயமா யோசிச்சு பேசுறேன்"
"சரி, அப்படின்னா அதுக்கான காரணத்தை நாங்க தெரிஞ்சுக்கலாமா?" என்று சிவராமன் அதிர்ச்சியிலிருந்து மீண்ட பிறகு கேட்டார்.
"கண்டிப்பா அதனோட காரணத்தைச் சொல்றேன். முதல் பையனோட வீடு பழையது தான். ஏன் அங்குள்ளது எல்லாமே பழசு தான். அதனாலே அவங்களுக்கு கடன் கட்டாயமா இருக்காது. சம்பளத்திலே பிடித்தம் அதிகமா இருக்காது. அனாவசியமான செலவு எதுவுமே செய்ய மாட்டாங்கன்னு நீங்க சொல்றதுலேயிருந்து தெரியுது. அதில்லாமே நான் போயி கொஞ்சம் கொஞ்சமாக மாத்துறதுக்கு வழியிருக்கு. ஆனா ரெண்டாவது பையனோ செலவாழி. இந்த சம்பளத்திலே இத்தனை வசதி இருந்தா கண்டிப்பா கடன் இருக்கும். அந்த கடனை அடைக்கிறதுக்கு நான் என் வாழ்நாள் பூராவும் பொறுமையா இருக்கனும். முழு சம்பளம் கைக்குக் கிடைக்காது. அதனாலே எல்லா செலவையும், ஏன் அவசியமான செலவையும் பாத்து பாத்து தான் செலவு செய்யனும். அதனாலே எனக்கு ..." என்று பேசி முடிக்கும் முன்னே
"போதும்மா. இந்த காலத்துப் பொன்னுங்க பத்தி நான் என்னமோ நினைச்சேன். ஆனா அவங்க நம்மளைப் போல மேலாப்பிலே பார்க்காமே ரொம்ப ஆழமாத் தான் பார்க்கிறாங்கன்னு இப்ப தெரிஞ்சுகிட்டேன். அதனாலே முடிவா அந்த முதல் பையனையே ..." என்று கந்தசாமியைப் பார்த்தார் சிவராமன்.
"எனக்கு முடிவு கிடைச்சிருச்சி. இப்பவே அந்த முதல் பையனை பொன்னு பார்க்க வரச் சொல்லுடுறேன்" என்று புறப்பட்டார் கந்தசாமி.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

No comments:

Post a Comment