Pages

Wednesday, 12 October 2016

‘விதி’யை வெல்ல ஊரால் முடியும் தம்பி!

விதியை வெல்ல ஊரால் முடியும் தம்பி!
சிறு கதை
மதுரை கங்காதரன்

கடவுளுக்கு இரக்க குணம் இருக்கின்றதா? என்று உங்களிடத்தில் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? ‘ஆமாம் என்று சொன்னால் பின் ஏன் தினம்தினம் நம்மை அச்சுறுத்தும்படி பல சம்பவங்கள் நடக்கின்றது? ‘எல்லாம் விதி என்று ஏற்றுக் கொண்டாலும் அந்த விதியை ஒரு நாள் மதியால் வென்றே தீருவேன் என்கிற உறுதியோடு இருந்தான் ஒரு கடவுள் பக்தன்.

'கடவுளே, ஏன் மனிதர்களை வாட்டி வதைக்கின்றாய்? என்ன தான் இறப்பதற்காகவே மனிதன் பிறக்கின்றான் என்கிற விதி இருந்தாலும் தன் முழு ஆயுளை முடிக்கவிடாமல் இயற்கை என்கிற பெயரில் நீ செய்யும் லீலைகள் சரி தானா? ஏட்டிக்குப் போட்டியாய் ஏன் சில காரியங்களைச் செய்கின்றாய்? மனிதர்கள் தான் அவரவர் கடமையைச் செய்யாமல் வீணாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் நீயும் கூடவா இப்படி? உன் பொழுது போக்கிற்காக எங்கள் உயிரை அல்லவா மாய்க்கின்றாய்! இதற்கு முடிவே இல்லையா?' என்று அந்த பக்தனின் இதயத்திலிருந்து எழுந்த ஒலி, அருள் உலகத்தில் எதிரொலித்து ஒரு குலுங்கு குலுக்கியது.

இக்காலத்திலும் மனமுருகி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்ட பக்தன் இருக்கின்றானா? அவனைச் சந்தித்து அவன் குறையினை நீக்க வேண்டும்என்கிற கடவுளின் ஆசையும், ஆர்வமும் நம்மையும் மெய் சிலிர்க்க வைக்கின்றதல்லவா?

"எமதர்ம ராஜரே, சற்று முன் நம்மையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்தக் குரலைக் கேட்டீர்களா?"
"ஆம் பிரபு, இது நாள் வரை நம்மைப் பற்றி யாருமே இவ்வாறு பேசியதே இல்லை. மக்களுக்கு நாம் என்னதான் வாரி வழங்கினாலும் அவனுடைய பேராசையை என்ன சொல்வது? பணம், செல்வம் கொண்டவன் மென்மேலும் செல்வம் சேர்க்கிறான். ஏழையானவன் அவனிடத்தில் ஏமாந்து விட்டு மேற்கொண்டு ஏழையாக அல்லவா ஆகிறான். உழைப்பவனை விட ஏமாற்றுபவனைத் தானே மனிதன் அதிகமாய் நம்புகிறான். சில சமயங்களில் நம்மையும் கூட துச்சமாக அல்லவா மதிக்கிறான்!" என்று எமதர்மர் தமது தரப்பில் இருக்கும் நியாயத்தை கர்ஜனை கொண்ட குரலோடு எடுத்துச் சொன்னார்.
"எமதர்மரே, என்ன தான் நியாயம் நம் பக்கத்தில் இருந்தாலும், நம் மீது பக்தி கொண்டிருக்கும் அந்த பக்தனின் ஆதங்கத்தை செவி சாய்ப்பது நமது கடமையல்லவா? உடனே புறப்படுவோம். அந்த பக்தனின் குறையை உடனே தீர்ப்போம்"
"அப்படியே ஆகட்டும் பிரபு. உங்கள் சித்தம் படியே நடக்கிறேன்" என்று கூறிய எமதர்மரும், கடவுளும் அந்த பக்தனை நோக்கி அனுகினார்கள்.

இதெல்லாம் நடப்பது கனவல்ல. எல்லாம் உண்மையாக நடந்து கொண்டிருக்கின்றது.

அவ்விருவரையும் கண்ட பக்தன், இன்ப அதிர்ச்சி அடைந்தாலும் எவ்வித பதற்றமும் இல்லாமல் மிகச் சாதாரணமாகப் பார்த்தான். அந்தப் பார்வையில் 'என் பக்தியினை ஏற்று ஒரு நாள் கடவுள் இங்கு வந்தே தீருவார்' என்கிற நம்பிக்கை தெரிந்தது என்றே சொல்ல வேண்டும்.

"அகிலத்தை காக்கும் கடவுளே, தங்களை வணங்குகிறேன். என் நம்பிக்கையை உண்மையாக்கிய தங்களுக்கு நன்றி" என்று பக்தன் தன் பக்தியையும், பணிவையும் தன் உடலால் வெளிப்படுத்தினான்.
"பக்தனே, பொன்னையும், பொருளையும் பிரதானமாக நினைக்கும் இந்த கணினியுகத்தில் என்னை மறக்காமல் நினைத்திடும் உன்னை வாழ்த்துகிறேன். நீ என்னை அழைத்த காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா?"
"கடவுளே, சமீப காலமாக இயற்கை என்கிறப் பெயரில் தாங்கள் செய்யும் அட்டகாசம் எங்களால் தாங்க முடியவில்லை. ஆங்காங்கே மழை, வெள்ளம், அனல் காற்று, சூறாவளி, பூகம்பம் என்று ஒரு பக்கமும், விலைவாசி என்கிற அரக்கன் ஒரு பக்கமும், இது போதாதென்று சில அரசியல் தலைவர்கள் செய்யும் அலப்பறையும், வளர்ச்சி என்கிறப் பெயரில் கணினி, கைபேசி செய்யும் அவலங்களும் ஒன்றோடொன்று போட்டிப் போட்டுக் கொண்டே வளர்ந்தால், வாழத்தான் முடியுமா? அல்லது மடியத்தான் வேண்டுமா? இதற்கு பதில் என்ன சொல்லப் போகிறீர்கள்?" என்று இத்தனை நாள் மனதில் வைத்திருந்த அத்தனை குறைகளையும் உலக மக்கள் சார்பில் முன் வைத்தான் பக்தன்.

"பக்தனே, இவற்றுக்கெல்லாம் காரணம் நாம் அல்ல. மாற்றங்கள், முன்னேற்றம் என்கிற பெயரில் நீங்கள் செய்யும் தில்லுமுல்லுகள். கவர்ச்சியான விளம்பரத்தில் மதி மயங்கியதால் வந்த விளைவே! மேலும் நான் கொடுத்திருக்கும் அறிவைக் கொண்டு இயற்கைக்குப் புறம்பாக செயற்கையாக பலவற்றை உருவாக்குவதே காரணம். அதனால் வரும் பக்கவிளைவுகள்  தான் இவைகள். எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் பேராசை இருக்கின்ற வரையில், எனக்குக் கட்டுப்பட்டு இருக்கும் இயற்கையின் சீற்றம் அவ்வப்போது அதன் வேலைகளைக் காட்டத் தான் செய்யும். அது ஒருவகையில் முடிவில்லாத தொடர்கதை! அது சரி, நீ அழைத்ததன் காரணம் யாதோ?"

"தேவனே, நீங்கள் எழுதிய விதிகளை என் மதியால் வென்று காட்டுகிறேன்"
"பக்தா, அது உன்னால் ஒரு காலும் முடியாது. ஏனென்றால் விதி விளையாடும் போது மதி வேலை செய்வது மிகக் கடினம். வேண்டுமென்றால் நீ முயற்சி செய்து பார். முடிகின்றதா? என்று பார்ப்போம்" என்று கடவுளே பக்தனிடம் சவால் விடுவதை கண்டு பதறிய எமதர்மர்

"பிரபோ, ஏன் இந்த விபரீத விவாதம். விதியையெல்லாம் மனிதன் மதியால் வென்று விட்டால் இந்த உலகம் அழிந்துவிடுமல்லவா? அதற்கு நாம் காரணமாக இருக்கலாமா?"
"எமதர்மரே, உங்கள் கருத்தில் உண்மை உள்ளது. முக்காலமும் அறிந்த நாமே நம் இயக்கத்தில் சந்தேகம் கொள்ளலாமா? ஆகையால் தன்னலம் கருதாமல் மக்கள் நலன் கருதும் இந்த பக்தனுக்கு நாம் ஒரு வாய்ப்பு கொடுத்துத் தான் பார்ப்போமே!"
"ஆகட்டும் பிரபு"
"பக்தனே, அடுத்த மாதம் உன்னைச் சுற்றிலும் என்னென்ன அழிவு வர இருக்கின்றது என்பதை இந்த எமதர்மர் சொல்லுவார். கவனமாகக் கேள்" என்று எமதர்மரைப் பார்த்தார்.

கடவுளின் கட்டளைக்கிணங்க அடுத்த மாதத் திட்டத்தினைப் படிக்கலானார்.
"செம்பாக்கம் பகுதியில் தரமில்லாத பல அடுக்கு மாடிக் கட்டிட வேலை நடந்து வருகின்றது. அது அடுத்த மாதம் இடிந்து அதனால் 42 பேர் இறப்பார்கள். பிறகு தென்மாலையூரில் ஒரு கடையில் காலாவதியான திண்பண்டம் சாப்பிட்டு 2 குழந்தைகள் இறப்பார்கள். மடுகப்பட்டியில்
பெய்யப் போகும் அடமழையால் 54 பேர் பலியாவார்கள். பலர் வீடுகள் இழந்து தவிப்பார்கள். இவைகள் தான்" என்று எமதர்மர் எடுத்துரைக்க அனைத்தையும் அந்த பக்தன் கவனமாகக் கேட்டான்.
"பக்தனே, இப்போது மகிழ்ச்சி தானே. நடக்கப் போகும் உயிர்பலிகளை உன் மதியால் தடுத்துவிட்டால் நான் மிகவும் மகிழ்வேன்"
"கடவுளே, என் நம்பிக்கை வீண் போகவில்லை. உங்கள் திட்டங்களை என் மதியால் முறியடிப்பேன். இந்த வாய்ப்பு கொடுத்தமைக்கு நான் மிகவும் கடமைபட்டிருக்கிறேன்"
"நாங்கள் வருகிறோம்" என்று இருவரும் அருள் உலகத்திற்குச் சென்று விட்டனர்.

இது கனவா? நனவா? என்கிற சந்தேகம், சிறிது நேரம் கழித்த பின்பு தான் அந்த பக்தனுக்கு நம்பிக்கை பிறந்தது. தெரிந்துவிட்ட தேவரகசியத்தை தடுக்க அவனின் மனம் வேகப்படுத்தியது. முதல் திட்டத்தில் பலி கொடுக்கக் காத்திருக்கும் அந்த செம்பாக்கத்தில் புதிதாய் பிரமாண்டமாய் எழும்பிக் கொண்டிருக்கும் கட்டிடத்தைப் பார்த்தான் பக்தன். பார்த்தவுடன் பிரம்மித்துப் போனான். இந்த இடத்தில் முறையான அனுமதி இருக்கின்றதா? என்று விசாரித்துப் பார்த்ததில் நான்கு தளத்திற்கு அனுமதி பெற்று எட்டு தளம் எழும்பியிருந்தது. அதோடு வேகவேகமாக வேலை நடந்து கொண்டிருந்தது. தனக்குத் தெரிந்த ஒரு பொறியாளர் மூலமாக அந்தக் கட்டிடத்தில் கட்டப்படும் கலவை சரியான விகிதத்தில் இல்லையென்று தெரிந்து கொண்ட உடனே, கட்டிடத்திற்குச் சொந்தமான சொந்தக்காரரையும், அதைக் கட்டும் ஒப்பந்தக்காரரையும் சந்தித்துவிடத் துடித்தான். அந்த இடத்திற்கு ஓடினான்.
நல்லவேளை இருவரும் ஒரே இடத்தில் இருப்பது எனது பாக்கியம் என்று மனம் சந்தோசப்பட்டாலும், விதி ரூபத்தில் வரும் சதியை இவர்களைக் கொண்டு வெல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான்.
"ஐயா, வணக்கம்" என்று பவ்வியமாய் அவர்களைப் பார்த்துக் கும்பிட்டான் பக்தன். அந்த பணிவு அவர்களிடமிருந்து பதிலாய் எதிர்பார்த்த பக்தன் ஏமாந்தான்.
"ம்.. வணக்கம்.. வணக்கம்" என்று அலட்சியமாய் வார்த்தைகள் வெளிவந்தன.
"ஐயா, நான் சொல்லப் போகும் செய்தி, உங்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம். எப்படிச் சொல்வது என்று ..." இழுத்தான் பக்தன்.
"சொல்லறதுன்னு வந்துட்டீங்க, சும்மா சொல்லுங்க" என்று பேச்சை முடுக்கிவிட்டனர்.
"அது வந்து.. வந்து .. அடுத்த மாதம் உங்க கட்டிடம் இடிந்து 42 பேர் சாகப் போறாங்கன்னு விதி இருக்கு. அவங்களை மதியாலே காப்பாத்தனும். அதனாலே அடுத்த மாதம் பூராவும் கட்டிடம் கட்டுவதை நிறுத்துங்க. தரமான பொருட்களைக் கொண்டு பலமான அஸ்திவாரம் போட்ட பிறகு, சரியான கலவையில் கட்டிடத்தை கட்டுங்க. அப்படிச் செஞ்சா தான் விதியை வெல்ல முடியும்" என்று தான் அறிந்த தேவரகசியத்தை விதியாக விவரித்தான்.

"என்ன.. என்ன ஒரு மாசம் கட்டிடம் கட்டுறதை நிறுத்தி அஸ்திவாரம் பலமாக்கி சரியான கலவையிலே கட்டிடம் கட்டணுமா? என்ன விளையாடுறேயா? அப்படிச் செஞ்சா எத்தனை லட்சம் நஷ்டமாகும்னு தெரியுமா? இந்த இடத்திலே நாலு மாடிக் கட்டிடத்திற்குப் பதிலா எட்டு மாடி கட்டிடம் கட்டினாத் தாங்காதுன்னு எங்களுக்குத் தெரியாதா? வேற வழியில்லை. லாபம் அதிலேத் தான் பார்க்கணும். அப்படி மீறி செத்தா அரசாங்கம் பார்த்துக்கும். உன்னோட புத்திமதி எங்களுக்குத் தேவையில்லை. நானே கஷ்டப்பட்டு கோடி கணக்கிலே கொடுக்க வேண்டியவங்களுக்குக் கொடுத்து இந்த கட்டிடம் கட்டுறதுக்கு அனுமதி வாங்கியிருக்கிறேன்.
அதைப் போயி விதி அது இதுன்னு சொல்லி கெடுக்கப் பார்க்குறேயே. வேற வேலை இருந்தா பாரு. எங்களுக்கு நிறைய வேலைங்க இருக்கு. இப்ப நீங்க போகலாம்" என்று சொல்லிய அவர்களின் பதிலைக் கேட்டு ஏமாற்றத்துடன் வீட்டிற்கு வந்த பக்தன், அங்கு ஓடிக் கொண்டிருக்கும் டி.வியில் அந்த கட்டிடத்தின் ஸ்திரத் தன்மையையும், தரத்தையும் பற்றி பிரபல நடிகர் விவரித்திக் கொண்டு இருப்பதைப் பார்த்த பக்தனுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. விதியோ அவனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தது.

விதி நிர்ணயித்த நாள் வந்தது. கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. அனைத்து ஊடகங்களில் '42 பேர் பலி' என்கிற செய்தி மின்னல் வேகத்தில் பரவி அனைவரின் அனுதாபத்தைப் பெற்றது. அரசு பலியானவர்களின் குடும்பத்திற்கு கனிசமான தொகையை தர அறிவித்தது. காப்பீடு நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கச் சம்மதித்தது. அனைத்தையும் பார்த்த பக்தனோ தலையில் அடித்துக் கொண்டான்.

முதல் விதியில் தோற்ற மனம் இரண்டாவது விதியை வெல்ல முனைந்தது. அடுத்து அந்த திண்பண்டம் விற்கும் கடைக்குச் சென்றான்.
"வாங்க சார், என்ன வேண்டும்?" என்று கடைக்காரர் அனைவரிடத்தில் வழக்கம் போல் வரவேற்கும் வாடிக்கையாளராக அந்த பக்தனை வரவேற்றார்.

"ஐயா, நான் எதுவும் வாங்க வரலே. இந்த மாசத்திலே உங்க கடையிலே நடக்கப் போகும் விதியோட வேலையைச் சொல்ல வந்திருக்கிறேன். நீங்க விற்கப்போற திண்பண்டத்தைச் சாப்பிட்டு 2 குழந்தைங்க சாகப்போறாங்க. அதனாலே காலாவதியான அந்த திண்பண்டத்தை விற்காதிங்க. அதை குப்பைத் தொட்டியிலே போடுங்க" என்று இரண்டாவது இரகசியத்தை வெளிப்படுத்திஅதையாவது வெற்றி கொள்ள வேண்டும் என்று நினைத்தான் அந்த பக்தன்.
"ஆமா, உங்களுக்கு எப்படித் தெரியும். ஏற்கனவே காலாவதியான இந்த திண்பண்டத்தின் தேதியை அழித்து அதிலே புதுக்காலாவதியான தேதியை போட்டது? நீ என்ன கடவுளா?"
"அதெல்லாம் சொல்ற நிலைமையிலே நான் இல்லை. காலாவதியான தின்பண்டங்களை என்ன செய்யப் போறீங்க?"
"அதெல்லாம் குப்பையிலே தூக்கிப் போடமுடியாது. எனக்கு ஆயிரம் ரூபாய் நஷ்டமாகும்"
"அந்த ஆயிரம் ரூபாயை நான் தர்றேன். இந்த ஆயிரம் ரூபாய்" என்று நீட்டும் போது 'இம்முறை எனக்குத் தான் வெற்றி' என்கிற தோரணையும் வந்தது.
சற்று நேரத்தில் கடைக்காரன் அலறினான். இங்கும் அங்கும் ஓடினான். தேடினான். துலாவினான். அவன் செய்யும் செய்கையில் பக்தன் பொறுமை இழந்தான்.
"என்னத்தைத் தேடுறீங்க?'
"அந்த பாக்கெட் வித்திருச்சி போலிருக்கு. தனியா எடுத்து வச்சிருந்தேன். இப்போ காணலே!" என்கிற பதிலைக் கேட்ட பக்தனின் இரத்தம் 'பக்' கென்று உறைந்து. ஏது செய்வதறியாமல் திணறினான். இத்தனைப் பெரிய நகரத்தில் அந்த தின்பண்டத்தை வாங்கிச் சென்றவரை எப்படித் தேடுவது? என்று விழித்தான். அவன் இவ்வாறு திண்டாடுவதைப் பார்த்து விதி புன்னகைத்தது.

சொன்னது போல் இரு குழந்தைகள் பலியான செய்தி காட்டுத் தீயைப் போல் பரவியது. ஆனால் உண்மையான காரணம் மூடி மறைக்கப்பட்டது. பணம் விதியை விலைக்கு வாங்கிவிட்டது. விதி மதி என்னும் ஆடு புலி ஆட்டத்தில், விதி உருவத்தில் இருக்கும் புலிக்குத் தான் எப்போதும் வெற்றி கிடைக்கும் என்பதை ஆணித்தரமாக நம்ப ஆரம்பித்தான்.
மூன்றாவது விதியை நினைவுக்குக் கொண்டு வந்தான்.

மடுகப்பட்டிஅடைமழை -54 பேர் பலி என்ற விதி கண் முன்னே நின்றது. தொலைக்காட்சிப் பெட்டியில் எந்த 'சேனல்' திருப்பினாலும் மடுகப்பட்டியின் வானிலை முன்னறிவிப்பு எச்சரித்தது. இன்று மடுகப்பட்டியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அப்பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு, மாறி மாறி அறிவுறுத்திக் கொண்டிருந்தது.
அதைக் கேட்ட பக்தன் தன்னைத் தானே சிரித்துக் கொண்டான். தான் நேரடியாச் சென்று விதியைப் பற்றி எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காதவர்கள் இந்த கண்டு கொள்வார்களா என்ன? என்று நொந்து கொண்டான்.
இரவுக்குள் மடுகப்பட்டி அடைமழையினால் அதிகமாக பாதித்தது என்கிற செய்தி பரவியது.
மறுநாள் எல்லா ஊடகத்தில் அதைப் பற்றிய செய்திகளைத் தான் தந்து கொண்டிருந்தது. ஆனால் அதில் பலியானவர்களின் தகவல் இல்லாது கண்டு பக்தன் ஏமாந்து போனான் என்று சொல்வதைக் காட்டிலும் அதனைப் பற்றியச் செய்தியைத் தெரிந்து கொள்ள ஆர்வப்பட்டான். ஒருவேளை ஊடகங்கள் மறைக்கின்றனவா? என்று பல கோணத்தில் சந்தேகித்தான்.

"மடுகப்பட்டிக்குக் கொடுத்த வானிலை எச்சரிக்கையினால் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், ஆளும் கட்சி, எதிர்கட்சி அரசியல் தலைவர்கள், சமூக சேவகர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போன்ற அனைவரும் ஒன்றாக இணைந்து, இரவையும் பாராது அந்த அடாத மழையிலும் விடாமல் அங்கிருந்த மக்களை ஒருவரையும் விடாமல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றதோடு அவர்களுக்கு வேண்டிய வசதிகளை பல சேனல்கள் நேரடியாக ஒளிபரப்புவதைப் பார்த்த பக்தன் பூரித்துப் போனான். இதனால் உயிர் பலி முற்றிலும் தடுக்கப்பட்டது என்றது. இது அனைவரின் முயற்சியாலும், விருப்பு வெறுப்பு காட்டாமல் ஒன்றுபட்டு ஈடுபட்டதோடு இந்த இளைஞர்கள் சமுதாயத்தின் மகத்தான பொறுப்பினால் தான் இந்த மாபெரும் சாதனை செய்ய முடிந்தது என்று ஒலித்தது. இந்த சேவை உலக மக்கள் அனைவவரையும் தட்டி எழுப்பியதோடு,  இது ஒரு முன்னுதாரணமாய்த் திகழச் செய்துவிட்டது என்று உலக ஊடகங்கள் அனைத்தும் வானளவு பாராட்டியது.

இந்த முறை பக்தன் விதியைப் பார்த்தான். அது முன்னைவிட நன்றாகச் சிரித்தது. அதன் காரணமும் பக்தனுக்கு விளங்கியது. மதி வெல்ல வேண்டும் என்றே விதியும் நினைக்கின்றது. ஆனால் அது நடக்க வேண்டுமென்றால் தனி ஒருவனின் முயற்சியை விட கூட்டு முயற்சி என்றும் வெற்றி பெறும் என்பதை அவனுக்கு உணர்த்தியது. அந்த நிகழ்ச்சிஅவனுக்கு விதியை வெல்ல ஊரால் முடியும் தம்பி !’ என்று அறிவுரை கூறுவதாக இருந்தது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

No comments:

Post a Comment