Pages

Wednesday 25 October 2017

கீதை உபதேசம் - சிறு விளக்கம்

    
கீதை உபதேசம் 
சிறு விளக்கம் 

      Image result for geetha upadesam

'கீதை உபதேசம்' என்பது பதினெட்டு அத்தியாகங்கள் கொண்டது. முதலில்  இது வடமொழியில் எழுதப்பட்டது. பிறகு பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்த 'கீதை உபதேசம்' உருவாகிய இடம் 'மகாபாரதப் போர்'. மேலும் நம் எல்லோருக்கும் தெரியும், போர்க்களம் என்றாலே கோபம் மற்றும் பழி வாங்கும் உணர்வுகளே மிகமிஞ்சி நிற்கும் இடம் என்று. மனித உயிரை துச்சமாக மதிக்கும் இடம். எதிர்த்து நிற்கும் அனைவரும் 'எதிரிகள்' என்று முத்திரை குத்தும் இடம். சொந்த பந்தம், நட்பு, ஈவு இரக்கம், அன்பு, கருணை, சத்தியம், தர்மம் ஆகியவற்றுக்கு அப்பால் போகவைக்கும் இடம். தன்னைச் சுற்றிலும் இருக்கும் பகையை எதிர்கொள்ளும் இடம். பல உயிர்களை இழந்தும், பல உயிர்களை பலி கொடுத்து, வெற்றி மற்றும் கௌரவத்தை நிலைநாட்டும் இடம். இரத்தம் சிந்துவதே பெருமையாய் நினைக்கும் இடம். வீரத்தை நிலைநாட்டும் இடம். தந்திரம், படைபலம், போராடும் திறமை காட்டப்படும் இடம்.

சொல்லப் போனால் நம் உடம்பிற்குள் எண்ணங்களினால் செயல்களினால் மகா யுத்தம் ஒவ்வொரு கணமும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. புறத்திலோ உண்ண  உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் போன்றவற்றுக்காக பல விதங்களில் போராடிக்கொண்டிருக்கிறோம். தினமும் உயிருடன் நேர்முகமாக / மறைமுகமாகவோ நமக்குள் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. மனதளவில் உண்டாகும் தோல்விகள் வெளியில் தெரியாதவாறும், புறத்தில் உண்டாகும் தோல்வி வெளியில் தெரிந்தும், அதை அனுபவிக்கும் போராட்டம் மிகப்பெரிய போராட்டமாகும்.       

சரி ! போர் நடக்கும் இடத்திற்கும் கீதை உபதேசத்திற்கும் என்ன சம்பந்தம்? அப்படியே இருந்தாலும் அந்த சமயத்தில் உபதேசம் செல்லுபடியாகுமா? ஏன் அமைதியான நேரத்தில் பாடம் நடத்தும்போது குருகுலத்தில் சொல்லியிருக்கக் கூடாது? மேலும் 'போர்' நடக்கும் சமயத்தில் ஓய்வு அல்லது சும்மா இருக்கும் நேரம் மிகமிகக் குறைவு. அந்த வேளையில் எப்படி அந்த 18 அத்தியாகங்களையும் சொல்லியிருக்க முடியும்? ஏன் ஒருவருக்கு மட்டும் உபதேசம் கொடுக்கப்பட்டது? அந்த சமயத்தில் மற்றவர்களுக்கும் ஏன் அந்த உபதேசம் கேட்கவில்லை? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில்கள் சொல்லுவதோடு இக்காலத்தில் இந்த 'கீதை உபதேசம்' எப்படி பொருந்தும்? இதில் மக்களுக்காக என்ன சொல்லியிருக்கின்றது? எளிதில் எப்படி புரிந்துகொள்வது? போன்றவற்றிக்கான பதில்கள் இதோ...

'கீதை உபதேசம்' உலக மனிதர்கள் எப்படி வாழ வேண்டும்? மனிதர்களுடைய வாழ்கையில் அதிர்ஷ்டம் , கஷ்டங்கள், பிரச்சனைகள், சோதனைகள், உறவுகள், பொருட்கள் , மகிழ்ச்சிகள் , அன்பு கோபம், சுக துக்கங்கள், இன்ப துன்பங்கள் , நியாய அநியாங்கள், உண்மை பொய்கள், நண்பர்கள் எதிரிகள், ஏமாற்றங்கள் ஏமாற்றுகள், விளையாட்டு வினைகள், அன்பு அரக்கம், குடும்பம், துறவு, கல்வி, அறிவு, திறமை, பசி, பிணி, நோய், பதவி, தொழில் , மூன்று காலங்கள் (இறந்த, நிகழ , மற்றும் வருங்காலம்),  மூன்று பருவங்கள் (பிள்ளை, இளமை மற்றும் முதுமை) போன்றவைகள் வாழ்கையில் தவிர்க்க முடியாதது ஆகும்.

Image result for geetha upadesam

இப்போது கீதையின் சில விளக்கங்களைப் பார்ப்போம்.

1. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது:

இது உங்களின் கடந்த கால வாழ்கையை குறிப்பதாகும். உங்கள் வாழ்க்கை கழிந்த நாட்களில் சில நல்ல செயல்கள், சில கெட்ட செயல்கள் நடந்திருக்கலாம். சில வெற்றி தோல்விகள் பெற்றிருக்கலாம். அவற்றை எல்லாம் தாங்கியோ அல்லது எதிர்கொண்டு தானே வாழந்து கொண்டிருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு மனம், உடல், பொருளினால் சில பாதிப்புகள், வரவுகள், இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். இருந்தும் என்ன? அதற்காக வருத்தப்பட்டும், கவலைகொண்டும், மகிழ்ச்சி கொண்டுமா இருக்கிறீர்கள்? உங்கள் வாழ்கையில் சென்ற நாட்கள் 'நீங்கள் வென்ற நாட்கள்'. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் 'நீங்கள் எமனை வென்ற நாட்கள்' ! இவ்வாறு இருக்கும்போது உங்களுக்கு நடந்த நிகழ்ச்சிகள் யாவும் நன்றாகவே நடந்துள்ளதாகத் தானே  அர்த்தம். 

உங்களின் இறந்த காலத்தில் நீங்கள் மனதால் உடலால் பொருளால் என்ன ? எதை ? நினைத்தீர்களோ அதுவே நடந்திருக்கின்றது! 

நல்ல மனதோடு நல்ல செயல்கள், நல்ல பொருட்களால் நன்மைகள் செய்திருந்தால் கட்டாயம் உங்களின் நாட்கள் நன்றாகக் கழிந்திருக்கும். அதேபோல் எதிர்மறையான செயல்கள் செய்திருந்தால் எதிர்மறையான விளைவுகளே நடந்திருக்கும். ஆகவே நல்லது கெட்டது, நடப்பது என்பது உங்கள் கையில் தான் இருக்கின்றது. அதோடு உங்கள் சுற்றம் , சூழ்நிலையிலும் கூட இருக்கின்றது. எப்பயிருப்பினும் நீங்களும் உங்களைச் சார்ந்தவர்கள், நீங்கள்  அனுபவிக்கும் சூழ்நிலை ஆரோக்கியமாக இருந்தால் எல்லாமே சுகமாக நடந்திருக்கும்.    

2. எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கிறது: 

நீங்கள் இப்போது எதை நினைகிறீர்களோ? எதை செய்கிறீர்களோ அதுவே நடந்துகொண்டிருக்கின்றது !

இக்கணத்தில் நீங்கள் பலவித எண்ணங்களில், செயல்களில், உணர்வுகளில் ஈடுபட்டிருக்கலாம். அதனால் பல நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கலாம். நீங்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு வினாடிகள் பெரும்பாலும் சென்ற நாட்களின் தொடர்ச்சியே அன்றி வேறு என்ன? ஏற்கனவே அவைகள் நீங்கள் வென்ற நாட்கள்! எவ்வாறாக இருப்பினும் இப்போதும் நீங்கள் வென்றுதான் தீருவீர்கள் ! அதில் சிறிதும் சந்தேகமில்லை. அவ்வாறாக இருக்கும்போது இந்த நேரமும் உங்களுக்கு நல்ல நேரம் தானே! ஆகையால் இப்போது எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது என்ன்று தானே பொருள்!

3. எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்: 

நீங்கள்  எது நடக்கவேண்டுமென்று விரும்புகிறீர்களோ? எதை செய்யவேண்டுமென்று நினைகிறீர்களோ அதுவே நடக்கும்.

4. உன்னுடையதை எதை  இழந்தாய் ?  எதற்காக நீ  அழுகிறாய் ?
 நீ அழுவதால் இழந்ததை ஒருகாலும் திரும்ப பெற முடியாது !

 நீ அழுவதும், இழந்ததும் உன் எண்ணம் மற்றும் செயலால் உண்டானது என்பதை மறவாதே !

உலகின் விதி என்பது ஒருவர் பெறுதலும், மற்றொருவர் இழத்தலும் ஆகும். அதேபோல் ஒருவர் இழப்பதை மற்றொருவர் பெறுவார். எதுவும் அளவோடு இருந்துவிட்டால் நம்மை எதுவுமே செய்யாது. அதாவது அளவோடு பெறுதனாலிலோ அல்லது அளவோடு இழப்பதனாலிலோ நமது உடல், உள்ளத்தின் பாதிப்பு ஒன்றும் தெரியாது. அதுவே இழப்பு மற்றும் பெறுதல் அளவுக்கதிகமாகவோ அல்லது மிகக்குறைந்தளவோ இருக்கும்போது கட்டாயம் நமது உடலில், மனதில் சலனம் ஏற்படும். அந்நிலையில் தான் மனிதன் தர்மத்தை விட்டு விலகி அதர்ம காரியங்கள் செய்ய முற்படுகிறான்.    

5. நீ எதைக்கொண்டு வந்தாய் ! அதை இழப்பதற்கு !

வெறும் கைகளோடு தான் எல்லோரும் பிறக்கிறோம். செல்வம், பொருள் சேர்வது அறிவினாலும், மூதாதையர்கள் சேர்த்துவைத்த சொத்துக்களால். 
அதை காப்பது, வளர்ப்பது, அழிவது உன் செயலினால் விளைவதன்றி வேறு எதுவுமில்லை. சுமக்கக் கூடிய அளவு சுமை இருந்தால் சுமக்கலாம். சுமை கூடிவிட்டால் அழியும் காலம் நெருங்கிவிட்டது என்று அர்த்தம்.

6. எதை நீ படைக்கிறாயோ அது வீணாவதற்கு  !

உன்னால் படைக்கப்பட்டது எது? இங்கிருந்து ஏதுமில்லாமல் உன்னால் ஏதும் படைக்க முடியாது. அதனால் எதுவுமே வீணாவதில்லை. ஒரு படைப்பு வீணானால் அது வேறு ஒரு படைப்பாக மாறிவிடுகின்றது.

7. எதை நீ எடுத்துக் கொண்டாயோ , அது இங்கிருந்து பெறப்பட்டது !

இங்கிருந்து எடுக்காமல் நீ எதுவும் யாருக்கும் கொடுக்க முடியாது.

8. எதைக் கொடுத்தாயோ அது இங்கிருந்து கொடுக்கப்பட்டது 

9. எது இன்று உனக்குச்  சொந்தமானதோ , அது மறுநாள் மற்றொருவருக்குச் சொந்தமாகிறது 

தனக்கு மிஞ்சிய இந்த செல்வம்! எனக்குச் சொந்தமானது என்றோ, தனக்கு மிஞ்சிய இந்த பூமி! என் உடலுக்குச் சொந்தமானது என்றோ, எவன் சொல்கிறானோ அவனால் ஞானத்தை எப்போதும் பெற இயலாது.

10. மற்றொரு நாள் அது வேறொருவருக்குச் சொந்தமாகிறது  

காலங்கள் மாற மாற சொந்தமும் மாறுகின்றது. தன்னுடன் இருக்கும் செல்வமும் மாறுகின்றது. 

 * குழப்பமான மனது எதையும் சரியாக சிந்திக்க விடாது ! செயல்படுத்த விரும்பாது ! முடிவுக்கு வரமுடியாமல் சந்தேகமாய் இருக்கச் செய்யும்.

* இக்கட்டான நேரத்தில் நீயாக எடுக்கும் எந்த முடிவும் வெற்றி தராது. ஏனென்றால் அந்த இக்கட்டான முடிவுக்கு வந்ததன் காரணம் சிலரின் வழிகாட்டுதல் அல்லது ஆலோசணை அல்லது அசத்தியவழியில் செல்லுதல் போன்றவையாகும்.

* பொறுமை எல்லை மீறும்போது தான் போட்டியும், பொறாமையும் உண்டாகி கடைசியில் சண்டையில் முடிகின்றது. 

  
Image result for geetha upadesam
    கீதை படிப்பதால் / கேட்பதால் என்ன லாபம்?

* வாழ்கையில் அடிபட்டு தெரிந்துகொள்வதை அடிபடாமல், வெறும் படிப்பதில் தெரிந்து கொள்ளலாம்.

* வரும் துயரங்களை வராமல் தடுப்பதற்கும், இருக்கும் துன்பங்களை நீக்குவதற்கும், எப்போதும் மகிழ்ச்சியாக நம்மை வைத்துக் கொள்வதற்கும் உதவும்.

* கீதையை படித்து அர்த்தம் தெரிந்துகொண்ட பிறகு பலரின் அனுபவங்களை கீதையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் அதன் மகிமை விளங்கும்.

* அதைப் படிக்கும்போது உனது எண்ணம் அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்தது என்று எண்ணுவதைக் காட்டிலும் உனக்குள் இருக்கும் ஒரு சக்தி உனக்கு உபதேசிப்பது போல உணர்ந்தால் அதன் பலன் மற்றும் பலம் முழுமையாகக் கிடைக்கும்.

* கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் போல சிலர் கண்ணுக்குத் தெரியாதவாறு முடங்கிக்கிடக்கிறார்கள்.

* வெளியில் வரும் சிலர் ஏனோ தானோவென்று வாழ்கிறார்கள். 

எல்லாவற்றிக்கும் ஆரம்பமும் முடிவும் இதைப் படிப்பதால் ஓரளவிற்கு நாம் தெரிந்துகொள்ளலாம். அதன்படி நடந்து பல நன்மைகள் பெறலாம்.

&&&&&&&&&&&&

  

No comments:

Post a Comment