Pages

Friday, 2 February 2018

தாய்த் தமிழுக்கு மணிமுடி சூட்டுவோம் - கட்டுரை

தாய்த் தமிழுக்கு மணிமுடி சூட்டுவோம்
கட்டுரை 
 மதுரை கங்காதரன்
முன்னுரை
தமிழகத்தில் தொடக்கமுதலே வளரும் அறிவியல், தொழில்நுட்பத்திற்கேற்ப தமிழில் புதிய சொற்களை உருவாக்குவதற்கும், நூல்கள் மற்றும் கணினி மூலமாகத் தமிழை வளர்ப்பதற்கும் உலகளவில் ஒரு அரசுசாரா அல்லது அரசு சார்ந்தஒருங்கிணந்த தமிழ் வளர்ச்சித் துறை' என்கிற அமைப்பு ஒன்று இல்லாததால் இன்றையத் தமிழில் பல அந்நியமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
இது என்ன தமிழ்மொழியா?
ஆங்கில மொழிக்கு அடிமையா?
என்று எண்ணும் நிலைமைக்கு வந்துவிட்டது. அதோடு 'தமிழ் ஊடகங்களில் தனித்தமிழை பயன்படுத்த வேண்டும்' என்று எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பது சற்று வேதனைக்குரியச் செயலாகும். அதோடு அதற்கானச் சட்டமும், கட்டாயமும் இல்லாததால் தமிழானது இன்று 'இது என்ன தமிழா?' என்றுச் சொல்லக்கூடிய அளவிற்கு தரம்கெட்டு நிற்கின்றது.

தமிழ்மொழியின் சரிவு
தமிழ்மொழியின் சரிவு எப்போதுமுதல் ஏற்பட்டதென்றால், எப்போது கிரந்த எழுத்துகள் தமிழில் நுழைந்ததோ அப்பொழுதிலிருந்து தொடங்கியது என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஒண்ட இடம் கொடுத்த எழுத்துகள், பிறகு இருக்க இடம் வாங்கி, இன்று தனித்தமிழை கெடுத்துக்குட்டிச்சுவராக்கிக் கொண்டு இருக்கின்றது. இல்லையேல் ஒரு நூற்றாண்டுக்கு முன்னேமே ஏன் மறைமலைஅடிகளார் 'தனித்தமிழ் இயக்கம்' என்கிற அமைப்பைத் தொடங்கவேண்டும்? அப்படித் தொடங்கியும் எதிர்ப்பார்த்தப் பலனைத் தரவில்லை என்பதே உண்மை. அதோடு பாரதிதாசனின் 'தமிழியக்கம்' என்கிற கவிதை நூல், தமிழின் அவலத்தைச் சுட்டிக்காட்டி எழுதிய பிறகும் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லையே என்பதுதான் வருந்தம் தரும் செய்தி. இவைகெல்லாம் தமிழ் அழிவதற்குத் துணைபுரிகின்றதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
நாமமது தமிழரெனக் கொண்ட நாமே
நாமத்தைப் போடலாமா தமிழுக்கிங்கே?
என்று சொல்லுமளவுக்குத் தமிழ்மொழி இன்று இருக்கின்றது.

இன்றும் தமிழ் வளர்ச்சி ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அதற்கு பலகாரணங்கள் இருந்தாலும் சிலகாரணங்களை ஒத்துக்கொண்டேத் தீரவேண்டும். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், கணினி மற்றும் கைப்பேசி, இணையதளம், வலைப்பூ, சமூக வலைதளங்கள், ஊடகத்துறைகள், கல்வி, வணிகம், சேவை போன்றனவற்றில் அந்நியமொழிக்கு ஈடுகொடுக்க முடியாமல் தமிழ்மொழி திணறுவதே ஆகும். தமிழ்நாட்டுக் கணினி வல்லுனர்கள் அதிகப் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்நியமொழிக்காக வேலை செய்துவருகின்றனரே தவிர அதில் ஒரு பகுதியாவது தமிழுக்காகப் பணியாற்ற வராதது மிகவும் வேதனைக்குரிய செயலாகும்.

செந்தமிழைச் சிதைந்த தமிழாய் உச்சரிக்கையில் கோபம் உச்சந்தலையில் ஏறுகின்றதே! கொந்தளித்து எடுத்துக்கூறினாலும் 'கோமாளி' என்று பட்டம் கொடுக்கின்றது. அதுமட்டுமா! தமிழினம், அந்நியமொழியைக் கற்காதவனை 'பிழைக்கத் தெரியாதவன்' என்று ஏளனம் செய்கின்றது. கற்றறிந்த அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் தமிழைச் துச்சமாக மதிப்பதால்தானே இந்த இழிநிலை? இத்தகைய நிலை நீடித்தால் நம் தமிழ் தரம் கெட்டு, மாற்றான் மொழிக்கு அடிமையாகி, தொன்மை மொழி, முதன்மை மொழி என்கிற சிறப்பு நிலை இழந்து, உண்மை உரு தெரியாமல் அழிந்துபோகும் தானே? அந்த அபாயத்தைத் தடுக்க தமிழர்கள் ஒன்றுபட்டால்தான் தமிழ்மொழியினை எளிதாக அழிவிலிருந்துக் காக்கலாம்

தமிழும் கணினியும்
என்னதான் தமிழர்கள் அறிவியலின் முன்னோடிக்குப் பலச்சான்றுகள் இருந்தாலும் நடைமுறையில் அவர்கள் கணினியின் வளர்ச்சியைக் குறைத்து மதிப்பிட்டதாகத் தோன்றுகின்றது. அதாவது மக்களுக்கு எந்த ஒரு செயல் ஒத்துவரவில்லை என்றாலோ, அல்லது மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தாலோ, அது மக்களிடத்தில் செல்லுபடியாகாது என்கிற சித்தாந்தம் கணினியைப் பொறுத்தமட்டில் பொய்த்துவிட்டது. அப்பட்டமாகக் கணினியைப் பிடிக்காமல் இருந்தாலும் அதன் வேகம், கவர்ச்சி, செயல்பாடு, சேமிப்புத்திறன், எளிமை, புதுமை, யாரும் எளிமையாக இயக்கும் தொடுதிரை அமைப்பு, ஒரு நொடியில் பலமொழிகளில் பல்லாயிரம் தகவல்களைத் தரும் செயல், தகவல்களை அனுப்பும் செயல் ஆகியவை மக்களைப் பிரமிக்க வைத்ததுடன் அது மக்களைக் காந்தமாகக் கவர்ந்து மயக்கி மலைக்கச் செய்து தன்வசப்படுத்திக்கொண்டது என்பதே உண்மை. இதன் ஊடுருவல் கணினி, இசை, திரைப்படம், ஓவியம், பத்திரிக்கை, பொறியியல், மருத்துவம், கல்வி, பல்வேறு நிர்வாகம் மற்றும் ஊடகத்துறையில் கால்பதித்து இன்று முடிசூடாத அரசனாக உலகெங்கும் வலம் வந்து சாதனைகள் பல புரிந்துகொண்டிருக்கின்றது. இதை நிரூபிக்கும் வண்ணம் தமிழ் எண்கள் என்றோ பயன்படுத்தாமல் விட்டுவிட்டோம். அதேபோல் தமிழ் மாதங்கள் மறக்கும் நிலையில் உள்ளோம். சமூக ஊடகத்தில் இளைஞர்கள், தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதிப் பகிர்கின்றர்.
                        தமிழ் இன்றுத் தவிக்கிறதே!
திசை தெரியாமல் விழிக்கிறதே!
என்பது உண்மைதானே!

இந்நிலைத் தொடர்ந்தால் தமிழ் எழுத்துகள் வாழுமா? அல்லது அழியுமா? என்று நீங்களே உங்கள் இதயத்தில் கைவைத்துச் சொல்லுங்கள்? தமிழ் அழிந்தால் அதற்கு தொடர்புடைய கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் ஆகியவை காணாமல் போகும்நிலை உண்டாகும். அதனால்தான் தமிழியக்கத்திற்கு மீண்டும் புத்துயிர் அளித்து தமிழ் வளர்ச்சியை தொய்வில்லாமல் வளர்க்கவேண்டும். ஆட்சியாளர்கள், தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் வெறும் பகட்டு, ஆடம்பரம், பதவி, பணத்திற்கு அடிபணியாமல் தமிழைக்காப்பதே உயர் நோக்கமாகச் செயல்படவேண்டும். இல்லையேல் இப்போது தண்ணீருக்கு அண்டை மாநிலத்தைக் கெஞ்சம் நிலை ஏற்படுவதுபோல, இனி வரும்காலத்தில் தமிழர்கள் வாழ்வதற்கு இடம் தேடி அகதிகளாக திரியும் நிலை ஏற்படலாம். இத்தருணத்தில் தமிழுக்காக ஏதாவது செய்யாமல் விட்டுவிட்டால் இனி தமிழ் வாழ்வது கடினமே!

கணினியில் தமிழியக்கம்
சென்னையில் தமிழ் வளர்ச்சித்துறை, மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் இயங்கிக்கொண்டு இருந்தாலும் அதன் செயல்பாடுகள் எதிர்பார்கும் பலனைத் தரவில்லை என்பதே உண்மை. வெறும் தமிழ் நூலுக்கு விருது கொடுப்பதும், தமிழ் அறிஞர்களை சிறப்பு செய்வதால் மட்டும் தமிழ் வளர்ந்துவிடுமா?
தமிழ் வாழ்கவெனச் சொன்னால்
தமிழிங்குத் தானாக வளர்ந்திடுமா?
இன்றைய இளைஞர்கள் தமிழ்என்று சொன்னாலே அவர்களுக்கு எட்டிக்காயாய்க் கசக்கின்து. இந்நிலை மாற்ற அரும்பாடுபட வேண்டும். கணினி மூலம் கற்கவே அவர்கள் விரும்புவதால் அதற்கான முயற்சியில் இறங்கி வெற்றிபெறவேண்டும்.

இதன் ஆதங்கம் ஒரே இரவில் புரட்சிக்கவிஞரான பாரதிதாசனின் 'தமிழியக்கம்' என்கிற கவிதை நூலைப் படித்துப்பார்த்தால் அதன் தாக்கம் நன்கு உணரமுடியும். அவரின் தமிழ் ஆர்வம், தமிழ் பற்று, தமிழ் உணர்வு ஆகியவை வெளிப்படுத்திய விதம் ஒவ்வொரு தமிழனும் உள்வாங்கிக்கொண்டு தமிழ்படும் அவலத்தைப் போக்கவேண்டும். தமிழை ஏன் காக்கவேண்டும்? எவ்வாறு காக்க வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். தமிழ்நாட்டில் 'தமிழியக்கம்' வேண்டும் என்கிற நிலைமை உலகத்தில் வேறு எந்தமொழிக்கும் ஏற்பட்டதாக வரலாறு இல்லை. மேலும் வள்ளுவரும், கம்பரும், பாரதியும், பாரதிதாசனும் தமிழுக்காக பாடுபடவில்லையென்றால் இவ்வேளையில் தமிழ்மொழி அழிந்தே போயிருக்கும். ஒவ்வொரு தமிழனும் தமிழ்த் தாய்க்கு மணிமகுடம் சூட்டாமல் ஓயமாட்டோம் என்கிற கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும். தமிழ் வாழ்ந்தால்தான் தமிழ்மொழியிலிருந்து எவ்வளவு சொற்கள் பிறமொழிக்குச் சென்றுள்ளது என்பது தெரிவிக்கமுடியும். அதற்கு கணினித் தொழில்நுட்பம் உறுதுணையாய் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை.

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்
தமிழறிஞர்கள் தமிழ்ப்பெருமையினைப் பறைச்சாற்றும் விதமாக பெருநூல் ஒன்றைத் தரவேண்டும். அதில் தமிழ்மொழியால் தனித்தியங்க இயலும் என்பதை உறுதிபட வலியுறுத்திச் சொல்லவேண்டும்.
தமிழெழுத்தால் முடியாதா?
தனித்தொலித்தால் விடியாதா?
தமிழுக்குள் பிறயெழுத்தேன்?
தனித்தன்மை நிலைத்திடுமா?
வயிற்றுப்பிழைப்புக்காக தமிழை அடகுவைத்தல் இனி மறக்கவேண்டும். அங்ஙனம் குடும்பத்தில் 'அம்மா' என்று அழைப்பதற்குப் பதிலாக 'மம்மி' என்று அழைப்பதை நிறுத்தச் செய்திடவேண்டும். ‘மம்மிஎன்றால் பிணம்என்று அதன் அர்த்தத்தை எடுத்துக்கூறவேண்டும். கோவிலில் வடமொழியில் மந்திரம் சொல்வதும் செவிடன் காதில் சங்கு ஊதுவதும் ஒன்று என்று தமிழர்கள் உணரவேண்டும். அங்கு தேவாரமும் திருவாசகமும் ஒலிக்கச்செய்திட வேண்டும். அர்த்தம் தெரியாமல் ஒப்புக்காக தலையாட்டி மகிழ்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும். திருமணம் நடத்தும்போது மணமக்களை வாழ்த்த நற்றமிழில் பூக்களாய் மணம் வீசச்செய்யவேண்டும். தமிழர்கள் அனைவரும் 'தமிழ்தான் எம் ஆவி' என்று உரக்கச் சொல்லி தமிழ்ப்பெருமையினை நிலைநாட்ட வேண்டும். மாணவச் செல்வங்கள் தமிழின் சொற்களை சீர்குலைக்காது தமிழ் மானத்தை விட்டுத்தராது இம்மியளவு சோம்பலின்றி தமிழுக்கு நற்தொண்டாற்றுவதைக் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.
    
தமிழில் உச்சரிக்கும் ஒவ்வொரு சொற்களும் செவிக்கு இனிமையும் மனதிற்குக் குளுமையும் தரும். ஆனால் இன்றைய பாடகர்கள், வசனம் பேசுபவர்கள் புளியை 'புலி' என்றும் மழையை 'மலை' என்றும் உச்சரிப்பதோடு அதன் காலளவைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதனால் தமிழ்பாடல்கள் கொலை செய்து மகிழும் செயல் இனி பொறுத்துக் கொள்ளுதல் ஆகாது.
தமிழ்நாட்டில் தமிழ்க் கொலையா?
தமிழர்கள் யாரும் கேட்பாரில்லையா?

அடிப்படையே தவறானால் பின் வருவது எவ்வாறு இருக்கும்? என்று தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழை நன்கு உச்சரிக்கத் தெரிந்தவர்களே பாடவேண்டும், பேசவேண்டும். வேண்டுமென்றால் அதற்கு ஒரு தேர்வு வைத்து, அதில் தேர்ச்சி பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்த வேண்டும். பல அந்நியமொழிகளில் (ஆங்கிலம், பிரன்சு, இசுபானிசு போன்றன) இத்தகைய நடைமுறை இருக்கின்றது. அப்படி செய்தால்தான் தமிழ்க்கொலைகளைத் தடுக்க முடியும்.

பிறமொழி பற்றியப் புரிதல்
வணிகத்தில் தமிழ் இல்லை, அரசியலில் தமிழ் இல்லை, வீட்டில் தமிழ் இல்லை, கோவிலில் தமிழ் இல்லை, ஊடகங்களில் தமிழ் இல்லை, ஏன்? கல்விக்கூடங்களிலும்  தமிழ் இல்லை. எங்ஙனம் இந்த இழி நிலைமைத் தமிழுக்கு வந்தது? நம் மொழியினைப் பேணிக்காக்கத் தமிழர்களால் இயலவில்லையா? இல்லை தமிழ்மொழியைப் பேணுவதற்கு அவ்வளவு கடினமா? அவ்வாறு பேணிக்காக்க முடியாவிட்டால் தமிழ்நாடுஎன்கிற ஒரு பெயர் எதற்கு? ‘தமிழர்கள்என்கிற அடையாளம் எதற்கு? நாம் பேசுகின்ற தமிழ்மொழி எதற்கு? இந்நிலை, தமிழினமே தற்கொலைச் செய்துகொள்வவற்கு இணையல்லவா! தமிழினத்திற்குத் தமிழ்மொழி மேல் என்ன பகையோ? பசுமையான தமிழைத் தரிசாக்கி வேடிக்கைப் பார்ப்பதில் என்ன மகிழ்ச்சியோ?
தமிழ் எழுத்தைப் பயன்படுத்துன் ஏட்டில்
தமிழ் தானாக வளரும் தமிழ்நாட்டில்!
இங்கு ஆணித்தரமாய் ஒன்றினைப் பதிவு செய்ய ஆசைபடுகிறேன். பிறமொழிகளை மதிக்க வேண்டும். தேவைபட்டால், ஆர்வம் இருந்தால் அவைகளைக் கற்கலாம். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் பிறமொழியினை, 'புதுமை, புரட்சி' என்கிற பெயரில் அதனைத் தமிழ் மொழியில் திணிப்பது பாலில் நஞ்சு கலப்பதுபோல் அல்லவா! சந்தனத்தில் சாக்கடை நீரைக் கலக்கும் செயல் அல்லவா? இதற்கும் மேலே சான்று வேண்டுமென்றால் நம் உடலில் நன்றாக நடக்கும் காலை அறுத்து, அதற்கு பதிலாகக் கட்டைக் கால் பொருத்தி நடப்பதற்கு இணையானச் செயல் அல்லவா? தள்ளாட்டம் காணாத இளமை ததும்பும் தமிழ்மொழிக்கு ஊன்றுகோலாகப் பிறமொழிகள் தேவையா?

காலத்திற்கேற்ப பலவிதக் கலைச்சொற்களை உருவாக்கும் அமைப்பு தமிழ்மொழிக்கு இல்லையா? அல்லது தமிழ்ப் பற்றாளர்கள் அதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லையா? அல்லது பிறமொழி அறிஞர்கள், தமிழ்ச்சொற்களை உருவாக்கித் தருவார்கள் என்கிற எண்ணமா? அப்படித்தந்தால் அதைவிட அவமானம் வேறு உண்டா? பல்வேறு ஊடகங்களில் பேசப்படும், எழுதப்படும் தமிழ் இருக்கின்றதே, அப்பப்பா! என்ன சொல்லி புலம்புவது என்றேத் தெரியவில்லை. இழுத்து இழுத்து பிறமொழி கலந்து அறைகுறை தமிழில் பேசியும், புரியும்படி இல்லாத அதிவேகப்பேச்சும், பாடலும், பணத்திற்காகவும் புகழுக்காகவும் தமிழைக் கேவலப்படுத்தும் செயல் உலகமொழிகளில் தமிழில்தான் இ்க்கொடுமை நிகழ்கிறது. அதனை அறவே தடுக்க வேண்டும்.

தமிழில் பிறமொழி வேண்டாமே!
அந்நிய மொழிகள் தமிழனை மொழிப்பற்றில்லாமல் செய்துவிட்டது. அதோடு தமிழ்மொழி அறிவை மழுங்கச் செய்துவிட்டது. அந்நியமொழிகள், தமிழ்ச்சொற்களை ஓநாய்போல் வேட்டையாடிப் புதைத்தும், அம்மொழிகளின் சொற்களைத் தமிழில் புகுத்திக் கொண்டிருக்கின்றது. எவை தமிழ்ச்சொல்? எவை அந்நியச்சொல்? என்கிற வேறுபாடு தெரியாதவாறு தமிழனைச் செய்துவிட்டது. எங்கெங்கு நோக்கினும் தமிழ்! என்கிற முழக்கம் மாறி எங்கே தமிழ்? எங்கே தமிழ்? என்று தேடித்திரியும் அல்லது புலம்பும் நிலைக்குத் தள்ளிவிட்டது. உண்மைத் தமிழனுக்கு நெஞ்சு பதைக்கும் நிலை இதைவிட வேறு என்னதான் இருக்கும்? எத்துறையினை எடுத்துக்கொண்டாலும் தனித்தமிழ் இல்லாமல் அந்நியமொழிக் கலப்பு இருக்கின்றதே! இனிவரும் தமிழ்மொழி இலக்கியத்தில் செம்மொழிஎன்று எத்தகைய சான்றுகள்தான் காட்ட முடியும்? என்பது ஐயமே! 'தமிழ்மொழியே தமிழனுக்கு அடையாளம்' என்பதை மறந்துவிட்டனரோ? 'அந்நியமொழிகள் தமிழ் மொழியை மெல்ல மெல்லச் சாகடிக்கும் நஞ்சு' என்பதை எப்பொழுதுதான் தமிழர்கள் உணர்வார்களோ?

ஊருக்கு ஊர் ஒவ்வொரு மாதிரியானத் தமிழ் பேசுவதை தவிர்த்து எல்லோரும் ஒரேமாதிரியான செந்தமிழைப் பேசவேண்டும். பாடுவோர், அமுதமானத் தமிழ் இருக்க 'புதுப்பாட்டு' என்கிற பெயரில் பிறமொழிகளான எட்டியையும், வேம்பினையும் கலந்து பாடினால் இனிமை இருக்குமா? இது தமிழ் பேசுவோருக்கும் பொருந்தும். எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், பாடியவன் பாட்டைக் கெடுத்தான் என்பது எவ்வளவு பெரிய உண்மை. அதோடு இலக்கணம், இலக்கிய மரபுமீறி எழுதும் கலைஞனுக்கு உயர்மதிப்பு கொடுப்பதை நிறுத்தவேண்டும். தனித்தமிழைச் குன்றச்செய்வோருக்கு சூடு போடுவதுபோல் அறிவுரை வழங்கி அவர்களை நேர்பாதைக்கு வழிகாட்ட வேண்டும்.
பிறமொழி எழுத்தும் சொல்லும்
தமிழ் வளர்ச்சியைக் கொல்லும்
என்பதை தமிழர்கள் நன்கு உணரவேண்டும். பெருஞ்செல்வர்கள் கோயில்கள் பல கட்டினாலும், குளங்கள் பல வெட்டினாலும், கோடைநாட்களில் நீர்பந்தல் போட்டாலும் போதாது. தமிழ்நாட்டில் தமிழ் உயர்ந்தால்தான் அறிவும், அறமும் ஓங்கும். தமிழுக்காக வேண்டிய அளவு பொருள் கொடுத்து தமிழ்ப் பள்ளி, கல்லூரிகளை திறம்படச் செயல்படுத்திடச் செய்யவேண்டும். தமிழறிஞர்கள் தமிழ் வளர்ச்சிப் பணிகளைத் தவறாது மேற்கொள்ள வேண்டும். அச்சகத்திலும், ஊடகங்களிலும் தனித்தமிழ் வளர்க்கப் பாடுபடவேண்டும். தமிழுக்குப் பீடித்திருக்கும் பிறமொழி நோயை இன்றே வைத்தியம் பார்த்துச் சீர்செய்து பைந்தமிழுக்குப் பெருமை சேர்க்கவேண்டும். தமிழர்கள் கடல்போல் கூடி, அலைகள்போல் எழுந்து 'தமிழ் வாழ்க' என்று உலகெங்கும் ஒலிக்கச் செய்திடவேண்டும். விழி இருப்போர் காண்பார், விதைப்போர் அறுப்பார்கள், களைகண்டோர் அழிப்பார், அந்த வரிசையில் நற்றமிழால் தமிழ் வாழும்! ஆகவே தமிழ் ஆக்கம் கொண்டோரே, இளைஞர்களே, தென்னாட்டுச் சிங்கங்களே வீறுகொண்டு எழுக! நம் தாய்மொழித் தமிழுக்கு மணிமகுடம் சூடும் வரை ஓயாதுபாடுபட்டு, தமிழர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி தமிழுக்குப் பெருமை சேர்த்து தொன்மை மொழி, செம்மொழி, தனித்தமிழ் என்பதை உலகுக்கு நிரூபிப்போம். வாருங்கள். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!! வெல்க தமிழ்!!! என்று முழங்க வேண்டும்.  

தமிழினமே தமிழ்காக்க எழு!
தமிழினமே உறங்கியது போதும்! விழித்து எழு. வீறுகொண்டு நடைபோடு. வரிப்புலிபோல் பலம்பெற்று பிறமொழிச் சொற்களை அழித்துத் தனித்தமிழிழைப் புகுத்தித் தமிழ்த்தாய்க்குப் பெருமை சேர்தால் உனக்கும் பெருமைதானே. அதேவேளையில் தமிழ்தாய்க்கு இழுக்கு நேர்ந்தால் அது உன்னைச் சேருமன்றோ? உறங்கிச் சவமாய் செயலற்று இருப்பதைக் காட்டிலும் தமிழுக்காக ஏதாவது செய்யவேண்டினால், தமிழர்கள் 'தமிழியக்கம்' தாங்கும் தமிழ்ப்படையை உருவாக்கித் தமிழை அந்நியமொழியிலிருந்து காப்பாற்றவேண்டும். தமிழ் அறத்தைக் காக்கப் பொருட்களைச் சேர்த்து, எல்லாத் துறையிலும் தமிழைப் புகுத்தி தமிழின் நிலையை உயர்த்தப் பாடுபடவேண்டும்.

தமிழ்மொழியென்ன தாழ்ந்த மொழியா? முச்சங்கமத்தில் உருவாகி முக்கனிச்சுவையும் முச்சங்கம் வளர்த்த தமிழை பாழ்படுத்தலாமா? பிறமொழிகளுக்கு முன்மாதிரியாய் இருந்திடும் தமிழை அழிக்கவிடலாமா? அந்நிய மொழிக்கு இணையாய் தலைநிமிரச் செய்யவேண்டாமா? சென்றபொழுகள் போகட்டும். இப்பொழுது முதல் தமிழுக்கு புத்துயிர் கொடுத்து அதன் அதிர்வலைகள் உலகெங்கும் பரவட்டும். ஒவ்வொரு தமிழனும் இதுவே முதற்பணியாய் சிரமேற்று செவ்வனே செயல்படுத்த வேண்டும்.

செந்தமிழின் சிறுமையினைத் தீர்க்கவும் தமிழின் மானத்தைக் காக்கவும் வானத்து நிலவாயும், பிறமொழிகளைச் சுட்டெரிக்கும் கதிரவனாய் தமிழுக்கு மறுமலர்ச்சி கொடுக்க உயர்ந்தமிழ் பெண்களெல்லாம் எழவேண்டும். அதன் பெருமைக்காக்கப் போராட வேண்டும். வயது முதிர்ந்தோரும், ஊன்றுகோல்கொண்டு நடக்கும் பெரியவர்களும் இளமைவேகத்துடன் தமிழ்க்காக்க வேண்டும். நரம்பெல்லாம் இரும்பாக்கி, நெஞ்சினை நிமிர்த்தி, முன்வைத்தக் காலை பின் வைக்காது தமிழ்த்தாயின் களங்கத்தைப் போக்கவேண்டும்.

எத்துறையிலும் தமிழ்
தேயும் நிலவாக இருந்தாலும் மாசில்லாமல் இருப்பதால்தானே அத்தனைப் பெருமை. கதிரோன் ஒளியைப் பழுதில்லாமல் வாங்கிப் பிரதிபலிப்பதால்தானே அத்தனை மதிப்பு. அதுபோல் தொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பர், பாரதி வரிசையில்தானே தமிழைப் பிரதிபலிக்க வேண்டும். அதைவிட்டு மின்விளக்குபோல் பிறமொழி எழுத்துகளைத் தமிழில் சேர்த்துக் கொள்ளுதல் நியாயமா? தனித்தமிழைத் தடைபோடுவது நன்மை பயக்குமா? வணிக முகவரியில் ஆங்கிலப்பலகை தொங்குவது மதிப்பாகுமா? ஆணி முதல் அணிகலன் விற்பவர்கள் வரை நற்றமிழில் பேசுவது நன்றன்றோ. உணவு விடுதிக்கு 'கிளப்' என்றும், உயர்பட்டுக்கு 'சில்கு சாப்' என்று எழுதலாமா?

தமிழ்த்தெருவில் தமிழ் இல்லை! என்பதில் எவ்வளவு கொடுமை? தமிழர்கள் திறமையற்றவர்களாய் இருப்பதால்தானே தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்களாய் மாறி மாறி தாக்குகின்றனர். அதாவது ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம் போன்று பலமொழிகள் தமிழுக்குள் நுழைந்ததால்தானே அதன் தனித்தன்மையை இழந்து நிற்கின்றது. ஆனால் இத்தமிழே உலக மொழிக்குப் பல சொற்களை உண்டாக்க உதவியுள்ளது என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இருக்கின்ற தமிழ் ஏனோ இன்று காண்பாரற்று, கேட்பாரற்று, அனாதையாக யாரும் கவனிக்காமல் வத்தல் தொத்தலாக எலும்புக்கூடாக மாறும் அபாயம் இருப்பதை தமிழர்கள் இத்தருணத்தில் நன்கு உணரவேண்டும்.    
தமிழ்க்காக்கக் கொட்டு முரசே கொட்டு
தமிழ் வெல்லக் கொட்டு முரசே கொட்டு
பைந்தமிழுக்குப் பொதுத்தொண்டு செய்திட 'தமிழியக்கம்' என்கிற அமைப்பைத் தொடங்கி வீதியெங்கும் கூட்டம் நடத்தி தமிழ்ப் பெருமையினை நிலைநாட்ட வேண்டும். அது உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் விரிவுபடுத்தி தமிழின் கலை, இலக்கிய வளத்தை ஓங்கி ஒலித்திடச் செய்யவேண்டும்.   

முடிவுரை
தமிழ் இன்றைய காலகட்டத்தில் வாழ்வா? சாவா? என்கிற நிலையில் இருக்கின்றது. தமிழுக்காக இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கின்றது. தமிழ்ப்பற்றுள்ள அறிஞர்கள், தமிழ் ஆர்வம் கொண்ட பெரியோர்களே தமிழுக்காக்கப் பாடுபடுகின்றனர். அவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து வருகின்றது.
                        எந்நொடியும் செந்தமிழ் வீழுகின்ற நிலை
                        எதிர்பாரக்கும் எதிர்காலம் உயராதோ! என
                        ஏங்கும் தமிழர்களின் செம்மொழிக் கனவு
                        எந்நாள்தான் இனி வருமோ!

தமிழனைத் தமிழனே அடையாளம் காட்ட வேண்டியத் தருணம் நெருங்கிக் கொண்டுவருகின்றது. இழந்ததை மீட்க, இருப்பதைக் காக்க 'தமிழியக்கம்' மூலம் தமிழர்களை சாதி, இனம், மதம் வேறுபாடு இல்லாமல் ஒன்றுதிரட்டித் தமிழ்மொழியைக் காக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். தமிழர்களின்  அறிவுச்செல்வம் குறைந்த கூலிக்கு அந்நியநாட்டிற்கு ஏற்றுமதி செய்துவிட்டதால் உள்நாட்டு வளர்ச்சிக்கு உதவாக்கரைகளையும், சோம்பேறிகளையும், சுயநலவாதிகளையும் நம்பியே இருக்கின்றது. தமிழனுக்கு வெளிநாடுகளில் நல்லபெயர் இருந்தும் என்ன பயன்? உள்நாட்டில் தமிழனும், தமிழும் தேய்ந்துபோவது பற்றி அவர்கள் கவலைபடுவதாகத் தோன்றவில்லை. மேலும் வெளிநாட்டுவாழ் தமிழர்கள் சில ஆண்டுகளில் அந்நாட்டு மக்களாகவே மாறிக்கொண்டு வருவதால் இங்கு தமிழின் கதி என்னவாகும்? பிழைக்கப்போனத் தமிழர்கள் அந்நாட்டு அடிமைகளாக மாறி அவர்களின் ஏவலர்களாக கைப்பாவைகளாக ஆகிவிட்டார்களே என்று நினைக்கும்போது நெஞ்சம் பதைக்கின்றது. 'புதியதோர் உலகம் செய்வோம்' என்று புரட்சிக்கவிஞரின் பரந்தமனப்பான்மையினைப் பாராட்டினாலும் இனி நாம் 'புதியதோர் தமிழ் வளர்ப்போம்' என்று முழங்கிடுவோம். அதற்கு தமிழியத்திற்குப் புத்துயிர் அளிப்போம். கணினித் தமிழைப் புகுத்துவோம், புவியில் தமிழைக் காப்போம்!
     
  தமிழ்மொழி உணர்வு
                        தமிழனுக்கு வேண்டும்
                        தடையின்றித் 'தமிழியக்கம்'
                        தனித்தமிழைத் தரவேண்டும்.

இரும்பின் உறுதி தமிழ் பெறட்டும். வெண்கலம்போல் அதன் ஒலி உலகெங்கும் கேட்கட்டும். தாய்த் தமிழுக்கு மணிமகுடம் சூட்டினால் தமிழன் தங்கமாய் மாறுவான். தமிழ்மொழி வைரமாய் மின்னும். அவைகள் இரண்டையும் ஏந்தி நிற்கும் தமிழ்த் தாயின் மணிமகுடம் உலகப்புகழ் பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நன்றி, வணக்கம்.

No comments:

Post a Comment