Pages

Wednesday, 5 September 2018

படித்தவர்களின் சதவீதம் சரியப்போகும் அபாயம்..

படித்தவர்களின் சதவீதம் 
சரியப்போகும் அபாயம்..
கட்டுரை 
மதுரை கங்காதரன் 
இப்போது நடைமுறைக்கு வந்துள்ளப் புதியப்பாடத் திட்டம் (New Education system) எப்படி உள்ளதென்றால் 'புலியைப் பார்த்துப் பூணை சூடுபோட்டுக் கொண்டக் கதை' என்றே சொல்ல வேண்டும். அதாவது கொடுத்திருக்கும் பத்து திருக்குறள்களில் ஒரு திருக்குறளின் முழு அர்த்தம் (meaning) தெரியாமல் இருக்கும்போது அவர்களுக்கு முப்பது திருக்குறள் பாடமாக வைத்தால் எப்படி இருக்கும்? ஏதோ புதிய பாடத்திட்டமானது,  கதைகளைப் படிப்பது போல எளிதாகப் படித்துவிடலாம் என்று நினைப்பவர்களில் யாராவது உங்களுக்குப் பிடித்தப் பாடத்தை பத்து பக்கங்கள் படித்து புரிந்து மனப்பாடம் செய்து பாருங்கள்? அப்போது தான் அப்பாடத்தின் கடினத்தன்மை விளங்கும். கற்கும் அனைவரையும் அறிவாளிகளாய் ஆக்க வேண்டுமென்றால்.. கற்றனவற்றைப் புரிந்துகொள்ளும் படி இருக்கச் செய்திடல் வேண்டும். அதைவிட்டு விட்டு அதிகமாகப் பக்கங்களைப் படித்து மனப்பாடம் (Memorize) செய்ய வைப்பதிலா அறிவு வளரும்? 

அதாவது பட்டப்படிப்பில் படிக்க வேண்டியதைப் பள்ளிப் படிப்பில் படிக்க வைத்தால் அறிவு பெருகுமா? ஏற்கனவே இருந்தப் பாடங்களை நன்றாகப் புரிந்து கொள்ளும்படிச் செய்யாமல் உருப்படியில்லாத, ஒன்றுக்கும் பயன்படாத, எளிதாய் மறந்துபோகும் பாடங்களைப் புகுத்தினால் அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை. இப்புதியப் பாடத்திட்டம் மாணவர்களை மேலும் முட்டாளாக்கவா? பெற்றோர்களை ஏமாற்றவா? ஆக்கப் பூர்வமான ஆராய்ச்சிகளைச் (research) செய்யவிடாமல் இருக்கச் செய்யவா? அல்லது நாட்டின் நலனைக் குறைக்கவா? என்பதேப் புரியவில்லை. பாவம் மாணவர்கள்! அவர்களுக்குக் கிடைத்திருக்கும் அரைகுறையாகக் (below standard) கற்ற ஆசிரியர்களைக் கொண்டு எப்படித்தான் பாடங்களைப் புரிந்து கொண்டுப் படிக்கப் போகிறார்களோ என்றுத் தெரியவில்லை. 

அதாவது பாடத்திட்டமானது திறமையை (skill) வெளிப்படுத்தவும் அறிவை வளர்ப்பதாகவும் செய்முறைப் பயிற்சிகள் (practicals) நிறைந்ததாகவும், அதனால் புதிய சிந்தனைகளை (thoughts) வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். வெறும் மனப்பாடப் படிப்பு எதற்கு உபயோகப்படும்? கிட்டத்தட்டப் பாடங்கள் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிறது. அதாவது ஒரு எலெக்ட்ரான் எடை (mass of electron) 9.109 X 10 -31 kg யாம். அதிலும் அணுக்களைப் பற்றிய ஆழமான விவரம் தருகின்ற பாடங்கள்! இதை கற்பனைப் பண்ணிப் பார்க்க இயலுமா? 

அதோடு கணக்குப் பாடத்தில் நூற்றுக்கணக்கானச் சூத்திரங்கள் (formulas), வேதியியலில் நூற்றுக்கணக்கான வினைகள் (reactions) மற்றும் பல கோட்பாடுகள் (laws), கணினியில் பல்வகை புரோகிராம்கள் (program), விலங்கியலில் வாயில் நுழையாத சொற்கள் (Zoological names), அதேபோல் தாவரவியலில் எளிதில் மனப்பாடம் செய்ய முடியாத ஆங்கிலச் சொற்கள் (botanical names), பௌதீகவியலில் பல செய்முறைகள், கோட்பாடுகள், சூத்திரங்கள்! இதைத்தவிர தமிழ், ஆங்கிலப் பாடங்கள்! 

ஒவ்வொரு பாடமும் சாதாரணமாகப் படிப்பதற்கே நாள் கணக்கில் ஆகும். பின் எப்படி அதனைப் புரிந்து கொண்டு பிறகு அனைத்தையும் மனப்பாடம் செய்வதற்கு எத்தனை நாட்களாகும்? அதோடு எப்படி குறுகியகாலத்தில் தேர்வினை எதிர்கொள்ள முடியும்? 

எதெற்கெடுத்தாலும் மாணவர்களை நீட் (NEET) தேர்வுக்காகத் தயார் செயகிறோம் என்று சொல்கிறார்கள். ஆமாம் நான் தெரியாமல் தான் கேட்கிறேன். ஆரம்பம் முதலே மருத்துவம் பிடிக்காதவர்கள்  கலை அறிவியல் (Arts and science) துறையில் சேர விரும்பும் மாணவர்கள் ஏன் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும்? அவர்கள் படிப்பதற்கு சாதாரணப் பாடத்திட்டம் இருக்கின்றனவா? அல்லது நீட் மதிப்பெண்கள் கொண்டு எல்லா கல்லூரிகளில் சேர்க்கை நடந்தாலும் பரவாயில்லை..அதாவது சில ஆயிரம் மருத்துவ இடத்திற்காக பல்லாயிரம் மாணவர்களை நீட் எழுத வைப்பது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. மேலும் பாட அலகுகளில் (in units) பாடம் ஒன்றும் (one type) அதில் கேட்கப்படும் கேள்விகள் வேறொன்றும் (another type) சம்பந்தம் (matching) இல்லாமல் இருப்பது எந்த வகையில் நியாயமோ? அதில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் கூகுளில் (Google search) தேடி தேடித் தான் பெறவேண்டும். அப்படிப்பெறும் பதில்கள் புரிவது மிக மிகக் கடினம். அதற்கு நேரம் மிக அதிகமாக செலவாகிறது. இவ்வளவு கடினமாகப் படித்தும் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் ஒன்று மிக எளிமையாக இருக்கும் (அதாவது எல்லோரும் கண்டிப்பாக தேர்வு பெறவேண்டும் என்பதற்காக) அல்லது பாடத்தில் இல்லாத கேள்விகளாக (Out of syllabus)  இருக்கும் அல்லது தவறான கேள்விகளாக (wrong question) இருக்கும். எப்படியும் இரக்க மதிப்பெண்கள் (graze marks) அதிகமாக இருக்கும்.  

அடிப்படைக் கல்வியில் பல கோளாறுகள் உள்ளதைச் சரிசெய்யாமல் புதிதுபுதிதாகப் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் எவ்வித பலனும் இருப்பதாகத் தெரியவில்லை. இதுநாள் வரைக்கும் ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாயச் தேர்ச்சி இருந்ததால் பாடத்திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போனது. மேலும் படிப்படியாக கல்விச்சுமையை ஏற்றியிருந்தாலும் பரவாயில்லை. கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகள் பாடத்திட்டத்தினை மாற்றாமல் இப்போது ஒரேயடியாக இமயமலை அளவுக்கு சுமை கொடுத்தால் மாணவர்கள் தாங்குவார்களா? ஒன்பதாவது வரை ஜாலியாக இருந்த மாணவர்களால் பத்தாவது, +1 மற்றும் +2 தேர்வில் எவ்வாறு பொறுப்பாகப் படிக்க முடியும். பொழுது பூராவும் படித்தாலும் இப்போதுள்ள புதிய பாடங்கள் மனப்பாடம் செய்வது கடினம். அப்படி படித்தாலும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வது அதைவிடக் கடினம். மேலும் பாடத்தில் பின்புறம் கேட்கும் பொதுவான கேள்விகள் கூட ஆசிரியர்களால் விளக்க முடியவில்லை. புத்தகத்தைத் திறந்தவுடன் மாணவன் 'எப்போடா ஓடலாம்' என்கிற நினைப்புதான் அவனுக்கு வருகின்றது.   

ஒரு பாடப்பிரிவில் இரண்டு மூன்று அலகுகள் (units) கடினமாக இருந்தால் பரவாயில்லை. எல்லா அலகுகளும் கடினமாக இருந்தால் மாணவர்கள் எப்படி படிப்பார்கள்? இப்பாடத்திட்டம் யாருக்குப் பொருந்தும் என்றால் யார் உயர் ஆராய்ச்சி (higher resercher) செய்ய விரும்புகிறார்களோ அவர்களுக்கு உகந்தது. அதாவது அப்படி பள்ளிக்கல்லூரியைத் தாண்டி படிக்க விரும்புகிறவர்கள் மிகமிகச் சொற்ப சதவீதமே. இதற்காக எல்லா மாணவர்களையும் படிக்க வைப்பதில் நியாயம் உண்டா? 

இப்போது அறிமுகப்படுத்தி இருக்கும் பாடத்திட்டம் மிகமிக உயர்வகையைச் சேர்ந்தது. அதனை ஆசிரியர்கள் புரிந்து கொள்வதற்கே மிகக் கடினமான காரியம். அப்படி இருக்கும்போது மாணவர்களுக்கு எங்ஙனம் புரியும்? இப்போது 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பிற்குப் பொதுத்தேர்வு (public exam) என்று சொல்கிறார்கள். அப்போதும் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு கூடுதல் சதவீதம் தேர்ச்சி காட்டுவதற்காக திருத்துவதில் தாராளம் காட்டுவார்கள். அதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களால் வேலைவாய்ப்புக்கானப் போட்டித்தேர்வில் (competitive exams) , நேர்முகத் தேர்வில் (direct interviews) சரியாகச் செய்ய முடிவதில்லை. அதாவது மனப்பாடக் கல்வியால் பலன் ஏதுமில்லை. அதிக வசதியுள்ள நகர்புறங்களில் உள்ள மாணவர்களுக்கே இந்நிலைமை என்றால் கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களின் நிலைமை எப்படி இருக்கும்? 

இன்னும் அப்பட்டமாக புதிய பாடத்திட்டத்திற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். அதாவது ஒருவர் ஒரு வண்டியை பாதுகாப்பான முறையில் ஓட்டிப்பழக வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். ஏனென்றால் அதனால் ஓரளவுக்கு பணம் சம்பாதிக்கலாம். அப்போது என்ன சொல்லித்தரவேண்டும்? வண்டியை எப்படி இயக்குவது? எப்படி கவனமாகத் திருப்புவது? நிறுத்துவது? சாலைவிதிகளைக் கடைபிடிப்பது? எப்படி எரிபொருள் நிரப்புவது? எப்படி பராமரிப்பது? இப்படி சிலவற்றை ஆழமாகச் சொல்லித்தந்தால் போதுமானது தானே? அதைவிட்டுவிட்டு கார்புரேட்டர் எப்படி வேலை செய்யுது? எப்படி என்ஜின் வேலை செய்யுது? அதனுடைய விதி மற்றும் பார்முலா என்ன? எப்படி ஹெட் லைட் கனெக்ஷன் கொடுக்கவேண்டும்? வயர் எந்த அளவு இருக்க வேண்டும்? என்ன வயர் போட வேண்டும்? அதன் பார்முலா என்ன? பிரேம் எந்த தடிமானம் இருக்கவேண்டும்? உட்காரும் சீட் எப்படி எந்த அளவில் இருக்க வேண்டும்? இப்படி சொல்லி கொடுத்தால் எப்படி இருக்கும்? இப்படி யாருக்கு சொல்லி கொடுக்கவேண்டும்? வண்டியை பற்றி ஆராய்ச்சி செய்தால் பலன் இருக்கும். ஆனால் எல்லோரும் இப்படி தான் படித்து வண்டி பழக வேண்டுமென்றால் எப்படி இருக்குமோ அப்படித்தான் புதிய பாடத்திட்டம் இருக்கிறது. ஆகமொத்தம் கடைசியில் வண்டி பழகுவதைத் தவிர மற்ற எல்லாம் அரைகுறையாக படிப்பது என்பதே உண்மை.  

இதில் கூத்து என்னவென்றால் பாடங்களை வலைதளத்தில் (website) இருக்கும் யூடியூப்பில் (youtube) பார்க்கலாம் என்கிறார்கள். அதில் ஒரு தலைப்புக்கு பலபேர், அவர்களின் புரிதலுக்கேற்பச்  சொல்லித் தருகிறார்கள். அவற்றில் யார் சொல்வது புரிகிறது? என்று கண்டுபிடிப்பது கடினம். மேலும் பள்ளி ஆசிரியர்கள் அதனை ஏற்றுக்கொள்களா என்பது சந்தேகமே! 

இதன் விளைவுகள் எப்படி இருக்குமென்றால், எவ்வாறு பொறியியல் கல்லூரியில் (engineering college) சேர்க்கை குறைய ஆரம்பித்ததோ அதேபோல் பள்ளியில் கூட நடக்கும். இதனால் பள்ளி கல்லூரிகளில் இடை நிறுத்தம் (drop out) அதிகமாகும். இதனால் குழந்தைத் தொழிலாளர்கள் (child labour) அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்போது இருக்கும் பாடத்திட்டம் படவிளக்கம் அதிகமாக இருந்தாலும் செய்முறை பயிற்சிக்கான உபகரணங்கள் (equipment) அனைத்தும் எல்லாப் பள்ளியில் இருக்குமா என்பது சந்தேகமே. அப்படி இருந்தாலும் அதனை இயக்கும் திறமை (operating talent) எல்லா ஆசிரியர்களுக்கும் இருக்குமா என்பதும் சந்தேகமே. 

இவ்வளவு படித்தும் வேலைவாய்ப்பு எளிதாகக் கிட்டுமா என்பதும் உத்திரவாதம் இல்லை. அதோடு புதியவைப் படைக்கும் ஆற்றல் (creativity), மற்றவர்களுக்குச் சொல்லித் தந்து புரியவைக்கும் ஆற்றல் பல ஆசிரியர்களிடம் இல்லாதபோது மாணவர்களுக்கு எவ்வாறு அறிவு வளரும். கல்வி கற்பது பொழுதுபோக்குக்காக மற்றும் அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புவோர் பத்து சதவீதம் இருக்கலாம். ஆனால் 90 சதவீதம் படித்தால் வேலை கிடைக்கும். அதனால் குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்கிற எண்ணத்தில் தான் படிக்கின்றனர். எப்பேற்பட்ட படிப்பு படித்தாலும் வேலை எளிதாகக் கிடைத்தபாடில்லை என்பதே இன்றைய கல்வியின் லட்சணம். அதாவது வேலைவாய்ப்புக்குத் தகுந்தவாறு பாடத்திட்டம் இல்லை. வேலைக்கு மனப்பாடப் படிப்பு பயன்படாது. செயல்முறைப் படிப்பே உகந்தது. அப்படிபட்ட கல்வியைக் கொடுப்பதற்குக் கல்வித்துறை தயக்கம் காட்டி வருகின்ளது. இந்நிலை எப்போது மாறுகின்றதோ அப்போது படித்த அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு வேலை உறுதியாகக் கிடைக்கும். 

அனைவருக்கும் கல்வி என்கிற தாரகமந்திரம் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றப் பயன்படாமல் அது வியாபாரமாக மாறிவிட்டது என்பது மிகக் கொடுமையான விசயம். பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே ஓரளவுக்கு நல்ல கல்வி கிடைப்பதற்கு வாய்ப்பு அதிகம். மற்றவர்களுக்கு அது கானல் நீரே.  மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் மயமாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் திறமைக்கும் அறிவுக்கும் மட்டுமே இனி மதிப்பு இருக்கும். எனக்கு பல சூத்திரங்கள் தெரியும். கோட்பாடுகள் அத்துப்படி. பல நூல்களை கரைத்துக் குடித்திருக்கிறேன் என்று பேசிக்கொண்டிருந்தால் எவ்விதப் பயனுமில்லை. இப்போது படித்தவர்களின் நிலை, அவர்கள் சொற்பமாகப் படித்தவர்களின் கீழ் வேலை செய்யும் நிலையில் தான் இருக்கிறார்கள். இதுதான் கல்வி கொடுக்கும் இலட்சணமா? இப்போது பல பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் படிக்க வராததால் அதில் பணியாற்றும் பேராசிரியர்கள் (professors), முனைவர்களின் (doctrate) வேலை கேள்விக்குறியாக இருக்கிறது? அவர்களுக்கு செய்முறைப் பயிற்சி இல்லாததால் வேறு துறையில் வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பு தான். 

இப்போது இருக்கும் போட்டித்தேர்வில் நான்கில் ஒன்று குறித்தால் போதுமாம் (aptitude test). இதனால் சொந்தமாக நான்கு வரிகள் பேசவோ எழுதவோ இயலாதவர்களும் கூட தேர்வு பெறும் வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்கும் போது அவர்களால் என்ன பயன் விளையும்? தினமும் மாற்றங்கள் நிகழும்போது அவர்களால் எப்படி சமாளிக்க முடியும்? எப்படி அறிவை பெருக்கிக் கொள்ள முடியும். ஆகவே புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தினால் மட்டும் போதாது. அதனை சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களின் தரமும் உயர்த்த வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இனி கல்விக்கு மதிப்பு இருக்கும். இல்லையேல் நாளடைவில் படித்தவர்களின் சதவீதம் மிகவும் சரியும் வாய்ப்பு அதிகமே.

இன்றைய காலகட்டத்த்தில் உலகளவில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றிற்கு முக்கிய காரணம் கல்வி வளர்ச்சி. ஆனால் இன்றைய கல்விப் பாடங்கள் காலமாற்றங்களுக்கு ஏற்ப இருக்கின்றனவா என்றால் கட்டாயமாக இல்லை. அதாவது உங்களுக்கு எளிமையாய் புரிவதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். அதாவது அன்றாட வாழ்க்கையில் சைக்கிளோ, பைக்கோ, காரோ ஓட்டி பழகவும்  எப்படி வேலை செய்கிறது போன்றவைகளை சொல்லித் தந்தால் தானே வாழ்க்கைக்கு உதவும்.  விட்டுவிட்டு ஏரோபிளேன், ஹெலிகாப்டர், ராக்கெட் எப்படி வேலைசெய்கிறது? அதை ஓட்ட கற்றுக்கொடுத்தால் எத்தனை பேருக்கு அது உதவும்.  அதாவது மேலை நாட்டவர்கள் எப்போதோ கண்டுபிடித்ததை புத்தக வடிவில் காசாக்கிக் கொண்டு இருப்பதே உண்மை. அதனால் ஒரு சர் சி.வி.ராமனோ,  கணித மேதை ஸ்ரீ ராமாநுஜமாகவோ அல்லது டாக்டர் அப்துல் கலாம் ஆகவோ முடியவே முடியாது. அவ்வாறு ஆக்கவேண்டும் வேண்டுமென்றால் கல்வி முறையில் நல்ல மாற்றங்கள் வரவேண்டும். சிறிய வயதிலிருந்து ஆராய்ச்சியில் ஈடுபடுத்தினால் ஒழிய முடியாது.  
**************************************
No comments:

Post a Comment