Pages

Monday, 11 March 2019

மனிதநேயம் வளர்ப்போம்! - கு.கி.கங்காதரன் மதுரை



மனிதநேயம் வளர்ப்போம்! 
கு.கி.கங்காதரன்  மதுரை  

குடும்பமோ அக்கறை சீமையில்    
குழந்தைகளோ பள்ளி விடுதியில்  
பெற்றோர்களோ முதியோர் இல்லத்தில்  
பார்த்துக் கொள்வதோ கைபேசித் திரையில் 

மனிதநேயம் அற்ற மனம்  
மணம் பரப்பாதப் பூமாலை  
இரக்கம் இல்லாத இதயம் 
இனிமை காணாத இளமை 

கருணை இல்லாத கண்கள் 
காற்று வீசாதத் தென்றல் 
அன்பை காட்டாத பிறவிகள்  
அலைகளை எழுப்பாதக் கடல்.  
.   
மாயா அலைபேசி கையில் வந்தது  
மனித உறவுகள் தூரம் போனது 
போலி முகங்கள் அசலாய் நடிக்குது  
பாசமென நம்பி மோசம் போகுது 

உலகமே அவசரமாய் சுற்றுது 
உணர்வுகள் அவசரமாய் மாறுது 
கண்ணில் தெரியும் உறவுகள் மறையுது  
கண்டும் காணாமல் மனம் ஒதுக்குது. 

அமைதி நிறைந்த புது உலகம் படைப்போம் 
ஆருயிர்கள் வாழ புதுப்பாதை அமைப்போம் 
மாசு கட்டுப்படுத்த மரங்களை வளர்ப்போம் 
மானுடம் சிறக்க மனிதநேயம் வளர்ப்போம்  

****************************

Friday, 8 March 2019

7.3.19 கண்ணதாசன்-கலைகளில் கலக்கிய கண்ணதாசன்-கு.கி.கங்காதரன்









கண்ணதாசன்-கலைகளில் கலக்கிய கண்ணதாசன்-கு.கி.கங்காதரன் 

7.3.19 அன்று நிகழ்த்திய சிறப்புரை 

அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்

நான் பேசுவதற்கு முன்னால் ஒரு நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்யச் சொல்வது வழக்கம். இந்தப்  பயிற்சி இரத்த ஓட்டத்தை சீராக்கும், மன அழுத்தம் குறைக்கும், தலைவலி வராது மற்றும் புத்துணர்ச்சி தரும்.
    
               மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும்  


கலைகளில் கலக்கிய கண்ணதாசன்!

   எனக்கு தலைப்பு கிடைத்தவுடன் என் நண்பனிடம் காட்டினேன். அவன் படித்த மேதை! உனக்கேத்த பொருத்தமானது தலைப்புதான் என்றான். பொதுவா பெயர் பொருத்தம் தான் பார்ப்பாங்க. ஆனால் இவன் தலைப்பு பொருத்தம் பார்த்தான். நானோ எப்படி, எந்த வகையில் பொருத்தம் என்றேன்? என்று கேட்டேன். முதலில் பெயர் பொருத்தம் சொன்னான். கண்ணதாசன் பெயரில் முதலேழுத்து ''. கடைசி எழுத்து 'ன்'. உன்பெயரிலும் முதலேழுத்து ''. கடைசி எழுத்து 'ன்'. அப்புறம் தலைப்பை பார். அதிலும் முதலேழுத்து ''. கடைசி எழுத்து 'ன்'. இறுதியாக 'கண்ணன்' என்றால் 'ஹரி' என்று அர்த்தம் . கங்காதரன் என்றால் 'சிவன்' என்று அர்த்தம். அதாவது ஹரியும் சிவனும் ஒண்ணாச்சே. புகுந்து விளையாடு என்று தைரியம் கொடுத்தான்.

எனக்கு ரொம்ப தைரியம் தான். கொல்லன் தெருவிலே ஊசி விற்க வந்திருக்கேன். ஏனென்றால் நீங்க நல்லாவே கவியரசரைப் பற்றி நல்ல கரைச்சி குடிச்சி இருப்பீங்க. எனக்கு தெரிஞ்சதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

   மாட்டு வண்டி போகாத ஊருக்கும் கவியரசரின் பாட்டு வண்டி போகும்! என்ற பேச்சு உண்டு. அவர் அப்போதே பஞ்ச் டைலாக் எழுதியவர். மணந்தால் மகா தேவி, இல்லாவிட்டால் மரண தேவி, நாடோடி மன்னன் படத்திற்கு அவர் எழுதிய வசனம் (நாட்டின் நிர்வாகத் திறமை)  இன்றளவும் அனைவரும் பாராட்டும்படி உள்ளதுதானே! ராமன் எத்தனை ராமனடி  படத்தில் வீரசிவாஜியின் வலிமை நிறைந்த வசனம் கேட்டாலே கோழையாய் இருப்பபவனும் வீரனாய் மாறுவான். கவியரசர் சும்மா சொல்லக் கூடாது. எல்லாத்துலேயும் புகுந்து விளையாடி இருக்கிறார். அதனால்தான் அவரால் 'அனுபவி ராஜா அனுபவி" என்று எழுத முடிந்தது. கவியரசருக்கு 'எது இருந்தால் போதும் என்று கேட்டால் "மது இருந்தால் போதும்" என்பார். அதையும் ஒரு பாட்டிலே சொல்லியிருப்பார். .. மானிட ஜாதியே.. தொடங்கும் பாடல். மனிதர்களே நீங்கள் தேவர்கள் ஆகலாம் மனமிருந்தால் போதும் அன்று, மது இருந்தால் போதும் இன்று என்று சிவாஜி பாடுவார். உடனே ஒருவர் "எது இருந்தால் போதும்?" என்று கேட்பார். உடனே சிவாஜி "மது இருந்தால் போதும்" என்று பதிலளிப்பார். இது எல்லாமே அவரே அனுபவித்த வரிகள். அதோடு திரும்பத் திரும்ப அவர் சொல்வது 'புத்தக ஆசிரியனை பின்பற்றாதீர்கள், புத்தகங்களை பின்பற்றுங்கள்' என்கிறார். அதாவது 'என்னைப் பின்பற்றாதீர்கள். என் புத்தகத்தை புத்தகத்தைப் பின்பற்றுங்கள்' என்று சொல்லாமல் சொல்லுவதாக நினைக்கிறேன்.

 கவியரசருக்கு துணிச்சல், தன்னம்பிக்கை அதிகம். புலி அடிச்சு செத்தவங்க விட கிலி அடிச்சு செத்தவங்க அதாவது பயத்திலே செத்தவங்க தான் அதிகம் என்று சொல்றார். கவியரசர் மரணபயத்தை வென்றவர். சொர்கமோ நரகமோ நான் சாகத் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறார்.

மரணபயம் எப்படி வேலை செய்கிறது என்று ரஷ்ய விஞ்ஞானிகள் சோதிக்க விரும்பினார்கள். ரஷ்யா சிறைச்சாலையில் மூன்று கைதிகள் விஷப்பாம்பால் சாகும் தண்டனை கொடுத்தாங்க. அதில் ஒருவன் பிழைக்கிறான். அதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த மூன்றும் விஷப்பல் (விஷம் இல்லாத) எடுத்த பாம்புகள். ஆனால் பாம்பு கொத்தினால் செத்துவிடுவோம் என்கிற பயத்தால் இருவர் நுரை தள்ளி இறந்து போகின்றனர். ஒருவன் துணிச்சலாக தன்னம்பிக்கையோடு இருக்கிறான். அவன் உயிர் பிழைக்கிறான்.

  அறிவு பெற பல வழிகள் உண்டு. சொல்லுவதின் மூலமாக வருவது 'சொல்லறிவு', கேட்பதின் மூலமாக வருவது 'கேட்டறிவு', பார்ப்பதின் மூலமாக வருவது 'பார்பறிவு', படிப்பதின் மூலம் வருவது 'படிப்பறிவு', ஆனால் ஒவ்வொன்றிலும் பட்டு பட்டு வருவது பட்டறிவு. நம்ம கவியரசருக்கு 'பட்டறிவே அதிகம்'. நெருப்பைத் தொட்டால் சுடும். அப்படியா! என்று அதை தொடாமல் இருப்பது புத்திசாலித்தனம். 'இல்லை நான் நம்பமாட்டேன்' என்று தொட்டால் கை சுட்டது தான் மிச்சம். அதுபோல கவியரசர் ஒவ்வொரு விசயத்திலும் இறங்கி சூடுபட்டுக்கொண்டார் என்பதே உண்மை.

பத்திரிக்கைத் தொழில் ஒரு கஷ்டமான தொழில். இருந்தாலும் அதில் இறங்கினார். சண்டமாருதம், தென்றல், திரைத்தென்றல், கண்ணதாசன் ஆகிய பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருந்தார். அனுபவம் கிடைத்தது. ஆனால் அவரால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. அரசியல் ஆளை விழுங்கும் கடல். அரசியலில் இறங்கினார். நீச்சல் போட்டார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. சினிமா தயாரிப்பு என்பது மிகப்பெரிய சூதாட்ட களம். நேரம் நல்லா இருந்தா ஆளை தூக்கிவிடும். கெட்ட நேரமா இருந்தால் ஆளை மிதித்துவிடும். மூன்று படங்கள் தயாரித்தார். மாலையிட்ட மங்கை, கறுப்புப்பணம், கவலை இல்லாத மனிதன். இதில் கவலை இல்லாத மனிதன் படம் தயாரித்த பின்னே அவர் கவலை நிறைந்த மனிதரானார் என்பதே உண்மை. மது குடித்தால் உடல் கெட்டு விடும். ஆனால் குடித்தார். உடலை கெடுத்துக் கொண்டார். இந்த பட்டறிவு பாடலில் பிரதியலித்ததால் என்னவோ இன்றளவும் பாடலுக்கு உயிர் இருக்கின்றது.   

 எனது வாழ்க்கையில் நான் பிர்லாவைப் போல் சம்பாதித்தேன். ஊதாரியைப் போல் செலவழித்தேன். பிச்சைக்காரனைப் போல் ஏங்கி நின்றேன் என்று கனத்த இதயத்தோடு சொல்கிறார். வாழ்கையில் ஒருவன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன் என்று திறந்த இதயத்தோடு ஒத்துக்கொள்கிறார். அதன் எதிரொலியாய் தான் என்னவோ 'நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரியுதடா' என்கிற வைரவரியை  அவரால் எழுத முடிந்தது.

   கவியரசருக்கு பணம் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை. பணம் இருந்தால் எப்படி செலவு செய்யக்கூடாது அப்படியெல்லாம் செலவு செய்வார்.ஒருநாள் அவர் பையில் பணம் இருப்பது தெரிகின்றது. உடனே அவர் ஒரு ரெடி மேட் கடைக்குப் போகிறார். குழந்தைக்கு டிரஸ் வேண்டும் என்று கேட்கிறார். கடைக்காரர் "குழந்தையின் வயதைக் கேட்கிறார்?" அவருக்கு சற்று அதிர்ச்சி. அவர் தான் 15 குழந்தைகளுக்கு தகப்பன் ஆயிற்றே! "எங்க வீட்லே எல்லா வயசுலையும் குழந்தைங்க இருக்கு. எல்லாத்திலேயும் ஒவ்வொன்று கொடுங்க" என்றார். இதை ஒரு பேட்டியில் நகைச்சுவையாகச் சொல்கிறார். இதனால் தான் என்னவோ 'எங்க குடும்பம் ரொம்ப பெரிசு, பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு' என்கிற பாடல் பிறந்தது.

   ஒரு தடவை நடிகை மனோரமா 'கவியரசர் ஒரு விதத்தில் கொடுத்து வைத்தவர்' என்று சொல்கிறார். அவருடைய 15 குழந்தைகளையும் ஒவ்வொரு நம்பர் வைத்து கூப்பிடலாம். குழப்பம் இருக்காது. 5 என்று கூப்பிட்டால் 5ம் நம்பர் குழந்தை 'என்ன?ன்னு கேட்கும். இதுவே 5வது பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்திருந்தால் 5ன்னு கூப்பிட்டா ரெண்டுபேர் என்னான்னு கேட்பார்கள். அப்போ 5a, 5b ன்னு கூப்பிடனும். அந்த கஷ்டம் கவியரசருக்கு இல்லே.

 'ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரோ கண்ணா, ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரோ கண்ணா என்கிற பாடல்! முதல் வரி, நாமெல்லாம் பொம்மைகள்! கயிறு அவனிடத்தில் இருக்கின்றது. அவன் இழுக்கும் பக்கமெல்லாம் நாம் ஆடவேண்டும். அதுவே நமது விதி. இரண்டாவது வரி- நாம் தொட்டிலில் உட்கார்ந்து மற்றவர்கள் ஆட்டுவித்தால் அந்த சுகமே அலாதிதான். தொட்டில் ஆட ஆட சுகமாய் இருக்கும். அது போல் மற்றவர்கள் நம்மிடத்தில் ஆசை வார்த்தைகள் பேசும்போது நாம் மெய்மறந்து கனவுலகில் மிதப்போம். அந்த ஆசை அசைபோட அசை போட சுகமாய் இருக்கும். சைக்கிளில் செல்பவன் ஆசையை அசை போடுகிறான். பைக்கிளில் போனால் எவ்வளவு சகமாய் இருக்கும்! பிறகு காரில் போனால் எப்படி இருக்கும்? பிறகு பிளைட்டில் பறந்தால் எப்படி இருக்கும்? வீடு, பங்களா வாங்கினால் எப்படி இருக்கும்? இந்த உலகத்தை ஏரோபிளேனில் ஏறி உட்கார்ந்து ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளைச் சுற்றி வந்தால் எப்படி இருக்கும்? இது தான் ஆசையெனும் தொட்டில் வேலை செய்யும் விதம்..

ஆசையைத் துறப்பது அவ்வளவு எளிதா? சிங்கா, சிங்கி இருவரும் கணவர் மனைவிங்க. சிங்கிக்கு ஆசை அதிகம். குறிப்பா நகைங்க மேலே! இந்த ஆசை அவங்க தினசரி வாழ்க்கைக்கு ரொம்ப எடஞ்சலா இருந்தது. சிங்கா எவ்வளவோ பொறுத்துப் பார்த்தார். முடியவில்லை. கடைசியில் சிங்கி உனது ஆசை எப்போது ஒழியுதோ அப்போது நான் உன்னோடு குடும்பம் நடத்த வருகிறேன். அப்போது உன்னை ஏற்றுக் கொள்கிறேன் என்றார். இருவரும் பிரிந்தனர். கணவனின் பிரிவு ஆசையை வெறுக்கச் செய்ததுசிங்கியின் மனது மிகவும் பக்குவமடைந்தது. ஒரு வருடம் கழித்து சிங்கா வீட்டிற்கு வருகிறார். அவள் பெண் சந்நியாசி போலவே அகியிருந்தாள். சிங்காவுக்குத் திருப்தி. தன் மனைவி ஆசையை துறந்துவிட்டாள் என்பதை நினைத்து! இருவரும் புது வாழ்க்கை ஆரம்பிக்க எண்ணினர். அதற்காக கோவிலுக்குச் செல்ல விரும்பினர். மணல் பரப்பில் சிங்கா முன் செல்ல சிங்கி பின்னே செல்கிறாள். கொஞ்ச தூரம் சென்ற சிங்கா சற்று தூரத்தில் ஏதோ மின்னுவதை பார்க்கிறார். நெருங்க நெருங்க அது வைர வளையல். அதைப் பார்த்தவுடன் சிங்கா தன் கால் கொண்டு மணலால் அதனை மூடி விட்டு நடக்கிறார். அதை பின்னால் வந்த சிங்கி "மணலில் ஏதோ செய்தீர்களே, அது ஏன்" என்று கேட்கிறார். ஒன்றுமில்லை என்று சொல்கிறார். சிங்கி சொல்லியே தீரவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். ஒண்ணுமில்லை. அங்கே ஒரு வைர வளையல் பார்த்தேன். எங்கே உனக்கு மீண்டும் நகை ஆசை வந்துவிடுமோ என்கிற பயத்தில் அதை மணலால் மூடினேன் என்றார். அதை கேட்ட சிங்கி " உண்மையில் நீங்கள் ஆசையைத் துறந்தவர்களாக இருந்திருந்தால் மணலுக்கும் வைரத்திற்கும் வித்தியாசம் தெரிந்திருக்காதே. இப்போது உங்களுக்குத்தான் நகை ஆசை இருக்கு. உங்கள் மனம் பக்குவப்படலே. ஆகையால் நீங்கள் எப்போது ஆசையை துறக்கிறீர்களோ அப்போது ஏற்றுக்கொள்கிறேன் என்று மீண்டும் பிரிந்து சென்றனர். ஆக ஆசை துறப்பது கடினம் தான்.   

 கவிஞரின் பாடல்களை ரசிப்பதற்கு வயது வரம்பு கிடையாது. இலக்கணம், இலக்கியம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

குழந்தையை தாலாட்ட வைக்கும்
இளைஞர்களை ஆட வைக்கும்
பாமரர்களை பாட வைக்கும்
கவிஞர்களை தேட வைக்கும்
முதியோர்களை நாட வைக்கும்

   ஒவ்வொரு தமிழர் நெஞ்சங்களில் கடவுள் குடிகொண்டு இருக்கிறாரோ இல்லையோ, கட்டாயம் கவிஞர் கண்ணதாசன் குடிகொண்டு இருக்கிறார் என்பதே உண்மை.

கவிஞர் சொல்கிறார். தவத்திற்கு ஒருவர், தமிழுக்கு இருவர், சவத்திற்கு நால்வர் என்கிறார். விளக்கம் என்ன சொல்கிறார்ன்னா, தவம் செய்வதாக இருந்தால் தனியாகச் செய்யவேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும். தமிழைப் பற்றிப் பேசுவதென்றால் இருவர் வேண்டும். நாம் சவமாகிப்போனால் அதை தூக்க நால்வர் வேண்டும் என்கிறார்.

ஆனால் அதை நான் அதை எப்படிப் பார்க்கிறேன் என்றால் நீ உன் வாழ்க்கையில் தவத்தை கடைப்பிடிக்க வேண்டும். இங்கே தவம் என்றால் சுயக்கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் என்று எடுத்துக்கொண்டால் அதன் பலன் கைமேல் கிடைக்கும் என்பது எனது கருத்து. பிறகு தமிழுக்கு இருவர் வேண்டும் என்கிறார். பொதுவாக தமிழுக்கு கதி இருவர். ஒருவர் '' வில் தொடங்கும் கம்பர், மற்றோருவர் 'தி' யில் தொடங்கும் திருவள்ளுவர். அவர்களே இருவர். பிறகு சவத்திற்கு நால்வர். அந்த நால்வர் மாதா, பிதா, குரு, தெய்வம் ஆவார்கள். நாம் சவமாகும் வரை அந்த நால்வரை என்றும் மறக்கக் கூடாது என்பது எனது கருத்து.

  ஒரு கவிஞரின் வெற்றி அவருடைய பாடல்கள் மட்டும் பெருமையும் புகழையும் அடைவதில் மட்டுமில்லை. அவருடைய பாடல்களின் தாக்கம் பலரை கவிஞராக்குவதில் இருக்கின்றது. பாரதிக்குப் பெருமை பாரதிதாசனை உருவாக்கியது. கவியரசருக்குப் பெருமை வாலியைப் போன்று பல கவிஞர்களை உருவாக்கியது. ஒவ்வொருவரின் வாழ்க்கையில் தன் வாழ்நாளில் கட்டாயம் ஒரு திருப்புமுனை இருந்தே தீரும். கலிங்கப் போர் - அசோகருக்குத் திருப்புமுனை, புத்தருக்கு போதிமரம், மகாத்மா காந்திக்கு தென்னாபிரிக்கா இரயில் பயணம்! வாலியும் பலதடவை முயன்றும் அவருக்கு சினிமாவில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 'எனது வாழ்க்கை செத்துபோய்விட்டது' நான் என் ஊருக்கே போறதே மேல் என்று வருந்திக்கொண்டே சென்ற போது கவிஞர் கண்ணதாசன் அவர்களின் 'மயக்கமா கலக்கமா' என்கிற பாட்டு வாலிக்கு மறுபிறவி கொடுத்தது என்றே சொல்லுவார்.

வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் துயரம் இருந்தாலும் 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு' என்கிற வரியை ஒருமுறை பாடினாலே போதும். வந்த துன்பம் வாசல் தாண்டி வெளியே பறந்துபோகும்.

வாலியின் பல பாடல்கள் கவிஞரின் சாயலில் இருக்கும். இந்த பாட்டு 'வாலி' எழுதியதா? என்று சொல்லும் அளவுக்கு இருக்கும். அப்படி குழப்பிய ஒரு பாட்டு. வெள்ளி விழா படத்தில்.. 'கடந்த காலமோ திரும்புவதில்லை. நிகழ் காலமோ விரும்புவதில்லை. எதிர் காலமோ அரும்புவதில்லை, இதுதானே அறுபதின் நிலை.. உனக்கென்ன குறைச்சல் ..நீ ஒரு ராஜா.. நான் நினைக்கிறேன் வாலி என்று பேர் வைத்ததால் என்னவோ கவியரசரின் பாட்டுழுதும் சக்தி பாதியளவு கவிஞர் வாலிக்கு வந்திருக்கின்றது.

  கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் காலத்தால் அழியாத கருத்துகள் கொண்டது. இந்துமதம் பற்றி சுவாமி சின்மயானந்தா சொல்லும்போது Hinduism is one of the most rational (பகுத்தறிவு) logical (தர்க்கரீதியான பகுப்பாய்வு) and scientific religion. Hinduism is not only a religion, but it is a way of life என்கிறார். மனிதனுடைய வாழ்க்கை விதிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றது என்கிறார். அதேநேரத்தில் விதியை மதியால் வெல்லலாம் என்கிறது. அதுவும் கூட விதி இருந்தால் மட்டுமே நடக்கும் என்கிறது. கீதையோ, கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்கிறது.

விருக முனிவர் - 12 வருடம் மழை பெய்யக்கூடாது என்று சாபம் விதித்தார்.

விவரம் இதனை கிளிக் செய்யவும் 

கடமையின் வலிமை STRENGTH OF DUTY (STORIES OF LIFE) 



  ஒரு தடவை தமிழ் இலக்கியம் பற்றி காரசாரமாக விவாதம் நடந்தது. ஒருவர், சொற்போர் செய்யும்போது கேட்போர் கேட்கட்டும், சுவைப்போர் சுவைக்கட்டும், கடிப்போர் கடிக்கட்டும் என்று பேசினார். . உடனே மற்றொருவர் தூங்குவோர் தூங்கட்டும், ஓடுவோர் ஓடட்டும் என்றார். ஆனால் அதற்குமேலே ஒருவர் அடிப்போர் அடிக்கட்டும், உதைப்போர் உதைக்கட்டும் என்றாரே பார்க்கலாம். சொற்போர் ஆரம்பித்து மற்போரில் முடியாமல் இருந்தால் சரி என்றார்  தலைவர். இதன் மூலம் தமிழின் அழகும் வளைந்துகொடுக்கும் தன்மையும் அறிய முடிகின்றதல்லவா!

  கவியரசர் ஒரு கவிச்சொல் அகராதி. அவர் பாடல் சொல்லும் போது ஒவ்வொரு சொல்லாய் சொல்வாராம். அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் ஒரு புள்ளி என்றால் அந்த புள்ளிகளை மெட்டால் இசையால் இணைத்தால் காலத்தால் அழியாத பாடல் பிறக்கின்றது என்பது உண்மை.

சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான், வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்பான்' இது கவியரசர் வரிகள். இதன் அர்த்தம் ' மண்ணுலகம் பொய் என்பார், மாண்டவர்கள்! விண்ணுலகம் பொய் என்பார் வாழ்கிறவர்கள்! அப்போ மெய் எது? அதாவது உண்மை எது? வாழ்கிறவர்கள் மாண்டு போவதே மெய்.    

  சக்தியுள்ளபோது புத்தியில்லையே, புத்தி வந்தபோது சக்தி இல்லையே என்று பாடுகிறார். இது அவருடைய வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்றே நினைக்கிறேன். இளம் வயதில் சக்தியும் அறிவும் திறமையும் இருந்தாலும் அவருடைய மனம் சிற்றின்பத்தில் அதிகமாக நாடியது. அதன் விளைவு பல வாய்ப்புகள் வந்தபோதும் அளவாக எழுதினார். ஆனால் வயது ஏற ஏற சக்தி குறையும் போது அதிகமாக எழுத நினைத்தார். உடம்பு ஒத்துழைக்கவில்லைசக்தியுள்ளபோது புத்தியில்லையே, புத்தி வந்தபோது சக்தி இல்லையே என்று பாடுகிறார்.
    
  கண்ணதாசனுக்குப் போட்டியாக வாலி உருவெடுத்து வந்தார். ஊடகங்கள் திரையுலகம் அவர்களை எலியும் பூணை என்று வர்ணித்தது. ஆனால் வாலி அதை மறுத்தார். நானும் அவரும் எதுகையும் மோனையும் போல என்கிறார். அதை கேட்டும்போது எனக்கு முயல் ஆமை பந்தயம் தான் நினைவுக்கு வருகின்றது. முயல் கண்ணதாசன் என்றால் ஆமை வாலி என கொள்வோம். உங்களுக்கு ஆமை வென்ற கதை தெரியும். ஆனால் இரண்டுமே வென்ற கதை தெரியுமா? ஆதாவது WIN - WIN Policy!

   முயல் - ஆமை பந்தயத்தின் முதல் பகுதி மட்டும் யாவரும் அறிந்ததே. ஆனால் மீதம் மூன்று பகுதிகள் அறிய இங்கே கிளிக் பண்ணுங்கள்! 
    
  
எப்படி முயலும் ஆமையும் வெற்றிபெற்றது போல திரையுலகில் சிவாஜிக்கு கண்ணதாசனும் எம்.ஜி.ஆர்க்கு வாலியும் பாடல்கள் எழுதினார்கள். ஆகவே இருவரும் வெற்றி பெற்றார்கள். ஒரு முறை வாலிக்கு சோதனை வந்தது. 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் ஒரு பாட்டு வாலி அவர்கள் எப்படி எழுதினாலும் எம்.ஜி..ஆர்க்கு திருப்தி இல்லை. ஆகவே மெல்லிசை மன்னர் கவியரசரிடம் பாட்டை கேட்டார். அவர் முயலாச்சே. உடனே அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்..’ எழுதி கொடுத்தார். அதோடு நீங்கள் இந்த பாட்டை உங்கள் பேரைப் போட்டுக்கொள்ளுங்கள் என்றார். அப்போது எம்.ஜி.ஆருக்கும் கவியரசருக்கும் ஆகாது. ஆனால் அந்தப்பாட்டைப் படித்தவுடன் இது கவியரசர் பாட்டுதானே! எனக்கு மிகவும் திருப்தி. எழுத்து போடும் போது அவர் பேரை தனியாக தெரியும்படி பெரிதாக போடச்சொன்னார். அது தான்  WIN - WIN Policy!

இக்கரைக்கு அக்கரை பச்சை படத்தில் ஒரு பாடல்

கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்
கனி மீது விழ்ழுந்தோர்கள் உண்ணுங்கள்
வழி சாலை கண்டோர்கள் செல்லுங்கள்
போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்

இதுவும் வாழ்க்கைத் தத்துவத்தின் ஒரு விளக்கம்.

உங்கள் வாழ்க்கையில் தினமும் புயலும் சூறாவளியும் பலத்த காற்றும் வீசலாம். ஆனால் அவற்றையெல்லாம் எதிர் நீச்சல் போட்டே தீரவேண்டும்.
சிலருடைய வாழ்க்கை என்ன கேட்டாலும் கிடைக்கும் பணக்கார வாழ்க்கையாக இருக்லாம். அவர்களை நன்றாக அனுபவியுங்கள் என்கிறார்.
வெற்றிக்கான வழி தெரிந்தால் அவ்வழியில் செல்லுங்கள். எதுவுமே செய்ய முடியவில்லை என்றால் அங்கேயே நில்லுங்கள் என்கிறார். இதில் நம் வாழ்க்கை எது? என்று அறியலாம்.     

   கவியரசர் சொல்கிறார், நீ ஏறுகிறாய் என்றால் உன்னை அவன் ஏறவைத்து வேடிக்கை பார்க்கிறான் என்று அர்த்தம். நீ இறங்குகின்றாய் என்றால் உன்னை சிந்திக்க வைக்கிறான் என்று அர்த்தம். நீ நினைப்பது ஒன்று. நடப்பது ஒன்றாக இருந்தால் அது உன் விதி என்று அர்த்தம். நீ நினைக்காத ஒன்று நடக்குமானால் உனக்கும் மேலே ஒரு சக்தி இருக்கின்றது என்று உணர்ந்து கொள் என்று அர்த்தம். 

  கடைசியாக கவியரசர் ஒரு பாடலில் 

     காட்டு மனம் இருந்தால் கவலை வளர்ந்துவிடும்.
காற்று மனம் இருந்தால் கவலை பறந்துவிடும்... 

என்கிறார். ஆகையால் உங்கள் மனதை எப்போதும் இலேசாக வைத்துக்கொண்டால் கட்டாயம் நீங்கள் நினைக்கும் வெற்றி கிட்டும்.

மீண்டும் கவியரசர் சொன்னதை ஒருமுறை கூற விரும்புகிறேன். புத்தக ஆசிரியர்களை பின்பற்றாதீர்கள். அவர்களின் புத்தகத்தை பின்பற்றுங்கள்.

வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. 

*******************