Pages

Monday, 5 August 2019

தொழிலாளர்கள் எனும் ஏணிகள்! - கட்டுரை - மதுரை கங்காதரன்                               தொழிலாளர்கள் எனும் ஏணிகள்!
                                                                          கட்டுரை 
                               மதுரை கங்காதரன்

தகுதியின் புது அர்த்தம்
தொழிலாளர்கள் ஒருவகையில் ஏணிகளே! ஏணியானது ஒருவனை மேலே ஏற்றவோ அல்லது கீழே இறக்கவோ செய்யும் வல்லமை உண்டு. அதேபோல் தொழிலாளிகளால் ஒரு நிறுவனத்தை முன்னேற்றவோ அல்லது கீழிறக்கவோ செய்ய முடியும். வேகம்.. வளர்ச்சி.. வெற்றி.. இதுதான் இன்றைய நவீனத் தொழில் மற்றும் சேவை நிறுவனங்களின் மூலமந்திரம். இதனை எதிர்கொள்ள வேண்டுமென்றால் அறிவும் திறமையும் மிக்க தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்களால் மட்டுமே சாத்தியமாகும். அதற்கு 'தகுதி' கொண்ட தொழிலாளர்கள் வேண்டும். அதாவது த - தன்னம்பிக்கை, கு - குறிக்கோள், தி - திட்டம் ஆகும். அவர்களால் மட்டுமே 'தகுதி' வாய்ந்தப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். அதாவது த - தரம், கு - குணம், தி - திடம் என்பதாகும். முதல் இல்லாமல் பல அனுபவங்களைப் பெறுபவர்கள் தொழிலாளிகளே!

முதலாளி - தொழிலாளி உறவு
முதலாளிகள் மற்றும் தொழிலாளிகளின் உறவு 'தொப்புள் கொடி' உறவுபோல இடைவெளி இல்லாமல் இருத்தல் நல்லது. முதலாளி, தொழிலாளிகளின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு, மனநிலையினை அறிந்துகொண்டு செயல்படவேண்டும்.   அதற்கு இருவருக்கும் விசுவாசமும் நேர்மையும் மிக இன்றியமையாதது. இன்றைய காலகட்டத்தில் உலகளாவியப் போட்டி தவிர்க்க முடியாத ஒன்று. அப்போட்டியே அறிவியல், கணினி மற்றும் பொறியியல் தொழில்நுட்பத்தை அடுத்தடுத்த பரிணாமத்திற்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றது. அந்த ஓட்டத்திற்கு இணையாக அது சம்பந்தபட்டத் தொழிலாளர்களும் தங்களின் அறிவு, ஆற்றல், திறமை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவை வளர்த்துக் கொள்ளவேண்டியக் கட்டாயத்தில் தள்ளப்படுகிறார்கள். யாரெல்லாம் இதற்கு தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் தரப்படுகின்றது. ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் குறுகிய காலத்திலேயே காலாவதியாகிவிடுகின்றது. ஆகையால் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்கள் வேலையினைத் தக்கவைத்துக் கொள்ள ஒரே வழி! அந்தப் புதியத் தொழில்நுட்பத்திற்கான அறிவையும் அதனைக் கையாளும் திறமையும் விரைவாக வளர்த்துக் கொள்ளுதலே. இல்லையேல் வேலையை இழக்க வேண்டியது தான்.

தொழிலாளர் தத்துவம்
சென்ற நூற்றாண்டில் சர்வாதிகாரித்துவம்’ (Dictatorship) ஓரளவிற்கு தொழிலாளர்களை ஆட்டிப்படைத்து வெற்றி கண்டது. ஆனால் விரைவில் அது மறைந்து தலைமைத்துவம்’ (Leadership) வந்தது. அதுவும் சில ஆண்டுகள் தொழிலாளர்களிடம் நன்மதிப்பைப் பெற்றது. அதன் பிறகு முதலாளித்துவம்’ (Ownership) பிரபலமடைந்து வருகிறது. அதாவது ஒவ்வொரு தொழிலாளரும் தாங்கள் பார்க்கும் வேலைக்கு அவர்களே முதலாளி! அதாவது ஒரு முதலாளி எவ்வாறு ஒவ்வொரு செயலை லாபநோக்கத்துடன் தரமாக விரைவாகச் செய்வாரோ அதேபோல் ஒவ்வொரு தொழிலாளியும் செய்யவேண்டும். அதற்கானப் பயிற்சியையும் அனுபவங்ளையும் தொழிலாளிகளின் மூளையில் ஏற்றுவதில் தான் ஒரு முதலாளியின் வெற்றி உள்ளது.

தொழிலாளர் திறமையின் மதிப்பு
திறமையானத் தொழிலாளிகளுக்கு எப்போதுமே அலாதியான மதிப்பும் கௌரவமும் உண்டு. ஒரு தானியங்கித் தொழிற்சாலையில் ஏதோ ஒரு காரணத்தால் இயந்திரங்கள் நின்று போனது. ஒருநாள் தொழிற்சாலை ஓடவில்லையென்றாலும் சில இலட்சம் ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்படும். அங்கு வேலை செய்யும் அனுபவமிக்கத் தொழிலாளர்கள் எவ்வளவோ முயன்றும் அவர்களால் இயக்க முடியவில்லை. இருநாட்கள் கழித்து இயந்திரம் தயாரித்த நிறுவனத்தின் உதவியை நாடினார் அந்தத் தொழிற்சாலை முதலாளி. சரி செய்வதற்கு, வரும் பொறியாளருக்குக் கூலியாக ரூபாய் ஐம்பதாயிரம் பேசப்பட்டது. அந்தப் பொறியாளர் வந்தார். அத்தனை இயந்திரங்களையும் சரிபார்த்துக் கொண்டே ஒரு சுற்று சற்றிவந்தார். கடைசியாக ஒரு சுத்தியலைக் கொண்டுவரச் சொன்னார். ஒரு இடத்தில் புதுவிதமாய் ஒரு தட்டு தட்டினார். பிறகு இயந்திரங்களை இயக்கச் சொன்னார். அனைத்தும் பிரமாதமாய் ஓடத்துவங்கியது. முன்னமே ஒத்துக்கொண்டதுபோல் ரூபாய் ஐம்பதாயிரம் பில் போட்டு முதலாளியிடம் நீட்டினார் வந்த பொறியாளர். ஆனால் 'ஒரு தட்டு தட்டுவதற்கு நான் ஏன் ஐம்பதாயிரம் தரவேண்டும்? ஐந்தாயிரம் தான் தருவேன்' என்று பிடிவாதமாய் கொடுத்தார். அந்தப் பொறியாளரும் தன் அனுபவ முதிற்சியைக் காட்டும்விதமாக அதனை மறுப்புச் சொல்லாமல் சண்டை போடாமல் வாங்கிக் கொண்டுப் போகும்போது "அந்த ஐம்பதாயிரம், எந்த இயந்திரத்தில் எந்த இடத்தில் எவ்வகையில் தட்டவேண்டுமோ அதற்காக!" என்று விளக்கம் கொடுத்து நடையைக்கட்டினார்.

சில மாதம் கழித்து மீண்டும் இயந்திரங்கள் நின்று போனது. இம்முறை அங்கிருந்தப் பொறியாளர்கள், அன்று அந்தப் பொறியாளர் தட்டியதுபோல் தட்டினார்கள். ம்ஹூம். இயந்திரங்கள் அசையவில்லை. நான்கு நாட்கள் பல இலட்சங்கள் நஷ்டமானது தான் மிச்சம். வேறுவழியில்லாமல் மீண்டும் அந்த பொறியாளரை கெஞ்சிக் கூத்தாடி வரவழைத்தார்கள். இம்முறை நீங்கள் கேட்பதுபோல் இருமடங்கு கூலி தருகிறேன்என்று உறுதியளித்தார். இம்முறை ஒரு 'திருப்புளி' கொண்டுவரச்சொல்லி சில இயந்திரங்களின் ஸ்குரு ஆணிகளை முடுக்கினார். பிறகு இயந்திரங்கள் நன்றாக ஓட ஆரம்பித்தது. இம்முறை சப்தம் போடாமல் ஒரு இலட்சத்தோடு சென்ற முறை கொடுக்கவேண்டிய பாக்கியையும் சேர்த்து கொடுத்தார். இனிமேல் இயந்திரம் பழுதானவுடன் காலம் தாழ்த்தாமல் அந்தப் பொறியாளரை அழைத்துவிடவேண்டும். அதனால் பல இலட்சங்கள் நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்று எண்ணிக் கொண்டார். தொழிலாளிகள் இதுபோல் தொழில் பற்றிய அறிவும், நுணுக்கமும், வளர்ச்சியையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

கணினியும் தொழில்நுட்பப் போட்டியும்  
இது கணினியுகம். காற்று புகாத இடத்தில்கூடக் கணினி புகுந்து பல தொழில்நுட்பங்களாக உருமாறி சப்தமில்லாமல் அரிய சாதனைகள் செய்து கொண்டிருக்கின்றது. இது பல துறைகளில் பழையவகை வழிமுறைகளை நசுக்கிவிட்டு / அழித்துவிட்டுப் புதியவழி முறையினைப் பின்பற்றச் செய்துகொண்டு வருகின்றது. அதனால் பழைய தொழில்கள் மறைந்து புதுப்புது தொழில்கள் வந்த வண்ணமாக இருக்கின்றது. இந்த மாற்றத்தின் காரணமாக பல ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த பல நிறுவனங்கள் தாக்குபிடிக்க முடியாமல் இன்று திணறி வருகின்றது. ஆகையால் தொழில் நிலையில்லாமல் போகின்றது.  தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான நிரந்தரவேலை கிடைப்பது அரிதாகிறது. அதனால் அவர்களில் வாழ்க்கை எப்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது. 

இன்னும் பல நிறுவனங்களில் பல பதவிகள் காலியாகவே உள்ளது. அவர்கள் எப்போதும்  தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய ஆட்களைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். என்னதான் கலை, அறிவியல், பொறியியல் பட்டதாரிகள் பலருக்கு வேலை கிடைக்காமல் இருகிறார்கள். காரணம் அவர்களுக்குக் கல்வித்தகுதிகள் இருந்தும் திறமைகள் இல்லாததே! அதனால் பலருக்குத் தங்கள் படிப்புக்குச் சம்பந்தமில்லாத வேலையே கிடைக்கின்றது. அதோடு இளைஞர்கள் / தொழிலாளர்கள் பலர் கடினமாக உழைக்கின்ற வேலைகளை விரும்புவதற்குப் பதிலாக சொகுசான இலகுவான வேலைகளே விரும்புகின்றனர். இந்த மனநிலை மாறினால் தான் நல்ல வேலை கிடைக்கும். தொழில் வளரும், நாடும் முன்னேறும்.

வருங்காலத் தொழிலாளர்களின் நிலை
வருங்காலத்தில் 'இயந்திர மனிதன்' தொழில்நுட்பம், ஆளில்லாத தானியங்கி வாகனம், 5G தகவல் பரிமாற்றம், ஆன்-லைன், டிஜிட்டல் வர்த்தகம், மின்சாரம் மற்றும் சூரிய சக்தி பயன்பாடு ஆகியவை மேலும் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்களும், விஞ்ஞானிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் வளர்ச்சிகளை நம்மால் தடுத்துநிறுத்த முடியாவிட்டாலும் அதனை எதிர்கொண்டு வெற்றுபெறும் ஆற்றலும் திறமையும் வளர்த்துக்கொள்ளுதல் மிகவும் அவசியம்.          
**********************

1 comment: