Pages

Wednesday, 25 July 2012

கடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை


கடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் சிறுகதை  
மதுரை கங்காதரன் 

குறிப்பு : இக்கதை விருதைமலர் - நடத்தியப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. 
மனிதனின் இப்போது இருக்கும் குணத்தை சிந்திக்க வைக்கும் 
உணர்ச்சி பூர்வமானக் கற்பனைக்  கதை.


இந்த உலகம் அழியபோவதற்கான பல நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. பிரபஞ்சத்தில் அதுவும் சூரிய குடும்பத்தில், அதிசயமான பலவகை உயிரினங்கள் அடங்கிய பூமியில், கதைகளில் ஏன்? திரைப்படங்களில் கூட காட்ட முடியாத அளவிற்கு, உண்மையாகவே  மனித இனம் அழியும் காட்சிகள், பார்க்கும் திசைகளிலெல்லாம் தென்பட ஆரம்பித்தன. அவையெல்லாம் கற்பனைக்கு எட்டாத ஒன்றே சொல்ல வேண்டும்.

அது எவ்வாறென்றால் ஒரு தொலைபேசியில் "மகனே!  சீக்கிரம்  வீட்டுக்கு திரும்பி..."  என்றபடி  பாதியிலே பேச்சுப் பரிமாற்றம் தடைபட்டது. அதற்கு  காரணம் அநேகமாக அந்த இடம் தவிடு பொடியாகி சுடுகாடாக மாறிக்கொண்டிருக்கும்.

உலக நாடுகள் சிலசற்றும் நினைத்துப் பார்க்காதபடி 'போர்' என்கிற போர்வையில் இயற்கைச் சக்திகளை தோற்கடிக்கும்விதமாக மனித சக்திகள் ஒன்றுகூடி, போட்டிபோட்டுக்கொண்டுத் தங்கள் தங்கள் வலிமையினைப் பலவழிகளில் பலதிசைகளில் நிரூபித்துக்கொண்டிருந்தன. அத்தகைய செயல்கள் 'உலக மக்கள் அனைவரையும் அழிவின் பாதைக்கு இழுத்துச் செல்லும் அடையாளம்தான்என்று யாரும்  எண்ணிப்பார்க்கவே இயலாத ஒன்றாக இருந்தது. அதாவது இந்த மனித உலகில் அதிகபட்ச அழிவுகளை ஏற்படுத்தும் சக்திமிக்க ஆயுதங்களைக் கொண்டு ஒருவருக்கொருவர் பலப்பரிட்சை செய்து கொண்டிருந்தனர். மனித உயிர்களை துட்சமாக எண்ணித் தங்கள் செல்வம், மனிதவளம், தகவல் தொழில்நுட்பம்பணம் மற்றும் ஆயுத பலத்தை நிரூபிக்கவும் 'நான்தான் உலகத் தலைவன்' என்ற தனிமனித சுயநலத்தின் உச்சத்தில், அனைத்து மானுட  தர்மங்களையும் மீறி, அந்த உலகப் போரானது மனிதர்கள்  உட்பட பல உயிரினங்களை எவ்வித வித்தியாசமும் பார்க்காது அழித்துக்கொண்டு இருந்தது.

இதர நாடுகளின் கவனம் முழுவதும் அந்த உலகப் போரின் முடிவை நோக்கி எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.
                                        
தொலைக்காட்சி, வானொலி, கணினி , கைபேசி , செய்தித்தாள்கள் போன்ற அனைத்து சாதனங்ளிலும் போரின் கோரத்தை நேரடியாகவும் மற்றும் செய்திதாள்கள் மூலமாகவும்  பரபரப்பாக ஒலி, ஒளி வழியாக நேரலையாக செய்திகளைத் தந்து கொண்டிருந்தது.

அதோடு நிற்காமல் இதுவரை நடந்த முதல் இரு உலகப் போரின் போது மனித இனங்கள் கொத்து கொத்தாகக் கொல்லப்படுவதை கோப்புக்காட்சியிலிருந்து காட்டிக்கொண்டு இருந்ததுஅப்போது பீரங்கிகள், துப்பாக்கிகள், விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுகுண்டுகள் செய்த 'மனித அழிவு' சாகசங்கள் பலவற்றைப் போட்டுக் காட்டிக்கொண்டு இருந்தது. அது உலக மக்களை பயமுறுத்தும்விதமாகவும், உடலை உறையவைக்கும்விதமாகவும் இருந்தது. அழிவிலிருந்து இருமுறை தப்பித்த பூமி, இம்முறையும் தப்பித்துவிடுமா? என்கிற கேள்விக்குறி நாட்டுத்தலைவர்களுக்கிடையே இருந்தது.   

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த மக்களின் நெஞ்சம் படபடத்துக்கொண்டிருந்தது. அனைவரின் எண்ணங்கள் பலவாறு சிந்தித்ததுநடக்கும் இந்த உலகப் போர் முதல் இரு உலகப் போரைவிடப் பன்மடங்கு மக்கள் இனத்தை அழித்துவிடும் என்கிற அச்சத்தையும் உண்டுபண்ணிக் கொண்டிருந்தது.
                           
போர் நடக்கும் நாடுகளைப் பற்றிய 'போர் செய்திகள்' நேரலையாக உலகத்தின் பல நாடுகளுக்குப்  பல மொழிகளில் கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் தொலைபேசி மூலம் கதறியபடித் தந்து கொண்டிருந்ததுஅதுவும் சில நேரம்தான் நீடித்தது. அதன் பிறகு அனைத்து வழிகளில் நடந்தச் செய்திப் பரிமாற்றங்கள்  தானாகத் துண்டித்துக்கொண்டன.





இந்த மாதிரி மனத்தை உலுக்கும் சம்பவம் நடந்து கொண்டிருக்க, நாடே அச்செய்திகளை மட்டும் நுண்ணிப்பாக கவனித்துக்கொண்டிருக்க ....


அதேவேளையில் யாருமே கணித்திருக்க முடியாதபடி சற்றும் எதிர்பாரதவிதமாக ஒரே    நேரத்தில் இயற்கையும், இதுநாள்வரை தனக்குள் அடக்கி வைத்திருந்த தனது அசுரபலத்தை உலக மக்களுக்கு நிரூபித்துக்காட்ட நான்கு திசைகளில் வெவ்வேறு விதத்தில் விசுவரூபம் எடுத்துக் கொண்டிருந்தது.

கிழக்குதிசை முழுவதும் என்றுமே இல்லாதவாறு பல இடங்களில் மிகப்பெரிய நீரூற்றுபோல் எரிமலைகளாகக் கக்கியபடி  அங்குள்ள எல்லாவற்றையும் நாசம் செய்து கொண்டிருந்தது.


மேற்கு திசையில் பல மீட்டர் உயரமுள்ள இராட்சச  அலைகள் தொடர்ச்சியாக எழுந்தபடி நாட்டிற்குள் புகுந்து தாக்கி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சி தந்து கொண்டிருந்தது.



வடக்கு திசையோ பனி உருகி ஓடுவதும்,  மீதி இடத்தில் சூறாவளி காற்றுவீசி தனது அழிவு வேலையினைச் சரியாகச் செய்யும்விதமாக அங்கே ஒருவரையும் வாழவிடாது துவசம் செய்து கொண்டிருந்தது.


விடுபட்ட தெற்கு திசையில் புயலும், சுனாமி போன்ற பேரலைகளின் தாக்கங்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு பல இடங்களை அதன் அகோர பசியினை தீர்த்துக்கொள்ளும் விதமாக மக்களை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட பூமியின் எல்லாப் பகுதியிலும் அழிவுக்கான  அடையாளம் தெரிய தொடங்கியது என்றே சொல்ல வேண்டும்.
தொலைகாட்சி பெட்டியில் 'முக்கிய செய்திகளுக்குப் 'பதிலாக' அவசர செய்திகள்' மற்றும் 'எச்சரிக்கை செய்திகள்' என்றபடி  ஓடிக்கொண்டிருந்தது.
நாட்டு  மக்களுக்கு, உலகத்தின் அனைத்து நாடுகளின் மூலை முடுக்குகள் உட்பட எல்லா பகுதியிலும் அழிவு, அழிவு! என்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. "உங்களை நீங்களே காப்பாற்றி"  என்று அந்த எச்சரிக்கை ஒலியும் அரை குறை பேச்சுடன் 'டொப்' என்ற சப்தத்துடன் அதன் ஆயுள் முடிந்து போயிற்று. காரணம்!  அந்த பகுதியில் உள்ள அரசியல் தலைவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் போன்ற அனைவரையும் எந்தவித வித்தியாசமும் பாராது எல்லா உயிர் ராசிகளையும் ஒரே நேரத்தில்  பூமிக்குள் புதைந்து போகச் செய்தது.



கைபேசியில்...
"அப்பா! நாங்க இங்கே  நல்லா  இருக்கிறோம். அங்கே நீங்க எப்ப..." சுனாமி போன்ற அலை அந்தக் குரலையும் அடித்துச்சென்றது.




கணினியில்...

"நல்லவேளை இங்கே  ஒன்னும் நடக்கலே! நாங்க பாதுகாப்பாக இருக்கி..." பேச்சுவார்த்தை முழுமையாய் பரிமாறிக்கொள்ளும் முன்னே அப்பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்தது.



வானொலியில்..
"பூமியில் பல பகுதிகள் இயற்கை செய்து கொண்டிருக்கும் அழிவோடு, உலகப் போரான அணு ஆயுதப் போரும் நடைபெற்று வருவதால் நீங்கள்..." சுழன்று வீசிய சூறாவளி வானொலி நிலையத்தோடு அங்கு இருந்தனவற்றை ஒன்றுவிடாமல் சூறையாடிக் கடலுக்குள் அடித்துச் சென்றது.



இடையிலுள்ள நிலப்பகுதியில் அணுகுண்டிலிருந்து    வந்த அணுக்கதிர்கள் மக்களையும், தண்ணீரிலுள்ள அனைத்து உயிரினங்களையும் உயிரோடு சமாதிகட்டும் வேலை துரிதமாக செய்து கொண்டிருந்தது.
நடப்பவை எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால், இயற்கையானது இந்த நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்ததுபோல் முன்பே திட்டமிட்டபடி ஒவ்வொரு நிகழ்வையும் துல்லியமாக நடத்திக்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்கள், அழிந்த கட்டிடங்கள், அனாதையாய் கிடக்கும் செல்வங்கள், யாருமே சீண்டாத, ஆட்களே இல்லாத பெரிய சின்ன கடைகள், பொறுக்க ஆளில்லாத சாலையில் பரவிக் கிடக்கும் தங்கம், வைரம், பணப்பெட்டிகள் என்று உலகத்தில் இதுவரை காணாத செல்வங்கள் ஒன்றாக அனைத்து இடங்களிலும் பார்க்கின்றவாறு இருந்ததுஇது நாள் வரை ஒளிந்து கிடந்த, புதையலாகக் காக்கப்பட்டவை எல்லாம் இன்று  'அம்போ' என்று அனாதையாய் கேட்பாரற்றுக் கிடந்தது. ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 600 கோடி மக்களின் வாழ்க்கை இல்லாமல் செய்ததன் அடையாளமாகத் தனது வெற்றியை மெல்லிய காற்று மூலம் இறந்த மக்களைப் பார்த்துக் கொண்டே பறைசாற்றி வலம் வந்துகொண்டிருந்ததுமருந்திற்காவது ஒரு உயிராவது பிழைத்திருக்கின்றதா? என்று வேவு பார்க்க வந்தது சூரியக் கதிர்கள்.
"பூமியாவது அழிவதாவது, வேறு வேலை இருந்தால் பாருங்கள்!"என்று ஆணித்தரமாய் இருந்தவர்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர்இதுநாள் வரை பிரபஞ்சத்தின் அதிசய படைப்பு பூமியைக இருந்தது. அந்த  பூமியின் அதிய படைப்புக்கு கண்ணடி பட்டதற்குப் பரிகாரமாய் அழிவு வேலைகள் கட்சிதமாக நடந்து முடிந்தது. 
இத்தனையும்  நடந்த பின்னரும் அந்த அசுர அழிவையும் தாண்டி ஏதோ ஒரு மூலையில் முக்கல் முனகல் சத்தம் ... ".... ய்..யோ ... அப் ...பா ..."  என்று உடல் சோர்வில், பசி மயக்கத்தால்வரும் சப்தம் கேட்டது. சற்று நெருங்கியபோது அவன் ஒரு இளைஞன்? உயிர் கொண்ட சிலை. அழிவின் சத்தி  தவறுதலாக ஒரு உயிரை விட்டுவைத்தது போலும். சற்றே எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான். தட்டுத் தடுமாறி அங்கும் இங்கும் பார்த்தவன் காய்கனிகளை பார்த்தவுடன் ஓடினான் அதனை நோக்கி. ஒரு வழியாக பசியாறிய பின்னரே, தான் இருக்கும் நிலைமையினைச் சிந்திக்க ஆரம்பித்தான். அவனைச் சுற்றி ஆள் அரவமில்லை. ஒருவிதபயம் தொற்றிக்கொண்டது. மற்றவர்கள் எங்கே? என்ன ஆனார்கள்? தேடி நடந்தான் ... நடந்தான். கண்ணுக்கு எட்டியவரை யாருமில்லை? 'அப்போ நான் மட்டுமா.., உயிருடன் ..!  இந்த உலகில்..!' என்று தனக்குள் பேசியவாறு விடை காண அலைந்தான். தினமும் உண்பது, உறங்குவது, அலைவது என்றபடி நாட்கள் பல கழிந்தன. போக போக நம்பிக்கை இழந்தான். ஆனாலும் ஒரு மூலையில் தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியுடன் அவன் பயணத்தைத் தொடர்ந்தான்.
வீண் போகவில்லை. அவன் எண்ணம்.
ஒரு நாள், தூரத்தில் அ..தோ ......ரு ...உருவம் அசைவது தெரிந்தது. அவன் மனதில் நம்பிக்கை ஒளி பிரகாசமானது. நெருங்க நெருங்க உருவம் சற்று தெளிவாக தெரிந்தது. அந்த உருவமோ இவனைக் கவனித்ததாக தெரியவில்லை. நீளமானத் தலைமுடி, நளினமான நடை, தளர்ந்த உடல்! அதனை நோக்கி ஓடினான். அன்னநடை நடந்த உருவம் திடீரென்று கீழே சரிந்தது. சற்று அதிர்ச்சி அடைந்தவன் சுதாரித்துக் கொண்டு அதை நோக்கி ஓடினான். மிகவும் கிட்டவே நெருங்கி விட்டான். ஒரு நிமிடம் உத்து பார்த்தவன் மகிழ்ச்சியின் எல்லையை அடைந்தான். அது, அவள் ஒரு பெண்! 'இவளும் என்னைப் போலவே தப்பித்தவளாகத்தான் இருப்பாள்!' என்பதை உறுதி செய்து கொண்டான்.
'ஒரு வேளை இவளும் என்னைப் போல, இங்கு உயிரோடு யாராவது இருக்கிறார்களா? என்று தேடி அலைந்து, கடைசியில் யாரும் இல்லாததால், தான் உயிரோடு இருந்து எவ்வித பலனும் இல்லை என எண்ணி ... தன் உயிரை மாய்த்துக் கொள்ள.... ..... அப்படி இருக்கவே கூடாது' என்று துடித்தான்.
அவனுக்கு உதவிடும் ஆருயிர்மருந்து இவள்தான் என்று உறுதியோடு நம்பினான். அவளை எந்த நிலையிலும் இழந்துவிடக்கூடாது என்று நினைத்தவன் அவனுக்குத்தெரிந்த மருத்துவத்தை அவளுக்குக் கொடுக்கத் தொடங்கினான். அவளின் நாடி துடிப்பு இயல்பாக இருந்தாலும், இவனின் நாடி துடிப்பு அதிக வேகத்தில் துடித்தது. ஒருவழியாக இதயத்துடிப்பு இருப்பதை உறுதி செய்த பின்பே இவனின் நாடி சீரானது. சற்றும் தாமதிக்காமல் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாரானான்.
உதடு வறண்டிருந்தது. உடல் சுண்டியிருந்தது. அதற்கு காரணம், தண்ணீர் தாகம், பசி என ஊகித்தவாறு இரண்டையும் கொண்டு வந்தவன், முதலில் முகத்தில் தண்ணீரைத் தெளித்தான். உடல் அசைந்தது. வாயில் தண்ணீர் ஊற்றினான். முதலில் தண்ணீர் வெளியே கொட்டியது. அதன்பின்  சிறிது சிறிதாக தண்ணீரையும் உணவையும் விழுங்கினாள். அப்போதுதான் அவனுக்கு உயிரே வந்தது. அப்போது யார் இவள்? எங்கிருந்து வந்திருப்பாள்? போன்ற கேள்விகளை அவனேக் கேட்டுக்கொண்டான்.
சற்று கண்களை திறந்து பார்த்தவள், அவனைப் பார்த்த மகிழ்ச்சியில் கண்கள் விரிந்தன. உடம்பு சுறுசுறுப்பானது. சற்று எழுந்து உட்கார்ந்தாள். ஆனால் பேசுவதற்கு தெம்பு இல்லாமல் மௌனமாக இருந்தாள்.  கட்டாயம் அப்போது அவள் எண்ணத்தில் அழிவுநேர கூச்சல்கள், அலறல்கள், கோரக்காட்சிகள் ஒரு முறை வந்துபோயிருக்கும்.


மீண்டும் அமைதி காத்தாள். அவன் எண்ணம் போன்றே அவளுக்கும் இருந்தது.
அன்பு காட்ட, ஆதரவு கொடுக்க, உதவி செய்திட ஒரு உயிராவது இருக்கின்றதே என்று இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவனின் எல்லா உதவிகளையும் புன்னகையோடு ஏற்றுக் கொண்டாள். மீண்டும் மௌனம். இவனுக்காக அவள். அவளுக்காக இவள் என்கிற சூழ்நிலையே அவர்களிடத்தில் நிலவியது.
பகல் இரவுகள் பல கடந்தன. மெல்ல மெல்ல பேச ஆரம்பித்தாள். அவள் தொடர்ந்தாள். "எனக்கு தெரிந்தவரை நாம் இருவரும்தான் உலகில் உயிரோடு இருக்கிறோம் போலத் தெரியுது?"
"எனக்கும்   அப்படித்தான் தோன்றுகின்றது" என்றான்.
"இனி நாடு என்பது ஏதுமில்லை, ந்த உலகமே நமதுதான்" என்றாள்.
இந்த பேச்சு நீண்டது. சட்டென்று "அப்படியானால் நாம் மற்றோரு 'ஆதாம், ஏவாள்' அப்படித்தானே " என்றாள்.

"....... ஆமாம் " என்றபோது இருவரும் மகிழ்ச்சியில் மிதந்தனர்.
"நமக்கு மீண்டும் ஒரு புது உலகம் படைக்க வாய்ப்புக் கிடைத்திருக்கு. இனி நம் பெயர்களும் அந்த 'ஆதாம், ஏவாள்' போல நிலைத்து நிற்கும். இனி நாம்தான் இப்புதிய உலகைப் படைக்கப்போகும் தாய், தந்தை" என்று நினைக்க நினைக்க அவர்களுக்குப் பெருமையாய் இருந்தது. 
"இந்த புது உலகத்தைப் படைக்கும் பெரிய பொறுப்பு நம்மிடம் இப்போது உள்ளது. இனி நம் பரம்பரையினர் உலகத்தை ஆள்வார்கள்!" அவனின் பேச்சு மகிழ்ச்சியைத் தந்தாலும் உடனே மௌனத்தில் ஆழ்தியது.
நிதானமாய் யோசித்தார்கள். முடிவில்..
"நாம் மற்றோரு ஆதாம் ஏவாள்! ஆனால் ஒரு உலகம் வாழ்ந்து அழிவை பார்த்தவர்கள். எதனாலே அழிந்தது? பொறாமை, போட்டி, கோபம், தீய எண்ணங்கள், பேராசை என்பது என்று நம் இருவருக்கும் நன்றாகத் தெரியும்." வாதங்கள் காரசாரமாக நிகழ்ந்தன.

"உனக்கு புதிய உலகம் படைக்க விருப்பம்தானே?" அவளிடத்தில் கேள்வியை எழுப்பினான்
மௌனம், யோசனை. மீண்டும் மௌனம்.. யோசனை. சட்டென்று "எனக்கு துளிகூட விருப்பமில்லை" என்ற ஒரு குண்டைத் தூக்கி போட்டாள். அவனின் மகிழ்ச்சியான எண்ணம் இடி தாக்கியதுபோல் சுருண்டது. அவனின் கற்பனை உலகம் மெய்யாக உருவாக ஆரம்பிப்பதற்குள் அழிந்ததுபோல உணர்ந்தான்.
"ஏன்?.. ஏன்? இந்த திடீர் மனமாற்றம்" என்ற பல கேள்விகளை அடுக்கினான்.
"ஆம். ஆசையோடு நாம் சந்ததியினரை படைப்போம். அவர்கள் முதலில் பாசமாகத்தான் இருப்பார்கள். பிறகு பாசம் மோசம் செய்யும். ஏமாற்றும். குறிப்பாக பெண் இனத்தை பாடாய்ப்படுத்தும். உறவுகள் பெருகப் பெருக ஒருவருக்கொருவர் போட்டி, பொறமையில் ஆரம்பித்து பின்னர் சண்டையாய் வளரும். இப்போதுள்ள இந்த உலகம் மாதிரிப் பல நாடுகளாய்  மாறி அவர்களுக்குள் மீண்டும் 'நான்தான் பெரியவன், நான்தான் பெரியவன்' என்கிறப் போட்டியாகமாறும். "கடைசியில் ஒருநாள் இப்போது நடந்ததுபோல் வெகுசீக்கிரமே நாம் படைத்த புது உலகம் அழிந்துபோகும். அந்த காட்சிகள் என் கண்ணுக்குள் தெரிகிறது. அந்த அழிவுக்கு நாமே காரணமாக இருக்கவேண்டுமா?
நிதானமாய் யோசித்தார்கள். முடிவில்..
"அதற்காக இந்த அற்புத உலகத்தை நாமே அழிக்கலாமா? இந்த நல்ல வாய்ப்பு யாருக்கும் இனி கிட்டாது. உன் முடிவை மாற்றிக்கொணடால் இந்த உலகம் படைக்கப்பட்டதன் பலனை நாம் கொடுக்கலாம்" என்ற அவனின் தேனினும் இனிய வார்த்தைகள் அவளை சமாதானப்படுத்திச் சம்மதிக்க வைத்தது.
"இனி நாம் இருவரும் புதிய உலகத்திற்கு அடியெடுத்துவைக்கும் புண்ணியவான்களாக மாறுவோம். புனிதமான மறு உலகப்பயணத்திற்கு ஆயுத்தமாவோம்"         

"நீ சொல்வது சரிதான். இன்றைய  நமது சுகம், மகிழ்ச்சி நாளை மலரும் நாட்களிலும் நிலைத்து நிற்கும்! என்பதில் சந்தேகமே இல்லை. நாம் நினைத்தபடி புது உலகம் கட்டாயமாக இருக்கும். ஒருவருக்கொருவர் அன்பாகப் பாசமாக உதவியாக நடந்து கொள்வார்கள் என்பது உண்மையில் நடக்கும். நமது பரம்பரை அணுக்களிலிருந்து வரும் மனிதன் அதிசக்தி படைத்த மனிதனாகவே இருப்பான். அவனின் எண்ணங்கள் ஆரம்பத்திலுருந்தே போட்டி பொறாமை விதைகளை அழித்திடவேண்டும். ஆன்மீகப்பாதைக்கு வித்திடவேண்டும்" படபடவென்று கொட்டித் தீர்த்துவிட்டான்.
இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர்.
"சரி. நாம் இந்த உலகுக்கு கடைசி ஆதாம் ஏவாளாக இருப்பதை விட மற்றோரு புது  ஆதாம் ஏவாளாக இருப்போம். தொடங்கியது எப்படியோ அப்படியே மீண்டும் தொடங்கிடுவோம். நம் அணுக்களில் கலந்திருக்கும் தந்திரம் மற்றும் ஏமாற்றும் குணம் நாம் உருவாக்கும் மனிதனுக்கு இருக்கக் கூடாது. அதனால்.... ? " சற்று நிறுத்தினாள்.
"அதனால்"
"உலகில் அன்பே உருவான மனித இனம் பெருக இன்றிலிருந்து பாடுபடுவோம்" என்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இருத்தபோது இருவர் உடலில் இனம்புரியாத மாற்றங்கள் நடக்க ஆரம்பித்தது. உடல் சோர்ந்து, வாடி வதங்கி ஓரடிகூட எடுத்துவைக்க முடியாமல் இருவரும் தரையில் துவண்டுவிழ ஆரம்பித்தனர். தோல்கள் சுருங்கின. உடல் முழுவதும் சூடுபரவ ஆரம்பித்தனர்.
"என்ன நடக்குது? ஒருவேளை அணுகதிர் வீச்சு உடலில் .. உடலில்"
"ஆமா, எனக்கும் அப்படித்தான் தோன்றுது. அப்போ நமது எண்ணம்.. அந்த புது உலகம் .. புது மனிதர்கள் .."
"அதுவும் இந்த அழிவில் அழிந்துவிட்டது என்றே நினைக்கிறேன்"
"அப்போ நாம உயிர்வாழ மாட்டோமா?"

" இந்த உலகுக்கு மற்றோரு புது  ஆதாம் ஏவாளாக இல்லாம கடைசி ஆதாம் ஏவாளாக இருந்து உலகைவிட்டுப் போகிறோம்.. மகிழ்ச்சியாக.."   
***********************

No comments:

Post a Comment