Pages

Monday, 25 August 2014

வளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)

வளரும் தங்க பண்ணை 
 
சிறு கதை  
 
(இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)
மதுரை கங்காதரன்

 

அகில உலக விஞ்ஞானிகளின் மகாநாடு நியூயார்கில் பரபரப்பில்லாமல் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. உலக விஞ்ஞானிகள் பலரும் தங்களுடைய கண்டுபிடிப்பையும் அதனால்  மனித குலத்திற்கு ஏற்படும் நன்மைகளை ஒவ்வொருவரும் சுருக்கமாக அதேசமயத்தில் புரியும்படித் தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தனர். அதில் இந்தியாவின் சார்பாக சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆனந்த ராமனும் ஒருவராவார். அந்த நிகழ்ச்சி இந்தியாவிலுள்ள பல டி.விக்களில் நேரடியாக ஒளிபரப்பி கொண்டிருந்தார்கள். இந்திய மக்கள் எல்லோரும் குறிப்பாக இளைஞர்கள் அதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். விஞ்ஞானி ஆனந்த ராமனின் மனமோ தான் இந்த நிலைக்கு வரக் காரணமாய் இருந்த அந்த பழைய நாட்களை சில நிமிடங்களுக்கு அசை போட்டார்.
 
விஞ்ஞானத்தில் மீது மிகவும் ஆர்வம் கொண்ட ஆனந்த ராமன் எதிர்பாராத ஒரு நிகழ்வினாலும், விஞ்ஞானம் படிப்படியாக வளர்வதற்கு ஒரு காரணமாய் இருந்த அதேசமயத்தில் முற்காலத்தில் வாழ்ந்த  'அல்கெமிஸ்ட்ஸ்'  என்று அழைக்கப்படும் இரசவாதிகள்' செய்ததாகச் சொல்லப்படும்  இரும்பைத் தங்கமாகும் வித்தையை செய்தது எப்படி? என்று  தெரிந்தகொள்ளும் ஆர்வத்தினாலும் , அவர்களின் விஞ்ஞான அறிவு, திறமை, ஆற்றல்களையும் தெரிந்து கொள்ள விரும்பினார்.  தங்கமாக்கும் அந்த அரிய வித்தை தெரிந்தாலும் அதை தங்களுக்குத் தேவையானதை விட மிகக்குறைந்த அளவே அவர்கள் இருப்பைத் தங்கமாக மாற்றிக்கொண்டனர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் அவ்வளவு எளிதில் யாருக்குமே   அந்த வித்தையினை சொல்லித் தந்ததில்லை என்பது அவருக்கு புரியாத புதிராக விளங்கியது. அவர்களுடைய இந்த வித்தை இன்றைய நவீன விஞ்ஞானிகளுக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகின்றது. விஞ்ஞானம் அவ்வளவாக வளராத அந்த காலத்தில் வெறும் ஒரு சில வகை பச்சிலைகளை இரும்பின் மீது ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் நன்றாகத் தேய்த்து  அதைத் தங்கமான மாற்றியதாக சில செய்திகள் அவருக்குக் கிடைத்தன. ஆனால் அவர்கள் அந்த வித்தையைப் பற்றிய குறிப்புகளை எங்கும் எதிலும் பதிவு செய்ததில்லை. அதாவது எகிப்திய மம்மி போல இதுவும் ஒரு புதிராக இருக்கிறது எனலாம். 

 
ஒருவேளை இந்த வித்தையை உலகறிய தெரியச் செய்துவிட்டால் அதனால் ஏற்படும் நன்மைகளை  விட தீமைகளே அதிகம் என்று எண்ணியதே ஒரு காரணமாக இருக்கலாம். அப்படிப்பட்ட அரிய  வித்தைகளைக் கற்ற பலர்  தென்னிந்தியாவில் வாழ்ந்ததாக சில சரித்திரக் குறிப்புகளை அவர் படித்ததை அடுத்து அதன்மேல் ஆர்வம் கொண்டு பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ஆரம்பத்தில் எங்கிருந்து ஆரம்பிப்பது? என்பதில் சற்று குழப்பமாகவே இருந்து வந்தார். இருப்பினும் அவருடைய ஆர்வம் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே போனதே தவிர குறையவில்லை.
 

அவருடைய அம்மா, அப்பா இருவரும் ஆன்மீகவாதிகள். ஆனால் இவரோ ஒரு விஞ்ஞானவாதி. எதையும் கண்ணால் பார்த்தால் தான் நம்புவார். உதாரணம் சொல்லவேண்டுமென்றால் "நீங்கள் கடவுளைக் காட்டுங்கள்! நான் நம்புகிறேன்" என்று அப்பா, அம்மாவிடம் வாதாடுவார். வழக்கம் போல் அவர்கள் "கடவுள் இல்லாத இடம் ஏதுடா? இந்த பூமியிலே இருக்கிற எல்லாவற்றிற்கும் உயிர் உண்டு. அந்த உயிர் தாண்டா கடவுள்! ஏன் கல்லு மண்ணும் கூட ஒருகாலத்திலே உயிர்கொண்டு  இருந்திருக்கும். அதற்குள்ளேயும் பல ஜீவராசிகள் இப்போவும் வாழ்ந்துகொண்டு தானே இருக்கு. பல உயிரினங்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை ! சில மட்டுமே நம்மோட கண்ணுக்குத் தெரியுது!  மரம்,செடி, கொடிகள் எல்லாமே மண்ணிலே இருக்கும் சக்தியை (ஜீவனை) எடுத்துக்கொண்டு தானே  வளருது. இல்லாவிட்டால் ஒரு சின்ன விதை எப்படி ஆலமரம் அளவுக்கு பெரிசாய் வளருது? அது அது சக்திக்கேற்ப ஒரு செல்லிலிருந்து பல செல்கள் கொண்ட உயிரினங்கள்  வரைக்கும் சின்னதா பெரிசா அதனோட வளர்ச்சி இருக்குது. அவ்வளவு ஏன்? மனுசங்க கூட ஒரே ஒரு செல்லிலிருந்து தானே  ஆரம்பிச்சு இப்போ இவ்வளவு பெரிசாய் வளர்ந்து ஆறறிவு வரை பெற்றிருக்கின்றனர். அந்த  ஜீவ இரகசியத்தை அறியாத உன்னைப் போல சிலர் தான் கடவுளை நம்பாமே அவரையே எதிர்த்துப் பேசும் அளவுக்கு வளர்ந்துட்டார்கள். ம் ....எல்லாமே கலிகாலம் தான்!  ஆனால் காலம் தான் இந்த உண்மைகளை உனக்கு உனக்கு உணர்த்தும்"  என்று  பேச்சை அத்தோடு முடித்துக் கொள்வார்கள். 

 
அவனுடைய அம்மா சொன்ன விளக்கம் அவன் நினைவுக்கு  திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்தது. 'என்ன கல்லும், மண்ணும் கூட ஒருகாலத்திலே உயிரோடு இருந்திருந்ததா? இது சுத்த பைத்தியக்காரத்தனம்.  இதைப் படிக்காதவன் கூட நம்பமாட்டான்' என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாலும் 'கடவுள் தூணிலும் இருப்பார் , துரும்பிலும் இருப்பார்'  என்று அவனுடைய அம்மா , அப்பா அடிக்கடி சொல்லுகின்ற  வரிகள் அவனைத் தூங்கவிடாமல் செய்தது. 
 
ஒரு நாள் "மிஸ்டர் ஆனந்த ராமன், நாளை நான் படித்த பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும்  மாணவ மாணவியர்கள் நம்மூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 'உயிரியல் கண்காட்சி'யைப் பார்க்க வருகிறார்கள். நீங்கள் தான் அவர்களை வரவேற்பதோடு அங்கு அழைத்துச் சென்று அங்குள்ளவைகளை விவரித்தும் , அவர்களுக்கு வரும் சந்தேகங்களையும் தீர்த்தும்  வைக்க வேண்டும்" என்று அன்புக் கட்டளையிட்டார் அவருடைய தலைமை விஞ்ஞானி திரு அப்துல் ரஹீம்.

 
 
மறுநாள் திட்டமிட்டபடி அவர்களை வரவேற்று 'உயிரியல் கண்காட்சிக்கு' அழைத்துச் சென்றார். ஆசிரியர்கள் உட்பட எல்லோரும் மிகமகிழ்ச்சியோடு ஆர்வமாக உள்ளே நுழைந்தார்கள். அதற்கு முன் ஒரு ஆசிரியர் " மாணவ மணிகளே ! இவர் தான் திரு. ஆனந்த ராமன். பௌதீக விஞ்ஞானி ! சர்சிவி ராமன், கணித மேதை இராமானுஜம் போல இவரும் அந்த இராமன்களைப் போல் சிறந்த அறிவாளி. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் தாராளமாக அவரிடம் கேட்கலாம். வருங்காலத்தில் நீங்கள் எல்லோரும் மிகப்பெரிய விஞ்ஞானிகளாக வேண்டும் என்பது இவருடைய விழிகாட்டியும், நம் பள்ளியில் படித்து இப்போது பல விஞ்ஞானிகளுக்கு தலைமை விஞ்ஞானியாக இருக்கும் திரு அப்துல் ரஹீம் அவர்களின் ஆசை" என்று ஆசிரியர்களுக்கே உரித்தான பாணியில் பேசினார். 
 
ஆனந்த ராமனின் மனதில் ' பொதுவாக பள்ளியில் படிக்கும்போதே மாணவர்கள் சந்தேகம் கேட்கமாட்டார்கள். இப்போது கேட்டுவிடவாப் போகிறார்கள்? அப்படிக் கேட்டாலும் மாணவர்கள் தானே ! ஏதாவது சிறிய சந்தேகம் தான் கேட்பார்கள். அதை எளிதில் பதில் சொல்லி சமாளித்துவிடலாம்' என்று தன் மேல்  அபார நம்பிக்கை கொண்டிருந்தார்.
 
 
ஆனால் அவர் நினைத்தது போல அங்கு நடைபெறவில்லை. மாணவ மாணவியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைப் பார்க்கும்போது அவர்களுக்குப் பலப்பல சந்தேகங்கள் வந்தது. அவைகளை எளிமையான முறையில்  பதில் சொன்னார். படிக்கும் போது வராத சந்தேகம் ஏன்   பார்க்கும் போது மட்டும் வருகின்றது? என்கிற காரணத்தைத் தேடினார். அதற்குரிய பதிலும்  அவருக்குக் கிடைத்தது. 'அம்மா' என்று வெறும் எழுத்தாய் படிக்கும் போது   கிடைக்காத அன்பும் பாசமும் நேரில் பார்க்கும்போது கிடைக்கவில்லையா? அதுபோலத் தான்'  என்று  அவரே சொல்லிக்கொண்டார். மாணவச் செல்வங்கள் கேட்ட சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும்  அவர் ஆழ்மனதில் ஒவ்வொன்றாக  பதியத் துவங்கியது. அவர் இந்த  மாதிரியான யோசனையில் மூழ்கிய போது ஒரு குரல் "சும்மா கேளுடி. அவர் ஒன்றும் சொல்லமாட்டரு "ன்னு ஒரு சப்தம் கூட்டத்திற்கிடையே வந்தது. 
 
"என்ன சந்தேகம் கேளுங்க. கேட்டா தான் உங்களுக்கு அறிவும் கிடைக்கும்."
 
ஒரு மாணவி " வெள்ளையாய்  மாவு போல் இருக்குதே அது  என்ன சார்" என்று  கேட்டாள்.
 
"அதுவா ? இது தான் 'பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ்' . இது முழுக்க முழுக்க கால்சியம் என்கிற சுண்ணாம்புக்கல். ரொம்ப ரொம்ப கடினமானது. எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு அந்த  பகுதி ஆடாமல் அசையாமல்  இருப்பதற்கு  இதைத் தான் கட்டுவாங்க. ஏன் வீடு கட்டுறதுக்கும் உபயோகப்படுத்துவாங்க" என்று சொல்லி முடித்தவுடன், ஒரு மாணவன்  "சார், இதுவும்  ஒரு காலத்திலே உயிரோடு இருந்திருக்கும் சரியா சார்?" என்று சொன்னவுடன்  எல்லோரும் 'கொல்'லென்று சிரித்தனர்.   
 
உடனே ஆனந்த ராமன் நிலைமையை சமாளிக்க, " மாணவ செல்வங்களே ! ஒருவர்  சந்தேகம் கேட்கும் போது யாருமே கேலி செய்யக் கூடாது " என்று அவருடைய   வாய்  சொன்னாலும் அம்மாணவி கேட்ட கேள்விக்கு சரியான  பதிலைத்  தேடிக் கொண்டிருந்தது அவருடைய மனம் என்பது தான் உண்மை. இருப்பினும்  "எப்படின்னு  நீயே சொல்லு பார்க்கலாம்? சரியா , இல்லையா? ன்னு நான் சொல்கிறேன்" என்றார்.

 
 "சார், கடலுக்கடியில் இருக்கின்ற சிப்பிகளில் அதிகமாகக் காணப்படுவது சுண்ணாம்பு என்கிற தனிமம் தான். அதில்  சில சிப்பிகள்  முத்துகளைத் தருகின்றது. ஆனால் பல சிற்பிகள் இறந்து கரையில் ஒதுங்கி விடுகின்றது. இப்படி பல சிற்பிகள்  சேர்ந்து நாளடைவில் பெரிய பாறைகளாக மாறுகின்றது. அதைத் தான் நாம் சுத்திகரித்து  மாவாக்கி பலவிதத்தில் உபயோகப் படுத்துகிறோம், சரியா சார்" என்று தனக்குத்  தெரிந்த   விளக்கம் சொல்ல அவர் அறியாமலே "சபாஷ்" என்று புகழ்ந்தார். 
அதோடு "நீங்க ஒவ்வொருவரும் எல்லா விசயங்களையும் நுண்ணிப்பாக நல்லா பகுத்துப் பார்க்கிறீங்க. உங்களுடைய அறிவியல் அறிவு ரொம்பவே மெச்சத் தக்கதாக இருக்கு" என்று அனைவரையும் பாராட்டிக் கொண்டே  அடுத்த  இடத்திற்கு நகர்ந்தார்கள். இப்போது அவர் மனதில் இந்த மாணவ மாணவியர்களின் அறிவை ஒப்பிடும்போது இதுவரை தான் படித்தது, பார்த்தது எல்லாமே 'ஒன்றுமில்லை'போலத் தோன்றியது.

 
அடுத்து அவர் பார்த்தது, பழுப்பு நிற சர்க்கரை எவ்வாறு வென்மை நிறச் சர்க்கரையாக மாறுகின்றது?  தீக்குச்சி, தீப்பெட்டியில் உபயோகப்படுத்தும் தனிமம் எது என்று கேட்க "எல்லோரும் 'பாஸ்பரஸ்'" என்று கத்தினார்கள். 
 
"ரொம்ப சரியாய் சொன்னீங்க" என்றார். இம்முறை ஏதாவது சந்தேகம் கேட்பர்களா என்று  சற்று  பொறுத்தார். சற்று  தள்ளி சில மாணவர்கள் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தனர். அதில்  ஒருவன், "சார் இவன் ஏதோ சொல்லனுமாம்" என்று கூற " யாரு? முன்னாடி வாங்க. சொல்ல  நினைக்கிறதை தைரியமா சொல்லுங்க" என்று  ஊக்கம் கொடுத்தார்.
 
"சார், இதுவும் ஒரு காலத்திலே உயிரோடு இருந்தது. சரி தானே சார்" என்றார். இம்முறை  யாருமே  சிரிக்கவில்லை. ஒவ்வொருவரும் முகத்தை மாறி மாறிப் பார்த்தனர். எப்படி பதில் இருக்கும் ! என்று சிந்தித்தனர். 

 
ஆனந்த ராமன் தன் முகத்தில் வித்தியாசம் காட்டாமல், "எங்கே ? எப்படி என்று விளக்கம் சொல்லு. நான் சரியா  என்று பிறகு சொல்கிறேன்" என்றார்.
 
"சார், முதல்லே சர்க்கரை. அது கரும்பிலிருந்து கிடைக்கின்றது. அதுவும் ஒரு ஜீவ ராசி தான். உயிர் இருந்ததினால் தான் அது வளருது. பிறகு 'பாஸ்பரஸ்'. ஓரறிவு முதல் ஆறறிவு பெற்ற மனிதன் உட்பட பல உயிரினங்கள் இறந்துவிட்டால் கடைசியில்  மிஞ்சுவது வெறும் எலும்பு தான். அது எல்லாமே 'பாஸ்பரஸ்' என்கிற தனிமத்தினால் ஆனது. இயற்கைப்   பேரழிவின் போது கொத்து கொத்தாக உயிர்கள் மடியும்போது நாளடைவில் அவைகளே பாஸ்பரஸ் பாறைகளாக    மாறுகின்றது.  அதிலிருந்து தான் இந்த பாஸ்பரஸ் எடுக்கப்படடு இம்மாதிரியான பொருட்களில் உபயோகப்படுத்துகிறார்கள்" என்று சொல்ல அதை  ஆமோதிக்கும் வண்ணம் "சரியான பதில்" என்று சொன்னார்.
 
மீண்டும் மாணவ மாணவியர்களுக்கிடையில் ஒரு சலலப்பு இருந்தது.
 
"யாருக்கு , என்ன , எதிலே சந்தேகம்? சும்மா கேளுங்க" என்று சொன்ன பின்னரே அம்மாணவன் முன்னே வந்தான்.  "சார், எனக்கு இதிலே தான் சந்தேகம்" என்று ஒரு பகுதியை சுட்டிக்காட்டினான். அங்கு  மரம் செடிகள் இயற்கை சீற்றங்களால் எவ்வாறு  மரம் செடிகள், விலங்கினங்கள்  பூமிக்கடியில் புதைந்து மரக்கரியாகவும், குருடு எண்ணெய்களாகவும், வைரமாகவும்  மாறுகின்றன என்று தத்ரூபமாக செய்து வைத்திருந்தார்கள். அதாவது மேலே ஒரு மண் வரிசை. அதற்குக்  கீழ் பலவிதப்  பாறைகள், அதற்கு கீழ் மீண்டும் ஒரு மண் வரிசை  என்று பலவித அடுக்குகளுக்கு நடுவில் நிலநடுக்கம், பூகம்பங்களினால் புதைந்த மரம், செடிகள், விலங்கினங்கள்  ஆகியவைகள் பல ஆண்டுகள் தொடர்ந்து ஏற்பட்ட அழுத்தங்களினால் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய்களாக ஒருபுறமும் , கரியாக மறுபக்கம்  மாறுவதாக வைத்திருந்தார்கள்.  அதன் பக்கத்தில் அந்த கரியே மீண்டும்  பலவித அழுத்ததங்களுக்கு உட்பட்டு  வைரமாக  மாறுவதையும் செய்து வைத்திருந்தார்கள். இதை மாணவர்களுக்குப் புரியும்படி எளிமையாகவும், அழகாகவும் விளக்கினார்.
 
சட்டென்று ஒரு மாணவன் "சார், அப்படீன்னா  நாம இப்போ பார்க்கிற கரி, வைரம், எண்ணெய் எல்லாம்  ஒரு காலத்திலே மரம் செடிகள், விலங்கினங்கள்   உருவிலே உயிரோடு இருந்திருக்கும்!  சரியா சார்" என்று எதேச்சையாக சொல்ல அதை கேட்டவுடன் அவரை யாரோ  அவர் அறிவில் அறைந்தார்ப்போல் உணர்ந்தார். சற்று  சுதாரித்துக் கொண்டு " ஆமாம், ஆமாம்" என்று சமாளித்தார்.
 
இன்னும் என்னென்ன சந்தேகம் கேட்பார்களோ?  என்கிற ஆவல் அவருக்கு மேலோங்கியிருந்தது.   அவர் எண்ணியது படி அடுத்தடுத்து நடந்தது
 
அப்போது மாணவிகளுக்கு மத்தியில் பெரிய விவாதமே சட்டென்று நடந்து முடிந்தது. 'அது அப்படித்தான் என்கிற சப்தமும், அப்படி இருக்கவே இருக்காது' என்கிற சப்தமும் கேட்டது.
 
"என்ன, என்ன அங்கே பேச்சு?"
 
"சார், வைரம் இப்படி கிடைக்கிறதுன்னா தங்கமும், வெள்ளியும், பிளாட்டினமும் அந்த மாதிரித் தான் கிடைக்கும்ன்னு இவள் ஒரு புதுக்கதை சொல்றா சார்" என்று ஒரு மாணவியை உசுப்பிவிட்டனர். 
 
"என்ன கதை, எனக்கும் கேட்கனும் போல ஆசையாய் இருக்கு. எங்கே சொல்லு பார்க்கலாம்"
 
" சார்... சார்.. எனக்கு பயம்மா இருக்கு சார்"
 
"இஸ் ஆல்  ரைட். இங்கே எல்லோரும் பாருங்க. இவங்க பேசுறப்போ யாருமே   குறுக்கே  பேசக்கூடாது. சிரிக்கவும் கூடாது" என்று  உறுதி வாங்கிய பின்னரே அம்மாணவி  பேச ஆரம்பித்தார்.  
 
"சார், கரி (கார்பன்), கால்சியம், மெக்னிசியம், சிலிகா, இரும்பு போன்ற தனிமங்கள் பெரிய அளவிலேயும் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற விலையுயர்ந்த பொருட்கள்  துகள்களாக  இருப்பதன் காரணம் அதுவும் ஒருவகை  உயிரிகளினால் வளருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. அதாவது ஒரு சொட்டு மழைநீர்  சிப்பிக்குள் நுழைந்து  எவ்வாறு  முத்து போல மாறுகின்றதோ அவ்வாறு தான் மண்ணிலே புதைந்துள்ள சில உயிரிகள் நுண்ணிய சுத்தமான இரும்புத்துகளையோ அல்லது ஒரு வகை மண் துகளோ விழுங்கி அதுவே நாளடைவில் தங்கம் அல்லது வெள்ளித் துகள்களாக மாறி  மண்ணிலேயே அதன் ஆயுள் முடிந்து புதைந்து விடுகின்றது. பல ஆண்டுகள் தொடர்ந்து ஏற்படுகின்ற அழுத்தங்களால் வைரம் போல் அத்துகள்கள்  பளபளப்பான தங்கமாக மாறிவிடுகின்றது. அப்படித் தான் நமக்கு பலவித உலோகங்களாகக் கிடைக்கின்றது. ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை சார். அதாவது நாம் பூமியில் பார்க்கின்ற அனைத்துப் பொருட்களிலும் 'எலக்டரான்கள்' என்கிற அணுக்கள் இருகின்றது. அது இயங்கவும் செய்கின்றது. 'அவனின்றி ஒரு அணுவும் அசையாது' என்று படித்திருக்கின்றோம்.  ஆக நம்ம பூமியிலே எல்லா  உயிரற்ற பொருட்களும்  ஒரு காலத்தில்  உயிருள்ளவையாக  இருந்திருக்கும். ஏன் கல், மண் உட்பட !" என்று விளக்கமாய் சொல்லச் சொல்ல  வாயடைத்துப் போனார் ஆனந்த ராமன்.

 
அவர் தன் இரு கைகளைத் தட்ட அனைத்து மாணவ மாணவிகளும் கைத் தட்டி மகிழ்சசியைத் தெரிவித்தனர். 
 
"மாணவ மணிகளே, டார்வின் கொள்கையில் எவ்வளவு உண்மை இருக்கின்றதோ  அந்த  அளவு உண்மை இம்மாணவி சொல்லுவதில் இருக்கலாம். இது கதை அல்லது  கற்பனையாக  இருந்தாலும் பரவாயில்லை. இம்மாணவியின் விளக்கம்  என்னை 'அதில் அராய்ச்சி செய்' என்று தூண்டிவிடச் செய்த விளக்கு என்றே கருதுகிறேன். அதன் பிரகாசம் குறைந்துவிடாமல் கூடிய விரைவில்   அதைப் பற்றிய ஆராய்ச்சியில்  இறங்கப்  போகிறேன். அதில் வெற்றியும் பெறுவேன். இது உறுதி" என்று அவர்களின் முன்னிலையில் சபதமே  மேற்கொண்டார். 
 
அவர்கள் ஒவ்வொன்றாக சுற்றிப்பார்க்க அவருக்கு அன்றைக்கு நடந்த நிகழ்ச்சிகள் யாவும் அவருக்குள் நினைவுகளாக  சுற்றிக்கொண்டிருந்தது. அதுவே அவரை பல்வேறு ஆராய்ச்சிகளைச்  செய்யத் தூண்டியது.
 
அதன் பிறகு அவர் மேற்கொண்டு பல நூல்களிலிருந்து பல குறிப்புகளை எடுத்து அதனை அடிபடையாகக்  கொண்டு பல ஆய்வுகளை தொடர்ந்து சலிக்காமல் கடின உழைப்போடும்  தன்னம்பிக்கையோடும்  செயல்பட்டார். பலவித உயிரிகளை குறிப்பாக சிப்பி போன்ற உயிரிகளை ஆராய்ந்து வந்தார். அவருடைய ஆராய்ச்சி கூடத்தில் பலவித கண்ணாடி குடுவை மற்றும் கண்ணாடி ஜாடியில்  கற்கள், பலவித மண் வகைகள் அதனுள்  சில உயிரிகள்  வளரும்  விதத்தை ஆராய்ந்தார். தாமஸ் ஆல்வா எடிசன்  கூட பல்புவிற்குத் தகுந்த மின் இழையைக் கண்டு பிடிக்க சுமார்  ஆயிரம் தடவை முயற்சி செய்து வெற்றிகண்டார். ஆனால் ஆனந்த ராமன்  இரண்டாயிரம் உயிரிகளை சோதித்த  பின்னரே அவர் எதிர்பார்த்த அதிசயம்  நிகழ்ந்தது. ஆம். ஒரு குறிப்பிட்ட உயிரியை  நுண்ணோக்கியால்  காணும்போது அதில் ஒரு துகள் தங்கம் போல்  மின்னுவதைக் கண்டார். அந்த உயிரியானது மிகச் சிறிய மின்னதிர்ச்சிக்கு கூட ஆளாகதவாறு எவ்வளவு பத்திரமாக அந்த துகளை வைத்திருக்க முடியுமோ அவ்வளவு பத்திரமாக  வைத்திருந்ததை கவனித்தார். 

 
சிறு மின்னதிர்ச்சி எதிர்கொள்ளும்போது தன்னைக் காத்துக்கொள்ள சிறு சிறு கற்களின் ஊடே மறைந்தது. சில  நாட்கள்  அத்துகள் சற்று  பெரிதாக  வளர்வதைக் கண்டார். சில மாதத்தில் அந்த உயிரிகளின் எண்ணிக்கை  சற்று பெருகியது. அதன் ஆயுள் முடியும்போது தங்கம்  போன்ற துகள் மட்டும் மண்ணில் மிச்சம் வைத்து  மற்றவை மண்ணோடு மண்ணாக கலந்தது. அது தங்கம்  தானா  என்று பல்வேறு  கோணத்தில், பல்வேறு  ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பரிசோதனையில் உறுதி செய்த பின்னரே அவர் அந்த அரிய பெரிய ரகசியங்களை 'வளரும் தங்க உயிரி' என்கிற தலைப்பில் ஒரு தொடர் கட்டுரையினை வெளியிட்டார். அது பலவித மொழிகளில்  மொழி பெயர்த்து  வலைதளத்தில் வலம் வந்தது. அவரை சில மீடியாக்கள்  'இந்தியாவின்  டார்வின்' என்றும், சிலர் 'நவீன இரசவாதி' என்றும் வர்ணித்தது. 
 
பத்திரிக்கை உலகமோ இந்தியா ஏற்கனவே ஆன்மீகத்தில் சொர்க்க பூமியாக இருந்துவருகின்றது. விஞ்ஞானி திரு ஆனந்த ராமனின் கண்டுபிடிப்பால் இனி இந்தியா கூடிய விரைவில் சொர்ண பூமியாய் மாறப்போகிறது என்று புகழாரம் சூட்டியது. அவருடைய இந்த கண்டுபிடிப்பே  அகில உலக விஞ்ஞானிகளின் மகாநாட்டிற்கு கலந்து கொள்ளச் செய்தது.  முன்பு விவேகானந்தர் அமெரிக்காவில் ஆன்மீக சொற்பொழிவாற்றி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தது போல அவரின் இந்த பங்கேற்பு இருந்தது. இப்படி மின்னல் போல அவருடைய நினைவுகள் கண் முன்னே வந்து சென்றது.
 
"இப்போது இந்தியாவின் விஞ்ஞானி திரு ஆனந்த ராமனை அவரது கண்டுபிடிப்பு  பற்றி பேச அழைக்கிறோம்" என்று ஆங்கிலத்தில் சொல்லி அழைக்க  நேரடி ஒளிபரப்பில்   பார்த்துக் கொண்டிருந்த அந்த காட்சி அத்தனை கோடி  இந்திய மக்களையும் புல்லரிக்கச் செய்தது. மிகவும் பணிவான குரலில் "உலகிற்கு நற்தொண்டாற்றி வரும் உலக விஞ்ஞானிகளே ! எனக்கு கிடைத்திருக்கும்  இந்த புகழ் எனது அப்பா, அம்மாவைச் சேர்ந்தது. பிறகு எனக்கு இந்த ஆராய்ச்சிக்கு வித்திட்ட மாணவ மணிகளையே சாரும். இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். நமது  முன்னோர்கள் சொல்லி  வைத்த ஒவ்வொன்றும்  அர்த்தம் பொதிந்தவை. அவைகளை நன்கு ஆராய்ந்து பார்த்தால் நமக்குத்  தெரியாத பல ரகசியங்கள் தெரியவரும். மேலும் இன்றைய மாணவ மாணவியர்கள் பல்வேறு எண்ணங்களை, சந்தேகங்களை அடக்கி வைத்திருக்கின்றனர். அவர்களின் சந்தேகங்களுக்கு  அவர்களே   தீர்வும் வைத்திருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது அவர்கள்  சொல்வதை  காது  கொடுத்து  கேட்டாலே போதும். பிறகு அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து நேர்மறை  சிந்தனையை  வளர்க்க வேண்டும்.

 
அவர்கள் இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையும் புதுபொலிவுடன் விளங்கவைக்கும்  ஆற்றல் கொண்டவர்கள்.  இப்போது சில நாட்டில் காணப்படும் பசி, பட்டினியை  ஒழித்துகட்ட முடியும். விலைவாசியையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு   என்று பொதுவாக  பேசி பின்பு   தான் கண்டுபிடித்த  'வளரும்   தங்க உயிரி'யைப் பற்றி பேச  பேச கூட்டமே அமைதியாய் கேட்டது. கடைசியாக ஒன்றை சொல்ல கடமைபட்டிருக்கிறேன். இந்த தங்க உயிரி கொண்டு 'தங்க பண்ணை' வைக்க மட்டும்  உதவும் என்பதில்லை. அதற்கு மேலாக இந்த உயிரியைக் கொண்டு பல தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்கலாம். ஆயுளை கூட்டலாம். உடலுக்கு எதிர்ப்பு சக்தியும், ஆரோக்கியமும் கொடுக்க வல்லது. சுருக்கமாக சொல்லப் போனால் இது 'சர்வரோக நிவாரணி'! மேலும் இதை எளிதாகவும் வளரும் தன்மை கொண்டதால் ஏழை, எளியோருக்கு  இது ஒரு வரப்பிரசாதகமாக இருக்கும்.." என்று பேச பேச   முடிவில் பலத்த  கரகோசம்  இடைவிடாது கேட்டது.
 
*******************************************************************************************************************                  
 
                                            
                                                         
 
              

No comments:

Post a Comment