Pages

Saturday, 15 November 2014

NEXT ALSO OUR WIN - மீண்டும் நம் ஆட்சி தான்! - சிறுகதை

மீண்டும் நம் ஆட்சி தான்!
 NEXT ALSO OUR WIN  
சிறுகதை 

மதுரை கங்காதரன் 


முதல்வர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த அந்த கட்சியின் அனைத்து எம்.பி, எம்.எல்.ஏ, கவுன்சிலர்கள் கூட்டத்தில் எல்லா உறுப்பினர்களும் தவறாது பங்கேற்றிருந்தனர். முதல்வர் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். இந்த கூட்டத்திற்கான காரணம் , அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறலாம்? என்பதைப் பற்றிய விவாதமும் , சிறப்பு விளக்கக் கூட்டமுமாகும். 

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் அவரவர் கருத்துக்களை கட்டாயம் சொல்லியேத் தீரவேண்டும் என்பதாகும். 'சிறந்த கருத்துக்கள் சொல்பவர்களுக்கு மட்டுமே அடுத்த தேர்தலில் நிற்பதற்கு தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள். மற்றவர்கள் நிராகரிக்கப்படுவார்கள்' என்று கறாராக ஆணை போட்ட முதல்வரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு ஒவ்வொருவரும் தனித்தனியாக சில யோசனைகளை தயாரித்து வந்திருந்தனர்.


ஒரு மாதத்திற்கு முன் இதே போல கூட்டம் நடந்தது. அச்சமயம் முதல்வர் அவர்கள் சற்று கடுமையாகவே அனைவரிடத்தில் நடந்து கொண்டார். ஒவ்வொருவரையும் அழைத்து 'நீங்கள் தொகுதி மக்களுக்கு என்னென்ன செய்தீர்கள்? இன்னும் என்ன செய்யப் போகிறீர்கள்? இதுவரையில் எவ்வளவு முறை தொகுதி மக்களைப் சந்தித்திருக்கிறீர்கள்? அரசு வழங்கும் நிதியில் மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்தீர்கள்? கல்வி, விவசாயம், தண்ணீர்,மின்சாரம்,சுகாதாரம், போக்குவரத்து, சட்டம்-ஒழுங்கு எவ்வாறு உள்ளன? மக்கள், மீடியாக்கள் குறை கூறும்படி இந்த பதவியில் இருப்பவர்கள் ஏதேனும் தவறு செய்திருக்கிறீர்களா? போன்ற கேள்விகளுக்கு கிட்டத்தட்ட எல்லோருமே பதில் சொல்லாமல் திருதிருவென்று முழித்தவாறே வெடவெடத்து உட்கார்ந்திருந்தனர்.


அவரே தொடர்ந்து "சென்ற முறை எதிர்கட்சிகள் செய்த பல தவறுகளினாலும், லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடியதாலும், மக்கள் நலனில் அக்கறை காட்டாததாலும், விலைவாசி தாறுமாறாக ஏறியதாலும், குடிநீர், கல்வி, மின்சாரம் சரியாக வழங்கப்படாததாலும் தான் அறுதி பெரும்பான்மையான இடங்களில் நாம் வெற்றி பெற்றோம். அதோடு எல்லோருக்கும் இலவசங்களை அள்ளியள்ளிக் கொடுத்தோம். தேவையான இடங்களில் மக்களுக்கு பணத்தையும் கொடுத்ததால் அவ்வெற்றி கிடைத்தது. இனி மக்களை இலவசங்கள், பணம் கொடுத்து ஏமாற்ற முடியாது? வெறும் உறுதிமொழியில் பருப்பு வேகாது! வார்த்தை ஜாலங்கள், எதிர்கட்சிகளை வாய்க்கு வந்தவாறு சாடுவது! நடிக நடிகையர்களின் பிரச்சாரம் பலிக்காது ! என்று தோன்றுகின்றது" என்று வரிசையாக பல காரணங்களை அடுக்கினார் முதல்வர். கூட்டத்தில் இவ்வாறு வார்த்தை கத்திகளால் குத்துபட்ட காதுகள் மூளையில் தாக்கி இரணகளமாக்கியது.  

முதல்வரே தொடர்ந்து " மேலும் இந்த முறை எதிர்கட்சிகளின் பிரச்சாரத் தாக்குதல்  மிகக்கடுமையாக இருக்கும் என்று சில மீடியாக்கள் நமக்கு எச்சரித்து இருக்கின்றது. இம்முறை இலவசங்கள் பெயரில் மக்களை ஏமாற்ற முடியாது. ஏனென்றால் சென்ற முறை அறிவித்த இலவசங்களை நம்மால் அனைவருக்கும் கொடுக்க இயலவில்லை. ஆகவே வரும் தேர்தலில் நம் கட்சி வெற்றி பெறவேண்டுமென்றால் நீங்கள் ஒவ்வொருவரும்  புதுமாதிரியாக யோசனைகளை எனக்குத் தெரிவிப்பதோடு, வரும் தேர்தலுக்குள் அதை செய்து காட்டினால் தான் மக்கள் நம்மை மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள். இல்லையேல் நமக்கு பட்டை நாமம் சாத்திவிடுவார்கள்' என்று ஒரே போடாய் போட்ட காரணத்தினால் அனைவரும் என்ன செய்வதறியாமல் தவியாய்த் தவித்தனர்.


ஆனால் முதல்வரின் கேட்ட கேள்விகள் எல்லாவற்றுக்கும் 'டான் டான்' என்று பதில் கூறியதோடு அவைகளை கண்னெதிரே நிரூபித்தும் காட்டினார் இளம் வயது எம்.எல்.ஏ அன்பரசன்' என்றால் உங்களுக்கே கேட்பதற்கு ஆச்சரியமாய் இருக்கும் அப்படித் தானே? அந்த நிலை முதல்வருக்கும் வந்தது.

"நீங்கள் என்னிடத்தில் சொன்ன விவரங்கலெல்லாம் 'சரி' தான் என்பதற்கு ஆதாரம் இருக்கின்றதா? என்று கேட்டவுடனே கொஞ்சமும் தாமதிக்காமல் 'சடார்' என்று மடிக்கணினியைத் திறந்தார். டக் டக்கென்று சிலவற்றைத் தட்டினார். அவருடைய வலைத்தளம் திறந்தது. அதில் முதல்வர் சிரித்துக் கொண்டே பேசிய 'என் சிரிப்பு போல ஒவ்வொரு ஏழையின் முகத்தில் காண்பதே எனது இலட்சியம்' என்கிற வசனத்தோடு அன்பரசன் தோன்றினார்.


"என் தொகுதி மக்களே வணக்கம். இதுவரையில் நான் நூறு தடவைக்கு மேல் உங்களை சந்தித்து நீங்கள் அன்றாடம் சந்தித்து வந்த பல பிரச்னைகளைத் தீர்த்து இருக்கிறேன். நீங்கள் இப்போது பார்ப்பது , நான் பதவி ஏற்பதற்கு முன் எப்படி இருந்த கிராமம்! எங்கு பார்த்தாலும் கட்டாந்தரையாக கிடந்த கிராமம்! எங்கும் வறட்சியாக இருந்த கிராமம் இன்று எப்படி மாறியிருக்கின்றது என்று பாருங்கள்.அதில் ஒரு சிலவற்றை நான் சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்.இதோ கோடையில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க மழை காலத்தில் கிடைக்கும் மழை நீர் ஒரு துளியும் வீணாகாதவாறு பலவகைகளில் சேகரிக்கும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். தவறாது குளங்கள் தூர்வார்த்தல் போன்றவற்றினால் நிலத்தடிநீர் உயர்ந்ததோடு அதை விவசாயத்திற்கும் பயன்படுத்துகிறார்கள். இதன் பயனாக மூன்று போக விளைச்சல்  விளைந்ததோடு அவர்களின் வாழ்க்கை நிலை ஓங்கி வளர்ந்துள்ளது. இங்கு கால்நடைகளை பெருக்கி அதன் கழிவு இயற்கை உரத்திற்கும், எரிவாயு உற்பத்திக்கும் உதவுகின்றது. புவி வெப்பமயமாவதை தடுக்க மரகன்றுகள் நடப்பட்டுள்ளது. ஆங்காங்கே முக்கிய இடங்களில் சூரிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. கல்வி சுகாதாரம் மேம்படுத்த இளைஞர் அணியின் மூலம் அனைவருக்கும் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்ட 'பாலம் கட்டும் திட்டம்' நூறு நாள் வேலை திட்டத்தின் மூலமாக இக்கிராம மக்களே கட்டிமுடித்து போக்குவரத்தை மேம்படுத்தப்பட்டது. அரசு உதவிகளை நானே நேரில் எல்லா மக்களுக்கும் கிடைக்குமாறு செய்துள்ளேன் பெண்கல்வியோடு அவர்களுக்கு பாதுகாப்பும் தரப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்கு சிறுசிறு தொழிற்க்கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன " என்று ஒவ்வொன்றையும் நேரடியாக பார்ப்பதுபோல் வலைதளத்தில் அதன் பதிவுகளைப் பார்க்க பார்க்க முதல்வரின் மனதில் ஏதோ ஒன்று தீப்பொறி போல் தோன்றியது. 

"அன்பரசு ! உங்கள் தொகுதி மக்களுக்கு நீங்கள் செய்திருக்கும் நலத்திட்டங்கள் மகத்தானது. உங்கள் சேவை மேலும் தொடர வேண்டிய உதவிகள் நானும், கட்சியும் செய்யும்" என்று அவரை மனதார பாராட்டியதோடு மற்றவர்களும் இதுபோல் செய்ய வைக்கவேண்டும் என்று முதல்வர் மனதில் உறுதி கொண்டார். அதன் பிரதிபலிப்பு தான் இந்த கூட்டம்.

எதிர்பார்த்தபடி சரியான நேரத்தில் முதல்வர் கூட்டத்திற்கு கலந்துகொண்டார். பொதுவாக எல்லோரையும் வரவேற்றதோடு அனைவரிடத்திலும் வருகின்ற தேர்தலில் வெற்றி வியூகம் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார்.

பலர் வேறுவிதமான இலவசங்கள், பணப்பற்றுவாடா என்று அரைத்தமாவையே அரைத்தனர். சிலரோ நிதி இருந்தால் இவைகளைச் செய்யலாம் என்று பெரிய பெரிய திட்டங்கள் கையில் வைத்திருந்தனர். அதையெல்லாம் கேட்டு சலித்தவராய் "இருப்பதைக் கொண்டு வேறு ஆக்கப்பூர்வமாக அதேசமயத்தில் மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி ஏதாவது சொல்லுங்கள்" என்று மீண்டும் அவர்களை நெருக்கினார்.

அனைவரும் தரையில் பார்த்துக் கொண்டிருக்கும் போது அன்பரசன் மட்டும் முதல்வரைப் பார்த்தார். அதை புரிந்து கொண்ட முதல்வர் " அன்பரசன், இங்கிருப்பவர்கள் உங்களை விட அரசியல் அனுபவசாலிகள் மற்றும் மூத்தவர்களைக் கண்டு பயப்படவேண்டாம். பெரும்பாலும் இவர்கள் பழமையில் ஊறியவர்கள். உங்களைப் போன்று இளைஞர்கள் தான் இக்கால நடைமுறைக்கேற்ப புதுமையான யோசனைகளை சொல்லவேண்டும். பழைய பஞ்சாங்கம் எல்லாம் தேர்தல் வெற்றிக்கு உதவாது. கட்சிப் பதவியில் இருப்பவர்களின் அறிவையும் திறமையையும் சிறந்த சேவைகளையும் தான் மக்கள் அதிகமாக எதிர்பார்கிறார்கள். ஆகையால் சொல்ல வந்ததை தாராளமாகச் சொல்லுங்கள். நன்றாக இருந்தால் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம். மக்களுக்கு நன்மைகளைச் செய்வோம். வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம்" என்று ஊக்கம் கொடுத்தார் முதல்வர்.
அன்பரசன் எழுந்து "அனைவருக்கும் வணக்கம்" என்று தனது யோசனைகளை சொல்ல ஆரம்பித்தார்.

"முதலில் எல்லோரும் கணினி பயிற்சி எடுத்துக்கொண்டு அதில் அவரவர் பெயரில் வலைத்தளம் தொடங்க வேண்டும். தினமும் தொகுதியில் செய்யும் சேவைகளை பதிவு செய்தல் வேண்டும். வருகின்ற தேர்தலின் வெற்றி இளைஞர்களின் கையில் தான் இருக்கின்றது.கைபேசி இல்லாத இளைஞர்கள் இல்லையென்றே சொல்லலாம். அவர்களின் வாக்கு கிடைக்க வேண்டுமானால் வலைத்தளம் அவசியம் தேவை. அதில் அவர்களின் பிரச்னைகள் தெரியப்படுத்த வாய்ப்பு இருக்கின்றது. அவைகளை ஒவ்வொன்றாக தீர்த்தாலே நமக்கு பாதி வெற்றி தான். பிறகு நம் கட்சி கவுன்சிலர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு வசதியற்ற தெருவையும், ஒரு எம்,எல்,ஏ ஒரு பின்தங்கிய கிராமத்தையும், ஒரு எம்.பி ஒரு முன்னேற்றமில்லாத ஊரையும் தத்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவைகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும். அவைகளுக்காக  முன்னேற்ற திட்டங்கள் பல தீட்டி அதை செயல்படுத்தி அந்த முன்னேற்றத்தினை தினமும் தவறாது மக்களிடத்தில் கொண்டுபோக வேண்டும். இப்படியே ஐந்து வருடங்கள் சேவை செய்தால் மக்கள் நம்மேல் நம்பிக்கை வரும். 'இதைச் செய்வோம், அதைச் செய்வோம்' என்று வெறும் வார்த்தைகளால் சொல்வதைவிட எங்கள் தொகுதியின் கீழ் எப்படி இருந்த கிராமம், இப்போது பாருங்கள். இது போல் கூடிய விரைவில் எல்லோரும் வசதிகள் பல கிடைக்கும் என்று வலைதளத்தின் மூலம் பிரச்சாரம் கொள்வோம். தத்தெடுக்கப் பட்ட தெருக்கள் கிராமங்கள், ஊர்களைத் தவிர மற்றவர்களைக் கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது அர்த்தம் அல்ல. இதற்கு கூடுதல் கவனம் இருந்தால் நல்லது. இதனால் மக்களிடம் நம் கட்சியின் கொள்கை பற்றிய விழிப்புணர்வும், தெளிவும் ஏற்படும்" என்று சொல்லச்சொல்ல முதல்வருக்கும், மற்றவர்களுக்கும் புத்துணர்ச்சியும், வரும் தேர்தலில் நாம் வெற்றிபெற்றேத் தீருவோம் என்கிற நம்பிக்கை பிறந்தது.
பல விவாதங்கள் நட்ந்து முடிந்தவுடன் இறுதியாக முதல்வர் உரையில் "நமது இளம் எம்.எல்.ஏ அன்பரசின் யோசனை மிகநன்றாக இருக்கின்றது. இப்போதே அனைவருக்கும் தகுந்த பயிற்சி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன். அதற்கு உதவியாக அன்பரசனை நியமிக்கிறேன். தினமும் நீங்கள் மேற்கொள்ளும் சேவைகளையும் அதன் பதிவுகளும் அவரே எனக்கு விளக்குவார். இந்த யோசனையை நாம் நடைமுறைப் படுத்துவோம். கட்டாயம் நமக்கு வெற்றி கிடைக்கும்" என்று உறுதியுடன் தெரிவித்தார்.

முதல்வர் அவருக்கும் தனக்கு அடுத்தபடியாக கட்சியை வெற்றிகரமாக நடத்திச் செல்ல ஒரு வாரிசு கிடைத்த மகிழ்ச்சி குடிகொண்டுவிட்டது.

*************************************************************************************                                     

        

No comments:

Post a Comment