Pages

Wednesday, 3 February 2016

அவரும் சீதகாதி தான் ! சிறுகதை - மதுரை கங்காதரன்

அவரும் சீதகாதி தான் !

சிறுகதை 

மதுரை கங்காதரன் 

"நான் அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன். நம்ம பொண்ணோட கல்யாணத்திற்காக வைச்சிருக்கிற ஒரு லட்சம் ரூபாயை உங்க நண்பருக்கு கடனா கொடுக்காதீங்கன்னு. கேட்டீங்களா? இதோ மூணு மாசத்திலே வட்டி முதலுமா திருப்பித் தந்துடுறேன்னு சொல்லி வாங்கிட்டுப் போனவரு போனவரு தான், மூணு மாசம் மேலே ஆச்சு. மனுசன் உயிரோட இருக்காரா? இல்லையான்னு? கூடத் தெரியல்லே. மனுசன் கைபேசியோட எண்ணையும் மாத்திட்டார் போலிருக்கு. அதிலேயும் தொடர்பு கொள்ள முடியல்லே. கல்யாண நாளும் நெருங்கிட்டே வருது. வேறு யார்கிட்டேயும் கேட்கமுடியாத நிலைமை. எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையிலே பணபிரச்னையோட இருக்காங்க. வீட்டுக்கு வீடு வாசல் படி என்பதை மாத்தி வீட்டுக்கு வீடு பணபிரச்னை சொல்லணும் போல தெரியுது ! இப்போ என்ன பண்ணப்போறீங்க?" என்று தன் கணவன் பரமசிவனிடம் நன்றாக சுடுகின்ற எண்ணெய் சட்டியில் மொறு மொறுவென்று அப்பளம் பொறிகின்றது போல் பொறிந்து தள்ளினாள் சிவகாமி.

"சிவகாமி , நீ அப்போ சொன்னது இப்போது தான் எனக்கு உரைக்கிறது. இராம சாமி , என்னோட உயிர் நண்பனாச்சே. அவனுக்கு ஒரு கஷ்டம்னா அது என்னோட கஷ்டம்னு நினைச்சு நாள் கிழமை பார்க்காமே எந்த பேப்பர்லேயும் கையெழுத்து வாங்காமே மூனாம் மனுசனுக்கும் தெரிந்து கொடுக்காமே உடனே அவனுக்குச் சுளையா ஒரு லட்சம் கொடுத்தேனே அது தான் நான் வாழ்க்கையிலே பண்ணிய பெரிய தப்பு" என்று நொந்து கொண்டார்.

"உங்க மேலேயும் தப்பில்லே. அவருடைய சொந்த செலவுக்காக அந்த பணம் கேட்டிருந்தா நான் உங்களை அப்போவே கொடுக்கவிடாமே செஞ்சிட்டுருப்பேன். தன்னோட மகனுக்கு வெளிநாட்டிலே நல்ல சம்பளத்திலே நல்ல வேலை கிடைச்சிருக்கு. அதுக்கு கேட்டதாலே நானும் ஒத்துகிட்டேன். சரி, பணம் வாங்கின மனுசன் சீக்கிரமா திருப்பித் தந்துடுவாருன்னு பார்த்தா இது வரைக்கும் ஒரு போனாவது பண்ணியிருப்பாரா மனுசன். நீங்க என்ன பண்ணுங்க.நேரா அவங்க வீட்டுக்கு போறீங்க. அவர்கிட்டேயிருந்து பணம் வாங்காமே இங்கே வந்துடாதீங்க. அந்த பணம் இருந்தாத் தான் நம்ம மானத்தை நாம் காப்பாத்திக்க முடியும்" என்று மனதில் கணத்தோடும், வெளியில் கோபத்தோடும் சொன்னாள்.         

"ஆனாலும் நேத்து வரை எனக்கு அவன் மேலே ரொம்ப நம்பிக்கை இருந்தது. தன் தலையை அடகு வைச்சாவது பணத்தை கொடுத்துடுவான்னு நினைச்சேன்.ம்.. இப்போ வருந்தி என்ன பிரயோசனம். சீக்கிரமா அங்கு போறேன். எப்படியும் பணத்தோடு வர்றேன். பணம் வாங்கின கையோடு அவனுக்கு ஒரு பெரிய கும்பீடு போட்டு 'இனி மேல் உன்னோட நட்பே வேணாம்பா' என்று சொல்லிட்டு வந்துடுறேன்" என்று ஒருவித வைராக்கியத்தோடு பேசினார்.

அவனுடைய மனமோ' ஏன் தான் மனுசங்க இப்படி இருக்கிறாங்களோ? அவசரம்னு பணத்தை கைமாத்தா அல்லது கடனா வாங்கிடுறாங்க. ஆனா அதை காலா காலத்திலே திருப்பித்தர ஏன் தான் மனசு வரமாட்டீங்குது? அப்போ பணம் கொடுக்குறவன் ஏமாளியா அல்லது இளிச்சவாயனா? இந்த இராம சாமி , என் பால்ய நண்பன். இப்படி என்னை எமாத்துவான்னு கொஞ்சம் கூட நினைக்கலே. அவனுக்கு திருப்பித் தரமுடியாத படி பெரிய கஷ்டத்திலே இருக்கலாம். அதுக்கு நான் தான் பலியாடா? நான் கொடுத்தது 'கல்யாணத்துக்காக வைச்சிருக்கிற பணம்னு அவனுக்கு நல்லா தெரிந்தும் இன்னமும் தராமே இருப்பது எந்த வகையிலே அவனுக்கு நியாமாப்படுதோ! இப்போ புலம்பிப் என்ன பண்றது? அடுத்து நடக்க வேண்டியதைப் பார்ப்போம்' என்று மனத்தை சமாதானம் செய்துகொண்டு புறப்பட்டார்.

அவரின் மனம் வேகத்திற்கு அவரின் வயது ஒத்துழைக்கவில்லை. சற்று மெதுவாகவே நடந்து கொஞ்சம் சிரமப்பட்டு வீட்டை அடைந்தார் பரமசிவம். அனால் இராம சாமி வீட்டில் அவர் கண்ட காட்சி அவருடைய இதயத் துடிப்பை வேகப்படுத்தியது. வீட்டிற்கு வெளியே சோகத்துடன் பலர் இருந்தனர். 'யாருக்கு? என்ன ஆச்சோ' என்று ஒருவித குழப்பத்திற்குள்ளானார். 'யாருக்கு என்ன ஆனாலும் தன் நண்பனுக்கு ஒன்றும் ஆயிருக்கக் கூடாது' என்று நப்பாசைப்பட்டார்.

இது தன் நண்பன் மேல் இருக்கும் பாசம் என்று நீங்கள் நினைத்தால் அது உங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான். இந்த நினைப்பு. முற்றிலும் அவருடைய சுயநலம் தான். ஏனென்றால் அந்த லட்சம் ரூபாய் அவனுக்குக் கொடுத்தது அவன் மனைவி , மகனுக்கு கூடத் தெரியாது. ஒருவேளை அவனுக்கு ஏதேனும் நடந்திருந்தால் அப்படி நினைக்கும்போதே அவருடைய நெஞ்சம் வெடித்தது. கண்கள் லேசாக சொருக ஆரம்பித்தன. என்ன நடந்தாலும் அதை எதிர்கொண்டு தான் தீரவேண்டும் என்று தைரியத்தை வரவழைத்துக் திடமாக உள்ளே நுழைந்தார்.

அங்கே அவர் கண்ட காட்சி தன் கற்பனைகளெல்லாமே தவிடுபொடியாக்கியது. ஏது பேசுவது என்ன செய்வது என்று சற்றுத் தடுமாறினார். பரமசிவத்தைக் கண்ட அவன் நண்பன் இராம சாமி  மனைவி வந்திருப்பது தன் கணவனின் நெருங்கிய நண்பன் என்று தெரிந்தமாத்திரத்தில் "பார்தீங்களா. உங்க நண்பரை !" என்று சவமாக கிடந்தவரை சுட்டிக்காட்டி அழுகையை அடக்கமுடியாமல் விம்மினாள் . அந்த கோலத்தைப் பார்த்தவுடன் வந்த வேலையை மறந்து தன் நண்பனின் பழைய நினைவும் தற்போதைய குடும்ப நிலையும் அவர் கண் முன் நின்றது. 

"மாமா !" என்று கத்தியவாறு ஓ ..வென்று அவரைப் பிடித்து அழுதான் தன் நண்பனின் மகன் சிதம்பரம்.

"சிதம்பரம் ! நீயே இப்படி அழுதா எப்படி? அப்புறம் உங்கம்மாவுக்கு யாரு ஆறுதல் சொல்லுவா? நான் வந்துட்டேனில்லே. எல்லாம் நான் பார்த்துக்குறேன்" என்று பொதுவாக எல்லோருக்கும் ஆறுதல் கூறினார். அந்த வார்த்தைகள் கேட்டவுடன் ஓரளவு எல்லோருக்கும் பழைய நிலைக்கு வர ஆரம்பித்தனர்.

"மாமா..ரெண்டு மாசத்துக்கு முன்னே அப்பாவுக்கு உடம்பு சௌரியமில்லாமே போனார். பிறகு திடீரென்று பேச்சு மூச்சு இல்லாமே படுத்த படுக்கையானார். நான் வெளிநாட்டிலே இருந்ததாலே உடனே புறப்பட்டு வரமுடியல்லே. நேத்து தான் 'அப்பாவோட நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சுன்னு' போன் பண்ணுனாங்க. அதனாலே உடனே புறப்பட்டு வந்துட்டேன். இன்னைக்கு காலையிலே எல்லாமே முடிஞ்சிருச்சு மாமா" என்று கதறி அழுதான்.             

தன்னோட நிலைமை தான் கந்தலாக இருக்குதுன்னு நினைச்சா இங்கே அதைவிட மோசமா இல்லே இருக்குது. இந்த நிலைமையிலே தன்னோட சோகக்கதையை யார்கிட்டே சொன்னாலும் காதில் ஏறாது என்று மனதை கல்லாக்கிக் கொண்டு முதலில் தன்னுடைய நண்பர்களுக்கு இந்த விசயத்தைத் தெரியபடுத்தினார் பரமசிவம். ஒவ்வொருவரும் வர வர இராம சாமி மனைவிக்கும் மகனுக்கும் சற்று தேற ஆரம்பித்தார்கள்.

கொஞ்ச நேரமே ஆகிருக்கும். உடனே தன் மனைவி சிவகாமியின் நினைவு வந்தது பரசிவத்திற்கு. 'தன் நண்பன் வீட்டிற்கு போனவுடன் கைபேசியில் இங்குள்ள நிலைமையை  சொல்லுகிறேன்' என்று சொல்லிய ஞாபகம் வந்தவராய் உடனே கைபேசியை எடுத்தார். இப்போது நடந்துகொண்டிருக்கும் எல்லா விசயத்தையும் ஜீரணித்தவராய் நிதானமாய் , சாதாரணமாக    

"சிவகாமி ! நான் நல்லபடியா வந்து சேர்ந்துட்டேன். ஏதோ ஒரு வேலையாய் என் நண்பன் பக்கத்து ஊருக்கு போயிருக்கானாம். இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்துடுவான்னு அவரோட மனைவி சொன்னாங்க. நான் எதுக்கு வந்திருக்கிறேன்னு அவங்ககிட்டே சொல்லலே. 'ஒரு விசயமா பக்கத்து ஊருக்கு வந்தேன். அப்படியே உங்க எல்லோரையும் பார்த்துட்டுப் போறதா சொல்லியிருக்கிறேன்'. அவங்களும் 'இங்கே இருந்து சாப்பிட்டுப் போங்கன்னு' சொன்னதினாலே 'ரொம்ப நல்லதாப்போச்சு'ன்னு இங்கேயே இருந்துட்டேன்" என்று இந்த வயசிலும் பெரிய பொய்யைச் சொன்னார்.

இந்த நிலையில் தன் மனைவிக்கு தன் நண்பன் இராம சாமி குடும்பத்தின் உண்மையான நிலைமை தெரிந்தால் அவ்வளவு தான் ! அதைக் கேட்டு , அவளுக்கு என்ன ஆகுமோ ன்னு எனக்கே தெரியாது. ஆனா அவள் கட்டாயம் 'போச்சு ! போச்சு ! என் மானம் மரியாதை போச்சு' என்று ஏதாவது மனக்கோளாறு ஏற்பட்டா அந்த நிலைமை இன்னும் மோசமாகப் போய்விடும். இந்த பணத்தை வேறு வழியில் புரட்டிவிடலாம். ஆகையால் எல்லாம் முடிந்த பிறகு நண்பர் இராம சாமியின் இறந்ததை பக்குவமா எடுத்துச் சொல்லலாம்" என்கிற அசட்டு நம்பிக்கையோடு எல்லா காரியங்களையும் குறைவில்லாமல், வெறுப்பு காட்டாமல் அக்கறையோடு செய்வதைப் பார்த்துவிட்டு வந்திருப்பவர்கள் "சும்மா சொல்லக் கூடாது. ஒரு நண்பன்னா இப்படித் தான் இருக்கணும்னு எல்லோருக்கும் காட்டிட்டுட்டீங்க. நல்லபடியா இருக்கிறப்போ ஆயிரம் நண்பர்கள் இருப்பாங்க.ஆனா இந்த நிலைமையிலே யாருப்பா உன்னைப்போல கவனிப்பா" என்று பெருமையாகப் பரமசிவனைப் பார்த்துப் பேசினார்கள்.

அன்று எல்லா வேலைகளையும் முடித்த பிறகு வெறும் கையோடு வீட்டிற்குப் புறப்பட்டுப் போனார். தன் மனைவிக்கு எப்படி சமாதானம் சொல்வது ? என்பதற்கு விடை தெரியாமல் 'எல்லாம் அவன் விட்ட வழி' என்று அமைதியாக வீட்டிற்குள் நுழைந்தார்.

தான் வெறும் கையோடு வந்ததால் வீட்டில் பெரிய ரகளையே  நடக்கும் என்பதை ஒவ்வொரு வினாடியும் எதிர் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் சிவகாமி எப்போதும் இருப்பதை விட அமைதியாக இருப்பது மேலும் மேலும் கிலியை உண்டாக்கியது. முதலில் சிவகாமி தான் மௌனத்தை கலைத்தார்.

"காரியம் எல்லாம் முடிஞ்சிருச்சா" என்று மொட்டையாக கேட்க பரமசிவம் சற்று மிரண்டுவிட்டார்.

"நீ ... நீ... என்ன சொல்றே"

"என்னாங்க ! ஏன் என்கிட்டே மறைக்கணும். உங்க நண்பர்  இறந்துட்டார்னு எனக்குத் தெரியும். என்ன தான் அவர்மேலே எனக்கு கோபம் இருந்தாலும் இந்த நிலைமையிலே யாருக்குத் தான் அனுதாபம் வராது? ரொம்ப பாவம்ங்க. நல்லவேளை எதேச்சையா நீங்க அங்கே போனது ரொம்ப நல்லதாப் போச்சு. எங்கே இந்த செய்தி எனக்குத் தெரிஞ்சா நான் துவண்டு போய்விடுவேன்னு தானே என்கிட்டே பொய் சொன்னீங்க. எனக்கு ஒண்ணு ஆனா நீங்க தாங்கமாட்டீங்கன்னு எனக்கு நல்லாவேத் தெரியும். இந்த மாதிரி நடந்தா யாரு தான் என்னாங்க செய்ய முடியும்? மேலே அவன் எப்போ கூப்பிடுறானோ அப்போ போகாமலா இருக்க முடியும்? இதுக்கு நீங்களும், நானும் விதிவிலக்கா என்ன?" என்று அவரைவிட தெளிவாகவும் இயல்பாகவும் பேசியது பரமசிவத்திற்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது.

"அப்போ, அவரு இறந்தது உனக்கு ஒண்ணும் வருத்தத்தை கொடுக்கலே. அப்படித் தானே?"

"வருத்தம் தான். அதனாலே அடுத்த வாரம் ஒரு நாள் நானும், நீங்களும் அவரோட வீட்டுக்குப் போய் கொஞ்சம் விசாரிச்சுட்டு வருவோம்" என்று மீண்டும் யதார்த்தமாய் பேசினாள்.

இப்போது தான் அந்த 'ஒரு லட்சம் பண' குண்டைத் தூக்கிப் போட்டார்.

"அதனாலே ....அதனாலே "

"என்னங்க உளர்றீங்க"

"அந்த ஒரு லட்சம் ....." என்று சொல்லி மனைவியின் முகத்தைப் பார்த்தான். அப்போதும் அவள் அமைதியாகவே இருந்தாள்.

உடனே சற்று சுதாரித்தவளாய் ஆமாங்க நீங்க வர்றதுக்கு ஒரு மணிநேரம் முன்னாடி தான் உங்களோட நம்ம தெரு முக்கு நண்பர் வந்தார். அவரு நேத்து இப்போ இறந்தாரே அந்த இராம சாமி வீட்டிற்குப் போனாராம். அப்போவே அவரோட் நிலைமை ரொம்ப மோசமா இருந்திச்சாம். அப்போ அவர்கிட்டே அவரோட மகன் ஒரு கவரைக் கொடுத்து அதை உங்களிடம் கொடுக்கச் சொன்னாராம்" என்று அவசரம் அவசரமாக உள்ளே சென்று அந்தக் கவரை எடுத்துட்டு வந்து கொடுத்தாள்.

அதைத் திறந்தவுடன் அவர் பெயரில் இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை இருந்தது. பார்த்தவுடன் கண்ணீர் அருவி போல் கொட்டியது. மேலும் அந்த கடிதத்தை படித்துவிட்டு விக்கி விக்கி அழுதார். அதைப் பார்த்த பிறகு மனது தாளாமல் அந்த கடிதத்தில் என்ன தான் எழுதியிருக்கு என்கிற ஆவலுடன் அதை வாங்கிப் படித்தாள்.

"அன்புள்ள மாமா அவர்களுக்கு,
நீங்கள் இந்த கடிதம் படிக்கும் போது எங்கள் மீது ஒருவித வெறுப்புடன் தான் இருப்பீர்கள். என்னோட வேலைக்காக நீங்கள் கல்யாணத்திற்காக சேமித்து வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை நீங்கள் உடனே தந்தாக சொன்னார் என் அப்பா. மேலும் என்னுடைய சம்பளத்தில் கூடிய விரைவில் 'இரண்டு லட்சம் ரூபாயாக' திருப்பித் தரும்படியும் கூறியிருந்தார். என் அப்பாவின் நிலைமை பார்த்தால் என்னால் நேரில் வந்து பணம் தர முடியுமா? என்று சந்தேகமாக இருந்ததால் உங்கள் நண்பரிடம் கொடுத்து அனுப்பியுள்ளேன். தாமத்திற்கு மன்னிக்கவும். இப்படிக்கு உங்கள் நண்பர் மகன் சிதம்பரம்" என்று படித்து முடிக்க அவளுடைய கண்கள் கண்ணீர் குளமாக மாறியிருந்தது.

"சீதகாதி வள்ளலை வரலாற்றில் படித்திருக்கிறேன். ஆனால் உண்மையில் உங்கள் நண்பர் இராம சாமி கலியுக சீதகாதி தான்" என்று பெருமையாகப் பேசினாள் பரமசிவம் மனைவி சிவகாமி.

********************************************************************************************