Pages

Friday, 22 September 2017

தமிழ் மொழி : இணையவழிக் கற்றல் - கற்பித்தலின் இன்றைய நிலை

  தமிழ் மொழி : இணையவழிக் கற்றல்
கற்பித்தலின் இன்றைய நிலை 
மதுரை கங்காதரன் - கட்டுரை    

முன்னுரை
இணையத்தைப் பயன்படுத்தினால்
இணையில்லாப் பலனைப் பெறலாம்!
என்கிற எனதுப் புதுக்கவிதை, இன்றையக் காலக்கட்டத்திற்குப் வெகுவாய்ப் பொருந்தும். இது கணினியுகம். இனி நமது வாழ்க்கையும், வளர்ச்சியும் கணினிக் கல்வியைப் பொறுத்தே இருக்கும். ஏட்டுக்கல்வி கற்றும் கணினிக் கல்வி தெரியாமல் இருப்பவனும் 'கைநாட்டு' என்று சொல்லும் காலம் கூடிய விரைவில் வர இருப்பதால் 'கணினிக் கல்வி' தவிர்க்க முடியாத ஒன்றாகும். நமது வாழ்வுக்கு எவ்வாறு வானம், காற்று, மழை, சூரிய ஒளி, புவி ஆகியன அவசியமாக  விளங்குகின்றதோ அதுபோல கணினியில் தமிழ்மொழி கற்பது மிகமிக அவசியம்.
தமிழ்மொழியைக் கணினியில்  கற்றால்
தரணியெங்கும் தமிழ்ப்பெருமை பரப்பலாம்!
என்று இப்புதுக்கவிதை இயம்புவது உண்மைதானே.

இக்காலமும் வருங்கால வாழ்க்கையும்
நமது மனித வாழ்க்கையானது, நாம் அறிந்தோ அறியாமலோ மெல்ல மெல்லக் கணினியில்  ஐக்கியமாகிக் கொண்டு வருகின்றது. கணினி, நம் வாழ்க்கையில் பின்னிப்பிணையும் நாள் வெகு விரைவில் வரத்தான் போகிறது. 'எங்கும் கணினி, எல்லாமே கணினி' என்றாகும்போது, நாம் அப்போது முழிக்கக் கூடாதல்லவா! அடடா, கணினியைக் கற்காமல் விட்டுவிட்டோமே? என்று பின்னாளில் வருந்துவதை விடஇப்போதே சற்று விழித்துக் கொண்டு அதனைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டால் நல்லது தானே! 'கணினி இல்லாத வாழ்க்கை, பாலைவனத்தில் வாழும் வாழ்க்கைக்குச் சமம்' என்றளவிற்கு உலக மக்களை தன்பால் ஈர்த்துக் கொண்டிருக்கின்றது.

குழப்பும் தமிழ் விசைப்பலகைகள்
இணையத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றால்கணினித்தமிழ் தெரிந்திருப்பது மிக அவசியம். கணினியில் முதலடி எடுத்து வைக்கவேண்டுமென்றால் அதன் எழுத்துப்பலகை, உங்கள் விரல்களில் வசப்படவேண்டும்.
விசைப்பலகை விரல்களில் வசப்பட்டால்
விரைவாய் தமிழ்மொழியைக் கற்கலாமே!
'முதல் கோணல், முற்றிலும் கோணல்' என்கிற பழமொழியின்படி, தமிழ் மொழிக்கு 20க்கும் மேற்பட்ட கணினி எழுத்துப்பலகைகள் இருந்தும் அதில் உள்ள எழுத்துகள், ஒழுங்கற்ற முறையில் இருப்பதால் ஒன்றைக்கூட நம்மால் எளிதாய்ப் பின்பற்ற இயலவில்லை. காரணம், ஏட்டுக் கல்விபோல் எழுத்துகளின் அமைப்பு இல்லாமையே! அதுதான் நம்மைக் கணினித்தமிழைக் கற்க, கற்பிக்கவிடாமல் செய்கின்றது. மீறியும் அதைப் பழகவேண்டுமென்றால் அளவற்ற நினைவாற்றலும், இடைவிடாதப் பயிற்சியும், கடினமான முயற்சியும், அசராதத் தன்னம்பிக்கையும் கட்டாயம் வேண்டும். இந்த அவசர உலகத்தில் இது எல்லோருக்கும் சாத்தியமா?

இன்னையத் தகவல் பரிமாற்றத்தின் நிலைமை
இன்று கணினி, கைப்பேசியின் உதவியால் நொடிப்பொழுதில் நம்மால் உலகெங்கும் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும். அதற்கான ஊடகங்கள் பல இருந்தாலும் சமூக வலைத்தளங்களே முதன்மையாய் இருப்பதும், அதில் சிறியவர்கள், இளைஞர்கள், வயதானோர்கள் ஆர்வமாய் பரிமாற்றம் கொள்வதும் தெரிந்ததே. ஆனால் பெரும்பாலும் தமிழ் மக்கள் ஆங்கில எழுத்தைப் பயன்படுத்தி தமிழ் மொழியில் தகவல் பரிமாற்றம் செய்து வருவது வேதனைக்குரிய விசயம். ஏனெனில் கணினித் தமிழ் எழுத்துப் பலகை எளிதாகக் கையாளும்படி இல்லாமையே. மேலும் அவ்வாறு செய்துகொண்டு வந்தால், விரைவில் தமிழ் மொழி அழியும் நிலைக்குத் தள்ளிவிடும் வாய்ப்புள்ளது. அச்சிரமத்தைப் போக்கவே UMASK  என்னும் எளியகணினித் தமிழ் எழுத்துப் பலகை கொடுத்துள்ளேன்.     

கணினித்தமிழ் எளிதாகக் கற்க
1. விசைப்பலகையிலோ, கணினித் திரையிலோ அதன் எழுத்துகள் தெளிவாகத் தெரிய வேண்டும்.
2. கற்கும், கற்பிக்கும், தட்டச்சு செய்யும் முறைகள் ஒன்றாக இருக்க வேண்டும்.
அதன்படி அமைந்ததுதான் 'UMASK' தமிழ் மென்பொருள்.
UMASK தமிழ் மென்பொருள் அமைப்பானது, இன்றையக் கணினியில் காணப்படும்
1.  அபரிமிதமான வேகம், எளிமை 2. 'கீ’ (Key) க்களின் மென்மை, 3. தொழில்நுட்ப வளர்ச்சி, 4. சிறுவர்கள், இளைஞர்களின் மனநிலை (Attitude) ஆகியனக் கருத்தில் கொண்டு உருவாக்கிய அமைப்பாகும்.

UMASK கணினித்தமிழ் அமைப்பு
தமிழ் எழுத்துகள் ஏட்டுக்கல்வியில் 247 என்பது தெரிந்ததே. அவைகளை இக்கால சிறுவர்கள், இளைஞர்கள் நினைவில் வைத்துக்கொள்ள மிகவும் சிரமப்படுகிறார்கள் என்பதே மெய். ஆனால் UMASK கணினித் தமிழில் 31 எழுத்துகள் மட்டுமே. அதை மட்டும் தெரிந்தாலேப் போதுமானது. மீதம் 216 எழுத்துகள், உயிர்மெய்யெழுத்துகளான கூட்டெழுத்துகள். அவைகள், வாய்பாடுபடி உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் விசைப்பலகையில் அழுத்தும்போது தானாக உயிர்மெய்யெழுத்தாக மாறிவரும். மேலும், ஏட்டுக் கல்விபோல் அகரவரிசையில் எழுத்துகளின் அமைப்பு இருப்பதால் அதிக அளவு நினைவாற்றல், பயிற்சி, முயற்சித் தேவையிருக்காது.     
குறிப்பு: மிகக் குறைவான எழுத்துகள்தான் இருக்கின்றது என்பது தெரிந்தாலே மக்கள் கட்டாயம் கணினித் தமிழ் கற்க முன் வருவார்கள்
                                           
UMASK மென்பொருளின் சிறப்பு அம்சங்கள்
1. எழுத்துகள் அகரவரிசையில் அமைந்த முதல் விசைப்பலகை
2. அகர வரிசையில் இருப்பதால் தமிழ் விரைவாக, எளிதாகக் கற்க, கற்பிக்க, தட்டச்சு செய்ய முடியும்.
3. உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள் தனித்தனியே இருப்பதால் உயிர்மெய் எழுத்துகளைக் குழப்பமில்லாமல் எளிதாகப் பெறலாம்.
4. கற்கும் முறைப்படி (வாய்பாடு) அமைந்துள்ளது.
5. வாய்பாடுபடி உயிர்மெய்யெழுத்துகள், மெய்யெழுத்துகள் நேரடியாக வருவதால் 100% சரியான எழுத்துகளே இந்த 'UMASK' மென்பொருள் தரும்.  எ், உ், எி, எெ, ஈு, ஒி, உெ, உே, ஐே போன்ற  தவறான எழுத்துகள் தரவே தராது
6. சாதாரண வழியில் (Normal Mode) 313 (247+66) எழுத்துகளில் 290 எழுத்துகளைத் (92.6%) தட்டச்சு செய்யலாம்.
7. கணினி விசைப்பலகையில் தமிழ் எழுத்துகள் தெரியாவிட்டாலும் கணினித் திரையில் (Computer Screen) அதன் அமைப்பு தெரியும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.
8. விரலினால் விசைப்பலகை (Keyboard) மூலமாகவும், 'மவுஸ்’ (Mouse) ஆல் கணினித்திரை மூலமாகவும் இயக்கலாம்.
9. இந்த மென்பொருளை மேசைக் கணினி, மடிக்கணினி, லேப்டாப் (Tablet) மற்றும் தொடுதிரைக் கைபேசிக்கு உகந்தவாறு அமைக்கலாம்.
10. இதன் எழுத்துரு (Font) 'யுனிக்கோடு‘ (Unicode) ஆகையால் இது மைக்ரோசாப்ட் (MS) ஆபீஸ், பெயிண்ட், போட்டோ ஷாப், மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வலைதளம் (Website), வலைப்பூ (Blog) மற்றும் அச்சகங்களுக்கு மிகவும் ஏற்றது.

முடிவுரை
UMASK எழுத்துப்பலகையின் அமைப்பினால் நேரடியாகவும், இணையத்தின் மூலமாகவும் தமிழ் மொழியை கணினியின் மூலமாக மிக எளிதாகக் கற்கலாம் - கற்பிக்கலாம் - தட்டச்சும் செய்யலாம். ஏட்டுக் கல்விபோல அமைந்திருப்பதால் தமிழ் தெரிந்த எவரும் பயமில்லாமல், நடுக்கமில்லாமல் ஆர்வமாய் கணினிக்கு வருவார்கள். தொடக்கப் பள்ளி முதலே இவ்வமைப்புள்ள கணினித் தமிழைத் தொடுதிரை நுட்பத்தில் கொடுத்தால் மழலையர்களால்  எளிதாகத் தமிழைக் கற்க இயலும். ஏன்? எல்லா வயதினரும் கூடத்தான்! இதனால் தமிழில் உள்ள எல்லாப் படைப்புகளையும் எளிதாகப் பதிவேற்றம் செய்யலாம். அதன் பலனாக வெகு விரைவில் 'தமிழ் இணையம்' பிரமாண்டமாய் உருவெடுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.          
*************************

No comments:

Post a Comment