Pages

Friday, 22 September 2017

நடிகனும் காதலும் - சிறுகதை

காதலும் நடிப்பும்
சிறுகதை
கு.கி.கங்காதரன்

"நிகழ்காலத்து நிலைமையினை ஏற்று வாழ்க்கையை வாழ்ந்தால், நிம்மதிக்குப் பஞ்சமே இருக்காது"  

"அறிவுக்கரசு, என் மகனுக்கு நீதான்பா நல்ல புத்திச் சொல்லனும். யாரையோ ஒரு பொண்ணை உயிருக்கு உயிராக காதலிக்கிறானாம். அவளை மறக்க முடியாதுன்னு சொல்றான். ஆனா, அந்த பொண்ணுக்கு என்ன சூழ்நிலையோத் தெரியலே, வேற ஒருவனுக்கு நிச்சயம் பண்ணிட்டாங்க" என்று கரகரத்தக் குரலில் நடிகர் அறிவுக்கரசனிடம் புகார் சொல்லாதக் குறையாக எடுத்துரைத்தார் ஆதிமூலம்.

"அப்படியா! அவன் இது பத்தி என்கிட்டே எதுவுமே சொல்லலேயே? அந்த பிரச்சனையை என்கிட்டே விட்டுடுங்க அப்பா. நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று அசலாக திரைப்படத்தில் கதாநாயகன் பேசும் வசனத்தை ஒப்பித்தான் நடிகர் அறிவுக்கரசு.

"அறிவுக்கரசு, உனக்கு இப்ப இருக்கிறத் திரைப்படப் புகழுக்கும் தொடர்ந்து நடக்குற படப்பிடிப்புக்கும் நடுவிலே எங்கே எங்களையெல்லாம் மறந்திட்டேயோன்னு நினைச்சேன். இன்னைக்கு நீ எங்களைப் பார்க்க வந்ததாலே அது தப்புன்னு நிரூபிச்சுட்டே" என்று  இயல்பாக சொல்வதுபோலவும் அதேவேளையில் லேசாகக் கடிந்தும் கொண்டார் ஆதிமூலம்.
     
"என்னப்பா, நீங்களுமா இப்படி நினைக்கனும்? உங்களோட மகன் என்னோட ஆருயிர் நண்பனாக இருக்கலாம். ஆனா அதுக்கும் மேலே அப்பாஇல்லாத எனக்கு, உங்க மகனுக்கு இணையா எவ்வளவோ உதவிங்க செய்தீங்க. நான் இந்த நிலைமைக்கு உயர்ந்ததற்கு நீங்களும் ஒரு காரணம். அதெல்லாம் மறக்கக்கூடிய விசயமா? அது இருக்கட்டும், அப்பா, என்னை உடனடியா பார்க்கனும்னு சொன்னீங்களாமே. எதுக்குப்பா? உங்க மகன் அரவிந்த் எங்கே போயிருக்கிறான்?" என்று வளரும் திரைப்பட நடிகரும், முதல் படத்திலேயே அகில இந்திய அளவில் சிறந்த நடிகர்க்கான விருது பெற்ற அறிவுக்கரசு, ஆதிமூலத்திடம் கேட்டான்.

"ஒரு வேலையா வெளியே போயிருக்கிறான். இப்ப வந்துடுவான். அதோ பைக் சத்தம் கேட்குது. அவன் வந்துட்டான். நீதான் பக்குவமா பேசி அவன் மனசை மாத்தனும்" என்று ஆதிமூலம் தன் பாரத்தை நடிகர் அறிவுக்கரசனிடம் ஒப்படைத்துவிட்டு அவர் வேலையைக் கவனிக்கச் சென்றார்.

உள்ளே நுழைந்த அரவிந்தனுக்குத் தன் நண்பன், நடிகர் அறிவுக்கரசனைக் கண்டதும் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

"அறிவு, எப்படா வந்தே? ம்.. நீ பெரிய நடிகனாயிட்டே. போன் பண்ணினாக்கூட எடுக்க மாட்டீங்கிறே. எப்படிடா பொதுமக்கள்கிட்டே மாட்டாமே எங்க வீட்டுக்கு வந்தே?" என்று மகிழ்ச்சியுடன் ஆரவாரத்தோடு பேசினான் அரவிந்த்.
"உங்க எல்லாரையும் பார்த்து ரொம்ப நாளாச்சில்லே. படப்பிடிப்புலே பிஸியா இருந்திட்டேன். நான் இப்ப வந்தது உனக்காகத்தான்"

"அதுதானேப் பார்த்தேன். நீ வந்ததும் வராததும் அப்பா, என்னோடக் காதல் விசயத்தை உன் காதுலே போட்டுட்டாரா? நீ என்ன சமாதானம் சொன்னாலும் என் காதலை மறந்துட்டு, அப்பா அம்மா பார்த்திருக்கிறப் பொண்ணை எக்காரணம் கொண்டும் கல்யாணம்  பண்ணிக்கவும் மாட்டேன். என்னை மன்னிச்சிடு அறிவு" என்று தன் காதலி தன்னை மறந்தாலும், தன் காதலை விட்டுக்கொடுக்காமல் பேசினான் அரவிந்த்.
 
"அதெல்லாம் உன்னோட இஷ்டம். நான் வந்த காரணமே வேறே. என்னோட முதல் படம், ஒரு அறிமுக கதாநாகியோட நடிச்சது, அது உனக்கு நல்லாவேத் தெரியும். எதிர்பார்த்ததத்துக்கும் மேலே மக்களின் நடுவே அமோக வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைச்சது இல்லாம, எனக்குச் சிறந்த நடிகர்னு பேரை வாங்கித் தந்தது. என்னோட அடுத்தப் படத்துலே கதாநாயகி யார்னு தெரியுமா?

"இதுலே என்ன புதிர் இருக்கு? இன்னொரு அறிமுக நாயகியாக இருப்பாங்க, அப்படித்தானே?"

"அதுதான் இல்லே! துள்ளும் இளமை அழகி, கிள்ளும் கவர்ச்சி ராணி, அள்ளும் கனவின் அரசி" என்று வர்ணனை அடுக்கிக் கொண்டே போனவனை இடைமறைத்து

"யாரு, அந்த காதல் ரதியா? இளைஞர்கள் மனதிலும் இதயத்திலும் காதல் காந்தத்தை ஒட்டச் செய்யும் அந்தப் பேரழகி 'வர்ஷினி'யா?!

"அவளேதான்! நாளைக்கு அவள்கூட முழுநேரப் படப்பிடிப்பு இருக்கு. நீ பார்க்க வர்றேயா? வர்றதா இருந்தாச் சொல்லி வைக்கிறேன்"

"என்ன அறிவு? இந்த மாதிரி வாய்ப்பு எப்படா கிடைக்கும்னு பல இளைஞர்கள் தவமாக் கிடக்கிறாங்க. அது உன் மூலமா வந்திருக்கு. விடுவேனா. கட்டாயம் வர்றேன்"

"அப்ப மீதி விசயங்களைப் படப்பிடிப்பப்போக் கிடைக்கிற ஒய்வு நேரத்திலே பேசுவோம்" என்று அறிவுக்கரசு அனைவரிடத்திலும் விடைபெற்றுச் சென்றான்.           
   
மறுநாள், படப்பிடிப்பு மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. சொன்னபடி அரவிந்த் வர, ஏற்கனவே 'என் நண்பன் அரவிந்த் வருவான், அவனை நன்றாகக் கவனிக்க வேண்டும்' என்று நடிகர் அறிவுக்கரசு சொல்லியதால் என்னவோ, அங்கிருந்த எல்லோரும் அவனை நன்றாகக் கவனித்தனர். போதாதக்குறைக்கு அறிவுக்கரசும் அவனை அன்புடன் வரவேற்று சிறப்பு இருக்கையில் அமரச் செய்தான்.

"அரவிந்த், செட் எப்படி இருக்கு?"

"இப்பதான் மொதமொதப் பார்க்கிறேன். ரொம்ப பிரமாண்டமாய் இருக்கு. ஒவ்வொன்னும் கண்ணைப் பறிக்கிறாப்பலே பளிச்சுனு இருக்கு! பெரிய பட்ஜட் படமோ?"

"ஆமா"

இருவரும் கொஞ்ச நேரம்தான் பேசிக்கொண்டு இருந்திருப்பார்கள். அதற்குள் உதவி இயக்குனர் ஒருவர் அங்கு வந்து, "ஹீரோ சார், அடுத்து நீங்களும் கதாநாயகி வர்ஷினியும் காதல் வசனம் பேசுற சாட். வசனம் ஞாபகம் இருக்கா சார்?" என்று நினைவுபடுத்த

"உம்.." என்று சொல்லியவாறு படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அடைந்தான் அறிவுக்கரசு.

"சாட் ரெடி, டேக் டென்' என்று இயக்குனர் சொல்ல அங்கிருந்த ஒருவர் 'கிளாப்' அடிக்க படப்பிடிப்பு ஆரம்பமானது.

நடக்கின்ற படப்பிடிப்புக் காட்சியை நேரடியாகக் கண் இமைக்காமல் அதிசயமாய்ப் பார்த்துப் பரவசப்பட்டான் அரவிந்த்.

வண்ண மலர்கள் நிறைந்த பூஞ்சோலை போன்ற நந்தவனத்தில் தன் கட்டழகு மேனியைக் காட்டிக்கொண்டுக் காண்பவர்களைச் சுண்டி இழுக்கும் வனப்புடன், தன் எழில்அழகினைக் கட்டுக்குலையாமல் கதாநாயகி வர்ஷினி ஒய்யாரமாய் நின்றிருக்க, அவளுக்குத் தெரியாமல் அவள் பின்புறம் போய் கண்களைத் தன் கைகளால் அறிவுக்கரசு மூட, அவள் சுதாரித்து யார்? என்று கண்டுபிடித்து, கண்களை மூடிய கைகளை வர்ஷினி தன் கையால் எடுத்துவிட வெடுக்கென்று அவள் கன்னத்தில் முத்தமிட, அவள் நாணிப்போகும் அழகைத் தத்ரூபமாக படம் பதிவாகிக்கொண்டிருந்தது. அடுத்து அவர்களுடைய காதல் வசனம் ஆரம்பித்தது.

"என்னை உண்மையாகக் காதலிக்கிறீர்களா?"

"அதிலென்ன சந்தேகம்"

"எந்த அளவுக்கு?"

"எந்த அளவுக்கா? வானம் கூடக் குறிப்பிட்டப் பருவத்தில் மட்டுமே மழை கொடுக்கும். ஆனால் என் காதலும் அன்பும் வற்றாமல் எந்நேரமும் உனக்காகக் கொடுக்கின்றேனே அதிலிருந்து தெரியவில்லையா? நான் எந்த அளவுக்கு உன் மீது காதல் கொண்டிருக்கிறேன்னு?"

இம்மாதிரி தேனின் இனிமையும் அமிழ்தம் போன்ற சுவையான காதல் வசனம் சொட்ட சொட்ட வர்ஷினியிடம் நெருக்கமாகக் கட்டியணைத்தபடி அறிவுக்கரசு பேசப் பேச, அவற்றைத் தன்னை மறந்து ஆர்வமாய்க் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த அரவிந்த் மனம், இலேசாக சஞ்சலம் அடைந்தது. அக்காட்சியை முடித்துக் கொண்டு மீண்டும் தன் நண்பன் அரவிந்த் பக்கத்தில் அமர்ந்தான் அறிவுக்கரசு. இம்முறை அவனுக்குப் பெரிய சந்தேகம் வந்தது. அதனை அறிவுக்கரசனிடம் கேட்டேவிட்டான்.

"அறிவு, நீ இப்ப வர்ஷினியோட நெருங்கிப் பழகி, முத்தம் கொடுத்துக் கட்டிப்பிடித்துக் காதல் வசனமெல்லாம் பேசினியே அதெல்லாம் உண்மையா?"

"பின்னே, உண்மையாகச் செய்யாம எப்படிப் படம் எடுக்க முடியும்?"

"டேய், நான் உயிருக்குயிராக் காதலிக்கிறேன்னு சொன்னேன்னே, அவகிட்ட கூட இந்த மாதிரி வசனம் பேசலே. உன்னைப்போல அப்பட்டமாக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததில்லே. நீ எப்படிடா இப்படி?"

"டேய், படத்திலே மிகைப்படுத்திச் சொன்னாத்தான் மக்களுக்குப் பிடிக்கும். அதுதான் அற்புதம்னு சொல்லுவாங்க"

"சரி, இந்த மாதிரி உடம்பும் உடம்பும் தொடுறதை எப்படிடா எடுத்துக்கிறே? எப்படிடா அந்தத் தொடுதல்களை மறக்க முடியும்?”

இந்தக் கேள்விக்குப் பதில் அறிவுக்கரசு சொல்வதற்குள் அடுத்த அழைப்பு வந்தது.

"சார், இப்ப வர்ஷினியோட டூயட் பாட்டு" என்று நினைவுபடுத்த, இருவரும் மழையில் நனைந்தபடிச் செய்யும் காதல் சேட்டைகள், ஒருவரையொருவர் ஓடிப்பிடித்து விளையாடும் விளையாட்டுப் போன்ற மென்மையானக் காதல் லீலைகளைப் பலகோணங்களில் படப்பதிவானது. உண்மைக் காதலர்களைக் கூடப் பொறாமைபடும் அளவுக்கு அக்காட்சிகள் படமாக்கப்பட்டது. இவர்களின் நடிப்பு அனைவரையும் கவர்ந்ததோடு இல்லாமல் பாராட்டிப் பேசவும் செய்தார்கள். அதற்குக் காரணங்கள் பல இருந்தாலும், அவர்களின் இளமைக் கோலங்களும் ஒரு காரணம். இளமை இருந்தாலேக் காதலும் உண்மையாய் இயற்கையாய் வருவது இயல்புதானே?

அவனுக்குக் கொஞ்சம் கூட இடைவெளி கொடுக்காமல்,"சார், கடைசியாக, உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணக் காட்சி சார்" என்று நினைவுபடுத்த உடனே அதற்கு ஆயுத்தமானான் அறிவுக்கரசு. அவனின் அந்த வேகம்போல நடிகை வர்ஷினியிடத்திலும் இருந்தது. இயக்குனர், படப்பிடிப்புக் குழுவினர்களின் திட்டத்திற்கேற்ப இருவரின் ஒத்துழைப்பு அபாரமாக இருந்தது.

இதையெல்லாம் அரவிந்தின் கண்கள் பார்த்தாலும், இன்னும் அவனது மனதில், நடைபெற்றக் காட்சிகள் படமாகத் திரும்பத்திரும்ப ஓடிக்கொண்டு இருந்தது.
  
விட்ட அவனுடைய சந்தேகத்தைத் மீண்டும் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பினான்.

"அறிவு, இன்னைக்கு நான் பார்த்தக் காட்சிகள், அதான் நீ அவங்களோட நெருங்கிப் பழகுறதுக்கு அர்த்தம், நீ அவங்களை உண்மையிலேக் காதலிக்கிறேயா? என்னதான் இயக்குனர் சொல்லிக் கொடுத்தாலும் அதைவிட ஒருபடிக் கூடத்தான் இருக்கு. உங்களோட இந்தக் காதலை நடிப்புன்னு சொல்றதைவிட ரொம்ப இயற்கையா இருக்கு. அதனாலே கேட்டேன். அதுபடி நீ நடிச்சதைப் பார்த்தா, யாருக்குமே அந்தமாதிரி எண்ணம்தான் வரும். என்கிட்டே மறைக்காம உண்மையைச் சொல்லு" என்று வற்புறுத்திக் கேட்காமல் சாதாரணமாய்க் கேட்டான்.

"டேய், நீ பார்த்தது எல்லாமே நூறு சதம் நடிப்புதான்"

"எது? நெருங்கிப் பழகுறது, முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடிப்பது இன்னும் என்னென்னமோ, அதெல்லாமா?"

"எல்லாம்தான். பெரும்பாலும் நடிக நடிகைங்க எண்ணங்கள் எப்படி இருக்கும்னு தெரியுமா? ‘இறந்த காலத்தை மறக்கனும், நிகழ் காலத்தை நினைக்கனும், அப்படீன்னாத்தான் வருங்காலம் வளமையா இருக்கும்!’ இதுதான் நடிப்புக்கான சூத்திரம்!" என்று இதுவரையில் யாருமே சொல்லாதத் திரைப்படக் கலைஞர்களின் இரகசியத்தை  அம்பலப்படுத்தினான் அறிவுக்கரசு.

இன்னும் அரவிந்தனின் மனம் சமாதானமாகவில்லை. தன் காதலையும் இன்றைக்கு நடந்த நடிப்புக் காதலையும் ஒத்துப்பார்த்தான். கிட்டத்தட்ட கணவன் மனைவிபோலே உணர்வுப்பூர்வமாக பழகும் விதத்தை எப்படி நடிப்பு என்று எடுத்துக் கொள்வது? எதிலுமேப் பதிவாகாதத் தொட்டுப்பழகாத என் காதலைத் தெய்வீகம்என்று  சொல்வதுப் பொருத்தமாகுமா? அல்லது இந்த வயதிலே வருகிறக் காதல் என்பது வெறும் அண்-பெண் ஈர்ப்பா? என்று முடிவு எடுக்க முடியாமல் திணறினான். அதற்கு மாறாக இப்படி அப்பட்டமாய்ப் பதிவானக் காதலை நடிப்பு என்று சொன்னால் நம்பும் விசயமா? என்று சற்றுக் குழம்பிப் போனான் அரவிந்த்.

"டேய் அரவிந்த், என்னடா யோசனையெல்லாம் பலமா இருக்கு? இன்னும் தெளிவாகலையா?"

"இப்பவரை ஆகலே. ஆனா ஒன்னு சொல்றேன். நீயும் வர்ஷினி நடிகையும் நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பீங்க. அந்த அளவுக்கு நீங்க ஒன்றி காதலர்களாக நடிக்கிறீங்க. அதனாலே அவங்களைப் பார்த்து வாழ்த்துச் சொல்லனும்போல இருக்கு"

"அவங்களை சந்திக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணனும் அவ்வளவுதானே. இப்பவே பண்றேன்" என்று எழ நினைக்க

"இதோ, அவங்களே நம்மைத் தேடி வர்றாங்க"

"ஆமா, ரொம்ப எக்ஸைட்டிங் ஆக இருக்கு. ஆனா கூடவே ஒரு இளைஞனும் வர்றான். அவன் யாரா இருப்பான்?"

"அவனை நானும் இப்பத்தான் பார்க்கிறேன். யார்னு அவங்ககிட்டேயே கேட்போம்?" என்று இருவரும் பேசி கொண்டனர்.

அதற்குள் வர்ஷினியும் அந்த இளைஞனும் அவர்களை நெருங்கி வந்தனர்.

"ஹாய் அறிவு சார், மீட் மை உட்பி. மிஸ்டர் பரத். கல்வித்துறையிலே இருக்கிறாரு. வீட்டிலே முடிவு செய்த மேரேஜ். இந்தப் படம் முடிஞ்ச உடனே கல்யாணம். அவசியம் நீங்க வரனும்" என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப்போட ஆடிப்போனான் அரவிந்த்.

சற்றுமுன் தன் நண்பன் அரவிந்த் கொடுத்த விளக்கம் எவ்வளவு உண்மை என்று புரிந்துகொண்டான். நிகழ்கால நிலைமை ஏற்று வாழ்வதுதான் சிறந்தது என்று மனம் சொல்லியது.

தான் இப்போது இருக்கும் நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தான். என்னைக் காதலித்தவள் நாங்கள் பழகிய இறந்த காலத்தை மறந்து புது உறவை ஏற்றுக்கொண்டாள். ஏன், நானும் அவளைக் காதலித்த அந்த இறந்த காலத்தை மறந்து அம்மா அப்பா பார்த்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது? என்று அவன் மனம் எதிரொலித்தது. ‘நடிப்புஎன்றுத் தங்களைத் தாங்களே தினம் தினம் ஏமாற்றிக் கொள்ளும் அந்த மாய வாழ்க்கைவிட உண்மையாய் இப்போது வாழப்போகும் அன்பு வாழ்க்கை பன்மடங்குச் சிறந்தது' என்கிற உறுதியான முடிவுக்கு வந்தான்.

"டேய் அரவிந்த், மறுபடியும் என்னடா யோசனை?"

"இல்லேடா, இப்பதான் வாழ்க்கையோட அர்த்தம் தெரிஞ்சது. இப்ப எனக்கு எல்லாமேத் தெளிவா புரிஞ்சிருச்சு. உனக்கு ஆயிரம் வேலை இருக்கும். எனக்கு இந்த அற்புதமான வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி. நேரம் கிடைக்கும்போது கண்டிப்பா வீட்டுக்கு வாடா" என்று புறப்பட்டான் அரவிந்த்.

அரவிந்த் மகிழ்ச்சியாய்ச் சென்ற வேகத்தைப் பார்த்த நடிகர் அறிவுகரசனின் மனம், அவன் அப்பா தன் தலையில் ஏற்றிய பாரமும், தான் நினைத்த வேலையும் வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிம்மதியில் மிதந்தான் நடிகர் அறிவுக்கரசு.  

*************