Pages

Thursday, 28 January 2021

பாகம் : 1 பருத்தியில் வண்ணப் புரட்சி - அறிவியல் - குறுநாவல் மதுரை கங்காதரன்

 பருத்தியில் வண்ணப் புரட்சி

பாகம் : 1

  
            அறிவியல் - குறுநாவல் 

                          மதுரை கங்காதரன் 

சென்னை விமான நிலையம்

இப்போது வருகின்ற விமானத்தில்தான் விஞ்ஞானி வினோதன், அதற்கு அருகாமையில் உள்ள கலாம் உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் முதன்முதலாக, கலந்துகொள்ள இருக்கிறார். சமீபத்தில், யாருமே கற்பனை செய்துபார்க்க முடியாத அளவுக்கு, அறிவியலில் அவர் நிகழ்த்தியப் புதுமை, இந்த உலகத்திற்கேத் தெரியும். அந்த அற்புதமானச் சாதனைக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக, இதுநாள் வரையில் இல்லாத வகையில், இங்குள்ள பல அமைப்புகள், இந்த நிகழ்ச்சிக்கு அவரைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அதுமட்டுமல்ல, உலகமே உற்றுநோக்கும்படியாக மிகப்பிரமாண்டமான முறையில் பொதுமக்களும் பங்குபெறும் வகையில் கருத்தரங்கு ஒன்றிற்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

அன்று அவ்விடத்தில், அவரை வரவேற்க, கூட்டமாக வருக! வருக!!’ என்கிற வாசகம் கொண்டப் பதாகைகள் ஏந்தியவாறு ஒரு பக்கமும், கண்டனம் தெரிவிக்கும் வகையில் திரும்பிச் செல்!’ என்கிற வாசகம் கொண்டப் பதாகைகள் பிடித்த சிலர் மறுபக்கமும், அதில்லாமல் வாழ்க! ஒழிக! கோஷங்கள் எழுப்புகின்றவர்கள் ஒருசிலரும் கூடி இருந்தனர். மொத்தத்தில் அங்கு பலதரப்பட்ட மக்களின் வருகையானது அளவுக்கு அதிகமாகவேக் காணப்பட்டது. அக்கூட்டமானது, மக்கள் விஞ்ஞானி வினோதனின் மீது கொண்டுள்ள இனம்புரியாதப் பாசத்தையும், மதிப்பையும், மரியாதையும் வெளிப்படுத்த வந்துள்ளனர் என்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றது என்றே கருத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாகவே அங்கு வந்த அனைவரும் அமைதியாகவும், கட்டுப்பாடோடவும் இருந்தனர். இவ்வளவுக்கும் வருபவர், பிரபலம் அடையாத, இதுவரை மக்கள் நேரில் பார்த்திராத, சட்டென்று அடையாளம் தெரிந்து கொள்ள இயலாத ஒருவர் என்பதையும் விட,  அவர் எந்த ஒரு கட்சியும் சாராத ஒரு விஞ்ஞானி என்பதே கூடுதல் தகவல். இப்படியான நல்ல, கெட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகும் வகையில், அந்த விஞ்ஞானியிடத்தில், எதற்காக மக்களில் ஒரு சாரார் திடீர் பாசமும், மற்றெரு சாரார் காட்டமும் காட்டுகிறார்கள்? என்பது சிலருக்குப் புரியாத புதிராக இருந்தது.

சமீபத்தில், கோவிட்19 கொரனாவுக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கண்டுபிடித்த வரவேற்பைக் காட்டிலும் அப்படியென்ன அவர் சாதித்திருக்கிறார்? என்ற கேள்வி சிலரிடத்தில் எழுந்தன. எதற்காக இவ்வளவு கூட்டம் இங்கே கூடியிருக்கின்றது? என்பதைத் அறிந்து கொள்ளும் ஆர்வம் பலரிடத்தில் நன்கு தெரிந்தது.

சும்மா சொல்லக் கூடாது, நம்ம ஊர் தமிழனின் ஒரேயொரு கண்டுபிடிப்பு! இந்தியாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வச்சதை நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு!” என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் உரக்கப் பேசியதைப் பலரும் ஆமோதித்தனர்.

ரொம்ப சரியாச் சொன்னீங்க! கணினி, மருத்துவத்துறையிலே  கண்ட வெற்றிங்க, பல நாட்டு அறிவியல் அறிஞருங்க, ஆராய்ச்சியாளருங்க சேர்ந்து, இராப்பகலா அயராது பாடுபட்டதாலேத்தான் கிடைச்சது. அதை நாம மறந்திடக் கூடாரு. ஆனா, இவரோட விசயம் அப்படியில்லே. இவரோட கடுமையாக உழைப்பாலே, எல்லாருக்கும் எக்காலத்துக்கும் பயன்படக்கூடியதை  இவர் கண்டுபிடிப்பிடிச்சுத் தந்திருக்கார். அதோடு இவர் நம்ம நாட்டோட கௌரவத்தைப் பன்மடங்கு உயர்த்திருக்கிறார். அதுக்காக இவரைக் கண்டிப்பாகப் பாராட்டியேத் தீரவேண்டும்என்று அங்கு வந்திருந்த ஒருவர், தன் உள்ளத்தில் எழுந்த மகிழ்ச்சியை மழையாகப் பொழிந்தார்.

எப்படி இவராலே, யாருமே நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு யோசிக்க முடிஞ்சதோ?” என்றார் மற்றொருவர்.

இந்தக் கூட்டத்திலே, முக்கால்வாசிபேரு மாணவருங்க இளைஞருங்கதான். இவங்களையெல்லாம் பார்க்கிறப்போ, விண்வெளி ஆராய்ச்சியில் பல வெற்றிச் சாகசங்கள் செய்த நம்ம மறைந்த ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான கலாம் ஐயாவோட அறிவியல் வாரிசுங்க உருவெடுத்து வந்ததுபோல இருக்குது

அதுவும் சரிதான். நம்ம கலாம் ஐயாவோடக் கனவு இப்போச் செயல்பட ஆரம்பிச்சுட்டதாகவே நம்புறேன். நீங்க வேணும்னாப் பாருங்க, நம்ம இந்தியா கூடிய சீக்கிரம் வல்லரசோடு நல்லரசாகவும் மாறப்போகுதுஎன்று ஆளுக்காளு தங்கள் எண்ணங்களை வார்த்தைகளாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்தனர்.

அதேவேளையில் எல்லோரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம், அந்த விஞ்ஞானி வரும் விமானம் தரை இறங்கியது. கண்களைக் கொள்ளையடிக்கும் அந்த காட்சியைக் கண்டவுடன், தவமாய்க் காத்திருந்த அனைவரின் முகங்கள் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது.

.... அதோ கையசைத்துக் கொண்டே இறங்குகிறாரே, அவர் தான் விஞ்ஞானி வினோதன் போலத் தெரியுது. ஆஹா என்ன சுறுசுறுப்பு? அறிவுக்கலை அவரோட கனிவான சிரிச்ச முகத்திலே நல்லாவேத் தெரியுதுஎன்றவுடன் கூட்டத்தின் உள்ளவர்களின் பார்வை, விஞ்ஞானி வினோதனிடம் குவிந்தன.

தூரத்தில் இருந்து அவரை பார்த்த அடுத்த நொடியில் மாணவர்கள், இளைஞர்கள் உட்பட பலரும் மெய்மறந்து சிலையாகிவிட்டார்கள் என்றே சொல்ல தோன்றுகிறது.

மாணவமணிகளே! இங்கு அவரைப் பார்த்தது போதும். நாம் எல்லாரும் உடனே கலாம் உள்விளையாட்டு அரங்கத்திற்குப் போக வேண்டும். ஏற்கனவே பல பள்ளிக்கல்லூரி மாணவர்கள், விஞ்ஞானி வினோதனின் உரையைக் கேட்க காலையிலிருந்தே முன்வரிசையில் உட்கார இடம் பிடித்திருப்பதாக எனக்குச் செய்தி வந்தது. அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை. நமக்கு அங்கே இடம் உண்டு. ஏன்னா நம்மைப்போல பள்ளிக்கல்லூரி மாணவர்களுக்குத் தனிஇடம் ஒதுக்கி இருப்பதாகச் சொன்னார்கள்.  அந்த அரங்கம் ரொம்பப் பெரியதாக இருந்தாலும் இங்கு வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்தால் எல்லாருக்கும் அங்கு இடம் கிடைக்குமா என்று சந்தேகமாக இருக்கின்றது? அனைவரும் வாருங்கள் சீக்கிரம் அங்கே போகலாம்! என்று அனைவரையும் விரைவு படுத்தினார் அப்பள்ளித் தலைமை ஆசிரியர்.

சீறிப் பாயும் அம்புகள் போல, விமான நிலையத்தில் விஞ்ஞானி வினோதனைப் பார்க்க வந்திருந்த கார்களும், பஸ்களும், பைக்குகளும் கலாம் உள்விளையாட்டு அரங்கத்தை நோக்கிப் பறந்தன.

இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் நம் மக்கள் மற்றும் இளைஞர்கள் அறிவியலின் மேல் கொண்டுள்ள அபாரப் பற்றையும், அதிக ஆர்வத்தையும், முழு நம்பிக்கையையும் நன்கு கணித்து வைத்துள்ளனர்என்றே நாம் எண்ணிக் கொள்ள வேண்டும். விழாக்குழுவினரின் அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஒரு மாபெரும் அரசியல் தலைவருக்கு, திரைப்படக் குழுவினர் பங்கு கொள்ளும் கலைநிகழ்ச்சிக்கு, சிறந்த விளையாட்டுப் போட்டிக்கு, அட நம் ஜல்லிக்கட்டுக்குக் கூடிய கூட்டத்தைக் காட்டிலும், இப்போது வந்திருக்கும் கூட்டம், முந்தைய அனைத்துச் சாதனையையும் முறியடித்துவிட்டது என்றே நினைக்க வைக்கின்றது.

அங்கு கூடியிருந்தவர்களும் கூட தாங்கள் காண்பது கனவா? நனவா? என்று நம்ப முடியாமல் திகைத்தனர். இதன் காரணமாகத்தான் என்னவோ, விழா அமைப்பாளர்கள் இவ்வளவு பெரிய அரங்கத்தை ஒத்துக்கொண்டதோடு, உலகளவில் பல ஊடகங்களின் வாயிலாகப் பல நாடுகளுக்கு இந்நிகழ்ச்சியினை நேரடியாக ஒளிஒலி மூலம் பரப்புவதற்கும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். இத்தனையும் கண்ட அனைவருக்கும் மிகப்பெரிய வியப்பைத் தந்ததென்றால் அதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. உலக வரலாற்றில் இன்று வரை இப்படியான விஞ்ஞானக் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்று இருப்பதாகத் தெரியவில்லை என்றேப் பலரும் பேசிக்கொண்டனர்.

மேடையில், சிறப்பு விருந்தினர் விஞ்ஞானி வினோதனைத் தவிர, சில வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கும்,  உலகத்தில், இந்தியாவில் உள்ளத் தலை சிறந்த அறிவியல் அறிஞர்களுக்கும், முக்கிய அரசியல் பிரதிநிதிகளுக்கும் அவரவர் பெயர்கள் எழுதி ஒட்டப்பட்ட நாற்காலிகளை ஒதுக்கியும், அதன் எதிரில் அலங்காரம் செய்யப்பட்ட மேஜைகளும் இருந்தன. அங்கேயே நடுவில், மினுமினுக்கும் சிறிய வண்ணமிகு மின்விளக்குகள் பொருத்தப்பட்ட கண்ணாடிப் பெட்டி போன்ற ஒன்று, அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டத் திரையால்  மூடப்பட்டிருந்தது. குத்துமதிப்பாக அனைவரும் அதற்குள்தான் விஞ்ஞானி வினோதனின் கண்டுபிடிப்புச் சம்பந்தமான ஏதோ ஒன்று  இருக்கும் என்று ஊகித்தனர்.  


     பாகம் : 2 தொடரும் No comments:

Post a Comment