Pages

Sunday, 10 March 2024

THE SECRET OF BRAMMAM - பசும் பால் (milk) உணர்த்தும் பிரம்மத்தின் இரகசியம் (பரமபத நிலை).. எனது புரிதலும் விளக்கமும் 10.3.2024

 THE SECRET OF BRAMMAM - பசும் பால் (milk) உணர்த்தும் பிரம்மத்தின் இரகஸ்யம் .. எனது புரிதலும் விளக்கம்  

K.K.GANGADHARAN




பசும் பால் (milk) உணர்த்தும் பிரம்மத்தின் இரகசியம் (பரமபத நிலை) .. எனது புரிதலும் விளக்கம்  10.3.2024

  "குருவே! மனிதனுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பான இந்த மானுடப்பிறவியில், 'மனிதன், மனது வைத்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகலாம்'  என்று போதித்தீர்கள், இல்லையா?"

  "ஆமாம் சிஷ்யர்களே, மனிதனுக்கான உண்மையும் நோக்கமும் அதுதான்"

  "அதோடு, குருவே, பிரம்மத்தைப் பார்க்க முடியாது! உணரத்தான் முடியும்! என்றும் சொன்னீர்கள்"
 
  "ஆமாம்"
 
  "குருவே, அதுமட்டுமல்ல, பிரம்மத்தை அடைய பல வழிகள் உண்டு. ஒவ்வொருக்கும் ஒரு வழி கட்டாயம் உண்டு என்றும்,  உங்களது வழியில் மற்றவர்கள் அடைய முடியாது! என்றும் அறிவுரை கூறுனீர்கள்"
 
  "ஆமாம், அதுதான் விதி"

  "குருவே, இவற்றையெல்லாம் கூறும்போது எங்களுக்கு குழப்பமாக உள்ளது. நாளுக்கு நாள் நம்பிக்கையும் குறைந்து கொண்டே போகின்றது. இவற்றைப் பற்றி எங்களுக்குப் புரியும் படி, செய்முறையுடன் கூடிய விளக்கம் தரும் படி கேட்டுக் கொள்கிறோம் குருவே!"

 "நல்லது சிஷ்யர்களே,. . என்னால் முடிந்தளவு உங்களுக்கு விளக்கமளிக்கிறேன். முதலில் யாராவது ஒருவர் அங்கிருக்கும் பால் கிண்ணத்தை எடுத்து வாருங்கள்"  என்று குரு கூறியதும் ஒரு சிஷ்யர் அந்தப் பால் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு வந்தார். 

  "இந்தப் பாலை விளக்கில் ஊற்றி தீபமேற்றுங்கள்" என்று கூறியதும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.

   ஏனென்றால், பால் கொண்டு எப்படி தீபத்தை ஏற்ற முடியும்?  என்று குழம்பிக் கொண்டனர். இருந்தாலும் குருவின் சொல்லைத் தட்டாமல் தீபத்தை ஏற்ற முயற்சி செய்து தோற்றுவிட்டனர்.
 
  "குருவே முடியவில்லை" என்று சிஷ்யர்கள் கூறியதும்
 
  "அப்படியா, நீங்கள் ஒவ்வொருவரும் கொஞ்சம் 'பாலை' எடுத்துக்கொண்டு, உங்களுக்குத் தெரிந்த வழியில் இந்தப் பாலைக் கொண்டு 'வெண்ணெய்' தயாரித்துக் கொண்டு வாருங்கள்" என்று கூற, ஒவ்வொருவரும் அவரவர் வழியில் வெண்ணெயுடன் வந்தனர்.
 
  "நல்லது,அனைவரும் நன்றாக வேலை செய்தீர்கள். யார் யார்? எந்தெந்த வழியில் இந்த வெண்ணெய்யை தயார் செய்து வந்தீர்கள்" என்று கேட்டவுடன் அவரவர் 'வெண்ணெய்' தயார் செய்த முறை (கடைதல்), நேரம்,  ஆகியவை சொன்னார்கள். அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித்தியாசம் இருப்பதை அறிந்தார்.

   "சிஷ்யர்களே, இப்பொழுது, இதனைக் கொண்டு 'தீபத்தை' ஏற்றுங்கள்" என்று குரு கூறவே, மீண்டும் சிஷ்யர்கள் தோல்வியைக் கண்டனர். 
 
பிறகு, குரு
 
  "சிஷ்யர்களே, இந்த வெண்ணெயைக் கொண்டு நெய்யாக மாற்றிக் கொண்டு வாருங்கள்" என்று குரு கூறவே, அனைவரும் மகிழ்ச்சியாய்ச் சென்று, அவரவர் வழியில் தயாரித்து கையில் நெய்யோடு வந்தனர். 

  "சிஷ்யர்களே, இப்போது உங்களால் தீபத்தை ஏற்ற முடியுமா?" என்று கேட்டவுடனே

   "ஓ.. முடியுமே!" என்று அவரவர் கொண்டு வந்த 'நெய்யைக்' கொண்டு தீபத்தை ஏற்றினர்.

     அனைவரின் முகத்தில் புன்னகையுடன் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. 

 "சிஷ்யர்களே, இந்த செயல்முறை மூலம் நீங்கள் என்ன தெரிந்து கொண்டீர்கள்?" 

    "குருவே, பாலில் வெண்ணெய், நெய் இருப்பதை அறிந்தோம்" 

    "பிறகு"
 
  "பால் கொண்டு தீபத்தை ஏற்றமுடியாது. ஆனால், அதை நெய்யாக மாற்றினால், அதனைக்கொண்டு தீபத்தை ஏற்றலாம் என்பதை உணர்ந்தோம்.
இதன் மூலம் நீங்கள் எங்களுக்கு என்ன கூறுகிறீர்கள் குருவே" 

    "பாலில் நீர் இருப்பதால் அது எரிவதில்லை. அதாவது, 'நீர்' என்பது 'ஆணவம்' 'அகங்காரம்' 'நான்' ஆகும்.  அது இருக்கும் வரையில், உங்களுக்குள் இருக்கும் 'ஜோதியை' உணர முடியாது. ஆனால், பாலைக் கடையும் போது, 'நீர்' பிரிந்து, பால் 'வெண்ணெயாக' மாறுகிறது. அதையும் வெப்பப்படுத்தும் போது, அதில் தங்கி இருக்கின்ற கொஞ்சம் நீரும் ஆவியாகி 'நெய்யாக' மாறுகிறது. இப்போது அதனைக் கொண்டு 'விளக்கை' ஏற்றலாம் அல்லவா! அதாவது, 'மனம்' என்பது 'பால்'. அதில் 'நான்' என்கிற 'நீர்' இருக்கும் வரை உனக்குள் இருக்கும் 'ஆன்மா' உணர முடியாது.  அதனால், மனதிலிருந்து 'நான்' பிரிக்க வேண்டும்.  அதற்கு தான் 'தியானம்' செய்ய வேண்டும். 'தியானம்' கூட ஒரு வகையில் 'மனதை கடைதல்' ஆகும். வேகமாக ஓடும், பறக்கும் மனதை ஓரிடத்தில் உட்கார்ந்து அமைதியாய் 'தியானம்' செய்யச்செய்ய தேவையில்லாத எண்ணங்கள் மறைந்துகொண்டே போகின்றது. அல்லது பாரமான தவறான, கெட்ட எண்ணங்கள் அடியில் தங்கும்.  நல்ல லேசான எண்ணங்கள் மேலே வரும். நாளடைவில் மனம் முழுவதும் லேசான நல்ல எண்ணங்களே நிரம்பும். தியானம் போல் 'பக்தியோடு' இறைவனைத் தொழுவது, இறைவனைப் பாடுவது, படிப்பது, இறைவனைப் பற்றி பேசுவது, இறைவனை நினைப்பது, கடமைகளை மனம் கோணாமல் செய்வது, பிறர்க்கு உதவி செய்வதில் கூட  'மனம்' தூய்மை நிலை (வெண்மை நிறம் கொண்ட வெண்ணெய் பதம்) அடைய முடியும்.  மேலும், அதன் பின்னே மனதை பக்குவப்படுத்துதல் மூலம் (ஜோதி நிலை கொண்ட நெய் பதம்) 'பிரம்மத்தோடு' அதாவது 'ஆன்மாவோடு' ஐக்கியமாகலாம். அந்த நிலையில் தான் 'எல்லா ஆன்மாவும் தனக்குள் இருப்பதாகவும், தன்னுடைய 'ஆன்மா' எல்லோரிடத்தில் இருப்பது போலவும் உணரும் பக்குவம் உண்டாகும்'. அதுவே 'பிரம்ம நிலை' ஆகும்." 

    "குருவே, இப்போது எங்களுக்கு நன்றாகப் புரிகிறது"  

    "பிரம்மம் பற்றிய உண்மையை அறிந்து கொண்டோம் குருவே" 

    "ஆகட்டும், நீங்கள் இதற்கான முயற்சியை முழு ஈடுபாடுடன்  செய்யுங்கள்.  நிச்சயம் பிரம்மத்தை அடைவீர்கள்". 

      படிக்கும் நீங்களும் முயலுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும். .

     நன்றி 

**************

      

Monday, 4 March 2024

25.2.2024 கவியரங்கம் 20 . "என்ன வளம் இல்லை எங்கள் தமிழ் மொழியில்" - இரவி-தமிழ்ச் செம்மல் விருது-பாராட்டு-3 நூல்கள் வெளியீடு -விருது வழங்குதல்


 


25.2.2024 மாமதுரைக் கவிஞர் பேரவை- கவியரங்கம் 20 . "என்ன வளம் இல்லை  எங்கள் தமிழ் மொழியில்" என்ற தலைப்பில் நடந்தது.

 மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் -, "என்ன வளம் இல்லை  எங்கள் தமிழ் மொழியில் " என்ற தலைப்பில் நடந்தது  மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது.

தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார் ,செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலர் கு .கி .கங்காதரன் நன்றி கூறினார் .

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில்,"என்ன வளம் இல்லை  எங்கள் தமிழ் மொழியில் "   என்ற தலைப்பில், கவியரங்கம்.நடந்தது கவிஞர்கள் இரா. இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், பெரி .கரு .சம .சமயக்கண்ணு  ,இரா .இராம பாண்டியன் ,மா .வீரபாகு ,கி. கோ.குறளடியான், ச .லிங்கம்மாள், மு .இதயத்துல்லா ( இளையாங்குடி ) , அஞ்சூரியா க .செயராமன் , தென்காசி ம .ஆறுமுகம் ,புலவர் மகா .முருகபாரதி ,செ..அனுராதா , சு முனைவர் .நாகவள்ளி ,  ஆகியோர் கவிதை பாடினார்கள் .

கவிஞர் இரா .இரவி தமிழ்ச்செம்மமல் விருது பெற்றதை  முன்னிட்டு பொறுப்பாளர்கள் பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தினார்கள் .

கவிஞர்கள் பாடிய கவிதைகளில் சிறந்த இரண்டு  கவிதை வாசித்த கவிஞர்கள்  பறம்பு நாகராசன் மற்றும்  ,இரா .இராம பாண்டியன் அவர்கள்  விருது பெற்றனர்.

நன்கொடையாக விழாக்களை  படம் எடுத்து உதவும்  படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ,கலை ஆசிரியர் சுந்தர கிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு விருதும் ,மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர் ,மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில் அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் விருதுகள் வழங்கினார். 

கவிஞர் இரா .இராம பாண்டியன் எழுதிய "கவிதைக் கனிகள் " நூலும் , துணைத்தலைவர் முனைவர் கவிஞர் இரா.வரதராசன் எழுதிய 'கோமாளியாக்கப்பட்ட கோமான்' என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூலும் , கவிதாயினி செ.அனுராதா எழுதிய   "ஆன்மிக அருளமுது" நூலும்  " வெளியிடப்பட்டன. 


வருகை தந்த கவிஞர்களுக்கு நூல்கள் வழங்கினர்.கவிஞர்கள் குறளடியான் ,தென்காசி திருவள்ளுவர் கழகம் ம. ஆறுமுகம்  ஆகியோர் கவிஞர் இரா .இரவிக்கு   வாழ்த்துக் கவிதை வாசித்தனர் .

கவியரங்கிற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத்  தந்து உதவும் பள்ளியின் தாளாளர், புரட்சிக்கவிஞர்  மன்றத்தின் தலைவர்   பி .வரதராசன்  அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்

புகைப்படங்களை எடுத்தவர்கள்: புகைப்படக் கலைஞர்" மதுரை உலா "ரெ.கார்த்திகேயன் மற்றும் சுந்தர கிருஷ்ணன் எடுத்த படங்கள்கை வண்ணம்







மாமதுரை கவிஞர் பேரவை கவியரங்கம் (25.2.2024)

<<என்ன வளம் இல்லை எங்கள் தமிழ்மொழியில்>>

என்னவளம் இல்லை எங்கள் தமிழ்மொழியில்

இதில் எல்லாமே நிறைந்நிருக்கும் உயர்மொழியில்

தன்னிகரே இல்லாத தத்துவங்கள் தமிழிலுண்டு

தானதர்மம் பற்றிபாடும்முத்துக்களிள் குவியலுண்டு

பின்னிவரும் கருத்துகளின் பெருமைமிகு பெட்டகமே

பேருலகில் நடனமிடும் அருமைமிகு நர்த்தனமே

உன்னத மொழிகளிலும் உயர்ந்தமொழி தமிழ்மொழியே

உலகெங்கும் பரந்திருக்கும் உயர்வான செம்மொழியே.

 

இயலிசை நாடகமும் ஏராளம் நம்மொழியில்

ஈடில்லா புகழ்காக்கும் பரந்தமொழி இம்மொழியே

நயமான கருத்துக்கள் நடமிடும் திருக்குறளில்

நடப்புகளை விவரிக்கும் திடமான கருப்பொருள்கள்

அயலாரும் போற்றுகிற அன்னைமொழி நந்தமிழே

அன்றாட சேவையால் உலகாளும் செந்தமிழே

தயக்கம் இல்லாது தவழ்கின்ற உயர்மொழியே

தடாகம் எல்லாமே பரவுகின்ற நிறைமொழியே.

 

நாடிந ரம்புகளில் நடனமிடும் நல்லுயிராய்

நமக்குள் நிறம்பியே உரமளிக்கும் இன்னுயிராய்  

தேடினும் கிடைக்காத திராளான காவியங்கள்

தில்லான பாடுகின்ற தீர்க்கமொழி ஓவியங்கள்

ஆடிவரும் தேராக அண்டமெலாம் கொண்டாடும்

அள்ளினாலும் குறையாத அற்புதங்கள் நின்றாடும்

ஈடில்லா படைப்புகள் எல்லாமே இம்மொழியில்

என்னவளம் இல்லை எங்கள் தமிழ்மொழியில்.

·        முனைவர் இரா. வரதராசன் (25.2.2024)



என்ன வளம் இல்லை எங்கள் தமிழ்மொழியில்!

         கவிஞர் இரா. இரவி

                     ***

என்ன வளம் இல்லை எங்கள் தமிழ்மொழியில்

எல்லா வளமும் பெற்ற முதல்மொழி தமிழ்!

சொற்களின் சொர்க்கமாக உள்ளது தமிழ்மொழி

சொக்க வைக்கும் சுந்தரமொழி தமிழ்மொழி


இலக்கணம் இலக்கியம் நிறைந்திட்ட தமிழ்மொழி

இனிமை நிறைந்திட்ட செம்மொழி தமிழ்மொழி

செம்மொழியின் அனைத்துத் தகுதிகளும் உள்ள தமிழ்மொழி

செம்மொழிகளில் சிறந்த மொழியும் தமிழ்மொழி


பன்னாடுகளில் ஒலிக்கும் மொழி தமிழ்மொழி

பண்பாட்டை பயிற்றுவிக்கும் மொழி தமிழ்மொழி

உலகப்பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி

ஒப்பற்ற காவியங்கள் காப்பியங்கள் உள்ள தமிழ்மொழி


தொல்காப்பியம் அகத்தியம் தொன்மையுள்ள தமிழ்மொழி

தொன்றுதொட்டு என்றும் இயங்கி வரும் தமிழ்மொழி

இணையத்தில் இந்திய மொழிகளில் முதன்மையான தமிழ்மொழி

இளையோர் பயன்பாட்டிலும் சிறந்திட்ட தமிழ்மொழி


பாரதி பாரதிதாசன் கவிஞர்களைத் தந்த தமிழ்மொழி

பாரம்பரிய பெருமைகள் மிக்க மொழி தமிழ்மொழி

உலகத்தமிழ் மாநாடுகள் பல கண்ட தமிழ்மொழி

உலகத் தமிழர்கள் போற்றிப் புகழும் தமிழ்மொழி


ஓர் எழுத்தில் பொருள் சொல்லும் தமிழ்மொழி

ஓரெழுத்து மாறினால் பொருள் மாறும் தமிழ்மொழி

கல் தோன்றி மண் தோன்றா முன்னே வந்த தமிழ்மொழி

கற்காலம் தொடங்கி இக்காலம் வரை நிலைத்திட்ட தமிழ்மொழி!

********************
















********************

என்ன வளம் இல்லை?  எங்கள் தமிழ் மொழியில்! 

                            சித்தாந்த ரத்தினம் 

              எஸ் வி ஆர் மூர்த்தி  பெங்களூர் 


என்ன வளம் இல்லை ?

எங்கள்  தமிழ் மொழியில்! 


அகரம் எனும்

 தமிழ்ச் சுவடு ! 

உலக மொழிகளுக்குப் படிச்சுவடு !

முதல் மொழி!

 மூத்த மொழி !

இயல் மொழி ! 

செயல் மொழி ! (4)


ஓசையொலி  உருவாக்கம் 

 ஓங்காரத் தமிழே ! - உலகம்

பேசும் மொழிக்கு கருவாக்கம்

 தூங்காதத் தமிழே !(6)


கோடாண்டு கொடியாண்டு  

கோலாண்டு குடியாண்ட

 நாடாண்டத் தமிழ் வேந்தர் மூவர்! 

ஏடாண்டத்  தமிழுக்கு ஏற்றம் ஆவார்! 

 நீடாளும் தமிழே ! நாடாளும் தமிழினமே !(10)) 


 குறிஞ்சிக் கோடுடைத்து 

 முல்லைக் காடுடைத்து

 மருதம் 

 மண் சமைத்த மரபினர்

 நெய்தல் 

பாய் விரித்த பரதவர் 

செய் வாய் மொழியே மூத்தக் குடி தமிழ் !(14)

 

மனந்தூய்மை மனத்தானாம் 

மாந்தர்க்குத் தன்மானத் தன்னுணர்வு !

இனந்தூய்மை  இனத்தானாம்

 இனத்திற்கு இயல்பான இனவுணர்வு !

தாய் மொழித் தன்னுணர்வேநாளும் 

 தமிழ் மூச்சு !

வாய் மொழி வழி மொழியே வாழும்

 தமிழ்ப் பேச்சு ! (18)) 


வாழும் வழி காட்டும் திரு வள்ளுவம் !- உயிர்

நீளும் மொழி கூட்டும்   திரு மந்திரம் ! 

 எழுத்தில்லா மொழிகளுக்கு எழுத்துருவாகும் காலம் ! - வேர் 

விழுதான தமிழ் உலகுக்கு வழி 

 கோலும் (22)


இன்றும் வாழும் எங்கள் தமிழ் - 

என்றும் வாழ்க என வாழ்த்துவோம் ! (24)

✍️

சித்தாந்த ரத்தினம் 

 எஸ் வி ஆர் மூர்த்தி  பெங்களூர் 

நாள் : 21.02.2024

*****************************

என்ன வளம் இல்லை 
எங்கள் தமிழ் மொழியில் 
புதுக்கவிதை 
கு.கி.கங்காதரன் 


இயற்கையின் வளங்களை அளவிட முடியாது
இறைவனின் படைப்புகளைக் கணக்கிட முடியாது 
செவ்வானத்தை மலைகளால்  மறைக்க முடியாது
செம்மொழியானத் தமிழை அழிக்க முடியாது 

தமிழிலினிலே  பலப்பல வகைத் தமிழ் 
தித்திக்கும் ராகமுள்ளத் தாலாட்டுத் தமிழ் 
நளினமான அசைவுள்ள நாட்டியத் தமிழ் 
நயமானக் கருத்துள்ளக் கவிதைத் தமிழ் 

எழுத்தும் பேச்சும் கொண்ட இயற்றமிழ் 
இனிய ஓசைகளை ஒலிக்கும் இசைத்தமிழ் 
ஆடல்பாடலுடன் கூத்து காட்டும் நாடகத்தமிழ் 
அகலாய்வை உலகுக்கு உரைக்கும் தொன்மைத்தமிழ் 

வாழ்வுக்கு பயன்படும் அறிவியல் தமிழ் 
வளமானக் கற்பனைக்குக் கலைத் தமிழ்
மொழியை முறையாய் அமைக்கும்  இலக்கணத்தமிழ் 
மண்ணின் பெருமை உணர்த்தும் காவியத்தமிழ் 

இணையத்தில் உலா வரும் கணினித்தமிழ் 
இறையினைத் தொழப் பாடும் தெய்வீகத்தமிழ் 
உடல் ஆரோக்கியம் காக்கும் மருத்துவத்தமிழ் 
உலகுக்கே நல்வழி காட்டும் நீதித்தமிழ் 

எண்ணிலடங்கா சிறப்புள்ள நம் தமிழ்மொழி 
என்றென்றும் எல்லோருக்கும் பொதுமொழி 
எடுத்துரைத்த தமிழின் செழுமைகள்  கையளவு
இன்னும் தமிழில் இருப்பது கடலளவு

****************