ஏமாளிகள் (தீபாவளி) ஸ்பெஷல்
சிறுகதை
மதுரை கங்காதரன்
எந்த தீபாவளிக்கும் இல்லாத திருப்தி இந்த ஆண்டு தீபாவளி 'ராசி' இல்லத்தில் இருக்கும் ரகு, அவன் மனைவி ராதை, மகன் ரவி மற்றும் மகள் ரதி ஆகியோருக்கு நிறைவைத் தந்தது. தீபாவளி அன்று பூஜை செய்து, கார இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டு, வெடி மத்தாப்பு கொளுத்தி கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
அவர்களின் தீபாவளி கொண்டாட்டங்கள் அன்றோடு முடிந்துவிடவில்லை. அந்த திருநாளில் பிரபலமான கடைவீதியில் விளம்பரத்தின் மூலம் அதிக பேரும் புகழும் பெற்ற அந்த குளு குளு கடையில் தாங்கள் தீபாவளிக்கு எடுத்த விலை உயர்ந்த ஆடைகளை ரகு தனது அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும், ரவி,ரதி தங்கள் பள்ளி, கல்லூரி நண்பர்களுக்கும் காட்டி அதன் பெருமைகளையும் வாங்கிய விலையும் சொல்லி அவர்கள் வாய் பிளக்கும் காட்சியினை கண் குளிர பார்த்தும் அவர்கள் படும் பொறாமையும் கண்டு ரசிக்கவேண்டும் என்று அனைவருக்கும் ஆசை இருந்தது. பொறுமையாக இருக்க முடியாமல் இருந்தாலும் அவர்கள் கட்டளையிட்டா நாளும் பொழுதும் நகர்கிறது? அதற்கு வேண்டிய காலமும் நேரமும் வந்தால் தானே பொழுது விடியும்?
ஆம்! பொழுது விடிந்தது. என்றைக்குமில்லாமல் கொஞ்சம் அதிக அக்கறையுடன் அலங்கரித்து தீபாவளி உடைகளை அழகாக உடுத்தி ரகு பள்ளிக்கும், ரதி கல்லூரிக்கும் போகத் தயாரானார்கள்.ரவி 'பென்சில் பிட்' ஜீன்ஸுடன் சற்று சிறிய அளவில் கண்களைப் பறிக்கும் நிறத்தில் சட்டை அணிந்து அடிக்கடி தன் உடையினை தானே பார்த்துக்கொண்டதோடு வேறு யாரேனும் பார்க்கிறார்களா? என்று மற்றவர்களைப் பார்த்துக்கொண்டே பள்ளிக்கு நடந்தான். அதேபோல் ரதி பெயருக்குத் தகுந்தாற்ப் போல் அழகிய கூந்தலுடன், லேட்டஸ்டாக 'நெட்'
டிஸைனில் சுடிதார் அணிந்து ஒய் யாரமாய் கல்லூரி செல்ல தயாரானா ள். இருவரும் அவர்களின் பேருந்துகளில் ஏறிச் சென்ற பிறகு ரகு தனக்காக தீபாவளிக்கு எடுத்த பேன்ட், சர்ட் போட்டுச் சென்று ஆபிசில் வேலை பார்ப்பவர்களிடம் காட்டி அசத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை உதைத்து விரைந்து சென்றான்.
மீதம் இருப்பது ராதை பாவம் அவள் எங்கு யாரிடம் சென்று தான் தீபாவளிக்காக எடுத்த விலை உயர்ந்த சேலை வகைகளைக் காண்பிப்பது என்று தெரியாமல் பரபரப்பாக சமையல் வேலைகள் செய்தது முடித்தாள்.
அப்பாடா என்று ராதை உட்கார்வதற்கும் அவளின் வீட்டு காலிங் பெல்லை பக்கத்து வீட்டு பங்கஜம் அழுத்துவதற்கும் சரியாக இருந்தது.
"யாரு ?" என்று கேட்டுக்கொண்டே கதைவைத் திறந்தாள்.
"நான் தானம்மா பக்கத்து வீட்டு பங்கஜம்!" என்று குரல் வந்த அதே நேரத்தில் ராதை கதவை திறந்தாள் ராதை.
"வாங்க பங்கஜம் அக்கா" தீபாவளி எல்லாம் எப்படி கொண்டாடுனீங்க. ஊர்லேயிருந்து உங்க மகன், மகள் வந்தார்களா?" என்று விசாரித்தாள்.
"ஆமாம்மா! இந்த தீபாவளி வெகு நல்லாவே இருந்தது. எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு குடும்ப பண்டிகையாய் கொண்டாடும்போது மனசு இதமா இருக்குது. எல்லாக் கவலைகளும் பறந்து போயிடுச்சி. வீடு முழுசும் சந்தோசம் நிறைஞ்சு காணப்படுது. அது சரி உங்க வீட்டிலே எப்படி?"
இந்த வார்த்தை எப்போது தான் கேட்பாள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த ராதை இங்கேயும் அப்படித்தான். ஆனால் இந்த தீபாவளி இருக்கே எங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தீபாவளி! சொன்னா அவ்வளவு சுவையாய் இருக்காது. ஆனால் நான் காட்டுறது பாருங்க.பிறகு புரிஞ்சுக்குவீங்க. நாங்க எப்படியெல்லாம் மகிழ்ச்சி அடைஞ்சிருப்போம்ன்னு ! கொஞ்சம் இருங்க இதோ வந்துடுறேன்" என்று பீரோவினைத் திறந்து தங்கத்தை விட மதிப்போடு வைத்திருந்த இந்த தீபாவளிக்கு எடுத்த சேலையை மற்றும் இத்தியாதிகளை எடுத்து அவளின் முன்னால் வைத்து திறந்து காட்டினாள்.
அதைப் பார்த்த உடனே முகம் மலர்ந்தவளாய் இரு கண்களை அகல விரித்து 'பட்டிக்காட்டான் மிட்டாய் கடையினை' பார்ப்பது போல் அவைகளைப் பார்த்தாள் பங்கஜம்.
"என்ன இப்படி வச்ச கண்ணு மாறாம அசந்து பார்க்கீறீங்க. பார்க்கிறபோதே இவ்வளவு அதியப்படுறீங்களே ! இதோட விலையைக் கேட்டா இன்னும் ஆச்சரிப்படுவீங்க." என்று பேசிக்கொண்டே போவதை 'நிறுத்து' என்று சொல்லாமல் சொல்வது போல்
"இதோட விலை தானே ! எனக்குத் தெரியுமே. இந்த சேலை அறுநூறு ரூபாய். மற்ற வகையறா இருநூறு ரூபா. ஆக எல்லாம் சேர்ந்து எண்ணூறு தானே?" என்று பங்கஜம் சொன்னதை கேட்ட ராதை 'ஆ' என்று வாயை பிளந்தாள்.
"என்னம்மா இப்படி வாயை பிளந்து நிக்கிறே? என்ன நீ சுய நினைவோடு இருக்கேயா?" என்று சற்று உசுப்பினாள்.
கொஞ்ச நேரத்தில் சுதாரித்தவளாய் "என்னக்கா சொல்றீங்க? எண்ணூறு ரூபாயா! நாங்க இவை எல்லாமே சேர்த்து மூவாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினோம்! நீங்க எங்கே வாங்குனீங்க?"
" நம்ம கைராசிக்' கடையியிலே தான்"
"நாங்களும் அங்கு தான் வாங்கினோம். ஆமா நீங்க எப்போ வாங்குனீங்க?"
"தீபாவளிக்கு ஒரு மாசம் முன்னாடித் தான்!"
"நீங்க எப்போ வாங்குனீங்க?"
"தீபாவளிக்கு முந்தின நாள் தான். அந்தக் கடைக்காரன் இது புதுசா தீபாவளிக்கு வந்திருக்கின்ற டிசைன்னு சொன்னான். அதில்லாம நேத்து தான் வந்திறங்கி யிருக்குன்னும் சொன்னான். நீங்க தான் முதல்லே வாங்குறீங்க என்று அப்படி எப்படின்னு ஏதேதோ சொன்னான். அதோடு நிக்காம தீபாவளிக்காகத் தான் இந்த விலை!அதுக்கப்பறம் வந்தா இதோட விலையே தனின்னு அளந்தான். மனுஷன் எங்களை ரொம்பவே ஏமாளியாக்கி விட்டானே" என்று ஆதங்கப்பட்டாள்.
இருந்தாலும் மனசு ஒப்புக்கொள்ளாமல் "நல்ல பாருங்க. ஒரு வேளை துணியின் தரம் இது மாதிரி இருந்ததா?" என்றாள் ராதை.
"சாட்சாத் இதே தரம். அசல் இதே துணி தான்.பொதுவா தீபாவளி சமயத்திலே எல்லோரும் போனஸ் வாங்கி அவங்ககிட்டே கை நிறைய பணம் இருக்கும். அது எக்ஸ்ட்ராவாக கிடைச்ச பணம். அதை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம எல்லாத்தையும் தீபாவளி அன்னைக்கே செலவழிக்கனும்ன்னு நினைப்பாங்க.அதையே ஒரு பிளஸ் பாயிண்டாக எடுத்துக்கொண்டு பெரிய பெரிய கடைக்காரங்க மக்களுக்கு பிடித்த கண்ணைக் கவரும் ஆடைகளுக்கு எக்கு தப்பா விலையை அவங்க இஷ்டப்படி எழுதி விற்றுத் தள்றாங்க.அதை வெட்டி அந்தஸ்துக்காக அதிக விலை கொடுத்து வாங்குறவங்க தான் ஏமாளிங்க! மேலும் பேரம் பேச முடியாது. அதில் போட்டுயிருக்கிற விலையை வாய் மூடி ரூபாயை எண்ணிக்கொடுத்து வந்துட்டே இருக்கணும். பேரம் பேசுறது ஒரு கௌரவக் குறைச்சல்னு நினைக்கிறாங்க. இந்த மாதிரி ஏமாத்து வேலை ஜவுளிக் கடைகள்ளே மட்டுமில்லே. எல்லாக் கடைக்காரங்களும் அப்படித் தான் இருக்காங்க. குறிப்பா பண்டிகை, விசேஷம் நாள்லே அவங்க வச்சது தான் விலை. அதிலேயும் இந்த மாதிரி பெரிய கடைகளிலே ரொம்ப சாதாரணமாக நடக்குது. அப்பறம் நீ இந்த மாதிரி வாங்கி ஏமாந்த விஷயம் வேறு யார்கிட்டேயும் சொல்லிடாதேயம்மா. அப்பறம் உன்னை சரியான 'ஏமாந்த சோனகிரி' ன்னு முத்திரை குத்திடுவாங்க" என்று எச்சரித்து நடையைக் கட்டினாள்.
பக்கத்து வீட்டு பங்கஜம் பேசியதை இன்னமும் ஜீரணிக்க முடியாமல் அல்லாடிக் கொண்டிருந்தாள் ராதை. தீபாவளி அன்று இருந்த மகிழ்ச்சி கனவுகள் இப்போது காற்றோடு காற்றாய் கரைந்தது. ஏதோ பறி கொடுத்தவள்போல் வேறு எதிலும் கவனம் செலுத்த இயலாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
அன்றைக்கு என்றைக்கும் இல்லாமல் சொல்லி வைத்தாற் போல் ரகு, ரவி, ரதி மூவரும் ஒரே நேரத்தில் வீட்டிற்கு நுழைந்தார்கள். அந்த மூவரின் முகத்தில் காலையில் இருந்த முகமலர்ச்சி இப்போது பூஜ்ஜியம் அளவில் இருந்தது. அவர்கள் மூவரும் ஒருபக்கம் உம்மனாம் மூஞ்சியாய் இருந்தார்கள். அவர்களின் எதிர்புறத்தில் ராதை அதேபோல் பேய் அறைந்தாற்போல் இருந்தாள். யார் எப்படி முதலில் ஆரம்பிப்பது என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்ட இருந்தார்கள். சற்று நேரம் கழித்து ரகு தான் முதலில் காலையில் தன்னுடைய அலுவலகத்தில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.
"ராதா! காலையிலே ரொம்ப குஷியோட ஆபிசுக்குப் போனேனா! எனக்கு ஒரே ஷாக் ! எல்லோருக்கும் நான் ஷாக் கொடுக்கணும்ன்னு நினைச்சேன். ஆனா என்னை முந்திக் கொண்டான் அந்த ஆபீஸ் பாய் மணி"
"அப்படி என்னங்க உங்களுக்கு ஷாக் கொடுத்தான்?"
"என்னவா? என்ன நடந்ததுன்னு அப்படியே சொல்றேன். அந்த மணிப்பயல் என்னோட சர்ட், பேன்ட் போலவே போட்டிருந்தான். என் கண்களை கசக்கி அது உண்மையான்னு உத்துப் பார்த்தேன். ஏன்னா அவனுக்கு என்னோட ரேஞ்சுக்கு டிரஸ் எடுக்கிற அளவுக்கு வசதி இல்லை. என்ன நடந்ததுன்னா....
"என்ன மணி? என்னோட டிரஸ் போல..!"
"ஆமாம் ரகு சார். நானும் அதைத் தான் கேட்கணும்ன்னு நினைச்சேன்!"
"மணி, நீ எப்போதும் விலை கம்மியானத் தானே டிரஸ் எடுப்பே! இந்த டிரஸ்...." என்று இழுத்தான் ரகு.
"ஆமாம் இந்த டிரஸ் விலை ரொம்பவே சீப் தான். சர்ட் ஜஸ்ட் இருநூறு ரூபாய். பேன்ட் முன்னூறு . மொத்தம் ஐநூறு. இதை எங்க மாமா ரொம்ப பிரியப் பட்டு வாங்கித் தந்தார்.
"என்ன மணி சொல்றே?"
" நிஜம்மாத் தான் சொல்றேன். நான் எதுக்கு உங்ககிட்டே பொய் சொல்லணும்.அப்படி பொய் சொல்றதா இருந்தா இதோட விலை மூவாயிரம்னு சொல்லியிருப்பேன்"
"ஆமா , நீங்க என்ன விலைக்கு வாங்குனீங்க. எப்பவும் நீங்க காஸ்ட்லி தானே எடுப்பீங்க? நீங்க எப்படி இவ்வளவு சீப்பாக எடுத்தீங்க?"
"மணி, நான் இதை நிஜம்மா மூவாயிரம் கொடுத்து தான் வாங்கினேன்.அந்த பிரபலமான கடையிலே தீபாவளிக்கு முந்தின நாள் வாங்கினது."
"அவ்வளவு கூட்டத்திலே நெரிசல் பட்டு இவ்வளவு விலை கொடுத்து ஏமாந்து வாங்கியிருக்கீங்கங்களே!"
'உங்களை இந்த ஆண்டின் 'சிறந்த ஏமாளி' என்கிற பட்டம் கொடுக்கலாம்' என்று தன் மனதிற்குள் சொல்லிக்கொண்ட்டான்.
"சரி.. சரி வேலையைப் பாருங்க" என்று எல்லோரையும் அவரவர் சீட்டிற்கு அனுப்பி விட்டேன். அப்போது மணி சொன்னதிலிருந்து அன்னைக்குப் பூரா எனக்கு ஒரு வேலையும் ஓடலே.எப்போதுடா மணி ஆகும். வீட்டிற்கு போய்ச் சேரலாம்னு பறந்து வந்துட்டேன்" என்று காலையிலிருந்து அமுக்கி வைத்திருந்த மன அழுத்தத்தை வெளியில் விட்டான்.
"அப்பா. உங்களுக்கு மட்டுமில்லே. எனக்கும் இதே கதி தான்" என்று ரவி தன் பங்கிற்கு புலம்பினான் .
"என்னடா சொல்றே. கொஞ்சம் விவரமா சொல்லு" என்றான் ரகு.
"அம்மா , அப்பா நீங்க எனக்காக ஆசையாய் எடுத்த இந்த டிரஸ் வெறும் அறுநூறு ரூபாய் தானாம். ஆனா நாம இதை ஆயிரத்து எண்ணூறு ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கோம்.
என்னோட பிரண்ட் ரஹீம் தன்னோட மாமா பையனுக்கு இந்த மாதிரி டிரஸ் தான் அவங்க அப்பா ரம்ஜானுக்காக வாங்கித் தந்தாராம்.
அவன் சொல்லி முடிக்க 'உம்' மென்று இருந்த ரதியை பார்த்து
"ஏண்டி நீ சும்மா நிக்கிறே, நீயும் ஏதாவது சங்கதி வச்சிருக்கிறியா?" என்று கேட்டார் ரகு .
மெல்ல தலையாட்டி "ஆமாம்பா. நான் போட்டியிருக்கிற இந்த சுடிதார் செட் வெறும் ஐநூறு ரூபா தானாம். ஆனா கடைக்காரர் நம்ம கிட்டே ஆயிரத்தி ஐநூறு வாங்கிட்டு பெரிய நாமத்தை சாத்திட்டார். ஒரு மாசத்துக்கு முன்னாடி என்னோட பிரண்ட் தன்னோட பிறந்தநாளுக்காக இதே டிரஸ் ஐந்நூறுக்கு வாங்கினாலாம்" என்று ஆளுக்காள் அவரவர் தங்களின் ஏமாளித் தனத்தை கூற கடைசியாக ராதையும் காலையில் பங்கஜம் வந்து போனதையும் அவள் சொல்லிவிட்டுப் போனதையும் விலாவாரியாக சொன்னாள். எல்லோரும் கோரோஸாக
"ஆஹா.. எங்கள் குடும்பத்திற்கு 'ஏமாளிகள் குடும்பம்' னு தான்னு பெயர் வைக்கணும். ராசி இல்லம் பதிலா 'ஏமாளிகள்' இல்லம் கூட வைக்கலாம் என்று அந்த வருத்தத்திலும் ஆனந்தமாய் சொல்லிக் கொண்டனர்.
அது போதாது. நம்மளோட தீபாவளி ஸ்பெஷல் 'ஏமாளிகளின் ஸ்பெஷல்' என்று சொல்லணும்.
சற்று அமைதிக்குப் பின்னர் இப்போது ரகு சற்று சீரியஸாக சொன்னான்.
"இப்போ பார்த்தீங்களா. அதிக ரூபாய் கொடுத்து வாங்கினாத் தான் நல்ல டிரஸ்னு நினைக்கிறது ரொம்ப தப்பு.மேலும் தீபாவளி நெருங்க நெருங்கத் தான் லேட்டஸ்ட் டிரஸ் கிடைக்கும்னு இனி நினைக்காம அடுத்த வருஷம் தீபாவளிக்கு ஒரு மாசம் முன்னாடி கூட்ட நெரிசல் இல்லாம குறைந்த விலையிலே பிடிச்ச நல்ல டிரஸ் எடுத்திடனும்.'போனஸ்' கிடைக்கிற வரைக்கும் காத்திருக்காம ஒவ்வொரு மாசமும் ஒரு கணிசமான தொகையை சேமிச்சு அதுலே எல்லாரும் டிரஸ் எடுத்து தீபாவளியை உண்மை மகிழ்ச்சியோடு கொண்டாடி அந்த 'ஏமாளிப் பட்டம்' வராமே பார்த்துக்கணும். இதை நமக்கு தெரிஞ்ச உறவு மற்றும் நண்பர்களுக்கு சொல்லி புரிய வைக்கணும்."அதிக விலை கொடுத்து அவதி படவேண்டாம்" இதை எப்போதும் நம்ம மனசிலே வச்சிருக்கணும். சரி .அவங்க அவங்க வேலைகளைப் பாருங்க" என்று முற்றுப்புள்ளி வைத்தான் ரகு.
============================== ============================== =====
ஆக்கியோன் மதுரை கங்காதரன்.
வணக்கம்.
****************************** ****************************** ******************************
No comments:
Post a Comment