Pages

Monday, 13 January 2014

WE DO NOT CARE ABOUT OUR MONEY கவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்

கவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்
WE DO NOT CARE ABOUT OUR MONEY 

விழிப்புணர்வு கட்டுரை 
மதுரை கங்காதரன் 

இந்த காலத்தில் ஒவ்வொருவரும்  உழைப்பின் மூலம் பணத்தை சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமானகாரியம் தான். உழைக்கும் அளவிற்கு ஊதியம் கிடைப்பத்தில்லை என்பது வேறு விஷயம். அதிலும் கிடைக்கும் / சம்பாதிக்கும் பணத்தை நாம் காப்பாற்றிக் கொண்டு வருகிறோமா ? / செலவழிக்கும் எல்லா பணத்திற்கு சரியாக கணக்கு வைத்துக் கொள்கிறோமா? அல்லது எல்லாவித செலவும் ஆக்கப்பூர்வமாக / உபயோகமாக செலவழித்திருக்கிறோமா? என்கிற கேள்வியை நாமே கேட்டுக்கொண்டால் அதற்கு பதில் 'இல்லை' என்று ஆணித்தரமாக வரும். வேண்டுமென்றால் ஒப்புக்காக 'எல்லாமே சரியாய் இருக்கும்' என்பார் பலர். உண்மையில் அன்றாட வாழ்கையில் நமக்குத் தெரியாமல் நமது சம்பாத்தியத்தின் ஒரு சில பகுதியை பலவழிகளில் இழக்கிறோம் என்றால் ஆச்சரியமாக இருக்கின்றதா? அதற்கு ஒரு உதாரணம் சொல்லி விவரித்தால் உடனே உங்களுக்கு உண்மை புரியும்.
ஒரு மன்னன் தனது மதி மந்திரியுடன் மாறுவேசத்தில் நகர் வலம் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டுத் திண்ணையில் ஒருவன் தனது பழைய செருப்பை ஒரு விலையுயர்ந்த பட்டுத் துணியால் துடைத்துக்கொண்டிருப்பதை பார்த்த மன்னன் ஆச்சரியமடைந்தார். அதற்கான காரணத்தை மந்திரியிடம் கேட்க அவரோ " அரண்மனைக்குச் சென்ற பிறகு அதன் ரகசியத்தைச் சொல்கிறேன்" என்றார்.

ஆவல் தாங்க முடியாத மன்னன் அரண்மனை அடைந்தவுடன் தான் கண்ட அந்த காட்சியின்  ரகசியத்தை சொல்லச் சொன்னார். அதற்கு மந்திரி " ரகசியம் ஒன்றுமில்லை, அதாவது அந்த பழைய செருப்பு அவன் சொந்த பணத்தில் வாங்கியதாக இருக்கும் . ஆனால் அவன் துடைத்துக் கொண்டிருந்த விலையுயர்ந்த பட்டுத் துணி அவன் தாத்தா வாங்கியதாக இருக்கும்" என்று பதிலளித்தார்.
இதிலிருந்து தெரியவருவது நாம் சொந்த பணம் கொடுத்து வாங்கிய எல்லாப் பொருட்களையும்  பத்திரமாக வைத்துகொள்வோம். ஆனால் வேறு ஒருவர் வாங்கிய பொருள் எவ்வளவு விலையுயர்ந்ததாக இருந்தாலும் அதை அனாவசியமாக கையாளுவோம். அல்லது நமது பணத்தின் இழப்பு குறைவாக / சொற்பமாக இருந்தால் அதைப் பற்றி அவ்வளவாக கவலைப்படுவது இல்லை அல்லது தெரிந்தும் தெரியாமல் விட்டுவிடுகின்றோம். அந்த வகையில் இப்போது சில உதாரணங்களைப் பார்ப்போம்.

1. பல இடங்களில் சில்லறை வாங்க மறக்கிறோம் அல்லது சில்லறை வாங்காமல் விட்டுவிடுகிறோம் :
நாம் அன்றாடம் வாங்கும் பலசரக்கு, மருந்து, காய்கறி, ஆட்டோ, பஸ்களில் மிகக் குறைந்த சில்லறை முதல் 500 ரூபாய் கொடுத்து சில்லறை  வாங்க மறந்தது உங்கள் வாழ்கையில் எத்தனை முறை என்று உங்களால் சொல்ல முடியுமா?    

பெரும்பாலோர்  மறப்பது எந்த சூழ்நிலையில் என்றால் அரக்கபரக்க பலவித யோசனைகளில் வேலைக்குச் செல்பவர்களே அதிகம் பேர் இருக்கின்றனர் . அப்படி பலவித சிந்தனைகளில்  பஸ்சில் ஏறுபவர்கள் / பயணம் செய்பவர்களே அதிகம். மேலும்  பஸ்சில் ஏறியவுடன் இறங்கும் ஸ்டாப்பில் தான் கவனம் பெரும்பாலும் இருக்கும்.அதனால் சில்லறை வாங்க மறந்து விடுகின்றனர். இது ஒரு காரணம். சில கண்டக்டர்கள் வேண்டுமென்றே சில்லறை தராமல் இழுத்தடித்து மறக்க வைப்பது சற்று வருத்தம் தரும் விஷயம். பலமுறை 'சில்லறை பாக்கி' என்று கேட்டாலும் ஞாபகப் படுத்தினாலும் கொடுப்பதில்லை. சிலர் பயணச் சீட்டில் எழுதி கொடுப்பார். அப்போதும் சில்லறையை கேட்க மறக்கின்றனர். எப்படி இருந்தாலும் நாம் மறந்துவிட்டால் சில்லறை 'அம்போ' தான். ஆனால் பல கண்டக்டர்கள் சரியாக கேட்டு தருகின்றனர் என்பது ஆறுதல் தரும் விஷயம்.

 2. வங்கி , அஞ்சல் சேமிப்பு :
இன்றைய சூழ்நிலைகளில் ஒரே இடத்தில் இருந்து  குடும்பம் / வாழ்க்கை நடத்துவது சற்று இயலாத காரியம் தான். இடமாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று. அத்தகைய சூழ்நிலையில் வீடு மாறுவது தவிர்க்க முடியாததாகும். அந்த நிலையில் சிலர் இருக்கின்ற இடத்தில் இருக்கும் வங்கிகளில் , அஞ்சல் அலுவலகங்களில் பணபரிவர்தனை செய்வதற்கு சேமிப்பு கணக்குகளைத் தொடங்குகிறார்கள். ஆனால் இடம் மாறும்போது பலர் தங்களுடைய சேமிப்பு கணக்குகளை மாற்றுவதில்லை. குறைந்த இருப்பு தானே இருக்கிறது ! 'போனால் போகிறது' என்று விட்டுவிடுகின்றனர். சிலர் வங்கி கணக்கு இருப்பதையே மறந்து விடுகின்றனர்.

சில நேரங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கும்போது 'நாமினி' கொடுப்பதில்லை. அந்த சமயத்தில் கணக்கு தொடங்கிய நபர் மரணமடைந்து விட்டாலோ அல்லது ஞாபக மறதி ஆகிவிட்டாலோ அந்த பணம் அவருக்கு இழப்பு தான்.

இதேபோல் நிரந்தர டெபாசிட்டுகள் , பங்குகள், பாண்டுகள், இன்சுரன்ஸ், பத்திரங்கள் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அனைத்திலும் பணம் போடுகிற வரைக்கும் உங்கள் கால் பிடிப்பார்கள். ஆனால் பணம் வாங்குவதற்குள் போதும் , போதும் என்றாகிவிடும். கையெழுத்து சரியில்லை, யார் போட்டனரோ அவரே வரவேண்டும், அடையாள அட்டை என்று படாதபாடு படுத்திவிடுவார். அந்த சூழ்நிலையில் பலர் அலைவதற்கு சோம்பேறித்தனப்பட்டு பணத்தை இழப்பர். அல்லது புரோக்கர்கள் மூலம் சிறிது பணம் கொடுத்து வாங்குவர். இதுபோல் உங்கள் வாழ்கையில் எதிர்கொண்டு அதனால் கஷ்டப்பட்டதுண்டா? நினைத்துப் பாருங்கள். அவ்வாறு கேட்காத கணக்குகள் சுமார் கோடிக்கணக்கில் பணம் வங்கியில் / அஞ்சல் அலுவலகத்தில் இருக்கின்றன. அது யாருக்குச் சொந்தமோ? என்ன செய்கிறார்களோ?

3. இன்சுரன்ஸ் பிரிமியம் :
பலர் ஆசையிலோ அல்லது நண்பர்கள் / உறவினர்கள் நச்சரிப்பில் இன்சுரன்ஸ் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் பலர் ஒரு சில பிரிமியங்கள் வரை கட்டுகிறார்கள். பிறகு கட்டாமல் விட்டுவிடுகிறார்கள். அந்த நிலையில் நீங்கள் கட்டிய பிரிமியம் பணம் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு சென்று விடுகின்றது. அவ்வாறு 'கிளைம்' பண்ணாத ரூபாய் கோடிக் கணக்கைத் தாண்டும். உங்களுக்கு இவ்வாறு நேர்ந்து பணத்தை இழந்திருக்கின்றீர்களா?  ஆகவே கணக்கைத் தொடங்கும் போது நீண்ட வருடம் தொடர்ந்து கட்டமுடியுமா? என்று பலமுறை யோசித்து சேருங்கள்!  

4. பி.எப். என்கிற வருங்கால வைப்பு நிதி :
ஒவ்வொருவரும் வேலைக்குச் சேரும் போது பெரும்பாலான நிறுவனங்களில் அவர்கள் பெயரில் வருங்கால வைப்பு நிதி கணக்கு ஒன்று கட்டடாயம் தொடங்கி வைப்பார்கள். அதில் தொழிலாளர் சம்பாதிக்கும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதமும் , அதே  தொகை முதலாளியும் செலுத்தவேண்டும். அதற்கு வட்டி மற்றும் பென்சன் (பத்து ஆண்டு பிறகு) உண்டு. ஆனால் நடைமுறையில் பெரும்பாலான தொழிலாளர்கள் ஆறு  மாதங்கள் முதல் ஒருவருடத்தில் வேறு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து விடுகின்றனர். அப்போது அவர் அறியாமலே அவரின் பணம் இழக்க நேரிடுகிறது. அதை பழைய நிறுவனத்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரியினிடத்தில் கையெழுத்து வாங்க வேண்டும் என்கிற சோம்பேறித்தனத்தால் யாரும் வாங்குவதில்லை. மேலும் நிறுவனத்தை விட்டு விலகி வரும்போது பலர் சுமூக உறவுடன்  வெளிவருவதில்லை.அந்த நிலையில் அவர் தன்னுடைய கணக்கில் இருக்கும் பி.எப் பணம் இழக்கிறார். இந்த பணம் அந்த தொழிலாளியின் கைக்கு வராமல் அந்த பி.எப் கணக்கில் இருப்பதால் அந்த இழப்பை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இப்போது ஆன்-லைன் சேவை .வந்துவிட்டது. ஆகவே பணத்தை பெறுவதற்கு ஒரு கஷ்டமும் இல்லை. மேலும் பி.எப் அலுவலகம் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அதன் மூலம் ஒருவித குறையும் இல்லாமல் உடனுக்குடன்  மிகச் சிறப்பான  சேவை செய்து வருகின்றது.  

5. வாகனம், ரியல் எஸ்டேட், பிளாட், அடகு மற்றும் வீடு:
மீடியாக்கள், பத்திரிகைகள், ஆலோசகர்கள் மற்றும் வியாபாரிகள் எல்லோரும் மேற்கூறியனவற்றில் முதலீடு செய்யுங்கள். கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகளைக் காட்டி எப்படியோ தலையில் கட்டி அதற்கு நிதி உதவியும் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஓரிரு வருடம் கழித்துத் தான் தெரிகின்றது அவர்களால் 'வட்டி , அசல்' கட்ட முடியாது என்று. பிறகென்ன ! நட்டையோ, குட்டையோ கிடைக்கும் விலையில் தள்ளி விடுவதன் மூலம் கொஞ்சம் பணத்தை இழக்கின்றனர். அதாவது பலர் கையில் சூடுபட்டுத் தான் உண்மை நிலை உணருகிறார்கள். அதனால் எவ்வளவு பணம் செலவு ! நஷ்டம்! ஆகவே கையில் பணம் இருந்தால் எதுவும் வாங்கலாம். பணம் இல்லாமல் வட்டியில் வாங்கினால் வாழ்கை 'பணால்' தான். மேலும் வாங்கும்போது இருந்த விலை விற்கும்போது கிடைப்பதில்லை.

 6. அதிக வட்டிக்கு ஆசை :
சிலர் பணத்தை அதிக வட்டிக்கு கடன் கொடுக்கிறார்கள். ஆனால் நாளடைவில் வட்டி வராமல்   அசலும் இழந்து தெருவில் வந்தோர் பலருண்டு. ஆகவே அதிக வட்டிக்கு ஆசைபடாமல் வங்கியில் போட்டு கிடைக்கும் வட்டி வந்தால் போதும் என்று இருப்பது உத்தமம். இல்லாவிட்டால் அதிக வட்டியால் பணம் கண் முன்னே அழிந்து போவதைப் பார்க்கலாம்.

7. வீட்டில் மறைத்து வைத்தல்:
சிலருக்கு வீட்டில் ஏதோ ஒரு இடத்தில் பணத்தை மறைத்து வைக்கும் பழக்கம் உண்டு. அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் மறைத்து வைப்பதால் நாளடைவில் எங்கு வைத்தோம் என்று தெரியாமல் இருப்பார்கள். அதனாலும் பணம் இழக்கலாம்.

8. அடிக்கடி 'பாஸ் வேர்ட்' மாற்றுவது :
சிலர் அடிக்கடி   'பாஸ் வேர்ட்' மாற்றுவதால் கடைசியாக என்ன வைத்தோம் என்று தெரியாமல் அவர்களின் வங்கி அல்லது மற்ற கணக்கை இழக்கிறார்கள். அதனாலும் பணம் இழக்கலாம்.

9. தங்கம், வெள்ளி, பங்குச்சந்தை , ஊக வணிகம் :
இப்போது பரப்பரப்பாக மக்களை ஏமாற்ற மேற்கூறியவற்றைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் கையில் உள்ள எல்லாப் பணத்தை இழந்தபிறகு தான் அது மக்களை காவு கொடுக்கும்  'புதைகுழி' என்று தெரிகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் இதன் மூலம் சில ஆயிரம் கிடைப்பதை பெரிதாகவும் பல லட்சம் இழந்ததை மறைத்தும் விடுகின்றனர். ஆகவே மக்களுக்கு அது ஒரு கவர்ச்சியான முதலீடாகத் தெரிகின்றது.    

10. பாதுகாப்பு பெட்டகம் (Safety Locker)
ஒரு சிலர் பத்திரங்கள், நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரப்படுத்தி வைக்கின்றனர். சில சமயங்களில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அந்த பொருட்களை இழக்க நேரிடுகின்றது. ஆகவே இதை நல்ல முறையில் நம்பிக்கையுள்ள மற்றொருவருக்கும் தெரிகின்றவாறு உபயோகப்படுத்தினால் ஆபத்து சமயத்தில் அது பயன் தரும்.

11. நண்பர்களிடம் / உறவினர்களிடம் பணம் கொடுத்து வைப்பது :
ஒரு சிலர் நம்பிக்கையுள்ளவர்களிடம் பணத்தைக் கொடுத்து வைக்கின்றனர். அவர் இக்கட்டான அல்லது ஆபத்தான சூழ்நிலையில் மாட்டிக்கொள்ளும் போது நமது பணத்தை அவரிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் இழக்க நேரிடுகின்றது.   

12. எலக்ட்ரானிக் சாமான்கள் :
இன்றைய நாகரீக உலகில் தினமும் நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாமான்கள் வாங்குவது தவிர்க்க முடியாது தான், ஆனால் போட்டி மற்றும் உற்பத்தியினால் அதன் விலைகள் நாளுக்கு நாள் குறைவதோடு அதன் கவர்ச்சியும், வசதியும் கூடிக்கொண்டே போகின்றது. நேற்று பத்தாயிரம் கொடுத்து வாங்கிய எலக்ட்ரானிக் சாமான்கள் இன்று அதே பொருட்கள் சந்தையில் ரூபாய் ஏழாயிரம், எட்டாயிரம் ரூபாய்க்குக் கிடைகின்றது. இதனாலும் நாம் பணத்தை ஓரளவு இழக்க நேரிடுகின்றது. 


இந்த கட்டுரை பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
 தங்கள் ஆலோசனைகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

நன்றி , வணக்கம்..

//////////////////////////////////////////////////*********************************\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

 

         

 

No comments:

Post a Comment