Pages

Monday 21 July 2014

பங்குச் சந்தை , ஊக வணிக ரகசியங்கள் - SHARE , ON LINE TRADING SECRETS

பங்குச் சந்தை மற்றும் ஊக வணிக ரகசியங்கள் 


விழிப்புணர்வு கட்டுரை 


மதுரை கங்காதரன் 

உங்கள் நல்வாழ்க்கைக்காக ஒரு கதை சொல்லப் போகிறேன். அது பங்குச் சந்தை மற்றும் ஊக வணிகம் பற்றிய கதை. நல்லா கேளுங்க ! அதாவது ..


'பங்கு' என்பதை எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 'பிரித்தல்' என்று கூறலாம். அதாவது ஒரு பெரிய மரம் ஒருவரால் மட்டுமே தூக்க முடியாது. ஆனால் அதை ஒருவர் பலருக்கு அவர்களின் பலத்தைப் பொறுத்து சிறிய / பெரிய பகுதிகளாக பிரித்து கொடுத்தால் அதை எங்கு வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லலாம். இது ஒரு வகை. மற்றொரு வகை என்னவென்றால் ஒரு இரும்பு குண்டு தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். ஆனால் அதே இரும்பு குண்டை தட்டையாக்கி கப்பல் வடிவில் செய்து தண்ணீரில் போட்டால் அது மிதக்கிறது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குப் புரிகின்றதா?


முதலாவது சொன்னதன் விளக்கம் என்னவென்றால் பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் நிறுவுவதற்கு மிகப் பெரிய முதலீடு வேண்டும். அதை அரசாங்கமே ஆனாலும் தனியாக முதலீடு செய்ய இயலாது. ஆனால் பெரிய நிறுவனம் அமைந்தால் தான் வேலை வாய்ப்பு பெருகும். வியாபாரம் பெருகும். அந்த வியாபாரம், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு அவர்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த உதவும். அதைக் கருத்தில் கொண்டு முதலில் சிறிதாக நன்றாக இயங்கும் நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகளின் முதலாளிகளோ அல்லது தலைவர்களோ தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று எண்ணுகின்ற போது அவர்கள் அரசாங்கத்தை நாடுகிறார்கள். அரசாங்கம் இருவகைகளில் அவர்களுக்கு உதவி செய்கின்றது. ஒரு குறிப்பிட்ட முதலீடு பணத்தை உள்நாடு , வெளிநாட்டில் வாழும் மக்களிடமிருந்தும, பொதுத் துறை மற்றும் தனியார் அமைப்புகள் மற்றும் வங்கிகளிடமிருந்து  'பங்குகள்' மூலமாகப் பணத்தை பெற்றுக்கொண்டு அதன் மூலம் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த உதவுகிறது. அதற்குத் தான் 'பங்கு சந்தை' என்று ஒரு அமைப்பு பல முக்கியமான பெரிய நகரங்களில் இருக்கின்றது.  


ஆரம்ப காலதத்தில் ஒரு பங்கின் முகமதிப்பு ரூபாய் பத்து மட்டுமே. நிறுவனத்தின் முதலீடு தேவை பொறுத்து ஐம்பது அல்லது நூறின் மடங்காக பங்குகளை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் தேவைப்படும் முதலீடு அளவிற்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்தால் எல்லோருக்கும் தாங்கள் விண்ணப்பித்த பங்குகள் முழுதும் கிடைக்கும். ஆனால் பல சமயங்களில் தேவைப்படும் முதலீடு அளவைவிட பங்கு விண்ணப்பித்த அளவு சுமார் ஐந்து முதல் ஐம்பது மடங்கு வரை அதிகமாக பங்கை விண்ணப்பித்திருப்பார்கள். அந்த சமயத்தில் எத்தனை மடங்கு அதிகமாக பங்கு விண்ணப்பங்கள் வந்திருக்கின்றதோ அத்தனை மடங்கிற்கு ஒருவருக்குத் தான் குறைந்தளவு பங்குகள் கிடைக்கும். உதாரணமாக ஐந்து மடங்கு என்றால் ஐந்தில் ஒருவருக்கு நூறு பங்குகள் கிடைக்கும். அதுவே ஐம்பது மடங்காக இருந்தால் ஐம்பதில் ஒருவருக்கு நூறு பங்குகள் கிடைக்கும். இவையெல்லாம் ஒரு நிறுவனத்தின் விளம்பரம், சந்தைபடுத்தும் திறமை , வாடிக்கையாளர்களின் தேவைகள், உற்பத்தி பொருட்கள் அல்லது சேவையின் தரம், செயல்பாடு, நிர்வாகம், நிறுவனத்தின் லாபம் மற்றும் முதலீட்டார்களுக்கு கொடுக்கும் லாபத்தின் பங்கு மற்றும் சலுகைகள் பொறுத்து பங்கு விண்ணப்பங்களின் அளவு கூடும்.


சில ஆண்டுகளுக்கு முன்பு பங்கு விண்ணப்பங்கள் குறிப்பிட்ட வங்கிகளிலோ, அமைப்புகள், முகவர்கள் அல்லது பங்குத் தரகர் மூலமாக கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் (அதிகபட்சமாக ஐந்து நாட்கள்) பங்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து குறிப்பிட்ட வங்கிகளில் பணத்தை கட்டவிட வேண்டும். அதன் பிறகு பங்கு சம்பந்தமான பத்திரிக்கை மற்றும் செய்தித்தாள்கள் மூலமாக அதன் விவரங்களையும், நிலைமையையும் தெரிந்து கொள்ளலாம். இரண்டு அல்லது மூன்று மாதம் கழித்துத் தான் யார் யாருக்கு எவ்வளவு பங்கு கிடைத்திருக்கின்றது என்று தெரியவரும். கிடைக்காதவர்களுக்கு காசோலையாக திரும்ப கிடைக்கும். அதே சமயத்தில் அது பங்கு சந்தையில் நுழைகின்றபோது அந்த நிறுவனத்தின் தலைவரைப் பொறுத்து, லாபம் / நஷ்டம் மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்து அந்த பங்கின் மதிப்பு உயரும் அல்லது குறையும். நல்ல பங்குகள் மிகக் குறைந்த நாட்களின் மாதங்களில் இரண்டு மடங்கு முதல் ஐம்பது மடங்குக்கும் மேல் அதன் மதிப்பு உயரும். அதை வாங்கிய முதலீட்டார்களுக்கு 'ஜாக்பாட்' பரிசு தான். அது போல் நிறுவனத்தின் லாப பங்கை முதலீட்டார்களுக்கு அதிகமாகக் கொடுத்தால் அதன் பங்கின் விலையும் உயரும். அதுபோல் நிர்வாகம் நஷ்டமடைந்தால் பங்கின் விலை முகமதிப்பு / வாங்கிய விலையை விட குறையும்.


இப்படித்தான் பங்குச்சந்தை செயல்பட்டுக் கொண்டிருந்தது. தினமும் அந்தந்த பங்குச் சந்தையின் குறியீடுகள் பொறுத்து பங்குச் சந்தையின் வாங்கும் / விற்கும் நிலவரங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும் அதன் மூலம் நாளைய நிலவரத்தையும் கணிக்கலாம். அப்போது நிர்வாக திறமையின்மையாலும், தரம் குறைவினாலும் , திருப்தியில்லா சேவையினாலும் சில நிறுவனங்களின் செயல்பாடுகள் நஷ்டத்தில் முடிந்த காரணத்தினாலும், நிறுவனமே ஆரம்பிக்காமல் வெறும் நிலத்தை காட்டி பங்குச் சந்தையில் நுழைந்து மக்களிடம் பணம் பெறப்பட்டதாலும் பங்குச் சந்தை தன் மதிப்பை இழந்தது. நாளுக்குநாள் அதன் குறியீடு சரிந்தது. அதை காப்பாற்ற வங்கிகள் 'மியூசுவல் பண்ட்' என்று ஒன்றை ஏற்படுத்தி அந்த பணத்தை பங்குச் சந்தையில் அனுபவமிக்கவர்களின் ஆலோசனைப்படி முதலீடு செய்யப்படும் என்று அறிமுகப்படுத்தினார்கள். அப்போதும் மக்களிடையே மியூசுவல் பண்ட்' செய்யல்பாடு நம்பிக்கை இல்லாததால் எதிர்பார்த்த முதலீடு கிடைக்காததால் அதற்கு குறிப்பிட்ட அளவு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டதால் ஓரளவு முதலீடு பெருகியது.


இப்படி இருக்கும் போது இந்தியன் வங்கி திரு கோபால கிருஷ்ணன், ஹர்சத் மேத்தா போன்றவர்கள் பங்குச் சந்தை சட்ட திட்டங்களை மீறி செய்த சில செயல்களால் பங்குச் சந்தை மகிமை மங்கியது. திடீரென்று உயர்ந்த பங்குச் சந்தை குறியீடு மடாரென்று பள்ளத்தில் விழுந்தது. அப்போது பல முதலீட்டாளர்களுக்கு பெருத்த நஷ்டம் அடைந்ததால் பலர் பங்குச் சந்தையை விட்டு வெளியேறினர். குறைந்தபட்சம் எட்டு முதல் பத்தாண்டுகள் இப்படியே இருக்கும்போது கணினி, மின்னணு , தொலை தொடர்பு துறை மற்றும் மோட்டார் துறையினால் இந்த பங்குச் சந்தை மீண்டும் உயிர்த்தெழுந்தது. மேலும் பங்குச் சந்தை செயல்பாட்டில் நம்பிக்கை பெற அவை கணினி மயமாக்கப் பட்டது. அனைத்துப் பங்குகளும் மின்னணு பத்திரமாக மாற்றப்பட்டன. அப்போது மேற்கண்ட துறைகள்  அதிக லாபம் ஈட்டியதால் அந்த துறைகளில் பணிபுரிபவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது. அவர்களே அதில் முதலீடு செய்யும்படி நிறுவனங்கள வழிவகைகள் செய்தனர். அவர்கள் மூலம் பலர் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். பிறகு சில நிறுவனங்களின் பங்கு வெளிநாடுகளில் வெளியிட்டு அவர்களின் மதிப்பையும் முதலீட்டையும் பெற்றதால் பங்குச் சந்தை நன்கு செயல்பட்டது. 


முதலீட்டாளர்களுக்கு அதிக லாபமும் சலுகைகளும் கிடைத்தது. மீண்டும் பல பெயர்களில் 'மியூசுவல் பண்ட்' வரிவிலக்குடன் வெளிவந்தது. அதிக சம்பளம் காரணமாக வரி விலக்கு கிடைக்கும் என்பதற்காக பலர் அதில் முதலீடு செய்தனர். ஓரளவு நன்றாக போய்க் கொண்டிருந்த பங்குச் சந்தை 'சத்யம்' என்கிற கணினி நிறுவனத்தின் மிகப்பெரிய மோசடியாக அதாவது அந்நிறுவனம் போலியாக அதிக லாபத்தை காட்டியதால் அதன் ஒரு பங்கின் விலை ரூபாய் 140/= க்கு எகிறியது. அந்த மோசடி வெளியில் தெரிந்ததால் ஒரே நாளில் ரூபாய் 30/= ஆக குறைந்து முதலீட்டாளர்களுக்கு பெருத்த நஷ்டத்தை கொடுத்தது. அது போலத் தான் பல நிறுவனங்கள் இருக்கும் என்கிற எண்ணம் முதலீட்டார்களின் நடுவில் ஆழமாக பதிந்தது. மீண்டும் பங்குச் சந்தையில் சுணக்கம் ஏற்பட்டது. பிறகு 'பவர்' துறையும் மோட்டார் துறையும் ஓரளவுக்கு சந்தையை தூக்கிவிட்டது. அதிலிருந்து  ரூபாய் 10 முகமதிப்புள்ள பங்குகள் அரிதாக வந்தது. அதுவும் இல்லையென்றே சொல்லலாம். பெயர் பெற்ற நிறுவனங்கள் அல்லது அதிக கவர்ச்சியான விளம்பரம் மூலம் சில நிறுவனங்கள் ரூபாய் 10 முகமதிப்புள்ள பங்குகளை முப்பது முதல் 100 மடங்கு வரை விலையை நிர்ணயித்தனர். இந்த விலை மக்களிடம் நேரடியாக வாங்க முடியாது என்று தெரிந்ததால் 'மியூசுவல் பண்ட்' ன் மூலம் பெற்றன. அப்படி பெற்ற பங்கின் விலை பங்குச் சந்தையில் நுழைந்த சில மணி நேரத்திலேயே வாங்கிய விலையிலிருந்து ரூபாய் நூறு வரை குறைந்தது. அதாவது ரூபாய் 10 பங்கை ரூபாய் 400 க்கு விற்ற பங்குகள் மறுநாளே ரூபாய் முன்னூறுக்கு குறைந்தன. இந்த நஷ்டம் 'மியூசுவல் பண்ட்' பங்குகளின் மதிப்பு முகமதிப்பை விட குறைந்தது. அது மக்களுக்கு மறைமுகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதால் மக்கள் பங்குச் சந்தையை விட்டு விலக ஆரம்பித்தனர். மீண்டும் பங்குச் சந்தை குறியீடு அதல பாதாளத்தில் விழுந்தது. பலருக்கு அடிமேல் அடி.


இந்த நிலையில் பங்குச் சந்தை குறியீடு ஓரளவு நிலையாய் இருக்கும்படி ஒரு மக்களுக்கு ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க நல்ல நிலையில் நடக்கும் ஒவ்வொரு துறையினை அதாவது 30 துறையினை தேர்ந்தெடுத்து அந்த துறையின் வளர்ச்சி பொறுத்து குறியீடு நிர்ணயித்தார்கள்.

இதற்கு உதாரணம் நமது கல்வித்துறையில் நடந்தது. முன்பு ஆரம்பப் பள்ளியில் நன்றாக படிக்காதவர்கள் கூட தேர்ச்சி பெறாமல் இருந்தார்கள். அதாவது முதல் வகுப்பிலும் தோல்வி பெறக்கூடிய முறை இருந்தது. அப்படிச் செய்வதால் யாரும் பள்ளிக்கு வரமாட்டார்கள் என்பதால் அரசு ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை கொண்டு வந்தனர். இதனால் மறைமுகமாக கல்வி வியாபாரம் நடந்தது. உண்மையில் அவர்களுடைய தரம் எப்படி இருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். கூடிய விரைவில் ஒவ்வொரு பள்ளி , உயர்நிலை பள்ளி, மருத்துவம், கலை , அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நன்கு படிக்கும் ஒரே ஒரு மாணவரின் மதிப்பீட்டைப் பொறுத்து மற்ற மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கினால் எப்படி இருக்கும்? அப்படி வந்தாலும் ஆச்சரியமில்லை. ஆதாவது அரசியலில் எப்படி பல சில்லறை கட்சிகள் நல்ல கட்சிகளின் முதுகில் சவாரி செய்து வெற்றி பெறுகிறார்களோ அதுபோலத் தான். அதாவது நல்ல பங்கு நிறுவனத்தின் தயவினால் மற்ற பங்குகளின் விலை ஏறுவது போல செய்தனர்.


அதாவது நன்கு பெயர் போன மற்றும் நல்ல செயல்பாட்டில் இருக்கும் நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணெய், சிமெண்ட், கணினி, இரும்பு, மருத்துவம், ரசாயனம், ஆட்டோமொபைல் நிறுவனத்தின் பங்கு ஏறினால் அதற்குத் தகுந்தாற்போல் அதே துறையைச் சார்ந்த நட்டை குட்டை பெயர் தெரியாத நிறுவங்களின் பங்கும் ஏறும் / இறங்கும். இது எப்படி இருக்கு? அதனால் தேர்ந்தெடுக்கப்படாத நிறுவங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்று முதலீட்டாளர்களுக்குத் தெரிய வராது. அதனால் சமீப காலமாக பங்குச் சந்தை குறியீடு எப்போதும் தாறுமாறாகக் குறையாமல் நிலையாக இருக்கும் ஒரு மாயத்தோற்றம் உருவாக்கியிருக்கிறார்கள். அது ஏறும் குறியீடு வெறும் மாயை. உண்மையில் அதில் முதலீடு செய்தவர்கள் ஆண்டியானது தான் மிச்சம். ஏற்கனவே பங்குகள் அதிக விலை, மேலும் அதிக விலை கொடுத்து யார் வாங்குவார்கள்? மீண்டும் அதற்காக மக்களை ஏமாற்றும் ஒரு திட்டம். சில மாதங்களுக்கு முன்பு சில நிறுவனங்கள் 'பிளாக் லிஸ்ட்'ல் சேர்த்தார்கள். அதில் முதலீடு செய்தவர்களின் கதி என்னவாயிருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்! 


அதாவது பங்குச் சந்தையின் நிலையை நேரடியாக தொலைக்காட்சி மற்றும் கணினி மூலம் ஒளி பரப்பினார்கள். அப்போதும் நிறுவனத்திற்கு நினைத்தவாறு லாபம் கிடைக்காததால் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை சில பினாமி பெயரில் கொடுத்து அவர்கள் மூலம் வலையை விரிக்க ஆரம்பித்தார்கள். அதாவது நீங்கள் பங்குச் சந்தையை நன்றாக கவனித்தீர்களேயானால் தொடக்கத்தில் பங்கின் விலைகள் அதிகமாக இருக்கும். பிறகு மெல்ல மெல்ல குறையும். பிறகு முடியும் போது கொஞ்சம் உயர்ந்து முடியும்.அதாவது எப்போதுமே அதன் வரைபடம் 'U' வடிவத்தில் தான் இருக்கும். எப்போதுமே 'Ç இப்படி இருந்தது கிடையாது.  

அப்படியென்றால் என்ன அர்த்தம்? அப்போது என்ன நடக்கிறது ? பங்குச் சந்தை காலையில் முதலே நிறுவனப் பினாமிகள் தங்களிடம் வைத்திருக்கும் பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக விற்க ஆரம்பிப்பார்கள். அதனால் நிறுவனத்தில் பங்கு விலை குறையும். இதை கவனிக்கும் அப்பாவி மக்கள் 'ஐயையோ என் பங்கு விலை குறைகின்றதே' என்று பலர் விற்க ஆரம்பிப்பார்கள். அது அன்றைய அடிமாட்டு விலையில் போயிருக்கும். பொது மக்கள் விற்பது முடிந்தவுடன் அந்த அடிமாட்டு விலையை பினாமிகள் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க ஆரம்பிப்பார்கள். மீண்டும் விலை உயரும். அதாவது அன்றைக்கு ஆதாயம் நிறுவன பினாமிக்கு! ஆனால் நஷ்டமோ மக்களுக்கு! இப்படியே இது நாள் வரை தொடருகின்றது. இதிலேயே நிறுவனங்கள் லாபம் பெறுவதால் புதிதாக உற்பத்தி தொழில் தொடங்க முயற்சி செய்வது கிடையாது. சமீப காலமாக யாராவது உற்பத்தி தொழில் தொடங்கியிருக்கிறார்களா? இல்லவே இல்லை. ஏனென்றால் அதில் மிகப்பெரிய அபாயம் இருக்கின்றது என்று இப்போதிருப்போருக்கு நன்கு தெரியும். அதற்கு சாட்சி 'நானோ' கார் தொழிற்சாலை. அரசியல் குறுகீடால் அந்நிறுவனத்திற்கு எவ்வளவு நஷ்டமோ அவ்வளவும் முதலீட்டார்களின் தலைமேல் தானே விழுந்தது. 


இப்போது பெரும்பாலும் நிதி, வங்கி மற்றும் தங்க நகை சம்பந்தமாக 'பங்கு' தான் வெளிவருகின்றது. எப்போது ரூபாய் 10 முகமதிப்புள்ள பல உற்பத்தித் துறைகளில் பங்கு வெளிவருகின்றதோ அப்போது தான் பங்குச் சந்தை மிளிரும். மேலும் வெளிப்படையான நிறுவனங்களின் உண்மையான செயல்பாடு மக்களுக்குக் காட்டுகின்றதோ அப்போது தான் பங்குச் சந்தை நன்மதிப்பை பெறும். இல்லையேல் 'மக்களை ஆண்டியாக்கும் சைத்தான்' என்கிற அவபெயரே தரும். பங்குச் சந்தையில் நீங்கள் பலமுறை யோசனை செய்து ' என் பணம் போனாலும் பரவாயில்லை, நான் நஷ்டத்தைத் தாங்கிக்கொள்வேன்' என்று இருந்தால் மட்டுமே தாராளமாக முதலீடு செய்யுங்கள். இல்லை ! இந்த பங்குச் சந்தை மூலம் முதலீடு செய்து பல லட்சம் சம்பாதிப்பேன் என்று அடம்பிடித்தால் உங்கள் விதியை யாராலும் மாற்ற முடியாது.


இது போதாது என்று தனியார் நிறுவங்கள் கொடுக்கும் விளம்பரம் என்ன? அதன் செலவு என்ன?அதற்கு 'சகாரா' என்கிற நிறுவனமே சாட்சி. போலி முதலீட்டார்களை உருவாக்கி அதன் முதலீட்டை வேறு ஒரு நிறுவனத்திற்கு உபயோகித்ததால் அந்த நிறுவனத்திற்கு கடன் சுமை கூடி , தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் நிறுவனத்தை மூடும் அபாயம் ஏற்பட்டதால் அதன் பங்குகள் தரை மட்டத்திற்கு வந்து பலருடைய முதலீட்டை சாப்பிட்டு ஏப்பமிட்டது. அதற்கு முன்னால் விளம்பரம் என்ன! அனுபவித்த சலுகைகள் என்ன? கொடுத்த சம்பளம் என்ன? எல்லாமே மக்களின் முதலீடு தான். நீங்கள் ஒன்றை நன்றாக கவனித்தால் நன்கு தெரிய வரும். அதாவது நிறுவனத்தில் பங்கு முதலீடு செய்தவர்கள் நஷ்டமடைவார்கள்! ஆனால் நிறுவனமோ பல பெயரில் பலவாறு விரிந்து சிறக்கும். நிறுவனத் தலைவர்களின் சொத்துக்களோ பல மடங்கு அதிகமாகும். அது எல்லாமே பங்குச் சந்தை கொடுக்கும் பரிசு தான்.

 

இந்த லட்சணத்தில் 'அந்நிய முதலீடு' என்று புதுக்கதை ஆரம்பித்து இருக்கிறார்கள். நிலம் நன்றாக இருந்தால் தான் அதில் விழும் விதைகள் நன்கு வளரும். ஆக விதை எவ்வளவு நன்றாக இருந்தாலும் நிலம் நன்றாக இல்லாவிட்டால் என்னவாகும்? அதாவது நாடு என்பது நிலம்.அந்நிய முதலீடு என்பது விதை. ஆக இங்குள்ள சட்டம், ஒழுங்கு,அரசியல் எப்போது ஒளிவு மறைவில்லாமல் நடக்கிறதோ அப்போது முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். அது வரை எந்த கொம்பனாளானாலும் ஒன்றும் நடக்காது. ஐயோ அப்பா என்று மக்கள் தினமும் அரசியல் வாதிகள் கொடுக்கும் வலியைத் தாங்கிக்கொண்டு தான் தீரவேண்டும்! இன்னும் சொல்லப் போனால் உலகத்தில் புகழ் பெற்ற ஒருவர் தும்மினால், இருமினால் எதாவது ஒப்பிட்டுச் சொல்லி மிகப்பெரிய வதந்தியை பரப்புவர்கள். விளைவு பங்குச் சந்தை 'பனால்' தான். இது எப்படியிருக்கு? இந்த நூற்றாண்டில் இந்த கணினி உலகத்தில் இப்படியும் மக்கள் இருப்பதால்,  இந்த பலவீனம் தான் பங்குச் சந்தைக்கு சாதகமாக இருக்கின்றது. இந்த லட்சணத்தில் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் நிதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுமாம். அது மக்களை ஆண்டியாக்கினது இல்லாமல் மக்களின் சேமிப்பையும் ஆண்டியாக்க துடிக்கிறது. இதற்கு முன்னால் அரசு உடந்தை. அந்த மாதிரி விசயங்களை இந்த புதிய அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்துப் பார்ப்போம். 

 

இப்போதெல்லாம் ஒரு நிறுவனம் நஷ்டமில்லாமல் லாபத்தில் நடத்துவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். யாணை தன் தலையில் மண்ணை வாரி போட்ட கதையாய் இன்றைய நிறுவனங்கள் இருக்கின்றது. பங்குச் சந்தை போல் ஊக வணிகத்தில் கொள்ளை லாபம் பார்க்கலாம் என்று அதற்கு கை கொடுத்தார்கள். ஆனால் நிலையில்லாத மூலப்பொருட்களின் விலையேற்றம், மின் தடை, மனித வளம் தட்டுப்பாடு, உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி , நிலையில்லா வங்கி வட்டி விகிதம், பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், குறைந்த விவசாயம், அதிக எதிர்பார்ப்புள்ள வாடிக்கையாளர்கள், உலகளாவிய தொழில் போட்டி போன்றவற்றால் நிறுவனத்தின் லாபம் என்பது எட்டாக்கனியாகிவிட்டது. அதனால் பல நிறுவனங்கள் லாபப் பங்கு, டிவிடெண்ட், போனஸ் பங்கு என்று எதுவுமே முதலீட்டார்களுக்கு கொடுப்பதாக தெரியவில்லை. மேலும் பங்கு வியாபாரம் கணினி மூலமாக நேரடியாக நடைபெறுவதால் லாப நஷ்டம் உடன் தெரிவதால் பலர் சொற்ப நேரங்களே நிறுவனப் பங்குகளை தங்கள் வசம் வைத்துக் கொள்கின்றனர். ஆகையால் நாளை என்ன நடக்கும் என்று தெரியாமல் எப்போதும் மன அழுத்தத்திலேயே பங்கு வர்த்தகம் செய்துகொள்கின்றனர். உங்களுக்கும் மன அழுத்தம் வரவேண்டுமா? ஒன்றும் செய்ய வேண்டாம். ஏதாவது ஒரு நிறுவனப் பங்கு வாங்குங்கள். கணினி முன்பு உட்கார்ந்து நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபடுங்கள். கட்டாயம் உங்கள் பங்கின் விலை குறைய ஆரம்பிக்கும். கூடவே உங்கள் இதயத் துடிப்பும் கூடும்... வேண்டுமென்றால் அதில் இருப்பவர்களிடம் கேளுங்கள். உங்கள் சொத்தை கரைக்கும் வரை அது உங்களை விட்டுப் போகாது. ஆகவே அது பெரும் பணக்காரர்களின் பொழுதுபோக்கிற்காக விளையாடும் விளையாட்டு. இங்கு நடுத்தர மற்றும் கீழ் மட்டவர்களுக்கு வேலையே இல்லை. இதில் இருந்தால் உடனே வெளியில் வந்துவிடுங்கள். இருப்பதாவது காப்பாற்றலாம்.   

    

சரி பங்குச் சந்தை இப்படி இருக்கு! வேறு வகையில் மக்கள் பணத்தை எப்படி கறக்கலாம் என்று யோசித்ததன் விளைவு தான் ஊக வணிகம். ஆனால் ஊக வணிகம் எல்லாவற்றிற்கும் ஒரு படி  மேலே இருக்கின்றது.


அதாவது ஒருவர் அப்போது சொன்னார். 'என்னிடத்தில் பல டன் தங்கம் இருக்கின்றது. 'எங்கே இருக்கிறது என்று காட்டு' என்று பதிலுக்குச் சொன்னால்.. அதெல்லாம் காட்ட முடியாது. உனக்கு எவ்வளவு டன் வேண்டும் ? நான் தருகிறேன். இன்றைய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூபாய் 600/=. இப்போது கல்யாண சீசன். மக்களும் அதில் முதலீடு செய்வார்கள். நாளைக்கு அதை நல்ல விலையில் விற்கலாம். உலகளவில் இனி தங்கம் கிடைக்காது. அழுகிப் போகும் பொருளும் கிடையாது' என்று ஆசை வார்த்தை காட்டினார் . அதை முதலில் மக்கள் நம்ப மறுத்தார்கள். பிறகு அவரே அந்த தங்கத்தை ஒரு கிராம் ரூபாய் 650/= என்றார். அப்போதும் மறுத்தார்கள். இப்படியே ஒரு மாதம் போக அதன் விலை கிராம் ரூபாய் 900/= என்றார்கள். அப்போது தான் 'ஆஹா போன மாதமே 600/= க்கு வாங்கியிருந்தால் இன்று 900/= க்கு விற்றிருக்கலாமே' என்று பலர் புலம்ப ஆரம்பித்தனர். இனியும் ஏமாறக்கூடாது என்று எண்ணி சிலர் தங்கத்தை வாங்க ஆரம்பித்தனர். எவ்வளவு வாங்கினாலும் ஒரே ஒரு பேப்பரில் 'இந்தாங்க இது தான் தங்கம்' என்று கொடுக்க ஏமாந்த மக்களும் வாங்கத் தொடங்கினார்கள். எல்லோரும் கிராம் 3000/= , 4000/= , 5000/= வரை போகும் என்று ஆசையாய் வாங்க ஆரம்பித்தனர். இன்றோ  முன்பு ஏறின அளவுக்கு விலை ஏறாமல் தடுமாறி தத்தளிக்கிறது பேப்பர் தங்கத்தின் விலை! 

இன்று அதை வாங்க எல்லோரும் தயங்குகின்றனர். கை சுட்டு புண்ணானது தான் மிச்சம். இப்படித் தான் ஊக வணிகத்தில் உள்ளது எல்லாம் தான் ஒரு மாய விலையை நிர்ணயித்து அந்த வலையில் மக்களை சிக்க வைத்து பலரை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மிக மோசமாக மக்களை பலி வாங்கிக்கொண்டிருக்கின்றது . அதாவது இல்லாத ஒன்றை இருப்பதாக சித்தரித்து அதில் குளிர் காய்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு யாரோ ஆண்டி மடம் கட்டின கதை சொல்லியிருக்கிறார்கள் போலும். அந்த கதையை உண்மையாக்கிவிட்டார்கள்.


அந்த கதையை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சத்திரத்தில் சில ஆண்டிகள் பொழுது போகாமல் ஒவ்வொருவரும் ஒரு பேப்பரில் பல வகை பெரிய வீட்டை வரைந்தார்கள். இது தான் என்னோட நிலம். இது தான் உங்களோட நிலம்.  இது தான் சுவர். இங்கே சமையலறை, படுக்கையறை, படிக்கும் அறை என்று தங்கள் இஷ்டம் போல பேசிக் கொண்டிருந்தார்கள். ஆஹா ஓஹோ என்று அழகு பார்த்து புகழ்ந்து ரசித்தார்கள். அதையெல்லாம் பக்கத்து அறையில் கேட்டுகொண்டிருந்த ஒருவன் அதை எனக்கு இன்ன விலையில் தாருங்கள் என்று கேட்க அவர்களும் அந்த பேப்பரை கையில் கொடுத்து வியாபாரத்தை ஆரம்பித்தனர். இந்த மாதிரி இளித்தவாயர்கள் பலர் வாங்க, வியாபாரம் சூடு பிடித்து ஓடியது. சில வருடம் கழித்து விற்ற ஆண்டிகள் சற்று சுதாரித்து இனி மக்கள் தெளிவாகிவிட்டார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்று எண்ணி கடையை மூடிவிட்டார்கள். ஆனால் பேப்பரை வாங்கியவர்களோ தலையில் துண்டைப் போட்டு மூலையில் முடங்கி கொண்டிருக்கிறார்கள்.

அதில்லாமல் இப்போது தொலைக்காட்சி வழியே விளம்பரம் வருகின்றது. அவர்களுடைய ஒரே குறிக்கோள் .. நாங்கள் ஏமாற்றத் தயார்! நீங்கள் ஏமாறத் தயாரா? அப்படியென்றால் வாருங்கள் ! உங்களிடம் இருக்கும் பணத்தை எங்களிடம் கொடுங்கள். கண்ணை மூடுங்கள். இந்த குழிக்குள் விழுங்கள். சொர்கத்தின் கதவு உங்களுக்காக திறக்கப்படும் ! என்ன சரிதானா? இந்த வணிகம் வந்ததால் உலகத்தில் உள்ள பல நாடுகள், அதன் வங்கிகள் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். எல்லாவற்றிற்கும் பிற நாடுகளின் கையேந்தி இருக்கும் நிலையில் இருக்கிறார்கள். புதிய அரசு இதற்கு சாவு மணி அடித்தால் தான் மக்கள் பிழைப்பார்கள். நாடும் பிழைக்கும். இல்லையேல் செத்து செத்து தான் பிழைக்கவேண்டியிருக்கும்.   

  

அது சரி.. நீங்கள் எத்தனை பேர்களை பார்த்திருப்பீர்கள். யாராவது ஒருவராவது பங்கு சந்தை மற்றும் ஊக வணிகத்தில் ஈடுபட்டு கோடிகளை அல்லது லட்சங்களை சம்பாதித்து இருக்கிறார்களா? கட்டாயம் இருக்காது. ஆனால் திரும்பின பக்கமெல்லாம் அதில் இழந்து ஆண்டியானவர்களை பார்க்கலாம்.

நீங்க எப்படி? இருப்பதை பத்திரப்படுத்துவீர்களா? அல்லது ஆண்டியாக ஆசைப்படுவீர்களா ?  

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
           

No comments:

Post a Comment