Saturday, 20 December 2014

பெறுக கல்வி ! பெருக்குக கல்வி ! GET EDUCATION ! GIVE EDUCATION !

பெறுக கல்வி ! பெருக்குக கல்வி ! 
GET EDUCATION ! GIVE EDUCATION !
சிறுகதை 
மதுரை கங்காதரன் 


"நம் நகராட்சி பள்ளி விழாவினை சிறப்பிக்க வருகை தந்த அனைவரும் பொறுமையும் , அமைதியும் காக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இன்னும் சற்று நேரத்தில் நமது மாவட்ட கல்வி அதிகாரி அவர்கள் வருகை தர இருக்கிறார்கள்" என்கிற அறிவிப்பு ஒலிபெருக்கியில் ஒலித்தது. அதைக் கேட்டவுடன் வந்திருக்கும் கூட்டம் சற்று அமைதி காத்தது. 

இந்த விழாவானது அப்பள்ளியில் பணியாற்றும் கலையரசி என்கிற ஆசிரியைக்காக அப்பள்ளி ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்கள் சேர்ந்து ஏற்பாடு செய்தது. அவர் பள்ளிக்குச் செய்த சிறந்த செயல் திறனுக்காக 'சிறப்பு விருதும் பட்டமும் ' கொடுக்கவே மாவட்ட கல்வி அதிகாரியை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.


இதற்கு மேலே படிக்கவேண்டுமென்றால் நீங்கள் கலையரசி பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். சுருக்கமாகச் சொல்லப் போனால் 'எப்படியிருந்த கைலையரசி இப்படி மாறிட்டா'ன்னு நினைக்கத் தோணும். சில மாதங்களுக்கு முன்னால் ..

"என்னம்மா எழில்? பள்ளிக்கூடம் போறதுக்கு நேரமாகலேயா? ஏற்கனவே ஊருக்குள்ளே ஒரு கிராமத்திலே இருக்கு. அதுக்கு அடிக்கடி வண்டி வசதியும் கிடையாது. இப்போவே மணி எட்டு. இன்னும் கூட நீ தயாராகலே! வழக்கமா போற வண்டியை இன்னைக்கு நீ விடத்தான் போறே. தாமதமாத் தான் போய் சேரப்போறே!" என்று எழிலரசியின் கணவர் எழிலரசன் வேகப்படுத்தினார்.

"நேரம் ஆனா ஆகட்டுங்க. நான் போற பத்து மணி கூட சீக்கிரம் தாங்க. ஏன்னா எங்க பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் தன்னோடசொந்த வேலைங்களை முடிச்சிட்டு பதினொன்று பன்னிரண்டு மணிக்குத் தான் வருவாரு. அதனாலே என்னை யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க" என்று அலட்சியமாக பதிலளித்தாள்.இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவளது ஒரே மகள், " அம்மா , நீங்க ரொம்பவே மாறீட்டீங்க. முன்னமெல்லாம் அதாம்மா போன வருசம் வரை அந்த பள்ளியிலே  வேலை பார்த்தப்போ ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு ஏழு மணிக்கே இங்கிருந்து கிளம்பி ஏழேகால் மணிக்கு வண்டி பிடிச்சு எட்டு மணிக்கு பறந்த ஞாபகம் இருக்காம்மா?" என்று பழைய தனியார் பள்ளி வாழ்க்கையை சற்று நினைவு படுத்தினாள்.

"அதுவா செல்லம், பழைய பள்ளிகூடத்திலே எல்லோரும் சீக்கிரமா வந்துடுவாங்க. அதனாலே நானும் சீக்கிரமா போக வேண்டியிருந்தது. ஆனா இந்த பள்ளிகூடத்திலே எனக்குப் பின்னாடி தான் எல்லோரும் வர்றாங்க"

"அப்படீன்னா, நீங்க நேரம் கழிச்சு போனா பிள்ளைங்க அதுவரைக்கும் என்ன பண்ணுவாங்க ?"

"இந்த பள்ளியிலே ரொம்ப பேர் பத்து மணிக்கு தானே வர்றாங்க. ஏன் நேரம் கழிச்சு வர்றீங்கன்னு கேட்டா 'வண்டி நிக்காம போயிட்டான், வீட்டு வேலை இருந்தது, அம்மா உடம்புக்கு முடியல்லேன்னு பல காரணங்களை அடுக்குவாங்க. எல்லோரும் சொல்லுற காரணங்கள் சரியாத்தான் இருக்கும். அதனாலே கண்டிக்க முடியாது. மீறியும் கண்டிச்சா மறுநாளிருந்து ரொம்ப பேர் வராம இருந்திடுவாங்க " என்று தன் மகளிடம் விளக்கினாள்.
"என்னமோம்மா. எனக்கு ஒண்ணும் புரியல்லே. சரி. சீக்கிரம் சீக்கிரம் ! எனக்கு நேரமாயிடுச்சி" என்று பம்பரமாய் சுழன்று வேலை செய்தாள். அன்று காலை ஒருவழியாய் அவரவர் தத்தம் கடமைகளை  செய்வதற்கு புறப்பட்டனர். 

எழிலரசி முதுகலை பட்டப்படிப்பு படித்து, ஆசிரியர் பயிற்சி மற்றும் சில தேர்வுகளை எழுதி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்தாள். மிகத் திறமையும் துடிப்பும் இருந்ததினால் தான் அங்குள்ள கெடுபிடியை சமாளிக்க முடிந்தது. அதாவது பள்ளி ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னமே வந்து அன்றைக்கு என்னென்ன வகுப்புகள் இருக்கின்றது? அதற்காக என்னென்ன தயார் செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பேட்டில் எழுத வேண்டும். அதை சில சமயம் திடீரென்று தலைமை ஆசிரியர் பார்வையிடுவார். அன்றைக்கு யாரவது குறிப்பேட்டில் எழுதியிருக்காவிட்டால் அந்த வருட சம்பள உயர்வில் கை வைத்துவிடுவார். அதுபோல மாணவ மாணவியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் பதில் சொல்லவேண்டும். பாடங்களை சரியாக சொல்லித் தரவில்லை என்று யாரும் புகார் செய்யக் கூடாத வண்ணம் சொல்லித் தர வேண்டும். அதனால் சுமாராக படிப்பவர்களுக்கு கூடுதல் நேரம் பாடங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். அவ்வப்போது வகுப்புத் தேர்வு வைத்து அதில் அவரவர்  எடுக்கும் மதிப்பெண்களைப் பொறுத்து சிறப்பு பாடப் பயிற்சி கொடுக்கவேண்டும். மேலும் பள்ளிகளில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள், கலை இலக்கிய விழா மற்றும் இதர விழாக்களில் அனைவரும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். தேவைபட்டால் ஒழிய அதிகமாக விடுமுறை எடுத்துக் கொள்ளக் கூடாது. 


அதில்லாமல் மாணவ மாணவிகளுக்கு தினமும் ஒரு தலைப்பு கொடுத்து அதைப் பற்றிய தொகுப்பை நூலகங்கள் அல்லது வலைதளத்தில் உதவி கொண்டு எழுதி வரச் செய்ய வேண்டும். அதையும் சரிபார்க்க வேண்டும். ஆசிரியருக்கு கட்டாயம் மின்னஞ்சல், வலைத்தளம், கணினி பயன்பாடு தெரிந்திருக்க வேண்டும். இவ்வளவையும் திறமையாக செய்தாலும் சம்பள உயர்வின் போது நீங்கள் அதை சரியாகச் செய்யவில்லை, இதை சரியாக செய்யவில்லை ! அதனால் உங்களுக்கு சம்பள உயர்வு இவ்வளவு தான் என்று முகத்தில் அடித்தாற்போல் பேசுவார்கள். வேறுவழியில்லாமல் பல்லைக் கடித்து அனைத்தையும் தாங்கிக் கொள்ளவேண்டும். ஏதோ ஒரு காரணத்தினால் ஆசிரியர் ஒருவரைப் பிடிக்காமல் போனாலோ, பள்ளி நிர்வாகத்திற்கு ஒத்துழைக்காமல் சட்டம் பேசினாலோ, அதிக சம்பளம் கேட்டாலோ, நிர்வாகத்திக்கு 'ஆமாம் சாமி' போடாமல் இருந்தாலோ உடனே அவரை அழைத்து சம்பந்தம் இல்லாத ஒரு காரணம் சொல்லி வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். தினம் தினம் செத்து பிழைக்கும் வேலை. அதாவது தன்மானம், சுயமரியாதை, சுய அறிவு அடமானம் வைத்துத் தான் வேலை பார்க்கவேண்டும்.   

இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் வராதா ? இந்த அடிமை வாழ்வு எப்போது தீரும்? என்று ஏங்கும் பல ஆசிரியர்களில் எழிலரசியும் ஒருவர். அதற்காக விடாமல் அரசு நடத்தும் ஆசிரியர் தேர்வை கடினமாக படித்து சிறப்பாக தேர்வு எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றாள். அவர் எண்ணப்படி ஊருக்குப் பக்கத்திலே உள்ள ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியர் வேலையும் கிடைத்தது.

அன்றிலிருந்து தன் பழைய தனியார் பள்ளிவாழ்க்கை நடைமுறையினை முற்றிலும் மறந்தாள். முன்பெல்லாம் வீட்டிற்கு வந்தவுடன் தான் எடுக்கும் வகுப்புக் குழந்தைகளுக்கு பாடங்களின் குறிப்புகளை தயார் செய்வதிலே நேரம் சரியாக இருக்கும். அதனால் தன் குழந்தைக்கு பாடம் சொல்லித் தர முடியாமல் தவிப்பார்.


ஆனால் இப்போது அந்த வேலைகள் எல்லாம் இந்தப் பள்ளியில் இல்லாததால் தன் குழந்தைக்கு தாராளமாக பாடங்களைச் சொல்லித் தருவதற்கு நேரம் கிடைத்தது. அதே பாடங்களைத் தான் இப்போது தன் பள்ளிக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது தான் சிறப்பு. இதற்கெல்லாம் காரணம் 'அங்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் யாரும் எவரும் எதுவும் சொல்லமாட்டார்கள் என்கிற ஒருவித அலட்சியப் போக்கேயாகும்.

அன்று வழக்கத்திற்கு மாறாக தன் குழந்தை சோகமாக வீட்டினுள் நுழைந்தாள். இதை சற்றும் எதிர்பார்க்காத எழிலரசி "என்னம்மா செல்லம்! இன்னைக்கு உன் முகம் வாடிப்போயிருக்கு. எப்போதுமே கலகலன்னு பேசி வகுப்பிலே நடந்ததையெல்லாம் சொல்லுவே. இன்னைக்கு என்ன நடந்தது. யாராச்சும் திட்டினாங்களா? அல்லது அடிச்சாங்களா?" என்று துருவித் துருவிக் கேட்டாள்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா? இதுக்கு காரணம் வேறே"

"என்னான்னு சொல்லும்மா. நானும் தெரிஞ்சுகிறேன்" என்று ஒருவிதமாய் கெஞ்சினாள்.                                                    
"என்னோட நெருங்கிய தோழி இளைய நிலா வோட அம்மாவும் ஒரு ஆசிரியைன்னு உங்களக்குத் தெரியும். அவளுக்கு பாடங்களைச் சொல்லித் தர அவங்க அம்மாவுக்கு நேரமே இருக்கிறதில்லையாம். நீங்க முன்னாடி இருப்பீங்களே அது போல . ஏம்மா அந்த மாதிரி பள்ளிக்குப் பள்ளி பாடம் ஒண்ணா இருந்தாலும் இந்த வித்தியாசம்" என்று சற்று தெளிவில்லாமல் தெரிந்தளவு கேட்டாள்.

"அதுவா செல்லம். அவங்க தனியார் பள்ளியிலே வேலை பார்கிறாங்க. அங்கு சம்பளம் குறைவு. வேலையோ அதிகம். ஆனா நான் இப்போ வேலை பார்ப்பது அரசு பள்ளியிலே. இப்போ எனக்கு சம்பளம் அதிகம். வேலை ரொம்ப குறைவு. அவங்களுக்கு பாடம் சொல்லித் தந்தாலும் தராவிட்டாலும், குழந்தைங்க படிச்சாலும் படிக்காவிட்டாலும் வருசா வருசம் சம்பளம் மட்டும் அதிகமாயிட்டே இருக்கும்" என்று சற்று பெருமையாக சொன்னாள்.

"அம்மா அவள் இன்னொன்றும் சொன்னாள். 'உங்கம்மாவுக்கு அரசு பள்ளியிலே வேலை கிடைச்சதாலே இந்த பிரச்னை இருக்காது. பள்ளிக்கு எப்போ வேண்டுமானாலும் போகலாம். குழந்தைங்க படிப்பு பத்தி அக்கறைப் படத்தேவையில்லையாம். ஏம்மா எனக்கு வீட்டிலே பாடங்களைச் சொல்லிக் கொடுப்பது போல உங்க வகுப்பு பிள்ளைங்களுக்கு பாடங்களை சொல்லிக்கொடுக்கிறீங்களா? இப்போது இருக்கும் அப்துல் கலாம் போன்ற சிறந்த விஞ்ஞானிகள், அறிஞர்கள், தொழிலதிபர்கள் போன்ற பலர் அரசுப் பள்ளியிலே படிச்சு தானே இன்று சாதனை செய்திருக்கிறார்கள்.அவர்களுக்கு அவங்க ஆசிரியர்கள் சரியாக சொல்லித் தராமல் இருந்திருந்தால் அவர்களின் அறிவும் திறமையும் நமக்கு கிடைத்திருக்குமா ? அல்லது நம் நாடு இவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்குமா? ஏன் உங்கள் வகுப்பில் படிக்கும் பிள்ளைகள் வருங்காலத்த்தில் பெரிய தலைவராக வரலாமில்லையா? அதுக்கு நீங்க காரணமா இருக்கலாமில்லையா? இப்பவும் அப்படி பெரிய பதவியில் இருக்கும் தலைவர்கள் தங்கள் ஆசிரியர்களை மதிக்கிறார்கள் அல்லவா? அவரவர்கள் கடமை செய்தால் தான் நாடு உருப்புடும்ன்னு நீங்க தானேம்மா அடிக்கடி சொல்லிட்டு இருப்பீங்க" என்று தான் 'தாயைப்போல பிள்ளை'ன்னு நிரூபித்தாள்.

தன் மகளின் இத்தகைய விளக்கம் அவள் இதயத்தில் 'சுரீர்' என்று குத்தியது போல் இருந்தது. 'என் சுயநலத்திற்காக , சோம்பேறித்தனத்திற்காகவா அரசு பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்தேன்' என்று ஒருமுறை தன்னை கேட்டுக் கொண்டாள். அரசு பள்ளியில் இருக்கும் என் போன்ற ஆசிரியர்கள் தன் கடமைகளைச் சரிவரச் செய்யாததனால் எல்லோரும் லட்சம் லட்சமா பணத்தை நன்கொடையாகத் தரத் தயாராகி தனியார் பள்ளியை நாடுகிறார்கள். ஆனால் அரசு பள்ளியில் எல்லாமே இலவசம் மற்றும் விலையில்லா மடிக்கணினி, இலவச பேருந்து , மதிய உணவு போன்ற பல சலுகைகள் கொடுத்தும் ஆசிரியர்களின் அலட்சியப் போக்கினால் அரசு பள்ளிகளின் தரம் குறைந்து இன்று 'தங்கள் குழந்தைங்களை அரசு பள்ளியில் சேர்க்கவே மாட்டேன் என்று தலைத்தெரித்து ஓடி தனியார் பள்ளிக்கு மாறிவருகிறார்கள்? எனக்கு தனியார் பள்ளியில் கிடைத்த அனுபங்களை ஏன் இந்த அரசுப்பள்ளியில் நடைமுறைப் படுத்தக்கூடாது. ஆரம்பத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்வதில் சில சிக்கல்கள் வந்தாலும் பொறுமையாய் கையாண்டால் மலையும் நம் கைக்குள் அடக்கிவிடலாமே. எல்லா அரசு பள்ளிகளுக்கும் முன்மாதிரியாக நான் ஏன் இருக்கக் கூடாது. எனது இந்த செயலினால் மக்கள் எல்லோரும் அரசு பள்ளயில் தங்கள் குழந்தைங்களை விரும்பிச் சேர்க்க வேண்டும். இது தான் எனது இலட்சியம். இதிலிருந்து நான் எப்போதும் பின் வாங்கப்போறதில்லை. அதை அடைந்தே தீருவேன்' என்று தனக்குள் உறுதிமொழி ஏற்றதோடு செயலிலும் இறங்கி சாதித்தாள். இனி...        
              

விழா மேடை மிக எளிமையாக அமைத்திருந்தார்கள். மூன்றே  நாற்காலிகள் இருந்தன. மேடையின் அருகில் தலைமை ஆசிரியரும், சில ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் நின்றிருந்தனர். அவர்கள் ஆவலுடன் காத்திருந்த சிறப்பு விருந்தனர் பள்ளி வாயிலில் நுழைய , அவரை வரவேற்று மேடையில் அமரச் செய்தார் பள்ளித் தலைமை ஆசிரியரும் மற்றவர்களும். 

மாவட்ட கல்வி அதிகாரியிடத்தில்," இவர்கள் தான் நமது பள்ளி ஆசிரியை  கலையரசி ! இப்பள்ளியின் வளர்ச்சிக்கு அடித்தளமும் , தூணும் ஆவார்"  என்று கலையரசியை அறிமுகப்படுத்த அதை அவர் புன்முறுவலுடன் ஏற்க , அவரை அவருக்குப் பக்கத்தில் இருக்கும் நாற்காலியில் அமரச் செய்தார். அலை மோதுகின்ற கூட்டத்தைப் பார்த்த கல்வி அதிகாரி மிகவும் ஆச்சரியம் அடைந்தார். 'தன் வாழ்நாளில் இது போல் ஒரு விழா அரசு பள்ளியில் கண்டதில்லை' என்று தனக்குள் எண்ணிக்கொண்டார். தன்னிடத்திலிருந்து ஏதோ ஒன்று இவர்கள்  அதிகமாக எதிர்பார்ப்பதை அவர்களின் முகத்திலிருந்து தெரிந்து கொண்டார். ஆசிரியை கலையரசியைப் பற்றித் தலைமை ஆசிரியரின் மூலமாக மற்றும் பத்திரிக்கைகளில் அவரைப் பற்றி வந்த செய்திகளை நன்றாக உள்வாங்கியது அனைத்தையும் சிறப்பாக இங்கு பேசவேண்டும் என்கிற ஆவல் அவருக்கு உண்டானது.

விழா இறை வணக்கம் மற்றும் தமிழ் வணக்கத்துடன் தொடங்கியது. சில ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், தலைமை ஆசிரியர் பேசிய பிறகு மாவட்ட கல்வி அதிகாரியை பேச அழைத்தனர். கூட்டமே கை தட்டியது.

"உங்களை எல்லாம் இந்த அரிய பெரிய விழாவில் சந்திப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நகராட்சி பள்ளிகூடத்தின் வளர்ச்சிக்கும், மாநில அளவில் சிறந்த பள்ளிக்கூடமாக தேர்வு பெற்றதுக்கும் மிக முக்கிய காரணம் மதிப்புக்குரிய கலையரசி என்கிற ஆசிரியையின் இடைவிடாத முயற்சி என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமை படுகிறேன். அதுமட்டுமில்லாமல் அவர்களின் அயராத உழைப்பும், ஆளுமைத் திறனுடன்  எல்லோரையும் அரவணைத்து முழுமூச்சுடனும்  கூட்டு முயற்சியோடு  செயல்பட்டதே ஆகும். இந்த நாள் அரசு பள்ளிகளின் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய  ஒன்றாகும்" என்று தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அவர்  

"இந்த ஊரில் ஆடம்பரமாக , வசதிகள் நிறைந்து கவர்ச்சிகரமாக பல தனியார் பள்ளிகள் இருந்தும் மக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை இந்த நகராட்சி பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று ஆர்வப்படுகிறார்களே ! அதற்குக் காரணம் அரசு தரும் இலவசக் கல்வி மட்டுமல்ல. இப்பள்ளியில் மாணவ மாணவிகளின் மூலம் பராமரிக்கப்படும் சுத்தமும், சுகாதாரமும் ஆகும். ஒரு குடும்பம் போல் அனைவரும் செயல்படுவதுடன், பள்ளியில் கடைபிடிக்கப்படும் ஒழுக்கமும், பிறருக்கு தரும் மரியாதையுமாகும். பல பள்ளிகள் வெறும் மனப்பாடம் செய்து நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் இயந்திரமாக மாணவ மாணவிகளை மாற்றி , கல்வி முறையில் சில தவறான அணுகுமுறையினை கையாளுவது எனக்கு வருத்தத்தை அளிக்கின்றது. இந்த பள்ளி கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு, கலை, இலக்கியத்திலும் , பொது அறிவுப் போட்டியிலும் சிறந்து விளங்குகின்றது என்பதை நினைக்கும் போது எனக்குப் பெருமிதமாக இருக்கின்றது"  என்று இனிமையாக பேச பேச கூட்டம் அமைதியோடு அனைத்தையும் கேட்டது. ஊருக்கு ஏதாவது செய்வார் என்று எல்லோரின் மனதில்பட்டது 

"இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை கலையரசியை முன் மாதியாக வைத்துக்கொண்டு அனைத்து அரசு பள்ளிகளும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று சொல்வதில் மீண்டும் பெருமை அடைகிறேன். ஒருபக்கம் இந்த அரசு பள்ளியில் இடம் கிடைக்காமல் தனியார் பள்ளிக்கு நாடுவது எனக்கு மகிழ்ச்சியே அளித்தாலும் மறுபக்கம் அரசு பள்ளிகள் இந்த ஊரில் போதிய அளவு இல்லையே என்கிற வருத்தம் இருக்கின்றது. இந்த நன்னாளில் ஆசிரியை கலையரசிக்கு நல்லாசிரியர் விருதுக்கு தகுதி இருந்தாலும் அதைவிட மக்கள் அவருக்குத் தரும் இத்தகைய மதிப்பே சிறந்த விருதாகக்  கருதுகிறேன் . இந்த ஊரில் விரைவில் சில அரசு பள்ளிகள் உருவாக்குவதற்கு கட்டாயம் முயற்சி செய்வேன். மேலும் மேலும் இப்பள்ளி பல சாதனைகள் செய்ய வேண்டும் என்று வாழ்த்தி இந்த சிறந்த ஆசிரியர் விருதும், 'கல்வி மாமேதை' என்கிற பட்டமும் கொடுத்து விடை பெறுகிறேன் வணக்கம்" என்று சொல்லி அமரும் போது கூட்டத்தின் கரவொலி நெடுநேரம் கேட்டது.  

அதற்கு பிறகு ஆசிரியை கலையரசியை பேச அழைத்தார்கள். மீண்டும் கரவொலி. அது அவருக்கு மதிப்பு கொடுக்கும் செயலாக இருந்தது. அவர் ஆரம்பித்தார்.


"நீங்களெல்லாம் பெருமையா பேசுற அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லை. நான் செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் நிறைய இருக்கு. அதைவிட என்னுடைய கடமைகளை உணர்ந்தேன் - அதன் படி செய்தேன்" என்று பேசும் போது சட்டென்று அவளின் கடந்த காலம் நினைவுக்கு வந்து மறைந்தது.

எனக்கு ஒரு யோசனை தோணுது. எப்படி எல்லாவற்றிற்கும் எப்படி இடஒதுக்கீடு இருக்கின்றதோ அரசு பள்ளியிலும் ஆசிரியர் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதை கேட்கும்போது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அதாவது 50 சதவீதம் தனியார் பள்ளியில் சிறப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களை அரசு பள்ளியில் தேர்வு இல்லாமல் அவர்களின் அனுபவ அறிவு, திறமைகள் கொண்டு இடம் தரலாம். சிறந்த தனியார் பள்ளியில் பத்து வருடம் பணியாற்றிய ஆசிரியர்களை தேர்வு செய்யலாம். வெறும் எழுத்து முறையில் தேர்வு செய்தால் அரசு பள்ளிகளின் தரம் மக்கள் நினைக்கும் அளவுக்கு உயராது. நானும் பத்து வருடம் மேல் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினேன். அந்த அனுபவமே எனக்கு இந்த மாதிரி செய்யத் தூண்டியது. மற்ற அரசுப் பள்ளியில் இருக்கும் என்னைப் போன்ற ஆசிரியர்களை ஒன்று திரட்டி நல்லபடியாக திட்டமிட்டதால் இன்று அதன் வெற்றிக்கனியை எல்லோரும் சுவைக்கிறோம். அப்படிச் செய்வதால் பள்ளியின் தரம் உயர்வதோடு பல அறிஞர்கள் உருவார்கள். எனது அபிமான குரு திரு அப்துல் கலாம் அவர்களின் இந்தியா ஒரு வல்லரசாக மாறும் கனவு சீக்கிரமே நிறைவேறும்" என்று பேசியதை ஆமோதிக்கும் விதமாக மக்கள் கூட்டம் மீண்டும் கை தட்டியது.

அதைக் கேட்ட மாவட்ட கல்வி அதிகாரி உடன் எழுந்து " கண்டிப்பாக இந்த யோசனையை மேலிடத்திற்குத் தெரியப்படுத்தி அதை நடைமுறைப் படுத்த அனைத்து முயற்சியும் செய்வேன்" என்று உறுதியளிக்க அதுவே அனைவருக்கும் கிடைத்த ஒரு பெரிய வெற்றியாக நினைத்தனர். ஆசிரியர் கலையரசி வாழ்க ! அவர் பணி ஓங்குக ! என்று தன் காதில் ஒலித்தாலும் கலையரசிக்கு தான் மேற்கொண்டிருக்கும் அடுத்த கல்விப்பயணத்திற்குத் தயாரானாள்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^                

1 comment: