அமெரிக்க மாப்பிள்ளை
மதுரை
கங்காதரன்
குறுங்கதை
'"எல்லாரும் நல்லா
கேட்டுக்குங்க, உங்களுக்கு தெரியும், நம்ம மாப்பிள்ளை அமெரிக்கா
மாப்பிள்ளைன்னு! விருந்து தடபுடலா
இருக்கணும். சாப்பாடு சமாச்சாரம் நல்ல
உசத்தியா இருக்கணும். மேரி பிரவுன், பர்கர், பிட்சா, கே.எப்.சி இன்னும் புதுசா ஏதேதோ
சொல்றாங்களே அதுங்க கட்டாயம் இருக்க வேண்டும்" என்று
மடமடவென்று மாணிக்கம் தன் பாட்டி, மனைவியிடம் சொல்லி
முடித்தார்.
"எல்லாம் சரிதாங்க, ஆனா மாப்பிள்ளைக்குப்
பிடிச்சதா இருந்தாத்தான் சாப்பிடுற அவருக்கும் திருப்தி. விருந்து வைக்கிற நமக்கும்
திருப்தி"
"நீ சொல்றது சரிதான். எவ்வளவோ சீரியல், சினிமாப்படம், விளம்பரம் பார்க்கிறோம். அதிலேயிருந்து நாமதான்
அமெரிக்காவிலே இருக்கிறவங்க எதை எதை விரும்பிச் சாப்பிடுவாங்கன்னுத்
தெரிஞ்சிக்கணும்"
"அது இருக்கட்டுங்க, உங்கப் பாட்டி ஏதோ
சொல்றாங்க. அதையும் கேட்டுங்க"
"அவங்க பழங்காலத்து ஆளுங்க. அங்களுக்கு இதெல்லாம்
எதுவும் தெரியாது"
"என்னங்க, மாப்பிள்ளை வந்தாச்சுப்
போல இருக்கு. கூடவே நம்ம மகளும்
சிரிச்சிட்டே வர்றா. இப்பத்தாங்க எனக்கு ரொம்ப
மகிழ்ச்சியா இருக்கு"
"வாங்க, வாங்க என்று வரவேற்றார்
மாணிக்கமும் அவன் மனைவியும்.
"மாப்பிள்ளை பிரயாணம்
எல்லாம் நல்லபடியா இருந்ததா? எப்படி இருக்கீங்க?என்னதான் தினமும் வீடியோ
காலிங்லே பேசினாலும் நேரிலைப் பார்த்துப் பேசுறதுபோல வருமா?"
'"சரியாச் சொன்னீங்க மாமா, எனக்கு எதிலும் குறைச்சல்
இல்லை மாமா. அந்த அளவுக்கு உங்க மகள்
என்னை நல்லவே கவனிச்சிக்கிறா"
"மாப்பிள்ளையும், நீயும் கோவிலுக்குப்
போறாதா..."
"ஆமாம் அம்மா. நாங்க கோவிலுக்குப்
போயிட்டு வந்துடுறோம். அப்புறம் ஒண்ணுக் கேட்க
மறந்துட்டேன். அம்மா, அப்பா நீங்க எங்களுக்கு
எந்த வகையானச் சாப்பாடுச் செய்யப் போறீங்க?"
"இது கூட நமக்குத் தெரியாதா
என்ன?" என்று சாப்பாட்டு வகைகளை
ஒப்பித்தார்.
"ஐய்யோ அப்பா, இந்த மாதிரி ஏடாகூடமா
ஏதாச்சும் பண்ணிடாதீங்க".
"ஆமாம் மாமா, உங்க மகள் சொல்றது சரிதான். நீங்க சொன்ன சாப்பாட்டு
வகைங்க அங்கே வேறு வழியில்லாமச் சாப்பிடுகிறோம். எங்களுக்குப் பிடிச்சது கேப்பை மாவு தோசை, புட்டு, பருப்புச் சாதம், காய்கறிக் கூட்டு, வத்தல் கொழம்பு, ரசம், தயிர்.." என்று சொல்லச் சொல்ல
மாணிக்கத்திற்கு நடப்பது எல்லாம் உண்மை தானா? என்று
தன் மனைவியைப் பார்த்தார்.
அடுத்த வினாடியே "பாட்டி, பாட்டி உன் பேரனுக்குப்
பிடிச்ச மாதிரி விருந்து கொடுக்கணும்னா
நீங்கதான் விதமா விதமாச் சமைச்சுப் போடனும்":
"அதுக்கென்னடா மாணிக்கம்..." என்று அந்த எண்பது
வயதிலும் சுறுசறுப்பாக சமையலறைக்குள் நுழைந்தாள் பாட்டி.
No comments:
Post a Comment