Pages

Friday 10 February 2017

ரேஷன், கேஸ் மானியம் இருந்தா... குறுங்கதை


ரேஷன்கேஸ் மானியம் இருந்தா...
மதுரை  கங்காதரன்
குறுங்கதை
"நான் அப்பவே படிச்சு படிச்சுச் சொன்னேன். நீங்க கேட்டீங்களா?"
"தலை போறாப்பலே இப்போ என்னாச்சு?"
"என்னாச்சாவா? நான் இப்போ தனியார் கம்பெனியிலே கைநிறையச் சம்பாதிக்கிறேன். அதனாலே ரேஷன் பொருள் வேண்டாம், கேஸ் மானியமும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்திடப் போறேன்னு சொன்னீங்க. நீங்க ஒண்ணுச் சொன்னா செஞ்சுடுவீங்கன்னும் எனக்குத் தெரியும்"
"அதனாலே இப்ப என்னா?"
"இப்போ உங்களுக்கு அந்தக் கம்பெனியிலை வேலை இல்லைன்னுச் சொல்லிட்டாங்க. இனி அடுத்த வேலையைத் தேடணும். எப்போதுக் கிடைக்குதோ? அப்படிக் கிடைச்சாலும் இப்ப இருக்கிற சம்பளம் போலக் கிடைக்குமா? இந்த நிலைமையிலே ரேஷனும், கேஸும் இருந்தா வேலைக் கிடைக்கிற வரைக்கும் ஓரளவுக்குச் சமாளிச்சிருக்கலாம்"
"ஏன் இப்படிப் புலம்புரே. எனக்கு மட்டுமா இந்த கதி. உலகத்திலே உள்ள எத்தனையோ பேருக்கு இது மாதிரி நடந்திட்டே இருக்கு. அவங்களெல்லாம் செத்தாப் போயிட்டாங்க?"
"அது இல்லிங்க, நாமெல்லாம் தனியார் கம்பெனியிலே வேலை பார்க்கிறவங்க. வேலை நிரந்தரம் கிடையாது. அதோடு தினமும் பல மணி நேரம் ஓய்வு கொடுக்காமல் பிழிந்தெடுக்கும் வேலை, அத்தனையும் தாண்டி எப்போது வேண்டுமானால் வீட்டிற்கு அனுப்பும் விதி.  ஆனா அரசாங்க வேலை அப்படி இல்லை. வேலை இருந்தாலும், இழந்தாலும் தேதி ஒண்ணு பொறந்தா அவங்களுக்குச் சம்பளமா அல்லது பென்சனா கிடைக்குது. பிச்சு பிடுங்கல் இல்லாத வெள்ளைக்கார வேலை, வருடா வருடம் சம்பள உயர்வு, சலுகைகள், பதவி உயர்வுன்னு அனுபவிக்கிற அவங்களே ரேஷன் வேண்டாம், கேஸ் மானியம் வேண்டாம்னு எழுதித் தராதவங்க உங்களுக்கு மட்டும் எப்படிங்க இந்த மாதிரி எண்ணம் வந்திருச்சு"
"கொஞ்சம் புலம்புறதை நிறுத்து. நான் சொல்றதை முழுசாக் கேளு. போன வாரம் நான் உன்கிட்டே சொன்னதுபோல ரேஷன், கேஸ் வேண்டாம்னு எழுதிக் கொடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா ஏதோ ஒரு காரணத்தினாலே அதைச் செய்யலை. அதுக்குக் தோதா என்னோட நிலைமையும் இப்படி ஆயிடுச்சி. ஒரு வேளை நான் அப்படிச் செஞ்சுருந்தா, அரசாங்கம் இந்த நிலையிலே 'ஐயோ பாவம், இவரு நல்ல வேலையிலே இருந்தவரு. இப்போது வேலையில்லாமே இருக்கிறாரு. அதனாலே மீண்டும் இவருக்கு ரேஷனும், கேஸும் தருவோம்னுச் சொல்லுமா என்ன? கட்டாயம் சொல்லாது. மறுபடியும் அதைச் சேர்க்குறதுக்குள்ளே எப்பாடுபட வேண்டியிருக்கும்னு நமக்கு நல்லாவேத் தெரியுமில்லே. இந்த காரணத்தினாலேதான் என்னவோ பல பேரு அப்படி எழுதிக் கொடுக்கமாட்டீங்கிறாங்க போல இருக்குது"
".. என்னங்க, நீங்க வேண்டாம்னு எழுதித்தரலேயா? இப்போத்தான் எனக்குப் போன உசுரு திரும்பி வந்தாப்போல இருக்கு" என்று அவள் நிம்மதி மூச்சு விட்டாள்.

**************************************


No comments:

Post a Comment