Pages

Monday 29 October 2018

28.10.18 கட்டமைப்புத் தமிழ்மொழியின் கவசத்தை உடைக்காதே! - புதுக்கவிதை



    கட்டமைப்புத் தமிழ்மொழியின்
   கவசத்தை உடைக்காதே!
         புதுக்கவிதை 
         மதுரை கங்காதரன் 

அடித்தளம் ஆட்டம் கண்டால்
உயர்தளம் உறுதியாய் நிற்குமா?
அருந்தமிழ் கவசம் உடைந்தால்
அதனின் கட்டமைப்பு நிலைக்குமா?

தமிழினிது சொல்லினிது பொருளினிது
தேனமுது தெள்ளமுது சுவையமுது
அடுக்குமொழியில் அழகாய் அலங்கரிப்பார்
அல்லல்படும் தமிழை கண்டுகொள்ளார்.

வீட்டுநாயை வீதியில் விட்டு விட்டால்
வீணர்களும் கல்லா லடிக்கத் தயங்குவாரோ
கட்டமைப்புத் தமிழின் கவசத்தை உடைத்தால்
கடன் வாங்கிய மொழிகளும் கலந்துவிடுமே.

முன்வாசலில் தமிழெங்கள் உயிரென்பார்
பின்வாசலில் ஆங்கிலமே உயர்வென்பார்
மேடையில் எழுப்பிய தமிழ் முழக்கம்
நடைமுறையில் தந்திட ஏனோ தயக்கம்.

சரிக்குச்சமமாய் கலக்கும் பிறமொழிகள்
சரிவுக்கு வித்திடுமே தமிழ்மொழிக்கு
கனியோடு கல்லைக் கலப்பதால்
கனியின் சுவை வந்திடுமா கல்லுக்கு?
            ********************


No comments:

Post a Comment