Pages

Friday 12 October 2018

MONEY HELPS BUSINESS? - வியாபாரத்திற்கு பணம் உதவுமா? - கட்டுரை



வியாபாரத்திற்கு பணம் உதவுமா?
கட்டுரை 
மதுரை கங்காதரன் 

வியாபாரம் ஆரம்பிப்பது எளிதுதான். அதுவும் பணம் இருந்தால் எளிதோ எளிது. ஆனால் பணம் மட்டும் வியாபாரத்தை தொடர்ந்து வெற்றியுடன் நடத்த உதவாது. வியாபாரம் ஆரம்பிக்கும்போது உங்களைச் சுற்றிலும் போட்டியாளர்கள் / எதிராளிகள் எத்தனை பேர்? இருக்கிறார்கள் என்பதை அவசியம் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். அவர்கள் இப்போது எந்த நிலையில் இருக்கிறார்கள்? என்பதை நன்றாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அவர்களில் சிறப்பாக வியாபாரம் செய்பவரை உற்று நோக்குங்கள், நன்கு கவனியுங்கள். அவர்கள் எவ்வாறு நெளிவுசுளிவுகளை அறிந்து கொண்டு வெற்றியைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள்? என்கிற கலையினை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைத்தால் அவர்களித்தில் ஓராண்டு வேலை செய்து அனுபவம் பெற்று அவர்களைவிட சிறப்பாக செயல்படும் திட்டமும் வழியையும் கண்டுபிடித்த பின்னரே வியாபாரத்தை ஆரம்பித்தால் வெற்றி உறுதி. சிலர் எவ்வித அனுபவமில்லாமல் அல்லது குறைந்த அனுபவத்தோடு வியாபாரம் தொடங்கி சீக்கிரமே தோல்வியடைகின்றனர். சிலர் நாலு பேர் செய்கிறார்கள், நாமும் செய்வோம் என்று இறங்கினால் தோல்வியே தழுவநேரிடும்.

சிலர் அரசியல் செல்வாக்குடன், விளம்பரத்திற்காகவும்,  பொழுதுபோக்கிற்காக, புகழ் கௌரவத்திற்காக அல்லது கட்டாயத்திற்காகவும் வியாபாரம் ஆரம்பிப்பார்கள். பெரும்பாலும் அவர்களின் பின்னணி செழிப்பாக இருப்பதால் லாபநஷ்டத்தைப் பற்றி கவலைபடமாட்டார்கள். சொல்லப் போனால் அவர்கள் வியாபாரத்தின் 'வில்லன்கள்' எனலாம்.

வியாபாரத்தில் எப்போதும் நூறு சதம் வெற்றி பெற வேண்டுமென்றால் சாமர்த்தியம், புத்திசாலி, அறிவு, ஆற்றல், மன உறுதி, நம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி, திறமை, சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மாற்றிக் கொள்ளும் குணம் வேண்டும். வியாபாரம் செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம் என்கிற ஆர்வத்தில் மனப்பயிற்சி மற்றும் போதுமான கல்வி அறிவும், அனுபவமும் இல்லாமல் அவசரப்பட்டு தொழிலில் இறங்கிவிடுவதால் அவர்களின் வெற்றி கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

தகுந்த தொழிலை தேர்ந்தெடுத்தல் மிகவும் அவசியம். அப்படி தேர்ந்தெடுத்த தொழிலில் நீண்டகாலம் புதுமைகளை புகுத்த முடியுமா? என்பதை ஊகித்து கொள்ளுதல் அவசியம்.

பரம்பரை தொழிலிலை தொடர்வது புத்திசாலித்தனம். ஏனோ பலருக்கு அதில் ஆர்வம் இருப்பதில்லை. அதற்கு காரணம் 'இக்கரைக்கு அக்கரைப் பச்சை'யே. தெரியாத, புதிதாக ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து புதிய முதல் போட்டு அதில் கால் ஊன்றுதல் மிகச்சிரமமான காரியமே. அப்படி இறங்கும்போது ஒன்றுக்கு நான்கு தடவை யோசித்து முடிவு எடுத்தல் நலம். நடக்கும் / இருக்கும் தொழிலை சற்று நவீனமயமாக்கினாக்கினாலே போதுமானது.  பிறரைச் சார்ந்து தொழில் செய்வது தவிர்ப்பது நன்மை தரும்.

வியாபாரம் செய்கின்ற போது அனைவரிடத்தில் சுமூகமாக பழகும் பாங்கு மிகவும் அவசியம். பொறுமை, ஏமாற்று, கோபக்காரர்களுக்கு வியாபாரம் சரிபடாது. மேலும் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்தல் வெற்றிக்கு வழிவகுக்கும். சிறிய ஒன்றை விட்டுக்கொடுத்து பெரிதாக லாபம் பார்க்கும் ஒருவகையான திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

வியாபாரத்தில் உழைப்பு மிகவும் அவசியம். பலர் தங்களது சோம்பேறித்தனத்தால் காலுக்கடியில் இருக்கும் தங்கப் புதையலை எடுக்கத் தவறிவிடுகிறார்கள். அவர்கள் எவ்வித குறிக்கோளும் திட்டமுமில்லாமல் சும்மா எதையோ செய்யும் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

பேச்சில், செயலில், குணத்தில், நேர்மையில் தனித்தன்மை பெற்றிருந்தால் அதுவே வியாபாரத்தில் வெற்றி தரும். வியாபாரம் இன்றி இருக்கும்போதும், வாடகை, குடும்பச் செலவு, பணநெருக்கடி, வரி, வட்டி மற்றும் கடன்பாக்கி இருக்கும்போதும் சில அபூர்வ குணாதியங்கள் வெளிப்படும். அது வியாபாரத்தை உயர்த்தலாம் அல்லது தாழ்த்தலாம். அந்தமாதிரியான சமயத்தில் பணியாளர்களை கடிந்து கொண்டால் அல்லது தன்னம்பிக்கை இழந்தால் வியாபாரம் 'அம்போ' தான். அப்போதும் புன்சிரிப்பு செய்யும், எதையும் தாங்கும் துணிவு வேண்டும். அந்த சமயத்தில் மனதில் எப்போதும் உற்சாகம் தரும் எண்ணங்கள் வேண்டும்.

குறிப்பாக அம்மாதிரியான சூழ்நிலையில் உடல் நலன், உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, உடல் ஆரோக்கியம் பேணுதல் அவசியம். ஒன்றை எப்போதும் மனதில் கொள்ளுதல் நல்லது. அதாவது நீங்கள் இப்போது இருக்கும் நிலை 'நிரந்தரமானது' அல்ல. அந்த நேரத்தில் குறுக்கு வழியில் வியாபாரம் செய்யவும் துணிவு வரும். கெட்ட பழக்கம் , கெட்ட சகவாசம் வரும். அப்போது மனக்கட்டுப்பாடு தேவைபடும்.

வியாபாரத்தில் வெற்றி பெற்றவர்களின் இரகசியம் என்னவென்றால் தாங்கள் எதிர்காலத்தில் செழிப்பாக இருக்கவேண்டுமென்பதற்காக, பல சௌகரியங்களை துறந்திருப்பதை நாம் அறியலாம்சிலர் சூதாட்டம், பரிசு சீட்டு, பங்கு வரத்தகம், ஊகவணிகம், அதிக வட்டி போன்றவற்றிற்கு ஆசைபட்டு உள்ளதை இழக்கும் அவலம் தொடர்ந்து நடக்கின்றன. அதில் நுழைவது நரகத்தில் நுழைவதற்குச் சமம்.
  
வரவுக்கு மீறிய செலவு துன்பத்தை கொடுக்கும். வருமானத்திற்கு மீறிய கடன் குடும்பத்தை அழிக்கும். கடன் வாங்குபவனிடத்தில்  கூடவே தொல்லைகளும் இலவசமாக ஒட்டிக்கொள்கிறது. சக்திக்கு மீறிய பாரம் தூக்கினால் உடல் கெடும். அளவுக்கு மீறிய ஆசை ஆளை அழிக்கும்வியாபாரத்தின் சரியான நபர்களை தேர்ந்தெடுப்பதில் உள்ளது. மற்றவர்களின் மூளைத்திறன்களை ஆளும் திறமை வேண்டும். தங்களைச் சற்றி இருப்பவர்களை தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். பிறரின் நம்பிக்கை பெறுதல், தவறாத வாக்குறுதி ஆகியவைகள் சிறந்த குணங்களே.

வியாபாரப் போட்டியை பொறாமையாக இல்லாமல் விளையாட்டாக எடுத்துக் கொள்ளுதல் அவசியம். அது மன உளைச்சல்லை தவிர்க்கும் மற்றும் மன அழுத்தத்திலிருந்து காக்கும். எப்போதும் இனிமையாக பேசவேண்டும். சமீப காலமாக பலர் ஏற்றுமதி தொழில் செய்யவேண்டும் என்கிற ஆசையுடன் நுழைந்து அதில் கையைச் சுட்டுக் கொண்டவர்கள் ஏராளம். உள்ளூரில் விலை போகாதவர்கள் பெரும்பாலும் வேறிடத்தில் விலைபோவது கடினமே.

வியாபாரத்தில் எவ்வளவு லாபம் கிடைத்தால் சுமூகமாக நடத்தலாம் என்பதை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி வியாபாரம் செய்திட வேண்டும். லாப வியாபாரம் நல்லது. லாபத்தில் நஷ்டம் பரவாயில்லை. ஆனால் நஷ்ட வியாபாரம் கூடவே கூடாது. அனுபவம் மற்றும் திறமையானவர்களை தக்க வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

பெரிய அளவில் வியாபாரம் செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்றெண்ணி தங்கள் சக்திக்கு மீறிய கடனை வாங்கி வியாபாரம் செய்ய ஆரம்பித்து விரைவிலே எல்லாவற்றையும் இழக்கின்றனர். காரணம் சரியான மனிதவளம் கிடைக்காமை, திறனற்ற நிர்வாகம், மாறுபடும் வரியும், வட்டியும், வியாபாரப் போட்டி, நிலையற்ற விலைகளும் செலவுகளும் போன்றவைஆகையால் கையில் இருக்கும் மூலதனத்தில் சிறிய அளவில் வியாபாரம் தொடங்கி படிப்படியாக முன்னேறலாம்.
********************************


No comments:

Post a Comment