Pages

Tuesday 18 September 2012

உங்களது ஆசையின் அளவு எவ்வளவு- THE LIMIT OF YOUR DESIRE

அனுபவ பொன்வரிகள் 



மதுரை கங்காதரன் 

உங்களது ஆசையின் அளவு எவ்வளவு-
THE LIMIT OF YOUR DESIRE


பார்ப்பது கண்ணளவு 
கேட்பது காதளவு 
பேசுவது வாயளவு 
வாசனை மூக்களவு 
ருசி நாக்களவு 
சாப்பிடுவது வயிரளவு 
கற்றது கை மண்ணளவு 
கல்லாதது உலகளவு
ஆசை எவ்வளவு?


ஆசைபடுவது தவறில்லை. ஆனால் அந்த ஆசையே உங்களுக்கு பாரமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். ஆசை உதயமாகும் விதம் அதிசயம் தான். மனிதன் பிறக்கும் போது ஆசை இல்லை. வளரும் போதும் ஆசை சிறிய அளவில் வருகிறது. அறிவு வளர, திறமை கூட கூட ஆசையும் பெரிய அளவில் வளர ஆரம்பிகின்றது. அதை அடைவதே தன்  வாழ்நாள் இலட்சியம் என்று முயற்சி செய்கிறான். வெற்றி அடைகிறான். அதோடு நிற்கின்றானா? மேலும் அதிக ஆசைபடுகின்றான். அடைகிறான். இப்படி ஒவ்வொரு நாளும் தான் ஆசைப்பட்டதை அடைய நினைக்கிறான். அதற்காக பலவற்றை துறக்கிறான். தேவைபட்டால் பலரின் நட்பை, உறவைக்  கூட இழக்கிறான். 

ஆசையை  அடையும் ஒவ்வொரு முறையும் தன்னைச் சுற்றி புது உறவு, புது சூழ்நிலை, புது பழக்கம், புது புது எண்ணங்கள் இப்படி புது புது அனுபவங்கள் அவனுக்கு கிடைக்கின்றது . மீண்டும் புதிய ஆசை ! புது அனுபவம். இப்படி இருக்கும் போது தன்னுடைய அசல் முகத்தை தொலைத்து போய் போலி முகம் அவனுக்கு நிரந்தரமாக அமைந்து விடுகின்றது. போலியாகவே வாழ்கிறான். பழைய உறவையும் , நட்பும், சூழ்நிலையும் அவன் மறந்தே போய்விடுகின்றான். முடிவில் தான் எதற்காக ஆசைபட்டானோ அந்த எண்ணம் ஈடேறாமல் இந்த உலகத்தைவிட்டு போலியாகவே வாழ்ந்து, நிராசையுடன் பிரிந்து செல்கிறான்.

அடைந்த ஆசையை முழுதாக அனுபவிக்குமுன்னே புதிதாக ஆசை கொள்கிறான். எப்படியென்றால் தன்னிடத்தில் இருக்கும் மொபைல் போனில் உள்ள அனைத்து வசதிகளும் உபயோக்குமுன்னமே மேலும் ஒரு புதிதாக மொபைல் வாங்குவது போல. அதாவது அவனிடத்தில் எவ்வளவு வசதி கொண்ட மொபைல் போன் இருந்தாலும் அவனால் அவனுக்கு தேவைப்படும் முக்கியமான வசதியை மட்டுமே பயன்படுத்த முடியும். அதாவது உன்னிடத்தில் நூறு கோடி பணமிருந்தாலும் உன்னால் அனைத்து பணத்தையும் ஒரே நேரத்தில் உனக்காக பயன்படுத்திக்கொள்ள முடியுமா? 


அரண்மனை போல வீடு இருந்தாலும் நீ தூங்குவது ஆறடி அளவு தான். மற்ற இடம் உனக்கு சொந்தமானாலும் அது உன்னால் அனுபவிக்க முடியாது. சரி 'அனைத்து இடத்திலும் புரண்டு புரண்டு படுப்பேன்' என்று புரண்டு கொண்டிருந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்குமா? 


எவ்வளவு வித விதமான உணவுகள் உன்முன்னே குவிந்து இருந்தாலும் ஒரு சாண் அளவே தான் சாப்பிட முடியும். மற்ற உணவுகள் இருந்தும் வீண் தான். அளவுக்கு மேல் ஒரு கவளம் கூட சாப்பிட்டாலும் நீ கட்டாயம் கஷ்டப் படுவாய்.


எவ்வளவு உடைகள் இருந்தாலும் ஒரே ஒரு உடை தான் போட்டுக்கொள்ள முடியும். மீறி பத்து உடை போட்டுகொண்டால் அந்த உடையே உனக்கு பாரமாகும்.


மாவீரன் அலெஸ்சாண்டர் இந்த உலகை வெல்ல புறப்பட்டான். சிறிய வெற்றி அடைந்தில் உள்ள மகிழ்ச்சி அவருக்கு பல நாடுகளை வென்றபிறகு கிடைக்கவில்லை. நாட்டை வெல்ல வெல்ல அவனுடைய சொந்த நாட்டில் ஒரு சில காலங்கள் கூட மன்னனாக இருந்தது அனுபவித்து ஆட்சி செய்தது கிடையாது. அதேபோல தான் மாவீரன் நெப்போலியனின் வரலாறு. 

பெரிய பெரிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள் ஒருநாளாவது தங்களுடைய வீட்டில் முழுமனதாக அனைவரிடத்தில் உண்டும், பேசி மகிழ்ந்து , சந்தோஷமாக பொழுதை கழித்திருப்பார்களா? பின் அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன? அடைந்த வெற்றியின் பயன் தான் என்ன? அவர்கள் மேலே உயர உயர அவர்களின் வெற்றியே பாரமாக அமைந்து மன அழுத்தம் உண்டாகி கடைசியில் அரைகுறையாக அனுபவித்து அவைகளுடைய ஆவி நிராசையாகவே பிரிகின்றது. அதை அவர்கள்  மரண கட்டிலில் இருக்கும்போது உணருகின்றார்கள் என்பது தான் ஆச்சரியம்.


ஒரு மரத்தில் வேர்கள் எந்த அளவிற்கு இருக்கும். அதன் உயரம் அல்லது பரப்பு எந்த அளவிற்கு இருக்குமென்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது கிளைகள் எவ்வளவு பரந்து இருக்கின்றதோ அந்த அளவிற்கு வேர்கள் பரவியிருக்கும். அதேபோல் மரத்தின் தண்டு எவ்வளவு பலம் உள்ளதோ அந்த அளவு தான் கிளைகளைத் தாங்கும். கிளைகள் வேருக்கு வேண்டிய தண்ணீரை பாதுகாப்பாக வைக்க உதவுகின்றது. 


அதிகமாக ஆசைபடும் ஒருவருக்கு பாடம் கற்பிக்கவேண்டுமென்று ஒரு பெரியவர் நினைத்தார். அவரிடத்தில் ஒரு பறக்கின்ற 'பட்டம்' கொடுத்து 'இந்த பட்டம் தான் உனது ஆசை. அதை பறக்கவிடு. எவ்வளவு வேண்டுமானாலும் நூலை எடுத்துக்கொள். நீ போதும் என்கிற நிலை வரும்போது பட்டம் கடைசியாக பறக்கும் இடம் வரை முழுவதும் உனக்குத் தான் சொந்தம் ' என்று இரண்டையும் அவரிடத்தில் கொடுத்தார். அவரும் ஆசையாக, தான் நினைத்த ஆசையை அடையப்போகிறோம் என்கிற மகிழ்ச்சியில் பட்டத்தை பறக்க விட்டார். கொஞ்ச தூரம் பறந்திருக்கும். இந்த அளவு போதுமா? என்று யோசித்தார். இன்னும் கொஞ்ச தூரம்... இன்னும் கொஞ்ச தூரம் என்று பறக்க பட்டம் ஒரு புள்ளி அளவே தெரிந்தது. மேலும் நூலின் பாரம் பட்டம் பறப்பதற்க்கு தடையாய் இருக்க ஆரம்பித்தது. கடைசியில் நூலே பாரமாக மாறி பட்டம் அறுந்து விழுந்த இடம் தெரியாமல் போனது. பட்டத்தை தேடித் புறப்பட்டவர் வெறும் கையுடன் திரும்பி பெரியவரை சந்தித்தார். 

"பட்டம் எங்கே?" என்று கேட்டார் பெரியவர்.

"தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. என் அதிகமான ஆசை , பொன்னான வாய்ப்பு கிடைத்தும் என் பேராசையினால் இழந்தேன். இப்போது புத்தி வந்தது" என்று வருத்தப்பட்டார். அதேபோல் தான் 'மைதாஸ் ' யின் ஆசை. தொட்டதெல்லாம் பொன்னாகவேண்டும் என்று வரம் கேட்டு சாப்பிடும் உணவை தொட, அதுவும் பொன்னாக மாற கடைசியில் சாதாரண மனிதனைவிட கஷ்டப் பட்ட நிலை வந்த பிறகு தான் திருந்துகிறான். ஆகவே ஆசையின் அதிகபட்ச அளவு உங்கள் கண்களுக்குத் தெரியும் தூரம். அதைத் தாண்டினால் , உங்களுக்கு மிஞ்சுவது பூஜ்யம் தான்.       



ஆசை அதிகம் கொள்ளாதே !


அதனால் வாழ்கையில் அவதிபடாதே !

இன்னும் வரும் .... 


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

2 comments: